பூமி பார்த்துக் கொண்டுதானிருக்கிறது
- உதயசங்கர்

- 3 days ago
- 3 min read

மோகன் குளிரூட்டப்பட்ட கவச உடை அணிந்திருந்தான். தலையில் விண்வெளிவீரர்களைப் போல தலைக்கவசம். அந்தக் கவசத்துக்குள் சிறிய ஆக்சிஜன் சிலிண்டர். இடுப்புப்பட்டையில் இன்னொரு ஆக்சிஜன் சிலிண்டர் இருந்தது. பள்ளியின் காத்திருப்பு அறையில் இருந்து வெளியே பார்த்தான். .
வானம் வெள்ளைவெளேரென்று இருந்தது. மேகங்கள் இல்லை. மரங்கள் இல்லை. செடி, கொடிகள் இல்லை. மலைகள் இல்லை. அருவிகள் இல்லை. நதிகள் இல்லை. கடல்கள் இல்லை. காற்று இல்லை. பூமி வெள்ளைவெளேரென்று இருந்தது. வேறு என்ன இருந்தது? வானாளவிய பாலங்கள் சிலந்தி வலைப்பின்னலைப் போல பின்னிக் கிடந்தன. மேகங்கள் இல்லாத தினால் பெரிய சிறிய டிரோன்கள் குறுக்குமறுக்கும் பறந்து கொண்டிருந்தன. மோகனை அழைத்துச் செல்லும் டிரோன் இன்னும் வரவில்லை. டிராபிக் ஜாம் என்ற செய்தி அவனுடைய மூளையில் நேரடியாக டெலிவரி ஆகியிருந்தது.
மோகன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். எங்கு பார்த்தாலும் வாகனங்கள்.. தரையில் செல்லும் வாகனங்கள் உண்மையில் தரையில் செல்லவில்லை. அவை தரைக்கு மேலே ஒரு அடி உயரத்தில் பறந்து சென்றன. அவை சற்று விலை குறைவானவை. வாடகையும் குறைவு. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் ஊர்ந்து கொண்டிருந்தன.
மோகனைப் போன்ற வசதியான குழந்தைகள் வானில் பறக்கும் டிரோன்களில் பறப்பார்கள். அவன் பள்ளிக்கூட த்துக்குப் போகும்போதும் சரி வரும்போதும் சரி. சாலைகளிலோ, தெருக்களிலோ மனிதர்களைத் தவிர எந்த உயிரினத்தையும் பார்த்ததில்லை. ஒரு பூவையோ, காயையோ, பழத்தையோ செடியையோ மர த்தையோ பார்த்த தில்லை. விலங்குகள், பறவைகள், பூச்சிகள், எதையும் பார்த்த தில்லை. அவ்வளவு ஏன்? அவை எல்லாம் எப்படி இருக்கும் என்று கூடத் தெரியாது.
அவனுடைய கணினியில் பூச்சிகள் விலங்குகள் பறவைகள் செடிகள் மரங்கள் எல்லாம் மனிதர்களுக்கு ஆபத்தானவை என்று சொல்லப்பட்டிருந்த து. அவ்வளவு ஏன் தண்ணீர் கூட ஹைஜீனிக் இல்லை என்று வேதியியல் விவரங்களுடன் மனப்பாடப்பகுதியில் இருந்த து. எல்லாம் பெரிய பெரிய தொழிற்சாலைகளில் தண்ணீர், ஆக்சிஜன், உணவுப்பொருட்கள் எல்லாம் செயற்கையாகத் தயாரிக்கப்பட்டன. அதற்கென்றே கே.எப்.சி, மெக்னோல்டு, ரிலையன்ஸ், டி மார்ட், போன்ற கம்பெனிகள் 1000 மாடிக்கட்டிடங்களைக் கட்டி ரோபோக்களை வைத்து உற்பத்தி செய்தார்கள். சாப்பிட நேரமோ, பொறுமையோ இல்லாதவர்களுக்கு மாத்திரைகள் கொடுக்கப்பட்டன.
அவற்றைச் சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் எடுக்காது. பசி இருக்காது. சோர்வு இருக்காது. உறக்கம் வராது. மரணமும் கிடையாது. எனவே மனிதர்கள் எல்லோரும் அந்தக் கம்பெனிகளில் ஆயுள் காலச் சந்தாக்களைக் கட்டினார்கள். மோகனின் அம்மா ஒரு கம்பெனி, அப்பா ஒரு கம்பெனி, தங்கை ஒரு கம்பெனி, அவன் ஒரு கம்பெனி. எனவே எல்லாக்கம்பெனிகளின் ஆபர்களும் கழிவுகளும் இலவசங்களும் அவர்களுக்குக் கிடைத்தன.
மோகனுக்குப் பசிப்பது போல இருந்தது. உடனே அவனுடைய கையில் இருந்த உடல் கண்காணிப்புத் திரையில் சிவப்பு விளக்கு எரிந்த து. எத்தனை கலோரி குறைந்திருக்கிறது? எத்தனை கலோரி தேவை? அதற்கு எந்த மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று திரையில் காட்டியது. உடனே அவன் அவனுடைய கால்சட்டைப்பைக்குள் கையை விட்டான். ரோஸ் நிற மாத்திரையை எடுத்து வாயின் அருகில் கொண்டு போனான். உடனே அது காந்தசக்தி ஈர்ப்பைப் போல வயிற்றுக்குள் போய்விட்டது. உடனே சிவப்பு விளக்கு அணைந்து விட்டது.
மனிதர்களைத் தவிர யாருமில்லாத உலகத்தில் மீண்டும் மீண்டும் கணினித் திரைகளைப் பார்த்துப் பார்த்துச் சலிப்படைந்து விட்டான். அம்மா சொன்னார். நூறாண்டுகளுக்கு முன்னால் ஹிஸ்டரி சேனலில் ஒரு கரப்பான் பூச்சி ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட து. உடனே பன்னாட்டுப்படைகள் அதன் மீது மிகப்பெரிய தாக்குதல் தொடுத்து அழித்து விட்டார்கள். அதன் பிறகு ஒரு ஈ, எறும்பைக் கூடப் பார்க்க முடியவில்லை என்று சொன்னார்.
மோகனுக்கு அன்று முதல் ஒரு ஆவல் தோன்றி, ஆசையாகி, அதன்பிறகு இலட்சியமாகவே மாறிவிட்ட து. மனிதர்கள் மட்டுமே வாழும் இந்தப் பூமியில் அனைத்து உயிர்களும் வாழும்படி மாற்ற வேண்டும். மறைந்த இயற்கையை மீண்டும் உருவாக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து வாழ வேண்டும். எல்லா உயிர்களும் சம மென்று மனிதர்கள் உணரவேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அதற்காக அவன் இரவு உறங்கும்போது வேண்டிக் கொண்டேயிருந்தான்.
அவனுடைய இந்த வேண்டுதலைப் பூமியின் உள்ளே மறைந்திருந்த இன்னொரு இயற்கைக் கேட்டது. அதற்கு அந்தக் குழந்தையின் வேண்டுதலைக் கேட்டு மனம் இளகி விட்ட து. அதற்கு முன்புவரை எல்லோரையும் அழிக்கும் மனித இனம் விரைவில் மறைந்து விடும். பிறகு புதிய உலகத்தை, பறவைகளை, விலங்குகளை, பூச்சிகளை, மரம் செடி கொடிகளை, மலைகளை, அருவிகளை எல்லாம் படைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தது.
மோகனின் வேண்டுதல் பூமியின் மனதை இளக்கி விட்டது.
மறுநாள் காலையில் பாலங்களுக்குக் கீழிருந்து மலைகள் முளைத்து வந்தன. மலைகளில் அருவிகள் விழுந்தன. மலைகளிலிருந்து காடுகள் விரிந்தன. செடிகள் பூத்தன. கொடிகள் பின்னிப்படர்ந்தன. மரங்களில் காய்களும் கனிகளும் தோன்றின. காடுகளிலிருந்து விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், பூமி முழுவதும் பரவின. கடல்கள் தோன்றின. கடலிலிருந்து மேகங்கள் தோன்றின. மேகங்கள் மழை பொழிந்தன. ஆறுகள், குளங்கள், ஏரிகள் தோன்றின. நீர்நிலைகள் தோன்றின.
மனிதர்களின் அத்தனை கவசங்களும் கழன்று விழுந்தன. மனிதர்கள் அந்தப் புதிய உலகை வியப்புடன் பார்த்தனர்.
மோகன் கண்விழித்ததும் ஒரு குயிலின் சத்தத்தைக் கேட்டான். 350 ஆவது மாடி சன்னல் வழியே பார்த்த போது ஒரு சொர்க்கம் தெரிந்த து. மோகனின் முகத்தில் புன்னகை விரிந்தது.

200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.
சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்
பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்
விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.




Comments