top of page

மறதி நல்லது!


மின்னி அணில், பின்னி யானையைப் பார்த்தால் எப்போதும் வியக்கும்.

“அடடா… என்ன ஒரு பெரிய உடம்பு! என்ன ஒரு வலிமை! நானும் இப்படியா இருந்தால் என்ன?” என்று நினைக்கும்.


அதே நேரத்தில், 

“இந்த மின்னி எவ்வளவு சின்னது! எங்கே வேண்டுமானாலும் ஓடிவிடும்… மரத்துக்கு மேல் ஏறிவிடும்… நம்மால் முடியாது?” என்று கொஞ்சம் பொறாமையாக நினைக்கும் பின்னி யானை. 

இருவரும் நல்ல நண்பர்கள் தான்…

ஆனால் உள்ளுக்குள் சிறிய பொறாமையும் இருந்தது.


ஒரு நாள், அவர்கள் இருவரும் ஓடிப்பிடி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

மின்னி ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு தாவிக் கொண்டே ஓடியது.

பின்னி சிரித்துக்கொண்டே மரத்தின் அடியில் ஓடியது.


"மின்னி  நீ நேற்று தானே கூறினாய், இனிமேல் ஓடிப் பிடித்து விளையாடும் போது நான் மரத்தின் மேல் ஏற மாட்டேன் என்று. ஆனால் இன்று மரத்தின் மேல் ஏறுகிறாய் என்னால் எப்படிப் பிடிக்க முடியும்?" இன்று கோபமாக கேட்டது பின்னி யானை. 


"ஐயையோ பின்னி நான் மறந்தே விட்டேன். மன்னித்துக்கொள்!" என்றது சோகமாக. 


அந்த நேரம் ஒரு மயில் அகவியது. 


அந்த சத்தம் கேட்ட உடனே பயத்தில் வேகமாக மரத்தின் உச்சியில் ஏறி நின்றது. அணிலின் வால்  வேக வேகமாக ஆடியதை பார்த்தவுடன் அணில் பயப்படுகிறது என்பதை உணர்ந்த யானை 


"இது காட்டில் வழக்கமாகக் கேட்கும் சத்தம் தானே, இதற்கு எதுக்குப் பயன்படுகிறாய்?   குயில் கூவினால் கூட  பயப்படுகிறாய்.  சின்னப் பூச்சி பறந்து வரும் சத்தம் கேட்டால் பயப்படுகிறாய். மரத்திலிருந்து இலை  விழும் சத்தம் கேட்டாலும் பயப்படுகிறாய். இப்படி எதற்கெடுத்தாலும் பயப்படுகிறாய். நான் இருக்கிறேன் கீழே இறங்கி வா" என்று கூறியது பின்னி யானை. 


மெதுவாக கீழே இறங்கி வந்த அணில் "நான் சரியில்லை. நீ சொல்வது சரிதான். எதற்கெடுத்தாலும் பயப்படுகிறேன். எல்லாவற்றையும் மறந்து விடுகிறேன். அவசரக்குடுக்கையாக இருக்கிறேன். என்னால் யாருக்குமே பயனுமில்லை" என்று கூறி அங்குமிங்கும் ஓடிக்கொண்டே அழ ஆரம்பித்தது. 


"அடடா இதற்கெல்லாம் அழலாமா நண்பா!  அப்படியெல்லாம் நினைக்காதே!  முதலில் பேசும்போது பொறுமையாக கேள். ஓரிடத்தில் நில். உன்னாலும் ஏதாவது ஒரு பயன் இந்த பூமிக்கு இருக்கும். அதைக் நாம் கண்டுபிடிக்கலாம்" என்று கூறியது பின்னி யானை. 


எவ்வளவு கூறியும் அணில் சமாதானமாகவில்லை. 

"சரி நண்பா நாளை வருகிறேன். நீ தூங்கி எழுந்து விடு. அப்போது நீ சரியாகி விடுவாய், ஆனால் உன்னால் ஏதாவது ஒரு நன்மை இந்த பூமிக்கு இருக்கும் அதை நாம் கண்டுபிடித்து விடலாம்" என்று கூறியது பின்னி யானை.


எதுவும் பேசாமல் மெதுவாக  ஆலமரத்தின் மேல் சென்று அமர்ந்தது. ‌பின்னி யானை எவ்வளவு சமாதானப்படுத்தியும் மின்னி அணில் சமாதானமாகவில்லை. 


மின்னி அணில் அன்று முழுவதும் யாரிடமும் பேசவும் இல்லை.  விளையாடவும் இல்லை. 'என்னால் எந்தப் பயனும் இல்லையா? நான் எதற்காக வாழ வேண்டும்? யானை மாதிரி பெரிதாக இருந்திருந்தால் அது எப்படி சாணத்தின் வழியாக எப்படி காட்டை உருவாக்குகிறதோ அது போல் நாமும் உருவாக்கி இருக்கலாம். நான் மட்டும் ஏன் இவ்வளவு சிறிதாக யாருக்கும் பயனில்லாதவனாக இருக்கிறேன்?'  என்று தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டு  சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.‌


அதை பார்த்த ஆலமரம்

“மின்னி… ஏன் இப்படி ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறாய்? நீ அப்படி அமர் பவன் கிடையாதே? உன்னை பார்த்தாலே எனக்கும் சுறுசுறுப்பு வரும் எனக்கு உன்னைப் போல் ஓட வேண்டும் என்று ஆசையாக இருக்கும். நீ இப்படி இருப்பது சரி இல்லை. என்னவாயிற்று உனக்கு?" என்று கேட்டது. 


“இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் பயன் உள்ளவர்களாக இருக்கிறார்கள். உன்னை எடுத்துக் கொள் எவ்வளவு பேருக்கு வீடாக இருக்கிறாய் எவ்வளவு பேருக்கு நிழல் கொடுக்கிறாய்.‌ ஆனால் எங்களால்  என்ன பயன்? எங்கள் இனத்தால் இந்தக் காட்டுக்கு இந்த பூமிக்கு என்ன பயன்?  நான் எதற்காக வாழ வேண்டும்? நான் ஒரு அவசர குடுக்கை நான் ஓடிக்கொண்டே இருப்பேன் நான் எதற்கெடுத்தாலும் பயப்படுவேன் நான் எல்லாவற்றையும் மறந்து விடுவேன். என்னை நினைத்தால் எனக்கே வெறுப்பாக இருக்கிறது" என்று கூறிவிட்டு மரத்தின் உச்சிக்கும் அடிக்கும் ஏறி இறங்கிக் கொண்டே இருந்தது. 


ஆலமரம் சிரித்தது.

“அட மின்னி! நீ இப்படிச் சொல்றதெல்லாம் சரியில்லை.

நீ அப்படியா நினைக்கிறாய்? உன்னை யார் இப்படிக் குழப்பி விட்டது?" 


"யாரும் இல்லை எனக்கே நீண்ட நாட்களாக இந்த யோசனை இருந்து கொண்டே இருக்கிறது"என்று தன் முன்பற்களால் ஆலம்பழத்தை கொறித்தபடியே கூறியது மின்னி அணில்.


"நான் இங்கே இருக்கிறேன் என்றால்… அதற்கு உன் கொள்ளுத்தாத்தா காரணம்!”

என்றது ஆலமரம். 


மின்னி அதிர்ச்சியுடன்

“என்ன!? என் கொள்ளு தாத்தா வா!? சரி சரி… சும்மா விளையாடாதே! என்னை சமாதானப்படுத்த இப்படி எல்லாம் கூறாதே!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தாவியது. 

"அட உண்மைதான்! அதுவும் உங்கள் இனத்திற்கே இருக்கும் மறதி தான் மிக முக்கிய காரணம்" என்று கத்தி கூறியது. 


"என்னது மறதியா? இதை என்னை நம்பச் சொல்கிறாயா?" என்று தலையை வலதும் இடமும் ஆட்டிவிட்டு இன்னும் வேகமாக தாவியோடி  ஓடிக் களைத்து ஒரு நெல்லி மரத்தின் மேல் அமர்ந்தது. 

வேகமாக பெருமூச்சு விட்டபடியே சோகமாக அமர்ந்திருந்தது.  மின்னி அணிலை பார்த்த நெல்லி மரம்

“என்ன மின்னி… முகம் ஏன் சோர்ந்து இருக்கிறது?”

என்று கேட்டது. 


மின்னி நடந்ததை எல்லாம் சொன்னது.

நெல்லி மரம் சிரித்து.


“அட மின்னி! நான் இங்கே இருக்கிறேனே… அதற்கு உன் அப்பாதான் காரணம்!”

என்று கூறியவுடன்,

மின்னி முகம் சுளித்து.


“அடடா! நீயும் ஆலமரம்  போலவே பேசுறே!. எல்லோரும் என்னை சமாதானப்படுத்த பார்க்கிறீர்கள்" என்று சொல்லி தாவியது.


"அட உன்னை யாரும் சமாதானப்படுத்தவில்லை. ஆலமரம் கூறியது சரிதான். உங்கள் இனத்தின் மறதியால் தான் நாங்கள் இங்கு இருக்கிறோம்" என்று சத்தமாக கூறியது.


  மின்னி அணில் நெல்லி மரம் கூறியதை காதில் வாங்கியபடியே  வேகமாகத் தாவி ஓடியது. ஓடி ஓடிக் களைத்து முடிவாக அடுத்து அது ஒரு பெரிய அத்தி மரத்தின் மீது ஏறியது.


அத்தி மரமும் "நீ ஏன் சோகமாக இருக்கிறாய்?" என்று கேட்டவுடன் நடந்தவற்றையெல்லாம் அத்தி மரத்திடம் கூறியது மின்னி அணில். 


“மின்னி… நான் இங்கே வளர்ந்தது உன் பாட்டி புதைத்த விதையால்தான்!” என்று அத்தி மரம் மெதுவாகச் சொன்னது

மின்னி சிரித்தது. 


“இப்போ எல்லாரும் இதே மாதிரி தான் பேசப் போறீங்களா?” என்று சொல்லிக்கொண்டே தாவியது.



அது தொடர்ந்து. பல மரங்களிடம் சென்றது…

ஒரு வில்வ  மாமரம் “உன் தாத்தா காரணம்!”

ஒரு வேம்பு   மரம் “உன் அம்மா காரணம்!”

ஒரு இலுப்பை மரம்  “உன் முன்னோர்கள் காரணம்!”

 அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான மரங்கள் இதையே சொன்னன. 

“உன் குடும்பத்தால்தான் நாங்கள் வளர்ந்தோம்!”

 “உன் மறதியால்தான் இந்த விதைகள் முளைத்தது!”

மின்னி இன்னும் குழப்பமாகியது  அப்போது மின்னிக்கு திடீரென்று பசி வந்தது.

“அய்யோ! நேற்று ஒரு பழத்தை எடுத்து வந்து புதைத்து வைத்தேனே… எங்கே வைத்தேன்?” என்று யோசித்தபடியே தேடியது.

தேடியது… தேடியது…

ஆனால் கிடைக்கவே இல்லை!

அது சோர்ந்து அத்தி  மரத்தின் அடியில் அமர்ந்தது.

அத்தி  மரம் சிரித்தது.

“பசிக்கிறதா மின்னி?”

“ஆமாம்… நான் வைத்த இடத்தை மறந்துட்டேன்…”

“பரவாயில்லை!  மறதி நல்லது தான். என் பழங்களை சாப்பிடு!” என்றது.

மின்னி சாப்பிட்டது…


அப்போது அருகில் ஒரு சிறிய செடி 

“மின்னி அக்கா! நான் உங்களால் தான் வந்தேன்!”

மின்னி ஆச்சரியத்தில்

“என்ன!? நீயா!?”

“ஆமாம்! நீ கடந்த மாதம் தாங்கள் புதைத்து மறந்த விதையிலிருந்து தான் நான் வளர்ந்தேன்!”


மின்னி கண்கள் பெரிதானது.

“அப்போ… நான் மறந்ததால்தான் நீ வளர்ந்தாயா?”

“ஆமாம்!” என்றது செடி.

உண்மையை புரிந்த மின்னி அணில் மகிழ்ச்சியுடன் குதித்தது. 

“அப்போ நான் உதவி செய்கிறேன்!

நான் புதைத்த விதைகள் மரங்களாக மாறுது!

என் தாத்தா பாட்டி எல்லாரும் இதே மாதிரி தான் செய்திருக்கணும்!”

 

 உடனே தன் நண்பன் பின்னி யானையை தேடி ஓடியது.

“பின்னி! பின்னி! நான் முக்கியமானவன்!”

பின்னி சிரித்துக்கொண்டே

“என்ன மின்னி?” என்று கேட்டது.

“ நீயும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளவனாக இருப்பாய் கண்டு பிடித்து விடலாம் என்று நேற்று நீ சொன்னாயே நான் கண்டுபிடித்து விட்டேன்"


"அடடா அப்படியா!  நீ எந்த வகையில் பயனுள்ளவனாக இருக்கிறாய்?"


"உன்னைப்போல் நானும் இந்தக் காட்டை உருவாக்க உதவி செய்கிறேன்!" 


அப்படியா என்று தன் இரண்டு காதுகளையும் முன்னும் பின்னும் அசைத்தபடியே கேட்டது பின்னி யானை. 


நான் சாப்பிட்டு முடித்துவிட்டு மீதி இருப்பதை எங்காவது புதைத்து வைத்து விடுவேன். சில நேரங்களில் தோண்டி எடுத்து விடுவேன் பெரும்பாலான நேரங்களில் என் மறதியின் காரணமாக எங்கே புதைத்தேன் என்றே மறந்து விடுவேன். நான் மட்டுமல்ல என்னுடைய இனத்தைத் தேர்ந்த எல்லோரும் அப்படித்தான்" 


"அதுதான் எல்லோருக்குமே தெரியுமே அதில் என்ன இப்போ?"


” அப்படிப் புதைத்துவிட்டு மறந்து போன  விதைகள் எல்லாம் மரங்களாக வளருது!” என்று தன் வாலை ஆட்டியபடியே தன் முன்பற்கள் தெரிய சிரித்துக்கொண்டே கூறியது  மின்னி அணில்.

பின்னியும் சிரித்தது.


“அப்படியா! அப்போ நீயும் ரொம்பப் பெரிய வேலை பண்ணுறே! இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள். இப்போது நீ உணர்ந்து கொண்டாயா" என்று தன்னுடைய தும்பிக்கையை அணிலின் உடம்பின் மீது வைத்து தடவியபடியே கேட்டது யானை. 

மின்னி தன் மறதியை எண்ணிப் பெருமை கொண்டது. 

மறதி நல்லது என்று சொன்னது பின்னி  யானை.

"ஆமாம் !ஆமாம் மறதி நல்லது தான்" என்று தன் புசுபுசுவாலை ஆட்டியபடியே கூறியது மின்னி அணில்.


சரிதா ஜோ
சரிதா ஜோ

சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.

1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும்,

100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.

த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page