top of page

மாயக் கரண்டி


இரவு எப்பொழுது வரும் என்று ஆனந்தன் காத்திருந்தான் இரவு வந்தால் தானே கனவு வரும். கனவு வந்தால் தானே தேவதையும் வரும். 'என்ன இன்னைக்கு நேரம் ஓடவே மாட்டேங்குது' என்று கடிகாரத்தையே பார்த்தபடி வீட்டுப் பாடங்களை எழுதிக் கொண்டிருந்தான் ஆனந்தன்.

“ஆனந்தா டைம் ஆச்சு சாப்பிட்டு படு“ என்று அம்மா அழைத்தவுடன் ஓடிப்போய் இரவு உணவை வேக வேகமாக சாப்பிட்டு விட்டு படுக்கையில் படுத்து  கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான்.


பல நாட்களுக்கு முன் ஆனந்தனின் கனவில் ஒரு தேவதை வந்தது. ”ஆனந்தா நான் ஒரு மாதம் உன்னை கண்காணிப்பேன். நீ நம்பிக்கையானவன், நல்லவன் என்று தெரிந்தால் உனக்கு ஒரு மாயக்கரண்டியை பரிசாக தருவேன்" என்று சொல்லிவிட்டு சென்றது.


'ஒரு மாதம் இன்றோடு முடியுது . தேவதை வருமா பரிசு கிடைக்குமா?' என ஆனந்தன் படுக்கையில் காத்திருந்தான்.


கனவும் வந்தது தேவதையும் வந்தது. ”ஆனந்தா உனக்கு பரிசைக் கட்டாயம் தருகிறேன். அதை நல்ல காரியத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. ஒரு வாரம் கழித்து இந்த பரிசை திரும்ப வாங்கிக் கொள்கிறேன் “என்று சொல்லி விட்டு தேவதை மறைந்து விட்டது.


காலையில் கண்விழித்த ஆனந்தனின் சட்டப்பையில் ஏதோ நெருடியது.. கையை விட்டு தேடி எடுத்தான். ஆஹா! அழகான ஒரு கரண்டி. இதுதான் அந்த பரிசா! என்று ஆர்வத்தோடு அதனை பார்த்த ஆனந்தன் அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக் கொண்டான்.


பள்ளிக்குப் போகும் வழியில் அந்த கரண்டியை எடுத்து இது என்ன தரும் என்று பார்க்கலாம் என்று யோசித்தபடியே, 'எனக்கு ஒரு நெல்லிக்காய் தருகிறாயா?' என்று கேட்ட அடுத்த நொடியே கரண்டியின் மேல் ஒரு நெல்லிக்காய் இருந்தது . 

“ரோட்டுக்கு நடுவுல ஒரு பள்ளம் இருக்கு அங்க கொஞ்சம் மண் அள்ளிப் போட்டு அதை மூடு” என்று அவன் கரண்டியிடம் சொன்ன சில நிமிடங்களில் பள்ளத்தில் மண் நிரம்பி ரோடு சரியாகிவிட்டது. ஆனந்தனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஐய், ஜாலி ஜாலி என்ற படியே கரண்டியை பத்திரமாக பைக்குள் வைத்துக் கொண்டான்.


ஆனந்தனின் அப்பா இரவுச் செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். “ஆனந்தா இங்க பாரேன் இந்த நாட்டுல போர் நடக்கிறதுனால குழந்தைகளுக்கு சாப்பாடே இல்லையாம்.. அச்சச்சோ! இந்த நாட்டுல வெப்ப அலை தாக்கத்தினால பயிர்கள் எல்லாம் வாடி போச்சாம்.. கிணத்துல குளத்துல எல்லாம் தண்ணியே இல்லையாம்….. ஐயோ அடுத்த செய்தியும் வருத்தமான செய்தியா தான் இருக்கு.. எரிமலை வெடிச்சு சிதறது. அதனால அந்த ஊரே தூசியும் எரிமலை குழம்புமா நிறைஞ்சிருக்காம்..

உலகத்துல மக்கள் எப்படி தான் வாழாறதுனே தெரியல ஆனந்தா “ என்று புலம்பி தீர்த்தார் அப்பா.

ஆனந்தன் வருத்தத்தோடு தன் வீட்டு பாடங்களை எழுதிக் கொண்டிருந்தான்..


சில நாட்கள் கழித்து,,”அம்பிகா இங்க வாயேன் டிவில இந்த செய்தியை பாரேன் …

போர் நடந்த ஊர்ல மூட்ட மூட்டையா உணவுப்பொருட்கள் வந்து குவிஞ்சி கிடக்குதாம்…எரிமலை வெடிச்ச நாட்ல தூசி எல்லாம் மறைஞ்சே போச்சாம், அந்த இடம் எரிமலை வெடிக்காத மாதிரியே சுத்தமா இருக்குதாம், ஒரு நாட்டுல கிணத்துல கொளத்துல தண்ணி இல்லன்னு சொன்னாங்க இல்ல, அந்த நாட்டுல தரிசா கிடந்த நிலத்தில் எல்லாம் எங்க பாத்தாலும் மரமா முளைச்சி நாடே பச்சைப்பசேல்னு இருக்காம் .ஏரி, குளம் ,கிணறு எல்லாம் தண்ணீர் நிரம்பி வழியுதாம். இதெல்லாம் எப்படி நடந்தது என்று யாராலயும் கண்டுபிடிக்கவே முடியலையாம்னு செய்தில சொல்றாங்க பாரு என ஆச்சரியத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்.. " "ஆமாங்க இயற்கைக்கு எதிரா  நடக்காம மக்கள் இருந்தாலே உலகம் நல்லா இருக்கும்" என்றபடியே ஆனந்தனின் அம்மாவும் ஆச்சரியத்தில் மூழ்கினார்.


ஆனந்தன் மெதுவாக சிரித்துக் கொண்டே தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். பல மாதங்கள் ஆகியும் தேவதை அவனிடமிருந்து அந்த கரண்டியை திரும்ப வாங்கிக் கொள்ள கனவில் வரவே இல்லை.. கரண்டி அவனிடமே இருந்தது.


ஷீலா ராஜன்
ஷீலா ராஜன்

தமிழ்நாடு அரசுப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியரான இவர், ஒரு கதைசொல்லி ஆவார். தமிழ்நாடு அரசின் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகக் கதைகளுக்கான காணொலிகளுக்குப் பின்னணிக் குரல் (Voice-over) கொடுத்துள்ளார். மேலும், பள்ளி ஆங்கிலப் பாடப்புத்தகங்களின் எழுத்தாளராகவும், குழந்தைகளுக்கான விழுமியக் கல்வி (Value Education) பாடப்புத்தகக் கதைகளின் ஆசிரியராகவும் பங்களித்துள்ளார்


2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Anto
Aug 19
Rated 5 out of 5 stars.

Feel good story

nice maam

Like

Guest
Aug 19
Rated 5 out of 5 stars.

super story

Like
bottom of page