நீர்வாழ் விலங்குகள் எப்படித் தூங்கும்?
- நாராயணி சுப்பிரமணியன்

- 3 days ago
- 1 min read

மிகவும் சோர்வாக உணரும்போது, தூக்கம் வருகிற வேளையில் முகத்தில் தண்ணீரை அடித்துக் கழுவிக்கொண்டால் தூக்கம் போய்விடுகிறது.
அப்படியென்றால் தண்ணீருக்குள்ளேயே இருக்கும் விலங்குகள் எப்படித் தூங்குகின்றன?
முதலில் முகத்தில் நீரை அடித்தால் நமக்கு ஏன் தூக்கம் போகிறது என்று தெரிந்துகொள்வோம்.
காற்றில் உள்ள ஆக்சிஜனை சுவாசிக்கும் நம்மைப் போன்ற விலங்குகளின் முகத்தில் நீர் பட்டுவிட்டால் மூளை சுறுசுறுப்பாகிவிடும். "இவர் நீருக்குள் இருக்கிறார்" என்று மூளை யோசிக்கும். "நீருக்குள் இருப்பவர் விழிப்புடன் கவனமாக இருந்தால்தான் அவர் சரியாக சுவாசிப்பார், விழிப்பாக இருந்தால்தான் அவர் உயிர் பிழைப்பார்" என்று யோசிக்கும்.
உடனே கவனம் மற்றும் விழிப்புநிலையை உருவாக்கும். நமக்குத் தூக்கம் கலைந்துவிடும். காற்றில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளும் விலங்குகளுக்கு மட்டும்தான் இந்த நிலை என்பதால் நீருக்குள்ளேயே வாழும் விலங்குகளைத் தண்ணீர் எதுவும் செய்யாது.
ஆனால் இதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது.
நீரில் இருக்கும் ஆக்சிஜனை சுவாசிக்கவேண்டும் என்றால் தொடர்ந்து நீந்திக்கொண்டே இருக்கவேவேண்டும். ஆகவே நீர்வாழ் விலங்குகளால் மனிதர்களைப் போல ஆடாமல் அசையாமல் தூங்க முடியாது. பல மீன்கள் தூங்கும்போதும் மெதுவாக நீந்திக்கொண்டோ ஆடிக்கொண்டோ இருக்கின்றன.
இன்னும் சில மீன்கள் தூங்குவதே இல்லை!
இவற்றுக்குத் தூக்கம் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
இதே கடலுக்குள் காற்றில் இருக்கும் ஆக்சிஜனை சுவாசிக்கும் பாலூட்டிகள்கூட
இருக்குமே!
அவை எப்படித் தூங்குகின்றன?
பாலூட்டிகளின் மூளையில் இரண்டு கோளங்கள் (Hemispheres) இருக்கும்.
தூங்கும்போது இவற்றின் ஒரு மூளைக்கோளம் மட்டுமே ஓய்வெடுக்கும்.
இன்னொரு கோளத்தின் உதவியால் இவை நீந்திக்கொள்ளும்.
நீர்ப்பரப்புக்கு மேலே வந்து சுவாசித்துக்கொள்ளும்!
இன்னும் சில பாலூட்டிகள் மூச்சை தம்கட்டிக்கொண்டு தூங்குகின்றன,
சுவாசிக்கும் நேரம் வரும்போது விழித்துக்கொள்கின்றன. இதை நுண் தூக்கம் (Micro sleep) என்று அழைக்கிறார்கள்.
உங்களுக்குத் தூக்கம் பிடிக்குமா? ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் தூங்குகிறீர்கள்?

உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக
பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர்
பட்டமும் பெற்றவர்.
இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது,பாவை விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கடலும் மனிதரும், விலங்குகளும் பாலினமும், ஆழ்கடல், சூழலும் பெண்களும், நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.




Comments