top of page

வண்ண மீன்களால் மின்னும் வீடுகள்


காலையில் விரைவிலேயே விழித்துக்கொண்ட அக்காள்  ஆயிஷா தேன்மொழி, தம்பி அகமது தமிழினியன் இருவருடைய  கண்களும் சன்னல் அருகில் இருக்கும் மேசையின் பக்கம் திரும்பின. உடனே “உய்” என்று உற்சாகமாகக் குரல் எழுப்பினார்கள்.


சில நாட்களாகவே அவர்களுக்கு வீட்டில் ஒரு கண்ணாடித்  தொட்டி வைத்து, வண்ண மீன்கள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருந்தது. 


என்ன விந்தை! இப்போது உண்மையாகவே வீட்டுக்குள் மீன்தொட்டி வந்திருக்கிறதே! “எப்படிக்கா இது இங்கே வந்துச்சு,” என்று கேட்டான் அகமது.


“தெரியலைடா. நாம எதை நினைச்சு உறுதியா ஆசைப்படுறோமோ அது நடக்கும்னு டிவியில ஒருத்தர் பேசினாருல்ல? அப்படி நடந்திருக்குமோ,” என்றாள் ஆயிஷா.


இருவரும் ஓடிச்சென்று அம்மாவையும் அப்பாவையும்

கைகளைப் பிடித்து இழுத்து வந்தார்கள். மீன்தொட்டியைக் காட்டி, “நாங்க ஆசைப்பட்டது நடந்திருச்சு,” என்று சொன்னார்கள். 


அம்மாவும் அப்பாவும் ஒருவரையொருவர் பார்த்து மௌனமாகச் சிரித்துக்கொண்டார்கள். முதல் நாள் இரவு மீன்தொட்டியைக் கொண்டுவந்ததே அவர்கள்தானே! பிள்ளைகளுடைய ஆசையைத் தெரிந்துகொண்டு அவர்களிடம் சொல்லாமலே அதை நிறைவேற்றினார்கள். அதை  உடனே சொல்லி குழந்தைகளுடைய உணர்ச்சிக் கொண்டாட்டத்தைக் குறைக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தார்கள். ஆகவே அவர்களும், “அட, நீங்க ஆசைப்பட்டது போலவே நடந்துருச்சே,” என்று சொல்லி வியந்து போனது போல நின்றார்கள்.



“தினமும் நான்தான் மீனுக்குச் சாப்பாடு போடுவேன்,”  என்றான்  அகமது.


“காலையிலே நீ போடு, சாயங்காலம் நான் போடுறேன்,” என்றாள் ஆயிஷா.


அப்புறம் அவளே கேட்டாள்: “இவங்களுக்கு என்ன சாப்பாடு கொடுக்கணும்? நாம சாப்பிடுற சோறு, பிரியாணி, இட்லி, காராபூந்தி இதெல்லாம் போடலாமா?”


அம்மா சொன்னார்: “அதெல்லாம் போட்டா தொட்டித் தண்ணியும், மீன்களோட உடம்பும் கெட்டுப்போயிடும்.”


அப்பா தொட்டிக்குப் பக்கத்திலே இருந்த, “ஃபிஷ் பெல்லட்ஸ்” என்று அச்சிட்டிருந்த ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்தார். அதன் மூடியைத் திறந்தார். உள்ளே சிவப்பு நிறத்தில் கடுகு போலக் குட்டிக் குட்டி உருண்டைகள் இருந்தன.


“இதுதான் மீனுக்குச் சாப்பாடு.  கொஞ்சமா, பத்து நிமிசத்துல எல்லா மீனும் சாப்பிட்டு முடிக்கிற அளவுக்குப் போட்டா போதும்.”


உலர்ந்த புழுக்களாகிய டிரை வொர்ம்ஸ், அவற்றைச் சதுர வில்லைகளாகப் பதப்படுத்திய டியூபிஃபிக்ஸ் வொர்ம்ஸ் என வேறு சில உணவு வகைகளும் இருப்பதை அவர் தெரிவித்தார். ஓரிரு நாட்கள் வெளியூர் செல்லும்போது தொட்டியில் வைத்துவிட்டுப் போகக்கூடிய சற்றுப் பெரிய மாத்திரையும் இருக்கிறது என்றார்.


“தொட்டியில நாலு பேரு கோல்டு ஃபிஷ். மத்தவங்க யாரு?”


“இவங்க பேரு பிளாக் மாலி. இவங்க ஒயிட் மாலி. விசிறி மாதிரி வாலை ஆட்டிக்கிட்டு சர்ருசர்ருன்னு போறாங்களே, அவங்க பேரு கப்பி,” என்றார் அம்மா.


“இங்க பாருங்க, அமைதியான லீடர் போல  கம்பீரமா போகுதே, அது ஏஞ்ஜல்," என்று அப்பா தேவதை மீனைக் காட்டினார்.


"இவங்க  எப்படி தண்ணிக்குள்ள சுவாசிப்பாங்க? நமக்குத் தண்ணிக்குள்ள மூச்சு முட்டுதே?" என்று ஆயிஷா கேட்டாள்.


"நல்ல கேள்வி! தண்ணியிலே ஆக்சிஜன், ஹைடிரஜன் ரெண்டு வாயுவும் கலந்திருக்குது. மீன் வாயைத் திறந்து திறந்து தண்ணியைக் குடிச்சிக்கிட்டே இருக்கும். அந்தத் தண்ணி, மீன் உடம்புல ரெண்டுபக்கமும் இருக்கிற செவுள்களுக்கு வரும். நமக்கு நுரையீரல் மாதிரிதான் மீனுக்கு செவுள். அது தண்ணியிலேயிருந்து வேணும்கிற ஆக்சிஜனை எடுத்துக்கிடும். மீதித் தண்ணியை வெளியேத்திடும்,” என்று அப்பா விளக்கினார்.


பிள்ளைகள் இப்படியெல்லாம் கேள்விகள் கேட்பது பெற்றோருக்குப் பெருமையாக இருந்தது.


அப்பா தொட்டிக்குள் விளக்கை ஒளிர விட்டார். அடியில் பரப்பப்பட்டிருந்த பல வண்ணக் கூழாங்கற்களும், மணலும்  மின்னின. ஒரு நீர்ச்செடி அழகாக இலைகளை உயர்த்தி அசைந்தது.


அடியிலிருந்த ஒரு கல்லிலிருந்து நீர்க்குமிழிகள் வரத் தொடங்கின. “இது எதுக்கும்மா?”


“இந்தக் காத்துக் குமிழிகள் தண்ணியோட மேல் மட்டத்துக்கு வர்றப்ப உடையுது பார்த்தீங்களா... அப்படி உடையுறப்ப பிரியுற ஆக்சிஜன் தண்ணியில கலக்கும். கார்பன் டை ஆக்ஸைடு மேலே போயிடும்.”


“ஆனா, இப்படி பபிள்ஸ் நிறையா வந்தா வேற ஏதாச்சும் எதிரி விலங்கு இருக்குமோன்னு மீன் பயப்படும்னு என் ஃபிரெண்டு சொன்னாளே?”


“குமிழி பெரிசு பெரிசா இருந்தாலோ, வேகமா வந்தாலோ, அதனால நீரோட்டமும் வேகமாயிட்டாலோ, மோட்டார் இரைச்சல் போட்டாலோ மீன்  பயப்படும்தான். அதனால சின்னச் சின்னதா, நிதானமான வேகத்துல பபிள்ஸ் வர்றதுக்கு அட்ஜஸ்ட் பண்ணனும். அதுக்கேத்த மாதிரிதான் இந்த  அக்வேரியம் ஏர் பம்ப் இருக்குது. இது சைலன்ட்டாவும் ஓடும்…”


பிரவுன் கோல்டு, பிளாக் கோல்டு,  ஜெப்ரா டானியோ, பிளாட்டி, கோய்கார்ப், டாங்க் கிளீனர், டைகர், ஷார்க் … என்று பல்வேறு மீன்களைக் குழந்தைகள் தெரிந்துகொண்டார்கள். 


அகமது எதையோ ஞாபகப்படுத்தினான். ஆயிஷா இப்படிக் கேட்டாள்: “போன மாசம் பாட்டி அட்மிட் ஆகியிருந்த ஹாஸ்பிட்டலுக்குப் போயிருந்தோமே, அங்கே ஒரு பெரிய டேங்க் இருந்துச்சு. அதிலே  பெரிய சைஸ்ல ஒரே ஒரு மீன் சுத்தி வந்துச்சுல்ல…”


அவள் கேட்க வருவதைப் புரிந்துகொண்டார் அப்பா: “அதுக்குப் பேரு டிராகன் ஃபிஷ். இன்னொரு பேரு ஆரோவானா. அதை இங்கே வாஸ்து மீனுன்னு சொல்லி  விக்கிறாங்க. அதை வளர்த்தா தொழில்ல லாபம் கிடைக்கும், வீட்டிலே செல்வம் பெருகும்னெல்லாம் சொல்வாங்க. ஆனா தொழிலை ஒழுங்கா நடத்துனாதான் லாபம் கிடைக்கும், உழைச்சு சம்பாதிச்சு சேமிச்சாதான் செல்வம் பெருகும்.”


“இதிலே பரிதாபம் என்னன்னா, அதை ஒற்றையாதான் வளர்ப்பாங்க. பாவம், எல்லா உயிர்களையும் போல அதுவும் குடும்பத்தோட வாழத்தானே விரும்பும்…” என்றார் அம்மா. 


“என் ஃபிரெண்டு வீட்டுல ஃபைட்டர் மீனைத் தனியா பாட்டில்ல வைச்சிருக்காங்களே?”


“ஆமால்ல? இன்னிக்கே சாயங்காலம் நாம அக்வேரியம் கடைக்குப் போயி விசாரிப்போம்…”


பிள்ளைகள் மாலையில் பள்ளியிலிருந்து வந்த பின் எல்லோருமாக வண்ண மீன்கள் கடைக்குப் போனார்கள். 


“சில நாடுகள்ல தண்ணீர்க் குட்டையிலேயும், நீரோடையிலேயும் வாழுற பெட்டா ஃபிஷ்சைத்தான் ஃபைட்டர்னு சொல்றோம். அது இயற்கையாவே சண்டைக் குணத்தோட இருக்கும். தன்னைச் சுத்தி ஒரு பாதுகாப்பு வட்டம் மாதிரி வெச்சிக்கிட்டு, அதுக்குள்ள வேற எந்த மீன் வந்தாலும் சண்டை போட்டுக் காயப்படுத்திடும், சில நேரங்கள்ல கொன்னுடும். அதனாலதான் ஃபைட்டர்னு பேரு. இன்னொரு ஃபைட்டர் வந்தா கூட சண்டைதான். பெண் ஃபைட்டர் குஞ்சு போடுறப்ப மட்டும் சேர்ந்து இருக்கும். மத்த மீன்கள் தள்ளி இருக்கும். தொட்டியில குட்டை, நீரோடை அளவுக்கு இடம் இருக்காது, அதனாலதான் தனியா வைக்க வேண்டியிருக்கு,” என்றார் கடைக்காரர்.


இப்போது பெரும்பாலான மீன்கள் பண்ணைகளில் உள்ள தொட்டிகளிலேயே பிறந்து வந்தவைதான்.


டியூபிஃபிக்ஸ் வொர்ம்ஸ் எனப்படும் புழுக்கள் உயிருடனும்  கிடைக்கின்றன. உயிருடன் நழுவும் புழுக்களைத் தேடிச் சென்று கவ்வுவது மீன்களுக்குச் சுறுசுறுப்பைத் தரும். தொட்டியின் அடியில் புழுக்களின் துண்டுபட்ட உடல்கள் கிடந்து அழுகிவிடும். ஆகவே அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும்.


தண்ணீர் மாற்றுவது பற்றி அப்பா விசாரித்தார். வாரம் ஒரு தடவை கால்வாசியும், மாதம் ஒருதடவை முழுதாகவும் தண்ணீர் மாற்றுவது நல்லது. மூன்று அல்லது நான்கு மாதத்துக்கு ஒரு முறை இதற்கான பணியாளரை வரவழைக்கலாம். அவர் தொட்டியை உள்ளேயும் வெளியேயும் கழுவி,  வண்ணக் கூழாங்கற்களையும் மணலையும் மாசு நீக்கி, மோட்டாரைப் பரிசோதித்து, செடிகளை ஒழுங்குபடுத்தித் தருவார். இந்த நடைமுறைகளால் மீன்கள் நீண்ட காலம் நலமாக வாழும் என்று கடைக்காரர் குறிப்பிட்டார்.   


அன்றிலிருந்து குழந்தைகள் நாள்தோறும்  மீன்களைப் பார்த்து மகிழ்ந்தார்கள். ஓய்வின்றி மீன்கள் நீந்துவதைப் பார்க்கிறபோது, வேலைகளால் ஏற்படும்  சோர்வு நீங்குவது போல் பெற்றோரும் உணர்ந்தார்கள். விருந்தினர்கள் மற்ற கலைப் பொருள்களைப் போல வண்ண மீன் தொட்டியும் வீட்டுக்கு அழகு சேர்ப்பதாகப் பாராட்டினார்கள்.


ஒரு நாள் எதிர்வீட்டில் ஏதோ சலசலப்புக் கேட்டது. ஆயிஷா தேன்மொழியும் அகமது தமிழினியனும் போய்ப் பார்த்தார்கள். அங்கேயும் வண்ண மீன் தொட்டி வந்திருந்தது. இரு  வீட்டு நண்பர்களும் “ஹை ஃபை” என்று கைகளைத் தட்டிக்கொண்டார்கள்.


அ. குமரேசன்
அ. குமரேசன்

பத்திரிகையாளர் பணியில் நாற்பதாண்டுகளாகப் பயணம். தற்போது ‘செம்மலர்’ இதழின் துணையாசிரியர். நேரடிப் புத்தகங்களும் மொழிபெயர்ப்புகளுமாக 42 புத்தகங்கள். சிறாருக்கென  எழுதிய ‘எதிர்ப்பதம்’, ‘வனவிலங்கு உடலில் வரி வந்தது எப்படி’ ஆகிய கதைப் புத்தகங்கள் 2, ‘சாரி  பெஸ்ட் ஃபிரெண்ட்’, ‘உலகைச் சுற்றி 80 நாட்கள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்புகள் 6. கட்டுரையாக்கங்களில் கூடுதல் ஈடுபாடு. உரை நிகழ்த்துவதிலும், குழந்தைகளோடு உரையாடுவதில் இரட்டிப்பாகவும் ஆர்வம்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page