top of page

காட்டைப் பிடித்த கேடு


  அது ஒரு வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை. அங்கு மாலி என்ற குரங்கும் காளி  என்ற குரங்கும் வாழ்ந்துவந்தன. 


          மரத்தில் அமர்ந்து கொண்டு பாதையில் செல்லும் வாகனங்களைப் பார்ப்பது அவைகளுக்கு மிகவும் பிடிக்கும். 


          வாகனத்தில் செல்பவர்கள் அவர்களைப் புகைப்படம் எடுப்பதைப் பார்த்திருக்கின்றன. அப்படி எடுப்பதைப் பார்க்கும் பொழுது தங்களிடமும் இது போன்ற ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று இருவரும் பேசிக் கொள்வார்கள். 


        ஒரு நாள் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சாகசம் செய்து கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் சட்டைப் பையிலிருந்து  ஒரு அலைபேசி கீழே விழுந்ததைக்கூட  கவனிக்காமல் சென்று விட்டனர். மாலியும் காளியும் விரைந்து சென்று அதை எடுத்துக்கொண்டுவந்து ஒரு மரக்கிளையில் அமர்ந்தன. அந்த மரம் காட்டுப் பூவரசன் மரம். மிகப் பெரிய மரம். நான்கு பேர் நின்று கைகளைச் சேர்த்து பிடித்தால்தான் பிடிக்க முடியும். அவ்வளவு பெரியது அந்த மரம். அந்த மரத்தில்தான் காளியும் மாலியும் பெரும்பாலும் இருப்பார்கள். 


      கையில் கிடைத்த அந்த அலைபேசியைத்  திருப்பி திருப்பிப் பார்த்தது மாலி.


      காளி, மாலியைப் பார்த்து "எவ்வளவு நேரம்தான் அதை நீயே வச்சுகிட்டு இருப்பே. எங்கிட்டே கொடு நான் கொஞ்சம் நேரம் வச்சிருக்கேன்" என்றது. 


      " மாட்டேன் மாட்டேன்  இப்பக் கொடுக்கமாட்டேன்" என்றது மாலி...


   காளி  கோபித்துக்கொண்டது. "உன்னப் போயி நல்லவன்னு நெனச்சம்பாரு"என்று சொல்லித் தன் தலையில் அடித்துக் கொண்டது. 


     காளி வருந்துவதை பார்க்க முடியாத மாலி உடனே அலைபேசியை காளியிடம் கொடுத்தது. 


       அலைபேசியை வாங்கிய காளி மாலியைப் போலவே திருப்பி திருப்பி பார்த்தது. திடீரென்று ஒரு அழைப்பு வந்தது. அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் கத்திக்கொண்டு கிளைக்கு கிளை தவ்வியது. அலை பேசியைக் கீழே போடாமல் கையிலேயே வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடியது.


      அதன் பின்னாலேயே மாலியும் ஓடியது. மோனிகா மோனிகா என்று அது மிகுந்த ஒலி உடன் பாடியது. அலைபேசி அலறவும் தம் கையில் உள்ள அலைபேசியை அங்கும் இங்கும் மாறி மாறி பிடித்ததில் அலைபேசி ஆன் ஆகிவிட்டது. 


        அந்தப் பக்கம் இருந்து ஹலோ ஹலோ டேய் நான் தான் அம்மா பேசுறேன் ஏன்டா  பேசவே மாட்டேங்குற? எங்கடா போன கல்லூரி போவதாகச்  சொல்லிட்டு எங்க போனே? என்று அம்மா திட்ட தொடங்கினார். 


        காளிக்கும் மாலிக்கும் என்ன செய்வதென்றே தெரியாமல் இருவரும் தலையைச் சொரிந்து கொண்டார்கள்.


         அழைப்பு நின்றவுடன் மாறி மாறி இருவரும் செல்பி எடுத்துக் கொண்டனர். 

      செல்பி எடுப்பதில் ஆர்வமான அவர்கள் அன்னம், தண்ணீர் இல்லாமல் அதை வச்சுக்கிட்டு செல்ஃபி புகைப்படமா எடுத்து தள்ளினார்கள். 


    தேன் எடுக்க வந்த தேனீ அந்தச் செய்தியைக் காடு முழுக்கச் சொன்னது. 


       அதைப் பார்க்க க் கொஞ்ச நேரத்தில் யானை, சிறுத்தை, புலி, மான், முயல், குரங்கு, மயில், குயில், மைனா, புறா, கழுகு, ராஜாளி, முள்ளெலி என அங்கு ஒரு பெரும் படையே திரண்டுவிட்டது. அத்தனை பேரும் அவர்களைப் பார்த்துக் கொண்டே சிந்தனையில் மூழ்கினார்கள். இவ்விருவர் யாரையுமே பார்க்கவில்லை அப்படி இப்படி நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தபடியே இருந்தனர். 


        அங்கு கூடிய விலங்குகளும் பறவைகளும் அவர்களை அழைத்துப் பார்த்தன. கத்தி பார்த்தன. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் காளியும் மாலியும் அவர்களையும் சேர்த்து செல்பி எடுத்துக் கொண்டிருந்தன. 


     அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கூச்சலிட்டு கூட பார்த்தனர் இவைகள் இரண்டும் கண்டுகொள்ளவே இல்லை. சமூக வலைத்தளங்களில் பேசும் நபர்களைப் போல் காளியும் மாலியும் பேச தொடங்கினார்கள்.


      காட்டில் உள்ள காட்சிகளை பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்களே பாருங்கள் நான் தான் காளி இவன்தான் மாலி.  எங்கள் பக்கத்தில் தான் கிளி இருக்குது பாருங்க ஹலோ சொல்லு என்றது காளி உடனே கிளி ஹலோ ஹலோ என்றது. 


        பக்கத்தில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்த குயிலைக் காட்டி இந்த காட்டிலேயே இவங்க கூட்டம்தான் நல்லா பாடுவாங்க கேட்கிறீர்களா நண்பர்களே என்று சொல்லிவிட்டு குயிலிடம் அலைபேசியைத் திருப்பியவுடன் குயில் அழகாய் பாடியது. 


        அப்படி அங்குள்ள ஒவ்வொன்றையும் காட்டி மாலியும் காளியும் பேசிக்கொண்டே இருந்தன. 

    அதையெல்லாம் மற்ற மிருகங்களும் நேரம் காலம் பார்க்காமல் பார்த்துக் கொண்டிருந்தன.


        இதையெல்லாம் பார்த்த ராஜாளி கழுகுக்கு கோபம் வந்துவிட்டது காளி மாலி இருவரும் பேசாம அந்த அலைபேசி கீழே போடுங்க.  இல்லை என்றால் ரெண்டு பேரையும் காடு கடத்தி விடுவேன். பாத்துக்கங்க என்று சத்தமா கத்தியது. 


      அப்போதுதான் தேனீயும் ஆமாம் நானும் என் வேலைய செய்யாம அதையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று வருந்தியது தேனீ அப்படி சொல்லியதும் மற்ற விலங்குகளும் வருந்தின.

     ராஜாளி கழுகு அன்பாகச் சொல்லிப் பார்த்தது. பின்பு மிரட்டிப் பார்த்தது. மாலியும் காளியும் கேட்பதாகவே இல்லை. கடைசியில் ராஜாளி கழுகு பறவைகளோடும் விலங்குகளோடும் ஆலோசனை செய்தது. ஏக மனதாக விலங்குகளும் பறவைகளும் அந்த அலைபேசியைப் பிடுங்கி எங்கிருந்து எடுத்தார்களோ அங்கே வைத்து விடுவது என்று முடிவு செய்தார்கள்.


      சோறு தண்ணீர் இல்லாம பித்து நிலைக்கு போயிருந்த காளி மாலியிடமிருந்து ராஜாளி கழுகு அந்த அலைபேசியைப் பிடுங்கியது. 


      ராஜாளி கழுகு பிடுங்கியதும் மாலியும் காளியும் அழுதார்கள் அழுதார்கள் அப்படி அழுதார்கள். குதித்தார்கள், உருண்டார்கள், புரண்டார்கள் கத்தினார்கள் யாரும் கொஞ்சம் கூட கண்டுக்கவே இல்லை. அதனால் கொஞ்ச நேரத்தில் வேறு வழி இல்லாமல் இருவரும் அமைதியானார்கள். 


    பிறகுதான் பசியை உணர்ந்தார்கள். தம்மைச் சுற்றியுள்ள நண்பர்களையும் உறவுகளையும் நினைத்தார்கள். அலைபேசியைப் பார்த்து பார்த்து கண்கள் எரிச்சல் கொண்டதையும் கைகள் வலியை அடைந்ததையும் உணர்ந்தார்கள்.


     அச்சச்சோ அந்த கேடுகெட்ட இயந்திரத்தை வச்சுக்கிட்டு மக்கள் உழைக்காமல் வீணாகப் போகிறார்களே என்று வருந்தின.  அவர்களிடமிருந்து பிடுங்கிய அலைபேசியை எடுத்த  இடத்தில் கொண்டு சென்று போட்டது ராஜாளி கழுகு.  எல்லோரும் அப்பாடா காட்டைப் பிடித்த கேடு அகன்றது என்று மகிழ்ச்சியில் துள்ளி குதித்து மகிழ்ந்தார்கள்‌.

     

காளியும், மாலியும் கூட ஏதோ சுமையை இறக்கி வைத்ததைப் போல் மகிழ்ந்தனர்.

ஈரோடு சர்மிளா
ஈரோடு சர்மிளா

முனைவர். மு. சர்மிளாதேவி, கல்லூரிப்பேராசிரியர். தமிழ்நாடு அரசு வாசிப்பு இயக்கத்தின் மாநிலக்கருத்தாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர். தீவிர வாசிப்பிலும் எழுத்திலும் பேரார்வம் கொண்டவர். பின் நவீனத்துவம் எம்.ஜி.சுரேஷின் படைப்புகளில், எவஞ்சொன்னது ராஜான்னு, மகிழினி IPS,மந்திரச்சங்கும் பப்பிக்குட்டியும், கோடைக்குதூகலம், ஆந்தையும் மரங்கொத்தியும்,துணிச்சல்காரி, வானி, போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஐந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page