பாடங்களாக நாட்டுப்புறவியல்...
- சாலை செல்வம்
- Aug 15
- 2 min read

குழந்தைகளை மகிழ்விக்கும் விஷயங்களாக உள்ளூர் கலைகள், இலக்கியங்கள், பாடல்கள், இசை, திருவிழாக்கள், சொல்லாடல்கள்... என நாட்டுப்புற கலைகளும் செயல்பாடுகளும் நிறைந்துள்ளன. அவை நீண்ட நெடுங்காலமாக சமூகத்தில் மக்களின் வாழ்க்கை முறை சார்ந்த பண்பாடாக, மகிழ்விக்கும் கலைகளாக, தொழில்கள் உடனும் பழக்கவழக்கங்கள் உடனும் இணைந்தும் இருந்து வருவதை நாம் அறிவோம்.
பாடப்புத்தகங்களில் அவை பாடங்களாக ஆக்கப்படுவதற்கான காரணம், கலைப் பண்பாட்டைப் பாதுகாத்தல் - கல்வியின் நோக்கத்தில் ஒன்றாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவை மொழிப் பாடத்தில் மொழிக் கற்றலுக்காக, கலை இலக்கியங்களை அறிந்துகொள்வதற்காக, மகிழ்ச்சியோடு கலைச் செயல்பாடுகளில் ஈடுபட, பாரம்பரிய செயல்பாடுகளை அழியாமல் பாதுகாக்க என்கிற வகையில் சிறப்பான பங்களிப்பை செய்துவருகின்றன.
பழமொழி சார்ந்த பாடங்கள்:
பண்படுத்தும் பழமொழிகள், படம் இங்கே பழமொழி எங்கே ஆகிய பாடங்கள் – பழமொழிகளை மையப்படுத்திய இப்பாடங்கள் பல பழமொழிகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன. ‘குரைக்கின்ற நாய் கடிக்காது’ என்ற பழமொழியை ‘குழைகின்ற நாய் கடிக்காது’ என்று புதுமொழியாக்கியுள்ளனர். ஆற்றிலே போட்டாலும் அளந்து போடணும் என்ற பழமொழியை ‘அகத்திலே போட்டாலும் அறிந்து போடணும்’ என்பதுதான், அதன் உண்மையான பழமொழி என்றும் பாடம் கூறுகிறது. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்... போன்ற பழமொழிகளுக்கு பாடம் தரும் விளக்கம் புரியாத புதிராகவும் வலிந்து எழுதியதைப் போலவும் உள்ளது.
பழமொழிகள் – நாட்டுப்புற இலக்கியம் என்பதலேயே அது பெருமிதத்தோடு கருதப்பட வேண்டும் என நினைக்கப்படுவதைக் குழந்தைகளுக்கு சொல்லலாம். படத்தைப் பார்த்து பழமொழியைக் கண்டுபிடிக்கும் பாடம் நல்ல ஏற்பாடாக இருந்தபோதும், அதற்குப் பழமொழிகளை குழந்தைகள் அறிந்து வைத்திருக்க வேண்டியுள்ளது.
நாட்டுப்புற இலக்கியம், கலைகள், திருவிழாக்கள் சார்ந்த பாடங்கள் ஆரம்பக் கல்வி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
பாடங்களில் நாட்டுப்புறவியல்:
டும் டும் சின்னு:
வாலு போயி கத்தி வந்தது என்கிற குரங்குக் கதையை மையப்படுத்தி சின்னு என்ற பையன் பாடிக்கொண்டே தோட்டத்தில் பயணிக்கும் கதை. இதுபோல் நாட்டுப்புறக் கதை வடிவத்தை மையமாக வைத்து புதுக்கதைகளை உருவாக்கியிருப்பதும், அவை குழந்தைகளுக்கு ஏற்றதாக இருப்பதையும் முக்கியமான ஒன்றாகவே பார்க்க முடிகிறது.
மாட்டு வண்டியிலே, உழவுப்பொங்கல்:
இந்தப் பாடங்கள் மகிழ்ச்சியான அனுபவத்தை மையப்படுத்தியும் அன்றாட அனுபவத்தில் அவர்களுக்கானதாகவும் இருக்கின்றன.
நாட்டுப்புற பாடல்கள்:

கொழுக்கட்ட கொழுக்கட்ட ஏன் வேகல, முளைப்பாரி பாடல், ஆனந்தம் விளையும் பூமியடி, பப்பரப்பா வண்டி பணங்கா வண்டி:
இந்தப் பாடல்கள் பாடுவதற்கு மகிழ்ச்சியாகவும் கும்மியடித்துக் கொண்டே பாடுவதற்கு, முளைப்பாரியை முளைக்கவைத்து – அதை சுத்திவந்து பாடுவதற்கு என விதம்விதமான அனுபவங்களையும் தமிழ் சமூகத்தில் நடைமுறையில் உள்ளவற்றையும் மையப்படுத்தியும் இருப்பதால் மகிழ்ச்சியோடு கற்றுக்கொள்ள ஏற்றதாக உள்ளது. கொழுக்கட்ட கொழுக்கட்ட ஏன் வேகல, மழை பெய்தது நான் வேகல - என்று வாய் மொழியாக சிறுபிள்ளைகள் பாடும் பாடலை புத்தகத்தில் வாசிக்கும்பொழுது குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.

தமிழர்களின் வீரக்கலைகள்:
இந்தப் பாடம் சிலம்பாட்டம், வில்வித்தை, மற்போர், ஏறுதழுவதல் போன்ற வீர விளையாட்டுகளை மையப்படுத்தி அமைந்துள்ளது. சிலம்பாட்டமும் ஏறுதழுவுதலும்கூட ஆங்காங்கு நடப்பதைப் பார்க்கிறோம். வில்வித்தை, மற்போர் பற்றி ஆசிரியர்களுக்கே எதுவும் தெரியவில்லை.

நாட்டுப்புறவியல் சார்ந்து செய்ய வேண்டியவை:
அந்த அனுபவம் மாணவர்கள் இயல்பாக பெறக்கூடியதாக இருக்கும்பொழுது, அவர்களால் அதனுடன் இணைந்து இருக்கும்பொழுது பாடம்-சமுதாயம்-மாணவர்கள் இணைந்து பயணிக்க முடியும்.
விதம்விதமான இலக்கியங்களும் கலைகளும் நிகழ்வுகளும் நிரம்பியுள்ள சமூகம் நம்முடையது. ஆங்கிலத்தில் re–told கதைகளைப் போல் மறு உருவாக்கக் கதைகளை நாமும் உருவாக்கலாம்.

(தொடரும்...)
Comments