க்ரீன்லாந்து சுறா
- நாராயணி சுப்பிரமணியன்

- 19 hours ago
- 1 min read

உலகிலேயே அதிக காலம் வாழும் முதுகெலும்புள்ள உயிரி,உலகின் மிகப்பெரிய சுறாக்களில் ஒன்று என்பதுபோன்ற பல பெருமைகளுக்கு உரியது
க்ரீன்லாந்து சுறா. சுமார் 250 ஆண்டுகள் முதல் 500 ஆண்டுகள் வரையிலும் வாழுமாம். அதிகபட்சம் 21 அடி வரைக்கும் வளருமாம்.
க்ரீன்லாந்து சுறா என்ற பெயர் இருந்தாலும் உலகின் பிற பகுதிகளிலும்
அவ்வப்போது காணப்படும்.ஊன் உண்ணியான இந்த சுறா இனம் மனிதர்களைத் தாக்குவதில்லை.
இதன் தசையில் நச்சுப்பொருட்கள் இருப்பதால் இதை நம்மால் சாப்பிட முடியாது.
ஒரு காலத்தில் மீன் எண்ணெய்க்காக இந்த இனம் அதிகமாக
வேட்டையாடப் பட்டது என்பதால்
இதன் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்துவிட்டது.
இவை எல்லாமே சுவாரஸ்யமான தகவல்கள்தாம்.
ஆனால் இவற்றையெல்லாம்விட சுவாரஸ்யமான, முக்கியமான தகவல் என்ன தெரியுமா?
இந்த இனத்தைப் பற்றி மனிதர்களுக்கு அவ்வளவாகத் தெரியாது என்பதுதான்.
அறிவியலும் தொழில்நுட்பமும் அசுரவேகத்தில் வளர்ந்துவிட்ட இந்த காலத்திலும் இதுதான் நிலைமை. இது பொதுவாக அதிக ஆழத்தில் வாழும் என்பதால் இந்த இனத்தைப் பற்றிய ஆராய்ச்சி மிகவும் குறைவாகத்தான் நடக்கிறது.

அட! இவ்வளவு ஏன்?
2025ம் ஆண்டு வரைக்கும் இந்த சுறாவுக்குக் கண் தெரியாது என்றுதான்
நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆழமான, கலங்கலான குளிர் கடல்களில் வாழ்வதால் கண் பார்வை தேவையில்லை என்றும்,இது மோப்பசக்தியையும் பிற புலன்களையும் வைத்து வேட்டையாடும் என்றும்
விஞ்ஞானிகள் நினைத்துக்கொண்டிருந்தார்கள்.
2026 ஜனவரியில் வந்த ஒரு ஆய்வுக்கட்டுரையில்,
இந்த சுறா இனத்துக்கு நன்றாகக் கண் தெரியும் என்பதை விஞ்ஞானிகள் தெளிவாக எழுதியிருக்கிறார்கள்.இதுபோன்ற அடிப்படை அம்சங்களே இப்போதுதான் தெரிய வருகின்றன.
"இந்த சுறா இனத்தைப் பொறுத்தவரை எல்லாமே கேள்விக்குறிதான்" என்கிறார் ஆராய்ச்சியாளர் ஜென்னா எட்வார்ட்ஸ்.
கடலுக்கு அடியில் நூற்றாண்டுகாலமாக வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தப்
பிரம்மாண்ட விலங்குகளை பற்றி மனித இனம் இப்போதுதான் ஆழமாக ஆய்வு செய்யத் தொடங்கியிருக்கிறது.
ஆச்சரியமாக இருக்குல்ல!

உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக
பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர்
பட்டமும் பெற்றவர்.
இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது,பாவை விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கடலும் மனிதரும், விலங்குகளும் பாலினமும், ஆழ்கடல், சூழலும் பெண்களும், நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.





Comments