தத்துவம் அறிவோம் - 13
- உதயசங்கர்

- 10 hours ago
- 2 min read

அறிவியல் கண்டுபிடிப்புகளின் தாய் யார்?
மனித குலவரலாறு முழுவதும் அறிவியல் கண்டுபிடிப்புகளால் ஆனது. மனிதகுலம் அறிவியல் கண்டுபிடிப்புகளை நடைமுறைப்படுத்தியே முன்னேறி வருகிறது. அறிவியல் இல்லை என்றால் மாற்றம் இல்லை. முன்னேற்றம் இல்லை.
அப்படி என்ன அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்தார்கள்?
வேட்டைச் சமூகமாக இருந்த போது கற்களைப் பயன்படுத்தி வேட்டையாடினார்கள்.
இது அறிவியல் கண்டுபிடிப்பா என்று நீங்கள் கேட்கலாம்.
நிச்சயமாக.
1.முதலில் கிடைத்த தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த நமது மூதாதையர்கள் கருவியை அதாவது கற்களைப் பயன்படுத்தி உணவு தேடலாம் என்று கண்டுபிடித்தார்கள்.
2.முதலில் கையில் கிடைத்த கற்களைப் பயன்படுத்தினார்கள். பிறகு அந்தக் கல்லைக் கூர் தீட்டிப் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்தார்கள். அது இன்னும் எளிதாக வேட்டையாட உதவுகிறது.
3.முதலில் வேட்டையாடிய விலங்கின் மாமிசத்தை அப்படியே பச்சையாகச் சாப்பிட்டார்கள். இதில் இன்னொரு விஷயத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் அனைத்து மனிதர்களும் மாமிசம் சாப்பிடுபவர்கள் தான். அதாவது எல்லாரும் நான்வெஜ் சாப்பிட்டிருக்கிறார்கள். நாங்கள் வெஜ் என்று இப்போது சொல்வதைப் போல அப்போது யாரும் கிடையாது.
அப்படியா? என்று கேட்கிறீர்களா?
நான்வெஜ் சாப்பிட்ட தால் தான் நம்முடைய உடலுக்கும் மூளைக்கும் தேவையான புரோட்டீனும் மற்ற மினரல்ஸும் சுலபமாக் கிடைத்தது.
இன்னொன்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.
கண்ணாடி முன்னால் நில்லுங்கள். வாயை ஆ வெனத் திறந்து பாருங்கள். இரண்டு பக்கமும் சிங்கப்பல் இருக்கிறதா?
மாமிசம் சாப்பிடும் விலங்குகளைப் பாருங்கள்.
இரண்டு பக்கமும் சிங்கப்பல் இருக்கிறதா? அது எதுக்காம்?
மாமிசத்தைக் கிழித்துச் சாப்பிடுவதற்காகத் தான். தெரிந்ததா?
ஆக, முதலில் எல்லாரும் மாமிசம் சாப்பிடுபவர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள்.
என்ன சரியா?
4.முதலில் பச்சையாக மாமிசத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த மனித இனத்தின் முன்னேற்ற த்தில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கிய கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.
கரெக்ட். நீங்கள் நினைத்த து சரிதான்.
நெருப்பு.
அதுவரை இயற்கையாக காடுகளில் திடீர் திடீரென பற்றி எரியும் காட்டுத்தீ மட்டுமே தெரியும்.. அந்த த் தீயில் வெந்த விலங்குகளின் மாமிசம் சாப்பிடுவதற்கு எளிதாக இருக்கிறது என்று தெரியும்.
ஆனால் அந்த த் தீயைச் செயற்கையாக உருவாக்க முடியுமா? என்று அப்போது தெரியாது.
இரண்டு கற்கள் வேகமாக உரசும் போது எழுந்த தீப்பொறி தான் அடுத்த கண்டுபிடிப்பு.
தீப்பொறியைத் தீயாக்கினார்கள். தீயில் மாமிசத்தைச் சுட்டுச் சாப்பிட்டார்கள். அவர்கள் தங்கியிருந்த குகைகளில் தீயைக் காப்பாற்றி வெளிச்சமாகப் பயன்படுத்தினார்கள்.
வெளிச்சம் கொடிய விலங்குகளை விரட்டுவதையும் தெரிந்து கொண்டார்கள்.
சமைத்த மாமிசத்தைச் சாப்பிட்ட போது வயிற்றில் சுலபமாகச் செரிமானம் நடந்த து.
அதனால் பச்சை மாமிச த்தைச் சாப்பிடும் போது செய்த வேலைகளைக் குடல் செய்யத் தேவையில்லை.
அதன்விளைவு?
அதிகமான என்சைம்களும், மினரல்ஸும் மூளைக்குச் சென்றன. மூளையின் செயல்பாடுகள் விரிவடைய த் தொடங்கியது.
இன்றும் கூட பத்து கணினிகளின் வேலையை நம்முடைய மூளை செய்கிறது. அதற்குக் காரணமான கண்டுபிடிப்பு எது தெரியுமா?
நெருப்பு.
5.முதலில் ஒரே இட த்தில் இருந்து கொண்டு அங்கே கிடைத்த பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விலங்குகள், பறவைகள் இவற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருந்த இட த்தில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டபோது முதன்முதலாக உயிர்வாழ வேண்டும் என்றால் வேறு இட த்துக்குப் போக வேண்டும் என்று பயணம் செய்தார்கள்.
அந்தப் பயணம் தான் மனித இனத்தின் அடுத்த கண்டுபிடிப்பு.
அதனால் தான் ஆப்பிரிக்காவில் தொடங்கிய மனிதர்களின் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அப்படியா? என்று சந்தேகம் வருகிறதா?
உங்கள் அம்மாவிடமும் அப்பாவிடமும் கேட்டுப்பாருங்கள்.
அவர்களுடைய சொந்த ஊர் எது?
அவர்களுடைய பெற்றோர்களின் சொந்த ஊர் எது?
அவர்களுடைய தாத்தா பாட்டிகளின் சொந்த ஊர் எது?
அவர்களுடைய அப்பா அம்மாவின் சொந்த ஊர் எது?
அவர்களுடைய தாத்தா பாட்டிகளின் சொந்த ஊர் எது?
அவர்களுடைய ….
சரி சரி போதும் என்கிறீர்களா?
இப்படியே நாம் நம்முடைய பூர்வீகத்தைத் தேடி ஒரு துப்பறியும் பயணம் போனால் என்ன?
அது எங்கே கொண்டு போய்ச் சேர்க்கும்?
இந்தக் கேள்விக்குத் தான் உங்களுக்கு விடை தெரியுமே.
அது என்ன?
ஆப்பிரிக்கா.
இன்னும் பல கண்டுபிடிப்புகளை அடுத்த மாதம் பார்ப்போம்.
( அறிவோம் தெளிவோம் )

200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.
சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்
பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்
விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.





Comments