top of page

இறுதி மரியாதை


”சாப்ளின், பக்கத்துவீட்டுத் தாத்தா இறந்துட்டாராம். காலையில நெஞ்சுவலின்னு ஆஸ்பத்திரி கூட்டிகிட்டு போனாங்க. காப்பாத்த முடியலையாம். நான் போய் லீவு சொல்லிட்டு வரேன்”


சாப்ளினுக்கு இடி விழுந்ததுபோல இருந்தது. தட்சிணா தாத்தைவைத்தான் மலைப்போல நம்பி இருந்தான். தட்சிணாமூர்த்தி என்ற தட்சிணா தாத்தா சாப்ளினின் இரண்டாம் வீட்டில் இருக்கின்றார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த கையோடு ஒரு கல்லூரியில் சேர தட்சிணா தாத்தா உதவுவதாகச் சொல்லி இருந்தார். சாப்ளின் ஏழாவது படிக்கும்போதே அவன் அப்பா இறந்துவிட்டார். அம்மா ஒரு பட்டு மளிகையில் வேலை செய்கின்றார். பள்ளிக்கு என்று செலவு எதுவும் இருக்கவில்லை. சக மாணவர்களைப்போல எதுவும் பெரியதாக சாப்ளின் ஆசைப்பட்டதும் இல்லை. தினமும் காலையில் மற்றவர்கள் டியூசன் போவார்கள். இவன் தட்சிணா தாத்தாவுடன் நடக்கச் செல்வான். கொஞ்ச தூரம் ஓடுவான். கொஞ்சம் அவரோடு நடப்பான். நெடுஞ்சாலை சந்திப்பில் ஒரு டீ குடித்துவிட்டுத் திரும்புவார்கள். “தாத்தா, டீல சர்க்கரை கூடாது. ஆயாகிட்ட சொல்லிடுவேன்” என சாப்ளின் மிரட்டுவான்.


பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்த தினம் காலை 6 மணிக்கு எல்லாம் சிவன் கோவிலுக்குப் போய் வேண்டிக்கொண்டு பள்ளி வாசலில் காத்திருந்தார் தட்சிணா தாத்தா. “ஏண்டா சாப்ளின், ரிசல்ட் எல்லாம் பேப்பர்ல வரதில்லையா?” என்றார். மதிப்பெண் பட்டியலே அப்போது சாப்ளின் கையில் இருந்தது. பதினொன்றாம் வகுப்பு எந்த க்ரூப் என தேர்ந்து எடுக்க தாத்தாதான் உடன் வந்தார். “மேடம், எந்த க்ரூப் எடுத்தா வெளிநாட்டுக்கு எல்லாம் போய் பெருசா வருவானோ அதில் சேர்த்திவிடுங்க” என சிபாரிசு செய்தார். ”தாத்தா, நான் இங்கதான் இருப்பேன்” என்றான் சாப்ளின். ஆனால், அவனுக்குப் பிடிக்காத க்ரூப்தான் கொடுத்தார்கள். அந்த மதிப்பெண்ணிற்கு அவ்வளவுதான் தரமுடியும் என்று சொல்லிவிட்டார்கள்.


தெருவில் சாவு மேளம் கேட்டது. இதை கேட்கும்போதெல்லாம் சாப்ளினின் அப்பா இறந்தது சாப்ளின் நினைவிற்கு வரும். வீட்டைச் சாத்திக்கொண்டு ஓடோடினான். தாத்தாவை வராண்டாவில் கடத்தி இருந்தார்கள். “சாப்ளின்னு... சாப்ளின்னு..பாருடா தாத்தாவை” எனப் பாட்டி ஒப்பாரி வைத்தார். இடிந்துவிழுவது என்றால் என்னவென அப்போதுதான் சாப்ளின்னுக்கு புரிந்தது. அப்பா இறந்தபோது அதன் தாக்கம் அப்போது அவனுக்குப் புரியவில்லை. இரண்டுங்கெட்டான் வயது. இப்போது தாத்தாதான் தனக்கான வெளிச்சம் என நினைத்துக்கொண்டு இருந்தான். கண்கள் இருட்டானது.


“சாப்ளின், சைக்கிள் எடுத்துகிட்டுபோய் பந்தலுக்கு மட்டும் சொல்லிட்டு வந்துடு” என்றார் தாத்தாவின் மூத்த மருமகன். விடியற்காலையில் நெஞ்சுவலி என பாட்டியிடம் சொல்ல, உடனே உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அங்கிருந்து வேலூர் பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்துக்கொண்டு போயிருக்கின்றார்கள். காலை 4.30க்கு எல்லாம் உயிர் பிரிந்துவிட்டுள்ளது. எல்லோருக்கும் அப்பவே தகவல் சொல்லியாச்சு. அன்று மாலையே உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு வேகமாக நடந்தது. 


சாப்ளின் வேட்டியில்தான் இருந்தான். அவன் போடும் இரண்டு பேண்ட்களும் தாத்தா வாங்கி தந்தவைதான். வேண்டாம் என அம்மா சொன்னபோது, “என் மகளோட பையன் எனக்கு யாரு? பேரன் தானே” என்று கோபமாக கடிந்துகொண்டார் தாத்தா. ஒவ்வொன்றாக நினைவிற்கு வந்துபோனது. அப்பா இறந்தபோது தனியாளாக நின்று எந்த சடங்கு சம்பிரதாயமும் கூடாது என்று போராடினார். அம்மா பல சடங்குகளிலிருந்து தப்பித்தார். “இவன் போராளிடா அவனுக்கு உரிய மரியாதையைக் கொடுங்க” என அப்போது சத்தம்போட்டார். அப்பா ஊருக்காக உழைத்தவர் என அம்மா அடிக்கடி சொல்வார். எந்த பழக்கமும் இல்லை, திடீரென இறந்துவிட்டார்.


நூறு மாஸ்க் வாங்கி வந்தான் சாப்ளின். கொரோனா கெடுபிடிகள் இல்லை என்றாலும் முதல் மருமகன் எல்லோருக்கும் மாஸ்க் கொடுத்தார். கட்டாயப்படுத்தினார். முகத்தை மூடிக்கொண்டதால் முக்கால்வாசி நபர்கள் முகமே சரியாகத் தெரியவில்லை. விழுந்த மாலைகளை எல்லாம் ஓரமாக அடுக்கும் வேலை சாப்ளினுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. மிகுந்த சோர்வாக எல்லாவற்றையும் எடுத்து வைத்தான். இப்படி சாப்ளினை எப்போதாவது சோர்வாகப் பார்த்தால் உடனே தாத்தா அவனுக்கு ஏதாவது சாப்பிட வாங்கி தருவார், இல்லையேல் பாட்டியிடம் சாப்பாடு போடச்சொல்வார்.


அழுதுகொண்டே இருந்த சாப்ளினின் அம்மா இரண்டுமுறை சாப்ளினிடம் வந்து “இந்தா போய் ஏதாச்சும் சாப்பிட்டுவா” என காசினைக் கொடுத்தார். வேண்டாம் என மறுத்துவிட்டான். டீ கேன் வாங்கி வந்தபோது இரண்டு டீ குடித்ததோடு சரி. “டேய், அழுதுடுடா. மனசுக்குள்ளயே அழுகையை வெச்சிக்காத” என்றும் கரிசனமாகக் கூறினார்.


பளபளக்கும் கார் ஒன்று தெருமுனையில் நின்றது. கீர்த்தி அப்போது ஏதோ வேலையாக அங்கே நின்றுகொண்டிருந்தான். காரின் பின்னாடி கண்ணாடியில் “மகேஸ்வரன்” என்று எழுதி இருந்தது. அந்த காரினை இந்த ஊரில் பார்த்ததே இல்லை சாப்ளின். அதனால் ஒவ்வொரு அங்குலமாக அளந்தான். அதில் இருந்தவர் பெரிய மாலையுடன் தாத்தாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அமைதியாக ஒரு ஓரத்தில் அமர்ந்துகொண்டார். அங்கே இருந்தவர்கள் யாரும் அவருடன் பேசவில்லை. கால்மணி நேரம் அமைதியாக அங்கே இருந்தவர் கொஞ்ச நேரம் குலுங்கிக் குலுங்கி அழுதார். சாப்ளின் மட்டும் இதனை எல்லாம் கவனித்தான். பின்னர் கிளம்பிச் சென்றுவிட்டார்.


இறுதிச் சடங்குகள் எதுவும் நடக்கவில்லை. ஒப்பாரி சத்தம் மட்டும் சாப்ளினின் மனதைப் பிசைந்தது. அதைவிட அவன் எதிர்காலம் நினைத்து இன்னும் வருத்தமாக இருந்தான். ஆதாரமாக இருக்க வேண்டிய அப்பாவும் இல்லை, அம்மாவால் எவ்வளவு முடியுமோ அதனைச் சிறப்பாகச் செய்கின்றார், கைக்கொடுப்பார் என நினைத்த தாத்தாவும் இவனை விட்டுச் சென்றுவிட்டார்.

தாத்தாவிற்கு விழுந்த மாலைகளை எல்லாம் இறுதி ஊர்வலத்திற்கு வந்த வண்டியில் தூக்கிப் போட்டான் சாப்ளின். இடுகாடு வரையில் சாப்ளினும் உடன் சென்றான். புதைப்பதற்கு எல்லா ஏற்பாடும் நடந்து இருந்தது. சில நிமிடங்களிலேயே எல்லாம் முடிந்தது. “கடைசியா முகத்தை பார்த்துக்கோங்க” என்ற போது இரண்டு கைகூப்பி வணங்கினான் சாப்ளின்.

அரசமரத்தின் கீழே அமர்ந்தான். இருட்டிக்கொண்டு வந்தது. யாரும் அங்கே இல்லை. தாத்தா எழுந்து வந்து “சாப்ளினு”ன்னு சொல்லுவார் என நினைத்தான். மரணம் பற்றிய பயமோ இறந்தவர்கள் பேயாக வருவார்கள் என்ற அச்சமோ சாப்ளினுக்கு இருக்கவில்லை. புல்லட் சத்தம் கேட்டது. தாத்தாவின் முதல் மருமகன் “சாப்ளின், இங்க என்ன செய்யற, வா வீட்டுக்குப் போகலாம்” என அழைத்துச் சென்றார்.


வாசலிலேயே குளித்துவிட்டு வீட்டிற்குள்ளும் சென்று குளித்து முடித்தான். தாத்தா பொங்கலுக்குக் கொடுத்த வேட்டியைக் கட்டிக்கொண்டான். “நாலு இட்லிய ராசாத்தியக்கா கடையில் வாங்கி வந்திருக்கேன். சாப்பிட்டுபடு” எனச்சொல்லி அம்மா படுக்கச் சென்றுவிட்டார். உடல் அசதி. அதனைவிட மனம் அசதியாக இருந்தது சாப்ளினுக்கு.


வாசலில் யாரோ வந்து “இசக்கி மாமா உன்னை வரச்சொன்னார்” என்று செய்தி சொன்னார். தட்சிணா தாத்தாவின் முதல் மருமகன் தான் இசக்கி.

"சாப்பிடக் கூப்பிடுவார் போ", என அம்மா போகச்சொன்னார்கள்.


தாத்தாவைக் கிடத்திவைத்த இடத்தை நன்றாகக் கழுவி இருந்தனர்.  கொஞ்ச நேரம் அங்கே நின்று வெறித்துப் பார்த்திருந்தான். “மாமா மேல இருக்கார் சாப்ளின். மாடிக்கு வரச்சொன்னார்” என்று ஒரு குரல். இசக்கி அடுத்தடுத்து என்ன காரியங்கள் என எழுதிக்கொண்டு இருந்தார். சாப்ளின் நின்றதை கவனித்துவிட்டு டயரியில் இருந்து ஒரு கவரை எடுத்தார். “சாப்ளின், தாத்தாவைப் பெரிய ஆஸ்பத்திரி கூட்டிட்டுப் போற வழியில என்கிட்ட ஒன்னு சொன்னார். அவருக்கு அதுதான் கடைசி இரவுன்னு முன்னவே தெரிஞ்சு இருக்கு. ஒரு விசிட்டிங் கார்ட்டும் ஒரு லெட்டரும் இந்த டயரில இருக்கு கொடுத்திடுன்னு சொன்னார். இந்த கார்டில் இருப்பவரை பார்த்தால் உன் காலேஜ் சீட்டுக்கு ஏற்பாடு செய்வாராம். என்ன காலேஜ்ல படிக்கணுமோ அதில் அவர் ஏற்பாடு செய்வாராம். தாத்தா அவரை படிக்கவெச்சிருக்கார் போல. இந்தா லெட்டர். அப்புறம் உன் படிப்புச் செலவு எவ்வளவோ அது மொத்தத்தையும் நானே பார்த்துக்கறேன். எவ்வளவு லட்சம் செலவானாலும் பரவாயில்லை. எது உன் விருப்பமோ அதில் சேர்ந்து படி” என்று கவரை ஒப்படைத்தார். சாப்ளினின் உடல் சில்லென்று மாறியது. ஆழ்கிணற்றில் கூவிக்கொண்டே  விழுந்து கொண்டிருப்பவனை யாரோ கைப்பிடித்துக் காப்பாற்றியது போன்ற உணர்வு.


கவரை பிரித்தான். உள்ளே “மகேஸ்வரன்” என்ற பெயர் பொறித்த விசிட்டிங் கார்ட். அந்த நவீன வெள்ளைக்காரில் வந்தவர்தான் மகேஸ்வரன். ஒரு லெட்டர் இருந்தது. முன்னிரவு எழுதி இருக்க வேண்டும். அவருக்கு நிச்சயம் அது தன் கடைசி இரவு எனத் தெரிந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கின்றார். லெட்டரில் ஒரே வரிதான். கிறுக்கல் கையெழுத்து. “பெரிய ஆளா வா ராசா”. இதனைப் படித்ததும் கண்களில் அவனுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. வீடே நடுங்கும் அளவிற்குக் கதறி அழுதான்..”தாத்தா...” என்று.


விழியன்
விழியன்

சென்னையில் வசிக்கும் இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர் நூல்களை வெளியிட்டிருக்கிறார். சிறார் இலக்கியத்தில் கதைகள், நாவல், கட்டுரை, கணிதக்கட்டுரைகளையும் எழுதி வருகிறார். கல்வி சார்ந்தும் குழந்தைகளின் வாசிப்பு சார்ந்தும் செயல்பட்டு வருகிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page