சிறார் இலக்கியத்தின் ஒரு செவ்வியல் மீளுருவாக்கம்: ‘கொடி காட்ட வந்தவன்'
- ஞா.கலையரசி

- May 15
- 2 min read

தமிழ்ச் சிறார் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் ரேவதி அவர்கள் (இயற்பெயர் ஹரிஹரன்) 90-க்கும் மேற்பட்ட படைப்புகளின் மூலம் சிறார் இலக்கியத்துக்குக் குறிப்பிடத்தக்க பங்களித்திருக்கிறார். கோகுலம், பூந்தளிர் உள்ளிட்ட சிறார் இதழ்களில் பணியாற்றிய இவரது படைப்புகளில் மிக முக்கியமானது, ‘கொடி காட்ட வந்தவன்’ என்ற நாவல். இது வெளியான காலத்தில் பரவலான கவனம் பெற்று, ஒன்பது மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1978ஆம் ஆண்டு தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, மதுரை இதை முதன்முதலில் வெளியிட்டுள்ளது. 10/05/2026 அன்று ரேவதி அவர்களின் முதல் நினைவு நாளன்று அவரது குடும்பத்தினர் முன்னிலையில் ‘இந்நாவலின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டுக் ‘கதைவண்டி’ பதிப்பகம் சிறப்பான அஞ்சலி செலுத்தியது. தற்கால வாசிப்புக்கு அச்சில் இல்லாமலிருந்த இந்தச் செவ்வியல் படைப்பை அரிதின் முயன்று தேடிக் கண்டுபிடித்து நூலாக்கம் செய்துள்ள ‘கதைவண்டி’ பதிப்பாசிரியருக்கு மிகவும் நன்றி.
அரசியல், சமூகம் சார்ந்த பிரச்சினைகளைச் சிறாரிடம் பேசலாமா? என இன்று கூட சிறார் எழுத்தாளர்கள் எழுதத் தயக்கம் காட்டும் சூழ்நிலையில் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பே தீண்டாமை குறித்து மிகவும் துணிச்சலாகவும், பிரச்சாரமாகவோ நீதிபோதனையாகவோ இல்லாமல், நேர்த்தியான கலை வடிவிலும் மிக எளிய நடையில் அழகான சித்திரமாகத் தீட்டித் தந்திருக்கிறார் ஆசிரியர்.
காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவையும், அவரது குரு சாவர்க்கரையும் தேசபக்தர்கள் என்றும், போராளிகள் என்றும் சிலர் போற்றித் துதிக்கும் இக்காலத்தில், நம் தேசத்தந்தை காந்தியடிகளின் சேவையையும், இந்திய விடுதலைப் போரில் அவர் ஆற்றிய பங்கையும் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நம் கடமை.
பதின்பருவத்தினர் தம்மைச் சுற்றியுள்ள சமூகத்தைப் புரிந்துகொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்பட, நாம் கடந்து வந்த பாதையும், இந்திய வரலாறும் அவர்களுக்குத் தெரிய வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் தமிழ்நாட்டில் காந்தியடிகளின் சுதந்திரப் போராட்ட எழுச்சியைப் பின்னணியாகக் கொண்டு சிறுவர்களுக்காக எழுதப்பட்ட முதல் நாவல் என்ற பெருமையை இந்நூல் பெறுகிறது.
ஆசிரியர் தம் முன்னுரையில், “காந்தி இயக்கத்தின் கொள்கைகள் எந்தக் காலத்துக்கும், எந்த நாட்டுக்கும் பொருந்தும். இந்த அதிசயத்தை நமது வாழ்நாளிலேயே நாம் காணப்போவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்நூல் குழந்தைகளால் விரும்பிப் படிக்கப்பட்டால் இயக்கமே நடத்தி வெற்றி பெற்றதாக மகிழ்வேன்” என்று எழுதியிருக்கிறார்.
மோகன் என்ற 12 வயது சிறுவன் இந்நாவலின் கதாநாயகன். ஆங்கில அதிகாரிகளின் குழந்தைகளும் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் படிக்கும் ஆங்கிலப்பள்ளியில் படிக்கும் சிறுவன், நாட்டுநடப்பு தெரியாமல் கிணற்றுத் தவளையாக வளர்கிறான். தன் தாத்தா நடத்தும் துணிக்கடை முன்பும், கள்ளுக்கடை முன்பும் விற்பனையைத் தடுத்து மறியலில் ஈடுபடும் காந்தி இயக்கத் தொண்டர்களைப் பார்க்கும்போது, கலகக்காரர் காந்தி என்ற தவறான எண்ணம் அவனுக்கு ஏற்படுகின்றது. பின் அந்த மறியல் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தையும், விடுதலைக்களத்தில் காந்தியடிகளின் பங்கையும் அவன் எப்படித் தெரிந்து கொண்டான் என்பது மீதிக்கதை. மேலும் காந்தியின் ஆணையை ஏற்றுத் தம் தென்னந்தோப்புகளை அழித்துவிட்டுக் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுச் சிறை சென்ற ‘ஈரோட்டு ராமசாமி’ (தந்தை பெரியார்) குறித்தும் இந்நாவல் பேசுவது சிறப்பு.
கள்/மது குடிப்பதால் குடும்பம் எப்படிச் சீரழிகிறது? சுதேசி இயக்கத்தின் அடிப்படை நோக்கமென்ன? அந்நியப் பொருட்களை வாங்கிக் குவிப்பதால் நாட்டின் பொருளாதாரம் எப்படிப் பாதிக்கப்படுகிறது? காந்தியடிகள் இடுப்பில் ஒரு துண்டு மட்டும் உடுத்த ஏன் முடிவு செய்தார்? உப்பு சத்தியாக்கிரகம் ஏன் நடத்தப்பட்டது போன்ற பல விவரங்களைச் சிறுவர்கள் இக்கதையை வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்.
கதையினூடாகச் சாதியக் கொடுமை, தீண்டாமை ஆகியவை குறித்துப் பேசுவது இந்நாவலின் தனிச்சிறப்பு. தீண்டத்தகாதவன் வீட்டு வாளியால் கிணற்றில் நீர் இறைத்தமையால் கிணறு தீட்டாகிவிட்டது என்று ஊர் மக்கள் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறான் மோகன். இன்றளவும் பல கிராமங்களில் சாதி, தீண்டாமை கொடுமைகள் முற்றிலும் நீங்கியபாடில்லை என்பதால், இந்நாவல் இக்காலத்துக்கும் வாசிக்கப் பொருத்தமாயுள்ளது. தமிழ்ச் சிறார் எழுத்தாளர்களும், பதின்பருவத்தினரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல். ஓவியர் கோ.ராமமூர்த்தி அவர்கள் வரைந்த அட்டைப்படமும், உள் ஓவியங்களும் மிகவும் அருமை.
“ரேவதி அவர்களின் மகுடத்தில் ஒரு வைரம் தான் இந்நாவல்” என்று சாகித்திய பாலபுரஸ்கார் விருது வென்ற சிறார் எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி அவர்கள் கூறியிருப்பதை, நான் வழிமொழிகின்றேன்.
கொடி காட்ட வந்தவன்
ரேவதி
கதைவண்டி பதிப்பகம், சென்னை-34.
செல்:- 7502340787.
விலை ரூ 110/-.

ஞா.கலையரசி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில்பணிசெய்து ஓய்வுபெற்றவர். ‘மந்திரக்குடை,’ ‘பூதம்காக்கும்புதையல்,’ ‘நீலமலைப்பயணம்’ ‘பேய்த்தோட்டம்’ உள்ளிட்டசிறார்நூல்களின்ஆசிரியர். ‘சுட்டி உலகம்’ வலைத்தளம், ‘பூஞ்சிட்டு’ சிறுவர் மின்னிதழ் ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.





Comments