ஹன்ஸ் குகைகள், பெல்ஜியம்
- எழில் சின்னத்தம்பி

- 3 days ago
- 4 min read

பெல்ஜியம், லக்ஸம்பெர்க் மற்றும் நெதெர்லாந்து (ஹாலந்து) ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டிருக்கும் சிறிய நாடுகள். மூன்று நாடுகளையும் இணைத்து பீனலக்ஸ் (Benelux) என்று சொல்லுவார்கள்.
பெல்ஜியத்தின் தலைநகரம் (ஐரோப்பாவின் தலைநகரமும் கூட) பிரஸல்ஸ் (Brussles) நகரிலிருந்து லக்ஸம்பர்க் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது ஹன்ஸ் குகை. இந்தக் குகை, ப்ரஸல்ஸ் நகரிலிருந்து சுமார் நூற்று இருபது கிலோமீட்டர் தொலைவில் தெற்கே அமைந்திருக்கிறது. குகைக்கு அருகே அமைந்த பெரிய நகரம் நாமுர் (Namur). நாமூரைக் கடந்து சிறிது நேரத்தில் இரயில் யெமிலி (Jemille) என்ற சிற்றூரில் நிற்கும்போது இறங்கிக் கொள்ள வேண்டும். யெமிலியிலிருந்து பேருந்துப் பயணம். சுமார் பத்து கிலோமீட்டர் கடந்தால் வரவேற்கிறது ஹன்ஸ் சுர் லெஸ்ஸி (Hans-Sur-Lesse). நானும் என் நண்பனும் அங்கே சென்ற நேரம் நல்ல கோடைகாலம் (2001ஆம் வருடம்) என்றாலும் வழக்கத்திற்கு மாறான குளிரும் மழையும் அன்றைய பயணத்திற்கு இடையூறாய் இருந்தன.
குகைச் சுற்றுலா செல்ல அனுமதிச்சீட்டு வாங்கி, தயாராக நின்றிருந்த சிறிய செந்நிற ட்ராம் வண்டியில் அமர்ந்தோம். சில்லென்ற குளிர்காற்று முகம் வருட, வண்டி புறப்பட்டது. சரிவான பாதை. குகையின் வாசலை அடையப் பத்து நிமிடப் பயணம் ஆனது. செல்லும் வழியில் பச்சைப் பசேலென்ற புல்வெளியும், புல் மேய்ந்துகொண்டிருந்த மான்கூட்டங்களும், வழியெங்கும் அணிவகுத்த உயரமான மரங்களும் மனதை மயக்கின. கீழேயுள்ள படத்தில் காண்பது நாங்கள் பயணம் செய்த ட்ராம் வண்டி. குகை வாசலில் நிற்கிறது.

அனைவரும் இறங்கியவுடன் வழிகாட்டிகள் வரவேற்கிறார்கள். ஜெர்மன், ஆங்கிலம், டச்சு, பிரெஞ்சு என மொழிக்கு ஒரு வழிகாட்டி. சில சமயத்தில் இரு மொழிகட்கு ஒரு வழிகாட்டியும் அமைவதுண்டு. பயணிகளை மொழிவாரியாகப் பிரித்து சிறுசிறு குழுக்களாய்க் குகைக்குள் அனுப்புகிறார்கள். எங்களுக்கமைந்த வழிகாட்டி ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் குறிப்புகள் அளித்தார். குகைக்குள்ளே குளிர் அதிகம் இருக்கும் என்றார். சற்றே இருட்டாயிருந்த குகைக்குள் ஒவ்வொருவராய் நுழைந்தோம். வெளிச்சம் குறைந்த பல மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. சிறு சிறு மரப்படிகள் அமைக்கப்பட்டிருக்க, கீழே இறங்கினோம். இந்தக் குகை செயற்கையாய்ச் செய்த குகை அல்ல. இயற்கையே அமைத்த குகை. உள்ளே நிறையப் பாறைகள். கற்பாறைகள் அல்ல, அனைத்தும் சுண்ணாம்புப் பாறைகள். வெளிச்ச நிறத்தில் பளிங்கு போல் பளபளத்தன. இவையனைத்தும் மனிதன் போல் வளரும் பாறைகள். குகைக்குள் ஈரக்கசிவு இருப்பதால் பாறைகள் மீது ஈரம் சேர்ந்து பல நூறாண்டுகளாய் வளர்ந்து ஆச்சரியம் கொடுத்தன.
குகையின் தரையிலிருந்து மேல்நோக்கி வளர்வன பொங்கூசிப் பாறைகள் (stalagmites); குகையின் கூரையிலிருந்து கீழ்நோக்கி வளர்ந்து, விழுதுகளாய்த் தொங்குவன தொங்குபாறைகள் (stalactites); திரைச்சீலை போல அடுக்கடுக்காய், வளைவு வளைவாய் அமைவன, கண்ணாடிபோல் பளபளக்கும் படிவுப்பாறைகள், ஈரக்கசிவினால் மினுமினுத்து பாறையின் நுனியில் ஈரம் உறைந்த (பாதி நீர்த்துளியாகவும் பாதி பாறையாகவும்) பாறைகள், கத்திபோல் வளர்பவை, செய்து வைத்த சிலைபோல் உருவங்கொண்ட பாறைகள், யானைத்தந்தம் போல அமைந்தவை என எண்ணிலடங்காப் பாறைகள்.
இந்தக் குகையின் மொத்த நீளம் பதினோரு கிலோமீட்டர்கள். ஆனால் பாதுகாப்புக்காரணம் கருதி, சுமார் நான்கு கிலோமீட்டர் நீளக்குகைதான் பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. குகை முழுவதும் சுற்றுவதற்கு மரத்திலமைக்கப்பட்ட சிறு சிறு படிகள், சில இடங்களில் ஏறுவதற்கும் சில இடங்களில் இறங்குவதற்கும் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் 400 படிகள் உண்டு. சில இடங்களில் குறுக்கிடும் சிறு நீரோடைகளைக் கடப்பதற்கு குறுகிய மரப்பாலங்களும் உண்டு.
சுண்ணாம்புப் பாறைக்குகைகளின் அமைப்பும் வளர்ச்சியும் அங்குள்ள நீரின் ஓட்டம் மற்றும் கசிவினைப் பொருத்தது. குகையின் கூரையில் கசியும் நீர் இறுகி தொங்கு பாறைகள் வளருகின்றன. தொங்கு பாறைகள் சிந்தும் நீர் தரையில் பட்டு இறுகி தரையிலிருந்து கொம்புகளைப் போன்ற பொங்கூசிப்பாறைகள் வளர்கின்றன. பாறைகளின் நிறம் அதில் படும் நீரின் மாசு அளவைப் பொருத்து அமையும். எண்ணற்ற இப்பாறைகள் அனைத்தையும் தொடர்ந்து பார்வையிட்டுக்கொண்டே அங்கிருந்த மரப்படிகளில் மேலேயேறியும் கீழிறங்கியும் வளைந்து நெளிந்த பாதையில் நடந்தோம்.
ஓரிடத்தில் வழக்கத்திற்கு மாறாய்ச் சற்று விசாலமானதாகவும் உயரமாகவும் இருந்தது. அங்கே அமர்வதற்கு பல மர இருக்கைகள் இடப்பட்டிருந்தன. வெகுநேரம் நடந்தவர்கள் சற்று இளைப்பாற அமைக்கப் பட்டவை என எண்ணினேன், ஆனால் வழிகாட்டி எங்கள் அனைவரையும் அழைத்து அவ்விருக்கைகளில் அமரச் சொன்னார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மங்கலாய் எரிந்து கொண்டிருந்த அனைத்து விளக்குகளும் திடீரென்று இருட்டாயின. சற்று நேரத்தில் குகைக்குள் மெல்லிய சிம்பொனி இசை பரவியது. இசையின் ஒலி பெரிதாகிக் கொண்டே வர, எங்கிருந்தோ வந்த ஒரு லேசர் ஒளிக்கற்றை குகையின் கூரையின் மீதமர்ந்த ஒரு வித்தியாசமான தொங்கு பாறையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அடுத்து வந்த மற்றொரு ஒளிக்கற்றை குகையின் பக்கவாட்டுச் சுவரில் படிந்திருந்த இன்னொரு பாறையைத் தாக்கியது. இப்படியாய் இசையும் ஒளியும் இணைந்து அங்கிருந்த விதவிதமான பாறைகளைக் கண்களுக்கு விருந்தாக்கின. வெவ்வேறு வண்ணங்களில் சிந்திய ஒளியும், ஏறி இறங்கிய இசையின் ஒலியும் ஒன்றோடொன்று இயைந்து ஓர் ஒளி-ஒலிக்காட்சியைக் கண்ட உணர்வினை உண்டாக்கின. சுமார் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குத் தொடர்ந்தது இந்நிகழ்ச்சி.
அரங்கத்தைக் கடந்து சென்றவுடன் ஒரு பெரிய நீரோடை. இது ஒரு குற்றாறு. இதன் பெயர் லெஸ்ஸி. குகையடி வழியாக எவ்வாறு இதன் பயணம் நிகழ்கிறது என எண்ணும்போது வியப்பாயிருந்தது. ஹன்ஸ் பகுதியைச் சுற்றியுள்ள மலையின் ஓரிடத்தில் யார் கண்ணிற்கும் படாமல் மறைந்து கொள்ளும் லெஸ்ஸி, இந்த இடத்தில்தான் மறுபடியும் முகம் காட்டுகிறது. இதன் பாதையைத் தேடி மலைக்குகைக்குள் புகுந்தவர்கள் சிலர் அதன் பிறகு வெளிவரவே இல்லையாம். நதிநீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. நான்கு பாகை செல்சியஸ் குளிர்நிலை. நிலமட்டத்திலிருந்து 60 மீட்டர் ஆழத்தில் ஓடும் ஆறு இது. சிறிய படகுகள் மிதந்துகொண்டிருந்தன. அனைவரும் அதில் ஏறி அமர்ந்தோம். பார்ப்பதற்குச் சிறிய படகு போல் தெரிந்தாலும், நிறைய இருக்கைகள் (நீட்டி மடக்கும் மரப்பலகைகள்) இருந்தன. படகு புறப்பட்டது. சிறிது நேரத்தில் லேசான வெளிச்சம் கண்ணுக்குத் தெரிய, வெளியுலகு புலப்பட்டது. அந்நேரத்தில் "படார்" என ஒரு வெடியொலி.
திடுக்கிட்டுத் திரும்பினால் "குகை சென்று மீண்டதை" உணர்த்தும் வகையில் வெடிக்கப்படும் வெடி என்றனர். நீள நீளமான குகைப்பாறைகள் இன்னமும் கண்முன் விரிந்துகொண்டிருக்க எங்களது பயணம் நிறைவுற்றது. இம்மலைக்குகைகள் பற்றிய காட்சியகம் ஒன்றும் இங்கே உண்டு.
இந்த மலைக்குகையைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் வனவிலங்குகள் சரணாலயம் உண்டு. கூண்டுகளுக்குள் அடைத்து வைத்த விலங்குகள் இல்லை அவை. சுதந்திரமாய் வனப் பகுதியில் சுற்றித்திரியும் விலங்குகள். பெரிய வேன் ஒன்றில் பார்வையாளர்களை அடைத்துக் கொண்டு அவ்வனப் பகுதியைச் சுற்றிக் காட்டுகிறார்கள். சரி, இதையும் பார்த்துவிடலாம் என்று எண்ணி சவாரி மேற்கொண்டோம். முதலில் நாங்கள் சந்தித்த அதிசய விலங்கு எது தெரியுமா? பன்றிகள். அடுத்து வந்தவை ஆடுகள். பின்னர் மாடுகள், காட்டு நாய்கள், மான்கள், குதிரைகள் என வரிசையாய்ப் பல அரிய விலங்கினங்களைக் கண்டு களித்தோம். உடன் வந்தவர்கள் மிகவும் குதூகலித்துக் கொண்டு "வாவ்" என வாய் பிளந்தனர். நானும் என் நண்பனும் "ஆவ்" என்று கொட்டாவி விட்டோம். இதையெல்லாம் விட பெரிய அதிசயம், அந்த வனவிலங்ககம் பற்றி எங்களுக்குத் தரப்பட்டிருந்த கையேட்டில் "வன விலங்கில் புது வரவு, அழகான அரிய வகைக் கழுதைகள்" என்று குறிப்பிட்டிருந்ததுதான். தொடர்ந்த பயணத்தில் பசுந்தோல் போர்த்திய வனப்பகுதி, குறுகலாய் வளைந்த பாதைகள் மற்றும் உயர்ந்தோங்கிய மரங்கள் போன்றவை கண்ணுக்குக் குளுமை சேர்த்தன.
நாங்கள் சென்றிருந்த அவ்வேளை "நாட்டுப்புற வாரம் " கொண்டாடப்பட்ட நேரம். மாடு மேய்ப்பவர்களைப் போல் உடையணிந்த பலரும் குதிரைகளில் ஏறி உலா வந்துகொண்டிருந்தார்கள். மாடு மேய்ப்பவர்கள் பயன்படுத்தும் தோலாடைகள், இடைவார்கள், தொப்பிகள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகளும் அங்கிருந்தன. உள்ளூர்க் குழுவினர் நாட்டுப் பாடல்களைப் பாடினார்கள்.
பகல் முழுதும் சுற்றித்திரிந்து களைத்து நாங்கள் இனிய நினைவுகளுடன் திரும்பினோம்

இயற்பெயர்: எழில் மயில் வாகனன்.
தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன.
வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’
‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி




Comments