அரவணைக்கப்பட வேண்டிய கரம்

மனிதர்களிடம் ஆழப் பதிந்துவிடும் பண்பாட்டுக்கூறுகள் அவர்களின் சிந்திக்கும் எல்லைகளை பெருமளவு மட்டுப்படுத்திவிடுகின்றன. வகுப்பறைகளில்கூட பல அறிவியல்பூர்வமான தர்க்கங்களை எழுப்பி பல விசயங்களை உரையாடினாலும்கூட குழந்தைகளால் வீடுகளிலும் ஊரிலும் பின்பற்றப்படும் சமூக நடவடிக்கைகளுக்கு ஏற்பவே செயல்பட முடிகிறது.
அறிவியல் முறைகளற்ற பலவற்றின் மீதும் கேள்வியெழுப்பும் குழந்தைகளின் உணர்வுகளுக்கு அதட்டலும் அமைதியுமே பதிலாக அமையும்போது அவர்கள் கேள்வி கேட்பதன் ஆர்வத்தை குறைத்துக் கொள்கின்றனர். அவ்விடத்தை நிரப்பும் ஒழுக்கம் சார்ந்த அளவீடுகளும் பக்தி சார்ந்த அச்சமும் குழந்தைகளையும் தொற்றிக் கொண்டு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அவை கடத்தப்படுகின்றன. அதுவே வாழ்வியலாகவும் கட்மைக்கப்படுகிறது.
விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் எழுதி சால்ட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள “இடம்” என்கிற சிறார் நாவல் அப்படியொரு பகுதியை தொட்டுத்தான் பேசுகிறது. இடதுகை பழக்கம் உள்ள சிறுவனின் மீது நடத்தப்படும் உளவியல் தாக்கத்தை இந்நாவல் பேசுகிறது.
“இடதுகை” என்பது நமது பண்பாட்டு அடிப்படையில் குறைந்த மதிப்பினையே பெற்றிருக்கிறது. அத்தகைய இடதுகை பழக்கம் கொண்டிருக்கும் சிறுவனின் உத்வேகமான செயல்பாடுகள் கல்விக்கூடத்திலேயே புறக்கணிக்கப்படும் சூழலையும் பிறகு அதிலிருந்து மீளும் மனங்களையும் இந்நாவல் அழகாக காட்சிப்படுத்துகிறது.
நாவலின் முதல் அத்தியாயத்திலேயே விறுவிறுப்பை ஏற்றிவிடும் ஆசிரியர் பின்னகர்ந்து ஒவ்வொரு திரைச்சீலையாக விலக்கி கதையின் ஒருகட்டத்தில் மைய கதாபாத்திரமான ஆதவனின் சிக்கலை நமக்கு காட்டிவிடுகிறார். இதற்குப் பிறகு ஆதவனோடு சேர்ந்து நாமும் கதையோட்டத்தில் பயணப்பட்டு இறுதியாக நிறைவெய்த வேண்டியிருக்கிறது. நெடுந்தொலைவு ஓட்டத்திற்குப் பிறகு பந்தயக்காரர்கள் ஆசுவாசத்தோடு அடையும் நிதானத்தை கடைசி சில அத்தியாயங்களில் நம்மையும் உணர செய்கிறார் கதையாசிரியர்.
வரலாற்றில் உயர்வாக வைத்து மதிக்கப்படும் நாயகர்களை நாம் இயல்பாகவே வலதுகை பழக்கம் உள்ளவர்களாகவே நாம் உருவகித்துக் கொள்கிற இயல்பு நம்மிடம் எப்படி வந்து சேர்ந்திருக்கும். அது, இடதுகைப் பழக்கம் குறித்த நமது புரிதலின்மையின் காரணமாகவே அமைந்திருக்கிறது என்பதை நாவலின் போக்கில் நான் உணர்ந்து கொண்டேன்.
ஆதவனின் இடதுகை பழக்கம் பெற்றோர்களாலும் நண்பர்களாலும் இன்னமும் சொல்வதென்றால் வகுப்பறையிலும்கூட இயல்பாக ஏற்கப்பட்டாலும் பொதுவிடத்தில் அப்பழக்கம் அவ்வளவு மரியாதைக்குரியது அல்ல என்பதன் குறியீடாகவே அறிவழகன் ஆசிரியரின் தயக்கத்தையும் தலைமையாசிரியரின் நிர்பந்தத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. இவ்விருவருக்குமான பதிலாக அமையும் மாவட்ட ஆட்சியரின் செயல் வாசகர்கள் யாராலும் யூகிக்க முடியாததாக அமைந்தது இந்நாவலின் செய்நேர்த்திக்கான சிறந்த பகுதி.
கதையோட்டத்தின் ஊடாகவே நா. வானமாமலை, மா. பொ. சி, நாடகாசிரியர் ஞாநி ஆகியோரை அறிமுகப்படுத்திய பாங்கும் வட்டம் என்பதற்கான குறிப்பும் பாராட்டத்தகுந்தது. இவைகளை விடவும் குழந்தைகளின் நாடக பயிற்சியின் போது வந்தமர்ந்த காக்கையின் மீது தனிப்பிரியம் உண்டாகிவிட்டது. குழந்தைகளின் இயல்பான உரையாடலின் போது கலையரங்கின் உள்ளே வந்தமரும் காக்கை, ஆதவன், கட்டபொம்மனின் வசனத்தை பேசிடும் தருணத்தில் விருட்டென பறந்து சென்றிடுகிறது. ஆகா! இதிலேயே ஆதவனின் நாடக குரல் ஒத்திகை எத்தகையது என்பது காட்சிபூர்வமாக உணர்ந்து கொள்ள முடிந்தது.
இந்த நாவலை வாசித்ததும் இணையதளங்களின் வழியாக பல புதிய செய்திகளை அறிந்துகொண்டேன். ஆசிரியர் குறிப்பிட்டதைப் போன்று அறிவியல் கண்டுபிடிப்பு முதற்கொண்டு பண்பாட்டு மற்றும் மத சிந்தனைகள் வரை இடதுகை பழக்கம் குறித்து மாற்று சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது என்பதை உணர்ந்து கொண்டேன்.
புத்தக அளவும், அச்சாக்கமும், வடிவமும், படங்களுக்கென தனிப்பக்கங்களை ஒதுக்கியதும் இந்நூலை குழந்தைகளுக்கு நெருக்கமானதாக மாற்றத்தக்க முயற்சி. சால்ட் பதிப்பகத்தாருக்கு வாழ்த்துகள்.
விஷ்ணுபுரம் சரவணன் அவர்களிடமிருந்து மற்றுமொரு சமூக பார்வையுள்ள நூல் இது. குழந்தைகளோடு சேர்ந்து பெரியவர்களும் வாசித்து நூலின் செய்தியை பரவலாக்க வேண்டும்.

அரசுப்பள்ளி ஆசிரியர். "பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று" என்கிற கவிதை தொகுப்பு ஒன்று எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அவிநாசி கிளை பொறுப்பாளர்.






ஆகஸ்டு 13 இடது கை பழக்கம் உடையோர் தினம்... எங்கள் வீட்டில் ஒருவர் உள்ளார்... இத்தினம் எங்களால் கொண்டாடப்படுகிறது... கருத்துகள் எதார்த்தமான உண்மை சம்பத்.. 👍
அருமையான பதிவு! வலதுகை இடது மூளையையும், இடதுகை வலது மூளையையும் கட்டுப்படுத்துகிறது. சாட்டை படத்தில் இரண்டு கைகளையும் பயன்படுத்தி மேற்கொள்ளும் எந்த வேலையும் சிறப்பாக செய்யலாம், அதில் சிறந்தும் விளங்குவார் என்பதை நியாபகம் படுத்தியது இந்த பதிவு.. ❤️