புறக்கோள்கள்: சூரியக் குடும்பத்திற்கு அப்பால்...
- எழில் சின்னத்தம்பி

- 2 days ago
- 4 min read

இரவு நேர வானத்தை எண்ணற்ற விண்மீன்கள் கண்களில் படுகின்றன. அவற்றைப் பார்க்கும் நம் மனதில் ஒரு கேள்வி எழலாம். "பரந்த இந்தப் பேரண்டத்தில் பூமியைப் போன்ற உலகங்கள் வேறு எங்காவது உள்ளனவா? அங்கேயும் உயிர்கள் வாழ்கிறார்களா?" இந்தக் கேள்வி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதனைச் சிந்திக்க வைத்துள்ளது. ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் வானியல் அறிவியல் இந்தக் கேள்விக்கான விடையைத் தேடும் பயணத்தில் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இன்று நமது சூரியனைத் தவிர பிற விண்மீன்களைச் சுற்றியும் ஆயிரக்கணக்கான கோள்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவையே புறக்கோள்கள் (Exoplanets) என்று அழைக்கப்படுகின்றன.
புறக்கோள் என்றால் என்ன? நமது பூமி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றுகின்றன. ஆனால் சூரியனை அல்லாமல், வேறு ஏதாவது ஒரு விண்மீனைச் சுற்றிவரும் கோள் புறக்கோள் எனப்படுகிறது. ஒவ்வொரு விண்மீனும் ஒரு புதிய சூரியனாகக் கருதலாம். அவற்றைச் சுற்றியும் கோள்கள், துணைக்கோள்கள், சிறுகோள்கள் போன்றவை இருக்கலாம்.
ஒரு காலத்தில் சூரியக் குடும்பம் மட்டுமே கோள்களைக் கொண்ட அமைப்பு என்று கருதப்பட்டது. இன்று அந்த எண்ணம் முற்றிலும் மாறிவிட்டது. வானியலாளர்கள், நமது பால்வெளி மண்டலத்தில் மட்டுமே நூற்றுக்கணக்கான பில்லியன் கோள்கள் இருக்கக்கூடும் என்று மதிப்பிடுகின்றனர். அதாவது, நாம் வானில் காணும் பெரும்பாலான விண்மீன்களுக்கும் கோள்கள் இருக்க வாய்ப்புள்ளது.
புறக்கோள்களின் கண்டுபிடிப்பு
1992 ஆம் ஆண்டில் முதல் முறையாக சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்கள் உறுதிப்படுத்தப்பட்டன. அவை ஒரு துடிப்பு விண்மீனைச் சுற்றி வந்தன. பின்னர் 1995 ஆம் ஆண்டு 51-பெகாசி-b என்ற கோள், சூரியனைப் போன்ற ஒரு விண்மீனைச் சுற்றுவதாகக் கண்டறியப்பட்டது. இது வானியலில் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கியது. இந்த வரலாற்றுச் சாதனைக்காக மைக்கேல் மேயர் மற்றும் திதியர் கியூலோஸ் ஆகியோர் 2019-ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றனர்.
அதன்பிறகு புறக்கோள்களைத் தேடும் ஆய்வுகள் வேகமடைந்தன. இன்று ஆயிரக்கணக்கான புறக்கோள்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன; மேலும் புதிய கோள்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
புறக்கோள்களைக் கண்டுபிடிப்பது எப்படி?
புறக்கோள்களை நேரடியாகப் பார்ப்பது மிகவும் கடினம். அவை தங்களது விண்மீனின் பிரகாசத்தில் மறைந்து விடுகின்றன. எனவே விஞ்ஞானிகள் பல நுட்பமான முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
கடத்தல் முறை (Transit Method):ஒரு கோள் தனது விண்மீனின் முன்னால் கடந்து செல்லும்போது, அந்த விண்மீனின் ஒளி மிகச் சிறிதளவு மங்குகிறது. இந்த மங்கலை மிகத் துல்லியமாக அளந்து கோளின் இருப்பை உறுதிப்படுத்துகின்றனர்.
ஆரவியல் வேக முறை (Radial Velocity):ஒரு கோளின் ஈர்ப்பு விசையால் அதன் விண்மீன் மிகச் சிறிது அசைகிறது. அந்த அசைவின் வேக மாற்றத்தை அளந்து, கோளின் நிறை மற்றும் சுற்றுப்பாதையை கணக்கிடுகின்றனர்.
நேரடிப் படமெடுத்தல் (Direct Imaging):சில அரிய சந்தர்ப்பங்களில், விண்மீனின் ஒளியை மறைத்து அதன் அருகிலுள்ள கோளை நேரடியாகப் படம் எடுக்க முடிகிறது.
ஈர்ப்புக் கண்ணாடி முறை (Gravitational Microlensing):ஈர்ப்புப் புல ஒளிவிலகல் என்ற நிகழ்வைப் பயன்படுத்தி, தொலைவில் இருக்கும் கோள்களையும் கண்டறிய முடிகிறது.
புறக்கோள்களின் பல்வேறு வகைகள்
எல்லாப் புறக்கோள்களும் பூமியைப் போல இருப்பதில்லை.
பாறைக் கோள்கள் – பூமி, செவ்வாய் போன்ற திடமான மேற்பரப்பைக் கொண்டவை.
பெருவாயுக் கோள்கள் – வியாழன், சனி போன்ற வாயுக்களால் ஆன மாபெரும் கோள்கள்.
சூடான வியாழன்கள் (Hot Jupiters) – தங்கள் விண்மீனை மிக அருகில் சுற்றுவதால் ஆயிரக்கணக்கான டிகிரி வெப்பநிலையைக் கொண்டவை.
மிகப் பெரிய பூமிகள் (Super-Earths) – பூமியைவிடப் பெரியதாக இருந்தாலும் பாறை உலகங்களாக இருக்கக்கூடியவை.
சிறிய நெப்டியூன்கள் (Mini-Neptunes) – பூமிக்கும் நெப்டியூனுக்கும் இடைப்பட்ட அளவுடைய கோள்கள்.
இந்த உலகங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான இயற்கை அமைப்புகளைக் கொண்டுள்ளன.
வியப்பூட்டும் சில புறக்கோள்கள்
கெப்ளர்-186f பூமியை ஒத்த அளவுடைய முதல் முக்கியமான புறக்கோள்களில் ஒன்றாகும். அது தனது விண்மீனின் வாழ்வதற்கேற்ற வளையத்தில் அமைந்துள்ளது.
புராக்ஸிமா சென்டவுரி-b நமது சூரியக் குடும்பத்திற்கு மிகவும் அருகிலுள்ள விண்மீனைச் சுற்றிவருகிறது. வருங்காலத்தில் மனிதன் முதலில் ஆராயக்கூடிய புறக்கோள்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.
டிராப்பிஸ்ட்-1 உலகம் முழுவதும் வானியலாளர்களை ஆச்சரியப்படுத்தியது. இதில் பூமியின் அளவுக்கு ஒத்த ஏழு கோள்கள் உள்ளன. அவற்றில் மூன்று கோள்கள் வாழ்வதற்கேற்ற வெப்பநிலை கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கற்பனைக்கும் எட்டாத உலகங்கள்
புறக்கோள்களில் சில மனிதக் கற்பனையையும் மிஞ்சுகின்றன. சில கோள்களில் இரும்புத் துகள்கள் மழையாகப் பொழிகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சில உலகங்கள் முழுவதும் உருகிய பாறைக் கடல்களால் மூடப்பட்டிருக்கலாம். சில கோள்களில் ஒரு பக்கம் எப்போதும் பகலும், மறுபக்கம் எப்போதும் இரவும் நிலவுகிறது. சிலவற்றில் மணிக்கு பல ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. சில கோள்களில் இரண்டு அல்லது மூன்று சூரியன்கள் உதயமாகும். அங்கு சூரிய அஸ்தமனம் கூட பூமியில் நாம் காணாத வண்ணங்களில் தோன்றக்கூடும்.
உயிர்கள் வாழும் உலகங்களைத் தேடும் மனிதன்
புறக்கோள்களை ஆய்வு செய்வதன் மிக முக்கியமான நோக்கம், பூமியைப் போன்ற மற்றொரு உலகைக் கண்டுபிடிப்பதே ஆகும். ஒரு கோளில் திரவ நீர், ஏற்ற வெப்பநிலை, வளிமண்டலம் ஆகியவை இருந்தால் அங்கே உயிர்கள் தோன்றும் வாய்ப்பு இருக்கலாம். இதற்காக விஞ்ஞானிகள் வாழ்வதற்கேற்ற மண்டலமாகக் கருதப்படும் பகுதிகளை அதிகமாக ஆராய்கின்றனர்.
ஆனால், ஒரு கோள் அந்த மண்டலத்தில் இருப்பதால் மட்டுமே அங்கு உயிர்கள் இருக்கும் என்று கூற முடியாது. அதேபோல், அந்த வளையத்திற்கு வெளியே உயிர்கள் இருக்கவே முடியாது என்றும் கூற முடியாது. பூமியில் கடுமையான வெப்பம், கடும் குளிர், ஆழ்கடல், எரிமலைப் பகுதிகள் போன்ற இடங்களிலும் நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. எனவே உயிரின் எல்லைகளைப் பற்றிய நமது புரிதல் இன்னும் முழுமையடையவில்லை.
புதிய தலைமுறை விண்வெளித் தொலைநோக்கிகள்
கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி, ஆயிரக்கணக்கான புதிய புறக்கோள்களைக் கண்டுபிடித்து வானியலில் புரட்சியை ஏற்படுத்தியது. 2009 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்தத் தொலைநோக்கி, ஒரே நேரத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் விண்மீன்களின் ஒளியைத் தொடர்ந்து கண்காணித்தது. ஒரு கோள் தனது விண்மீனின் முன் கடந்து செல்லும்போது ஏற்படும் மிகச் சிறிய ஒளிக்குறைவைக் கண்டறிந்து, ஆயிரக்கணக்கான புதிய புறக்கோள்களைக் கண்டுபிடித்தது. புறக்கோள்கள் பிரபஞ்சத்தில் அரிதானவை அல்ல, மாறாக மிகவும் பொதுவானவை என்பதை உலகிற்கு நிரூபித்தது இந்தத் தொலைநோக்கியே.
அதைத் தொடர்ந்து புறக்கோளாய்வு விண்கலம் (TESS) புதிய கோள்களைத் தொடர்ந்து தேடி வருகிறது. கிட்டத்தட்ட முழு வானத்தையும் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஆய்வு செய்து, பூமிக்கு அருகிலுள்ள ஆயிரக்கணக்கான விண்மீன்களை ஆராய்ந்து புதிய புறக்கோள்களைக் கண்டுபிடித்து வருகிறது.
இப்போது ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி இன்னும் ஒரு படி முன்னேறியுள்ளது. இது சில புறக்கோள்களின் வளிமண்டலத்தில் நீராவி, கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து வருகிறது. எதிர்காலத்தில் அந்த வளிமண்டலங்களில் உயிரினங்களின் செயல்பாட்டைக் குறிக்கக்கூடிய வேதியியல் தடயங்களைக் கண்டறியவும் இந்தத் தொலைநோக்கி உதவலாம்.
விண்வெளித் தொலைநோக்கிகள் மட்டுமல்லாமல், பூமியிலும் மிகப் பெரிய தொலைநோக்கிகள் செயல்பட்டு வருகின்றன. மிகப்பெரும் தொலைநோக்கி, கெக் ஆய்வு மையம் போன்றவை பூமியில் இருந்து கொண்டே புறக்கோள்களின் நிறை, சுற்றுப்பாதை மற்றும் பிற இயற்பியல் பண்புகளைத் துல்லியமாக அளக்கின்றன. விரைவில் செயல்படவுள்ள அளப்பரிய தொலைநோக்கி தனது 39 மீட்டர் விட்டமுள்ள பிரதானக் கண்ணாடியின் உதவியுடன், பூமியை ஒத்த சிறிய புறக்கோள்களையே நேரடியாகப் படம்பிடிக்கும் திறனைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனிதன் அங்கு செல்ல முடியுமா?
இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள புறக்கோள்கள் அனைத்தும் நம்மிடமிருந்து பல ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன. ஒளி ஒரு வினாடிக்கு சுமார் மூன்று இலட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தாலும், அருகிலுள்ள சில புறக்கோள்களிலிருந்து வரும் ஒளியே பூமியை அடைய நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இன்றைய விண்கலங்களின் வேகத்தில் அங்கு செல்ல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படும். எனவே மனிதன் தற்போது அவற்றை நேரில் சென்றடைவதைவிட, சக்திவாய்ந்த தொலைநோக்கிகளின் உதவியால் தொலைவிலிருந்தே அவற்றைப் பற்றி அறிந்து வருகிறது.
ஒரு காலத்தில் பூமி மட்டுமே உயிர்கள் வாழும் உலகம் என்று மனிதன் நம்பினான். இன்று அந்த எண்ணம் மாறியுள்ளது. பேரண்டம் எண்ணிலடங்கா விண்மீன்களாலும், அவற்றைச் சுற்றும் கோள்களாலும் நிரம்பியுள்ளது என்பதை அறிவியல் வெளிப்படுத்தியுள்ளது. அந்த உலகங்களில் எங்காவது உயிர்கள் இருக்கிறதா என்ற கேள்விக்கான விடை இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் அந்த விடையைத் தேடும் பயணமே மனித அறிவியலின் மிகப் பெரிய சாகசங்களில் ஒன்றாகத் தொடர்கிறது.
எதிர்வரும் காலத்தில் ஒருநாள், தொலைவில் உள்ள ஒரு சிறிய நீல நிறக்கோளின் வளிமண்டலத்தில், உயிரின் முதல் உறுதியான சான்றை மனிதன் கண்டுபிடிக்கலாம். அந்நாள், வானியல் வரலாற்றில் மட்டுமல்ல, மனித வரலாற்றிலேயே மறக்க முடியாத நாளாக இருக்கும்.

இயற்பெயர்: எழில் மயில் வாகனன்.
தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன.
வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’
‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி





Comments