top of page

எல்லைகட்டிய உலகின் சிறிய பறவை


இது ஒரு தொகுப்பு நூல். டொனால்டு பார்த்தலுமே, ஷிர்லி ஜேக்ஸன், ஹெச. ஹெச். முன்ரோ ஆகியோர் எழுதிய மூன்று சிறுகதைகளின் தமிழ் மொழியாக்க நூல் இது. இத்தோடு குழந்தைகளின் அகவுலகை பிரதிபலிக்கும் பரையன் பேட்டன் எழுதிய இரண்டு கவிதைகளும் இடம்பெற்றுள்ளது.


குட்டி ஆகாயம் பதிப்பகம் மிக சிரத்தையோடு வெளியிட்டுள்ள சிறந்த நூல் தேர்வுகளில் இதுவும் ஒன்று என அறுதியிட்டுக் கூற முடியும்.


குழந்தைகள் எப்போது முழுமையாக தங்களது குழந்தைமையை வெளிப்படுத்துகிறார்களோ அப்போதெல்லாம் பெரியவர்களின் சமநிலை குலைந்துவிடுவதை பார்க்க முடிகிறது. வானமளவு விரிந்திருந்த தன் மனவெளியில் தங்களுக்கான எல்லைக்கோடுகள் தடித்துக் கொண்டே வருவதை பெரியவர்கள் உணரத் தவறிவிடுகின்றனர்.

பெரிதும் புறத்தை சார்ந்ததாகவே அமைந்துவிடும் அவர்களது மன எல்லைக்கு அப்பால் உள்ளதை ஏற்கும் பக்குவம் குறைந்து கொண்டே வருகின்றது. குழந்தைகளின் உலகம் பெரியவர்களின் உள்வட்டத்திற்கு நெருக்கமாக இருக்கும்போது மட்டுமே குழந்தைகள் நேசிப்பிற்கும் பாராட்டிற்கும் தகுதியானவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால் குழந்தைகள் அப்படியானவர்கள மட்டும்தானா? பெரியவர்களின் மனவிரிவு மட்டுமே குழந்தைகளை அளவிடுவதற்கான கருவியாகிட முடியுமா? இதுவே நம்மிடம் நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.


குழந்தைகள், ஏதேனும் ஒரு விளையாட்டு சாதனத்தை வைத்துக்கொண்டு வீட்டின் மூலையில் அமர்ந்து கொண்டிருக்கும் வரை சமர்த்தானவர்களாகப் பார்க்கப்படுவார்கள். அவரே தன்னியல்பாக ஒரு காகிதத்தை கிழிக்கவோ; பொம்மையை உடைத்து உள்ளிருக்கும் பாகங்களை ஆராயவோ; வண்ணப் பென்சில்களை தரையில், சுவற்றில் பயன்படுத்தவோ தொடங்குகையில் பெரியவர்களின் கோபத்திற்கும் வசவிற்கும் ஆளாகிறார். இவ்வேளைகளிலெல்லாம் அக்குழந்தை பெரியவர்களின் மனவிரிவிற்கு அப்பால் விலகிச் செல்கிறார் என்பது பொருள். 


இப்படியான பதட்டத்தை தொடர்ந்து பெரியவர்களுக்கு உருவாக்கும் குழந்தைகளின் இயல்புகள் இங்கு எதிர்மறையான பெயர்களாலேயே அழைக்கப்படுகிறது. அக்குழந்தைகளின் ஆர்வம் அப்பருவத்திலேயே முடக்கப்படுகிறது. 


இன்னமும் எல்லை கட்டிக்கொள்ளாத குழந்தைகளின் உலகம் பெரியவர்களின் அதிருப்தியை குதர்த்தகமாகப் பார்க்காமல் அதை மீறவும் எதிர்க்கவும் தன் வழிகளில் விளையாட்டாக முயல்கிறது. பலவேளைகளில் பெரியவர்கள் நாம், குழந்தைகள் பொய் பேச தொடங்குவதாகவும் தவறான வழிகளில் ஈடுபாடு கொள்வதாகவும் அச்செயல்களுக்கு பெயர் சூட்டிக் கொள்கிறோம்.


வளர வளர நம்மனதில் படிந்துவிடும் நோய்மையான பூஞ்சை கூறுகள் குழந்தைகளின் அகவளர்ச்சியை தடுப்பதைக் குறித்து பெரியவர்களாகிய நமக்கு எவ்வித அசூயையும் இருப்பதி்லை. பறக்க எத்தனிக்கும் குழந்தையின் சிறகுகளை இளம் பிராயத்திலேயே வெட்டி எறிந்து விடுகிறோம். ஆனாலும் அதன் தழும்புகள் குழந்தைகளின் காலம் முழுதும் வடுவாக தேங்கி நின்றுவிடுகிறது.


வெளிச்சத்தை மட்டுமே ஒளியாக கருதும் பெரியவர்களை போலில்லாது இரவின் ஒளியையும் உணர்ந்தவர்களாக குழந்தைகள் இருக்கிறார்கள். வெளிச்சம், இருள் என்கிற பாகுபாடுகூட அவர்களிடம் அப்போதைக்கு இருப்பதில்லை. எல்லாவற்றையும் ஒன்றாகவே பார்க்கத் தெரிந்த அவர்களுக்கு பெரியவர்களின் பார்வைகள் புரிபடுவதில்லை. அதற்கான மீறலே குழந்தைகளின் செயல்பாடுகளில் பிரதிபலிக்கிறது. 


பெரியவர்களின் எதேச்சதிகார மனநிலை குழந்தைகளை புரிந்து கொள்ள உதவாவது. அவர்களோடு நெருங்கி உறவாடவும் குழந்தைகள், நம்மை அவர்களோடு இணைத்துக் கொள்ள முன்வரும்படியாகவும் நம்மை மாற்றிக்கொள்ளும்போதுதான் அவர்களை நாம் நெருக்கமாக புரிந்து கொள்ள முடியும்.


இந்த தொகுப்பிலுள்ள மூன்று கதைகளில் முதலிரண்டு கதைகள் இப்படியொரு எண்ணத்தையே முன்னிறுத்துகிறது. கதை உருவாகியிருக்கிற பாங்கும் கலை நேர்த்தியும் இக்கதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கச் செய்கிறது.


மூன்றாவது கதை, நாம் இச்சூழலெங்கும் விதைத்திருக்கிற நச்சு கனிகளை விரும்பி சுவைக்கத் தொடங்குகிற குழந்தைகளின் அகவுலக சிதைவுகளை அம்பலப்படுத்துகிறது. உண்மையில் நீதியும் ஒழுக்கமும் குழந்தைகளுக்கான பாடமல்ல முறையாக பெரியவர்கள் கற்றொழுக வேண்டிய முறைமைகள் என்பதை இக்கதையின் எளிய வடிவம் நமக்குணர்த்துகிறது.


ப்ரையன் பேட்டன் அவர்களின் கவிதைகள் இந்த நூலுக்கு அணி சேர்க்கின்றன. குழந்தைகள் குறித்து ஆர்வமாகவும் ஆழமாகவும் செயலாற்ற விழைகிற ஒவ்வொரு இதயங்களும் வாசித்து விவாதிக்க வேண்டிய நூலாக இந்நூல் அமைந்திருக்கிறது.


கோவையை சார்ந்த குட்டி ஆகாயம்  மிகுந்த சிரத்தையோடு பதிப்பித்திருக்கின்ற இந்நூலுக்கு இன்னமும்கூட வாசக வெளிச்சம் படவேண்டிய தேவை இருப்பதாக நான் உணர்கிறேன்.


வாங்கி வாசியுங்கள்.... நிறைய பேசுங்கள் குழந்தைகளே.....

க.சம்பத்குமார்
க.சம்பத்குமார்

அரசுப்பள்ளி ஆசிரியர். "பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று" என்கிற கவிதை தொகுப்பு ஒன்று எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அவிநாசி கிளை பொறுப்பாளர்.


2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Santhosh Shandeep
Feb 22
Rated 5 out of 5 stars.

மிகச் சிறப்பான பதிவு. குழந்தைகளின் பார்வையில் பெற்றோர் எதிரி போல் நினைப்பது மற்றும் தீய வழிகளில் குழந்தைகள் செல்லாமல், அவர்களுக்கான சுதந்திரமான கற்பனைத் திறனையும், கற்றல், வாசிப்பு, பகுத்தறிவையும் இந்தப் புத்தகம் தூண்டும் என நினைக்கிறேன். பரிந்துரைக்கு நன்றி.

Like

Guest
Feb 17
Rated 5 out of 5 stars.

மிக அருமை

Like
bottom of page