உழவும் உணவும்!
- கொ மா கோ இளங்கோ

- May 15
- 1 min read

கூவிச் சேவல் காலையில் - ஊரை
எழுப்பி விடுது பார்!
வாசல் இட்ட கோலமோ - வண்ணம்
மின்னச் சிரிக்குது பார்!
தோளில் கலப்பைத் தூக்கியே - உழவர்
வயலை நோக்கிப் போகிறார்!
நாத்து நடும் பெண்களோ – சேர்ந்து
நாட்டுப் பாடல் பாடுவர்!
வரப்பு ஓர நண்டுகள் - மெல்ல
வளைக்குள் ஓடிப் போயின!
கரும்புத் தோட்டத் தும்பியோ - காற்றில்
களித்து ஆடிப் பறக்குது!
பசுமை நிறைந்த வயலிலே – காலைப்
பனித்துளிகள் மின்னுது!
மிச்சம் இன்றி நிலத்திலே – நெல்
முத்து விளைந்து நிற்குதே!
கஞ்சி குடிக்க மரத்தடி – நமக்குக்
குளிர்ச்சியாக இருக்குது!
நெஞ்சு முழுக்க மகிழ்ச்சியும் – வயலில்
நிறைந்து தானே கிடக்குது.
கந்தல் ஆடை உடுத்தியே – வயலில்
விந்தை செய்தான் விவசாயி!
சண்டை போடும் மனிதனே – நம்
சோற்றில் ஏது பிரிவினை?

எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.





Comments