மேக விதைப்பு (Cloud Seeding)
- எழில் சின்னத்தம்பி

- 19 hours ago
- 2 min read

நீரின்றி அமையாது உலகு என்ற திருவள்ளுவரின் மொழிக்கு இணங்க, மழை என்பது மனித வாழ்க்கையின் அடிப்படை ஆதாரமாகும். குடிநீர், விவசாயம், தொழில்கள், மின்சார உற்பத்தி போன்ற பல துறைகள் மழையைச் சார்ந்தே இயங்குகின்றன. ஆனால் உலகின் பல பகுதிகளில் பருவமழை குறைவு, காலநிலை மாற்றம், வறட்சி, புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் நீர்ப் பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்தச் சிக்கலைச் சமாளிக்க அறிவியல் உலகம் கண்டுபிடித்துள்ள ஒரு முக்கியமான முறையே ‘மேக விதைப்பு’ ஆகும்.
மேக விதைப்பு என்றால் என்ன?
மேகங்களுக்குள் நீராவி அல்லது மிகக்குளிர்ந்த நீர்த் துகள்கள் எப்போதும் இருக்கும். அவை போதுமான அளவுக்கு ஒன்றிணைந்து குளிர்வுற்றால் மட்டுமே மழை பெய்யும். ஆனால், அவை மழையாகப் பொழிவதற்குத் தேவையான 'கருக்கள்' (Nuclei) இல்லாதபோது மழை பெய்யாது. இதற்கு உதவியாக, சில வேதிப்பொருட்களை மேகங்களில் தூவி, மழையைத் தூண்டுவதே ‘மேக விதைப்பு’ எனப்படுகிறது.
சில்வர் அயோடைடு, பொட்டாசியம் அயோடைடு, உலர்பனி அல்லது சாதாரண உப்பு போன்ற பொருட்கள் மழை ஊக்கியாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேகங்களின் மீது இந்த வேதிப் பொருள்களைத் தூவுவதால், இவை மேகங்களில் நீர்த்துளிகள் உருவாகும் செயல்முறையை வேகப்படுத்துகின்றன.
சில்வர் அயோடைடு - இது பனி போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதால், குளிர்ந்த மேகங்களில் பனிப்படிகங்களை உருவாக்கப் பயன்படுகிறது. உலர்ந்த பனி - இது திடநிலை கார்பன் டை ஆக்சைடு ஆகும். இது மேகத்தின் வெப்பநிலையைக் குறைத்து மழைப்பொழிவைத் தூண்டுகிறது. இந்தச் செயல் மழை பெய்யும் வாய்ப்பை அதிகரிக்கிறது. ஆனால் மேகங்கள் இல்லாத சூழலில் இதைச் செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேக விதைப்பு செய்ய இரண்டு முக்கியமான முறைகள் உள்ளன:
1. சிறப்பு விமானங்கள் மேகங்களின் மீது பறந்து, வேதிப்பொருட்களைத் தூவலாம். குறைந்த உயரத்தில் உள்ள மேகங்களின் மீது ட்ரோன்கள் மூலமும் வேதிப்பொருள்களைச் செலுத்தலாம்.
2. தரையிலிருந்து சிறப்பு ராக்கெட் மூலமாகவும் வேதிப்பொருட்களை மேகங்களுக்குள் செலுத்தலாம்.
ஐக்கிய அரபு அமீரகம், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இத்தொழில்நுட்பத்தைப் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும், டெல்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் இம்முறை பரிசோதிக்கப்பட்டுள்ளது.
மேக விதைப்பின் நன்மைகள்
வறட்சியைக் குறைக்கும். நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகள் நிரம்ப உதவும். குடிநீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க உதவும். விவசாய வளர்ச்சிக்குப் பயனாகும். பயிர்களுக்கு தேவையான மழையைப் பெற உதவும். சில நாடுகளில் காட்டுத் தீயைக் குறைக்க, மழையைத் தூண்ட பயன்படுத்தப்படுகிறது. காற்று மாசுபடுதலைக் குறைக்கவும் பயனாகிறது. மலைப்பகுதிகளில் பனிப்படலத்தை அதிகரிக்கச் செய்து பனிப்பொழிவு அதிகரிக்கச் செய்யலாம். மலைப்பனி கோடையில் உருகி, நதிநீர் வரத்தை உறுதி செய்யலாம்.
மேகவிதைப்பின் குறைகளும் சவால்களும்
மேக விதைப்பு செய்வதற்கு வளிமண்டலத்தில் ஏற்கனவே தகுந்த மேகங்கள் இருக்க வேண்டும். மேகங்களே இல்லாத வானில் மழையை உருவாக்க முடியாது. எல்லா நேரமும் மழை பெய்யும் என்றும் உறுதியாகச் சொல்லமுடியாது. விமானங்கள், கருவிகள், வேதிப்பொருட்கள் போன்றவை அதிகப் பணச்செலவை ஏற்படுத்தும். சில்வர் அயோடைடு போன்ற வேதிப்பொருட்களால் நிலம் மற்றும் நீர்நிலைகளில் நச்சுத்தன்மையை ஏற்படலாம். சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயமும் இருக்கிறது. பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களின் நீண்டகாலத் தாக்கம் குறித்து இன்னும் முழுமையான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
மேக விதைப்பு என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தைக் காட்டும் ஒரு முக்கியமான முயற்சி ஆகும். இது வறட்சி போன்ற அவசர சூழ்நிலைகளில் பயனுள்ளதாக இருக்கலாம். இருப்பினும், இது நிலையான தீர்வு அல்ல. நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, மரம் நடுதல், நீர் சேமிப்பு போன்ற நடவடிக்கைகளுடன் சேர்த்து பயன்படுத்தினால் மட்டுமே நீண்டகாலப் பலன் கிடைக்கும். அறிவியலைப் பொறுப்புடன் பயன்படுத்தி இயற்கையுடன் இணைந்து செயல்படுவது தான் மனித சமுதாயத்தின் நிலையான முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்.

இயற்பெயர்: எழில் மயில் வாகனன்.
தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன.
வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’
‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி





Comments