மாயப்புத்தகம்
- ஜெ.பொன்னுராஜ்

- 3 days ago
- 3 min read

மாயஜாலங்கள் இயல்பாக இருந்த ஒரு காலத்தில் தாமஸ் என்ற ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான். புத்தகங்கள் வாசிப்பது என்றால் அவனுக்கு அலாதியான ஆர்வம் இருந்தது. ஒரு நாள் நூலகத்திற்கு போன போது அங்கே மறைந்திருந்த ஒரு விசித்திரமான மாயப்புத்தகத்தை பார்த்து மகிழ்ச்சி இவ்வளவுதான் என்றில்லை. இது என்ன… இதுவரை இப்படி ஒன்றை பார்த்ததில்லையே என்று அதை ஆர்வமாக தொட்டான். புத்தகத்தை கைவிரல்களால் தொட்ட அடுத்த விநாடியில் ஒரு வானுலக வெளிச்சம் அறை முழுவதும் பிரகாசித்தது.
அவன் புரட்டிய புத்தகத்தில் விநோதமான அடையாளக்குறிகள் தோன்றி காற்றில் நடனமாடின.
“ஆஹா… என்ன ஒரு வசீகரிக்கும் ஒளி. புதியதாக இருந்தாலும் இந்த நடனமாடும் அடையாளங்கள் நெடுநாட்கள் பழகிய நண்பனைப்போல் வசீகரம் செய்கிறதே” என்று ஆச்சரியமுற்றான். கொஞ்ச நேர அசைவுகளுக்குப் பிறகு அடையாளங்கள் அவைகளுக்குள் இடம்மாறி அமைந்து ஒரு வாக்கியமாக மாறியது.
“வரவேண்டும் இளஞ்சிறுவனே… இப்பொழுது உனக்கு சில இரகசியங்களை அறிந்துகொள்ளும் நேரம் வந்துவிட்டது”
“எனக்கு எதைப்பற்றி சொல்லப்போகிறாய்” தாமசின் மனதில் கிசுகிசுவென கேள்வி படர்ந்தது.
“இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றித்தான் சொல்லப்போகிறேன்” அடையாளக்குறிகள் வேகமாகச் சுழன்று கிசுகிசுப்பு சப்தமாக மாறியது.
“பிரபஞ்ச வெளியில் பயணிக்க இப்போது என்னோடு புறப்படு”
அறை முழுவதும் பலவிதமான வண்ணங்களில் நட்சத்திரங்கள் சுழன்று கொண்டிருந்தன. தாமசுக்கு விண்ணுலகின் அதிசயத்தில் மிதப்பது போலிருந்தது. திடீரென ஒரு எரிநட்சத்திரம் ஒளிரும் விண்மீன் படலமாக வானத்தில் கோடு கிழித்துக்கொண்டு போனது. தாமஸ் அந்த விண்மீன் பாதையில் இழுத்துச்செல்லப்படுவதை உணர்ந்தாலும் ஒன்றும் செய்ய இயலாமல் அதன் போக்கிற்கு இசைந்தான்.
அந்த பாதையில் தொடர்ந்து சென்றபோது அது விண்ணுலகப் பறவை வடிவத்திலிருந்த ஒரு அற்புதமான விண்வெளி ஓடத்திற்கு கூட்டிச்சென்றது. அதன் இருபுறமும் ஒளிரும் இரத்தினக்கற்கள் பதித்த இறக்கைகள் அலங்கரித்துக்கொண்டிருந்தன.
“வாருங்கள் இளம் ஆராய்ச்சியாளரே” அதன் மெல்லிய வரவேற்புக்குரல் கேட்டது.
விண்வெளி ஓடத்தின் கதவுகள் பக்கவாட்டில் சறுக்கியபடி திறந்தன. அதன் வசதியான உட்புறத்தில் நட்சத்திர வரைபடங்கள், விண்ணுலக விளக்கப்படங்கள் மற்றும் கட்டுப்பாட்டக பலகத்துடன் வானுலக சக்தியின் ரீங்காரம் இசைத்துக்கொண்டிருந்தது.
“இது எவ்வளவு அழகாக இருக்கிறது. இதில் அமர்ந்து பறக்கும் அனுபவம் எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்” என்று ஆவலுடன் ஓடத்தில் ஏறியதும் வண்ணவண்ண நட்சத்திர ஒளிகள் ஏற்படுத்திய உணர்வில் தாமசின் கண்கள் மினுமினுத்தன. கட்டுப்பாட்டு பலகத்தை தொட்டதும் விண்கலம் உயிர்பெற்று அதன் இறக்கைகள் ஒளிர்ந்தன.
“ஹூஷ்.ஷ்” என மெல்லியதாக ஒலியெழுப்பியபடி கலம் பிரபஞ்சவெளியில் ஊடுருவிப்பறந்தது. எல்லையில்லாத விண்வெளிப்பரப்பில் மிதந்து போகும் தாமசுக்கு மகிழ்ச்சிக் கொண்டாட்டமாக இருந்தது.
நட்சத்திரங்களும் விண்மீன் திரள்களும் வானுலக அதிசயங்களை காண்பித்து விண்ணில் சுழன்று கொண்டிருந்தன. இப்போது நிறங்களை மாற்றிக்கொண்டு உயிரோட்டமான ஒன்றாக சுழன்று கொண்டிருந்த நெபுலா கோளை விண்கலம் நெருங்கியது. வாயுக்கள் மற்றும் தூசிகளால் ஆன சுழலும் மேகங்கள் சூழ்ந்துகொண்டிருந்த நெபுலாவில் சறுக்கியபடி கலம் மெதுவாக தரையிறங்கியது. மினுக்மினுக்கென தோன்றி ஒளிரும் நட்சத்திரங்களின் பிரபஞ்ச நடனம் காணுவதற்கினிய காட்சியாக அமைந்தது.
நெபுலாவில் நெடுந்தொலைவு பயணம் செய்து பாலைவனச்சோலை போன்ற ஓர் இடத்தை அடைந்தார்கள். அப்போது அங்கே ஒரு ஒளி உருவம் தோன்றி, “உன்னை எதிர்பார்த்துதான் காத்திருக்கிறேன். நான் இந்த சோலையின் பாதுகாவலன். என் பெயர் பயஸ். உனக்கு இதுவரை பலரும் அறியாத பிரபஞ்ச ரகசியங்களை தெரிந்து கொள்ளவேண்டுமா” என்று கேட்டது.
“ஆமாம். அதற்காகத்தான் வந்திருக்கிறேன்” ஆர்வம்கூட பதில் சொன்னான்.
“சரி. என்னோடு வா” என்று பழங்கால கலைப்பொருட்களும் வான்ஒளிக்கோளங்களும் நிரம்பிய ஒரு அறைக்கு பயஸ் கூட்டிச்சென்றது.
“இரகசியங்கள் இந்த ஒளிக்கோளங்களில் அறிவாக பொதிந்து கிடக்கிறது. ஒவ்வொரு கோளத்திலும் ஒவ்வொரு பிரபஞ்ச உண்மை அடங்கியிருக்கிறது. அவற்றை உனக்கு சொல்லவேண்டுமென்றால் நீ மூன்று பழந்தமிழர்கால புதிர்களுக்கு விடை சொல்ல வேண்டும்” என்று ஒளி உருவமான பயஸ் சொன்னது.
“சரி கேள்” என்று தயாரானான் தாமஸ்.
“உடைக்க முடியும் ஆனால் ஒரு போதும் பற்றிக்கொள்ள முடியாது. அது என்ன”
ஒரு ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு சட்..டென பதில் சொன்னான்.
“வாக்குறுதி. ஒரு வாக்குறுதியை மீறலாம். ஆனால் அதை கைகளால் பிடித்துப் பார்க்க முடியாது”
அந்த பதிலை கேட்ட பயசின் முகம் அன்பான புன்னகையுடன் பிரகாசித்தது.
“சரியாகச் சொன்னாய்” என்று அடுத்த புதிரை போட்டது. “எது எப்போதும் வரும். ஆனால் ஒரு போதும் வராது”
‘என்ன இது. சினிமாவில் வரும் காமெடி போல் உள்ளதே. இதற்கு என்ன பதில் சொல்வது’ என்று சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தான்.
“நாளை என்பது இதன் விடை”
பயஸ் அதை சரியென்று ஆமோதித்து தலையசைத்தது. “ஆம். நாளை எப்போதும் வருகிறது. ஆனால் அது உண்மையில் ஒரு போதும் வராது. ஏனென்றால் அது வரும் போது, அது ‘இன்று’ என அர்த்தம் ஆகிவிடுகிறது. இந்த சின்னவயதில் புத்திசாலியாக இருக்கிறாய்” என்று கடைசி புதிரை போட்டது.
“தலையும் வாலும் இருக்கும். ஆனால் உடல் இல்லை. அது என்ன… சொல் பார்ப்போம்”
தாமஸ் இமைகளை சுருக்கி விடையை தேடியதும் ‘பட்…’டென பதில் வந்தது.
“நாணயம் என்பது இந்த புதிருக்கான விடை”. பயஸ் மகிழ்ச்சியில் இன்னும் பிரகாசமாக ஒளிர்ந்தது.
“நீ மிகவும் புத்திசாலி. நாணயத்தின் ஒருபுறம் தலையும் மறுபுறம் வாலும் இருக்கும். ஆனால் அதற்கு உடல் இல்லை”
பயஸ் கைகளை அசைக்கவும் அறிவுக்கோளங்கள் ஒளிரத்துவங்கி அறை முழவதும் தங்கம் போல் தகதகவென மின்னியது. அந்த அறிவுக்கோளங்கள் தாமசை நோக்கி மிதந்து வந்தன. அவை ஒவ்வொன்றிலும் பண்டைய கால அறிவுப்புதையல் நிரம்பியிருந்தது. தாமஸ் அவை சொன்ன இரகசியங்களை ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தான்.
பூமியிருந்து கலத்திற்கு ஒரு சமிக்ஞை வந்தது. கட்டுப்பாட்டுப் பலகம் ‘பீப்..பீப்…” என பதில் சமிக்ஞை அனுப்பியது.
“உன் பயணம் இன்னும் வெகுதொலைவிற்கு உள்ளது. இங்கு தெரிந்து கொண்டதை பூமியின் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு பயன்படுத்துவாயாக” என்று பயஸ் புன்முறுவல் செய்து விடை கொடுத்தது.
கலத்தின் இயந்திரம் சலசலப்புடன் இயங்கத் தொடங்கியது. விண்ணுலகப்பறவை பூமியைப் பார்க்க இறங்கியது.
விசித்திரமான உயிரினங்களை சந்தித்தது, பிரபஞ்ச இயக்கத்தின் காட்சிகளை பார்த்தது, விண்ணுலக இகசியங்களை அறிந்துகொண்டது என புதிய அனுபவங்களோடு தாய்மண்ணில் வந்து இறங்கினான். பயஸ் சொன்னது போல அவனுக்கு இன்னும் நிறைய வேலைகள் காத்திருந்தன.
மாயப்புத்தகத்தின் பக்கங்கள் படபடவென அசைந்து, ஒரு பறவை இறக்கைகளை ஒடுக்கி மரக்கிளையில் அமர்வது போல அடுக்குப்பலகையில் போய் அமைதியாக உட்கார்ந்து கொண்டது.

1964. சுகாதார ஆய்வாளர் பணிநிறைவு. படைப்புகள்: பருத்திக்காடு, குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதை தொகுப்பு, மாவளி நாவல்.
பதிப்பில்: நாட்டுப்புற கதைகள் பாகம் 1 & 2




விண்ணுலகம் சென்று பார்க்கவேண்டும் என்று ஆசையாக உள்ளது அண்ணா
இது மாதிரி கதைகளை வாசிக்கும் போது எனக்கு கொஞ்சம் நேரம் விண்ணுலகத்தைப் பார்த்து விட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு
சூப்பர் அண்ணா