top of page

நீங்கள் எப்போதும் தனியாக இல்லை!


வீட்டில் பெற்றோர்கள் தனியாக உங்களை விட்டுவிட்டு ஒருநாள் கடைக்குப் போயிருப்பார்கள்.

அப்போது நீங்கள் என்ன நினைப்பீர்கள்?


“வீட்டில் நான் மட்டும்தான் இருக்கிறேன்!” என்று தோன்றுமா?


ஆனால் உண்மையில், நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை! ஆமாம், உங்களைச் சுற்றியும், உங்களுக்கு உள்ளேயும் எப்போதும் நுண்ணுயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.


உங்கள் முகத்தில் இப்போது கூட கோடிக்கணக்கான மிகச் சிறிய “டெமோடெக்ஸ்” (Demodex) சிறிய உண்ணிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ‘பூச்சி’ என்று சொல்லாமல், உண்ணி என்று சொல்வதற்கும் காரணமுள்ளது. பூச்சிகளுக்கு ஆறு கால்கள் இருக்கும். அப்படியில்லை என்றால், அவை பூச்சிகள் வகைப்பாட்டில் வராது.


மீண்டும் ‘டெமோடெக்ஸ்’ என்னும் உண்ணிகளுக்கு வருவோம். அவை மனிதர்களின் தோலில் இயல்பாக வாழும் நுண்ணுயிர் உலகத்தின் ஒரு பகுதியாகும். கண் இமைகள், புருவம், மூக்குப் பகுதிகளில் இருக்கும். தோலில் உருவாகும் எண்ணெய் மற்றும் இறந்த செல்களை உணவாக உண்ணுகின்றன. பெரும்பாலான நேரங்களில் அவை எந்தத் தீங்கும் செய்யாது.


அடுத்தது, வீட்டில் நாம் உபயோகப்படுத்தும் குடிநீர். நேரடியாக குழாயில் இருந்து நாம் பிடித்து அருந்தும் நீரிலும் நுண்ணுயிர்கள் இருக்கும். காய்ச்சிய பின்னும் இருக்கும். எந்த மாதிரி பாக்டீரியாக்கள் என்பதில்தான் விஷயமே இருக்கிறது. பெரும்பாலான கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் (coliform bacteria) மண், செடிகள் மற்றும் விலங்குகளின் உடலில் இயல்பாகக் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காதவை. ஆனால், அதே வகையைச் சேர்ந்த ஈ.கோலை (E. coli) பாக்டீரியாக்கள் குடிநீரில் இருந்தால் வயிற்று நோய்களை ஏற்படுத்தலாம். இதற்காகவே தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கிறோம்.


அதுமட்டுமில்லை, நமக்கு உள்ளேயும் வெளியேயும் கோடிக்கணக்கான நல்ல வைரஸ்கள் கூட இருக்கின்றன.


உங்களுக்கு ஒன்று தெரியுமா? கங்கை நீர் புனிதம் என்று சொல்கிறோம் அல்லவா, அதற்குக் காரணம் கூட கங்கை நீரில் உள்ள பாக்டீரியோபேஜ் (Bacteriophage) என்னும் வைரஸ்கள்தான். இவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் வைரஸ்கள். இவ்வகை வைரஸ்கள் நம் உடலிலும் இருக்கின்றன. நம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொன்று நமக்கு நன்மை விளைவிக்கின்றன.


ஆக, இரண்டு விஷயங்களை நாம் புரிந்து கொள்ளலாம்.


முதலாவது, நாம் எப்போதும் தனியாக இல்லை. நமக்குத் துணையாக நுண்ணுயிர்கள் உள்ளன.

இரண்டாவது, எல்லா நுண்ணுயிர்களும் தீங்கு விளைவிப்பவை அல்ல.


‘நுண்’ உயிர்கள் இல்லாமல் எந்த ‘பெரிய’ உயிரினமும் வாழ முடியாது. 


சின்ன விஷயம் பெரிய செய்தி!


ஹேமபிரபா
ஹேமபிரபா

இவர் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில்  “உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறையில்”  உதவிப் பேராசிரியராகப்  பணியாற்றி வருகிறார். தமிழில் அறிவியல் கட்டுரைகள், கதைகள், மொழிபெயர்ப்புக்  கட்டுரைகள் உள்ளிட்டவற்றை எழுதி வருகிறார். இவருடைய முதல் நூல், கரோனா வைரஸ் பெருந்தோற்று குறித்த “இதுதான் வைரல்: அறிவியல் பார்வையில் கரோனா”. சிறார்களுக்காக  இவர் எழுதிய “அறிவுக்கு ஆயிரம் கண்கள்” நூல் பரவலான வாசகர்களைச்  சென்றடைந்து  பாராட்டைப் பெற்றது. இவர் பல்வேறு தளங்களில் பொதுமக்களிடையே  அறிவியல் பரப்புரையும் செய்து வருகிறார்.

தொடர்புக்கு: hemazephyrs@gmail.com


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page