உறங்கும் விதைக்குள் ஓர் உலகம்!
- அ.குமரேசன்
- Aug 15
- 2 min read
அ.குமரேசன்

வயசு வேறுபாடு இல்லாம நம்ம எல்லாருக்குமே சிறந்த நண்பர்கள் யாருன்னு கேட்டா என்ன சொல்வீங்க? ஆமா, உங்க பதில் சரிதான் –புத்தகங்கள்தான். அவங்க நம்ம கூட வருவாங்க, சேர்ந்து விளையாடுவாங்க, கதை சொல்வாங்க, அறிவியல், கணிதம், வரலாறுன்னு எது வேணும்னாலும் கத்துக் கொடுப்பாங்க. உலகம் பூராவும் இருக்கிற அப்படிப்பட்ட நண்பர்களோட சேர்ந்து ஜாலியா ஊர்சுத்தப் போறோம். நீங்க தயாரா?
முதல்ல, ஒரு அறிவியல் புத்தகம். நம்ம அறிவு வளர்ச்சிக்கு எப்படி ஒரு புத்தகம் விதையாகுதோ, அதே மாதிரி எந்தச் செடி, கொடி, மரமானாலும் விதையிலே இருந்துதானே முளைச்சி வளருது? அந்த விதைகளைப் பத்திச் சொல்லுற புத்தகம்தான் ‘எ சீட் இஸ் ஸ்லீப்பி’ (A Seed is Sleepy - விதை தூங்கி வழியுது).
பசங்களுக்குன்னே புத்தகம் எழுதுறவங்க அமெரிக்காவுல இருக்கிற டயானா ஹட்ஸ் ஆஸ்டன். தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பத்தி எழுதுறாங்க. எல்லாரும் சுவைச்சுப் படிக்கிற மாதிரி எளிமையா கவிதை நடையிலே எழுதுறாங்க. அதிலே அறிவியல் இருக்கும், கற்பனை இருக்கும், உணர்ச்சி இருக்கும். இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிற பதிப்பகம் கிரானிக்கிள் புக்ஸ்
அன் எக் இஸ் கொயட் (ஒரு முட்டை அமைதியா இருக்கு), எ பட்டர்ஃபிளை இஸ் பேஷண்ட் (ஒரு வண்ணத்துப்பூச்சி பொறுமையா இருக்கு), எ ராக் இஸ் லைவ்லி (ஒரு பாறை உயிர்த்துடிப்போட இருக்கு), எ நெஸ்ட் இஸ் நாய்ஸி (ஒரு கூடு இரைச்சலா இருக்கு) –இப்படிப் பல புத்தகங்களை எழுதியிருக்காங்க.
விதைகளைப் பத்தின அவங்களோட இந்த இயற்கை அறிவுப் புத்தகத்தைப் பத்தி நம்மளோட செயற்கை நுண்ணறிவு நண்பர்கள் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போமா? 6 வயசிலேயிருந்து 10 வயசு வரைக்கும் இருக்கிறவங்களுக்காக இதை எழுதியிருக்காங்களாம். ஆனா பெரியவங்களும் விரும்பிப் படிக்கிறாங்களாம்.
அவரை, பூசணி, தக்காளி விதைகளைப் பார்த்திருப்பீங்க. நெல்லு, கோதுமை, சோளம், கேழ்வரகு மாதிரியான தானியங்களும் மா, பலா, நாவல் கொட்டைகளும் விதைகள்தான்னு தெரிஞ்சி வச்சிருப்பீங்க. அந்த விதைகளை மண்ணுல போடலைன்னா வருசக் கணக்கா கூட மாற்றமே இல்லாம அப்படியே இருக்கும் கவனிச்சிருக்கீங்களா? ஒரு விதை மண்ணுக்குள்ள போனப்புறம் பார்த்தா ரெண்டு மூணு நாள்ல முளை விட்டு, செடியாவோ கொடியாவோ மரமாவோ வளரும். அப்புறம் அதுகள்ல இருந்து நிறைய பூக்களும் காய்கனிகளும் தானியங்களும் விளையும். ஒரே ஒரு மாங்கொட்டையிலே இருந்து வளர்ற மரத்திலே ஆயிரக் கணக்கிலே மாம்பழம் கனியும். பழத்தைச் சாப்பிட்டுவிட்டுவிட்டு மண்ணுல போடுற கொட்டையிலே இருந்து இன்னொரு மரம்… மேலும் நிறைய பழங்கள்…
இந்த சுழற்சியைத்தான் டயானா ஹட்ஸ் ஆஸ்டன் இந்தப் புத்தகத்திலே சொல்றாங்க. தென்னை, எருக்கு, முட்டைக் கோஸ் சூரியகாந்தி, தாமரை இப்படிப் பலவகையான தாவரங்களின் விதைகளைப் பத்தி புத்தகம் பேசுது. ஒவ்வொரு விதையும் எப்படி நீண்ட காலம் தூங்குறது போல அப்படியே கிடக்குதுன்னு சொல்லுது. வளர்றதுக்கு சாதகமான பருவநிலை இல்லாதப்ப மண்ணுக்கு உள்ளேயே கூட விதை தன்னோட மாற்றத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு உறங்குறது போலக் காத்திருக்குதுன்னும் விளக்குது.
ஒரு பழத்தைச் சாப்பிட்டதுக்கு அப்புறம் அதனோடே கொட்டையை எங்கேயாவது வீசுறோம்ல? மனுசங்க மட்டுமில்ல, விலங்குகளும் இப்படிக் கொட்டைகளைப் பல இடங்கள்ல போடுவாங்க. இப்படி ஒரு இடத்துல சாப்பிட்டுட்டு இன்னொரு இடத்திலே போடுறது விதைக்கு ஒரு பயணம். சில தாவரங்களோட விதைகள் ஆத்து நீரில் மிதந்துக்கிட்டே நீண்ட தொலைவுக்குப் போய் கரையிலே ஒதுங்கி முளைக்கும். சில லேசான விதைகள் காத்துல பறந்துபோய் தரைக்கு வருது. சில கனிகளைச் சாப்பிட்ட பறவைகள் பல இடங்களுக்குப் பறந்து போறப்ப, அவங்களோட எச்சத்தில விதைகள் கலந்து ஏதாவது ஒரு இடத்திலே விழும்.
ஒவ்வொரு விதையோட வடிவம், நிறம், உள்ளே இருக்கும் கருவைப் பாதுகாக்கும் உறுதித்தன்மை பத்தியெல்லாம் அழகாகவும் உணர்ச்சி கலந்தும் இந்தப் புத்தகத்திலே டயானா வர்ணிக்கிறாங்க. பல வகையான விதைகள் முளைப்பதற்கான மண்ணின் தன்மை, பருவ நிலை பத்தியும் விவரிக்கிறாங்க. சில விதைகள் ஊதினாலே பறக்கிற அளவுக்கு எடைக்குறைவாவும், சில விதைகள் எளிதில் உடைக்க முடியாத அளவுக்குக் கடினமான ஓடுகளைக் கொண்டதாவும், சில விதைகளில் பாதுகாப்புக் கவசம் போல சுத்தியும் முள்ளு முள்ளா இருப்பதையும் சொல்றாங்க.
“ஒரு விதை தூங்குமூஞ்சியாய் இருக்கிறது, அமைதியாய், அசைவற்றதாய் செயலின்றிக் கிடக்கிறது.” –இந்த வாக்கியத்துல ஒரு கவிதை மாதிரியான அமைப்பு இருக்குதுல்ல? இப்படிப்பட்ட நடையிலேதான் புத்தகத்தை எழுதியிருக்காங்க.
தென்னை விதைதானே தேங்காய்? அதைப் பத்திச் எப்படிச் சொல்லியிருக்காங்கன்னு பாருங்க: “உருண்டையான தேங்காயை உறுதியான ஓடு அணைத்திருக்கிறது. அதனால்தானே அது சரிவில் உருண்டு ஓடுகிறது, நீரில் பந்து போல் மிதக்கிறது. உள்ளே இருக்கும் காற்று முளைப்பதற்கு வாகானதோர் இடத்தை அடையும் வரையில் மிதப்பதற்கு உதவுகிறது.”
மண்ணுல போட்ட ஒரு விதை நம்ம கண்ணு முன்னாடி முளைச்சி வர்றப்ப நமக்கு ஒரு வியப்பும் உற்சாகமும் ஏற்படும்ல? அந்த உணர்வை இந்தக் கவிதை நடை பிரதிபலிக்குது. அதனால ஒவ்வொரு விதையைப் பத்தியும் படிக்கிறப்ப, மாயக் கதை படிக்கிறது போல விறுவிறுப்பா இருக்குதுன்னு புத்தகங்களை அறிமுகப்படுத்தி எழுதுறவங்க சொவ்றாங்க.
அந்த உணர்வு ஏற்படுறதுக்கு, நீல வண்ணப் பக்கங்கள்ல இருக்கிற, அழகான ஓவியங்களும் ஒரு காரணம். அந்தக் காட்சிகளைக் கண் முன்னாடி கொண்டுவந்திருக்கிற ஓவியரோட பேரு சில்வியா லாங்.
சுருக்கமா சொல்றதுன்னா, அமைதியா இருக்கிற ஒவ்வொரு விதைக்கு உள்ளேயும் ஒரு வாழ்க்கை இருக்குது – அதை இந்தப் புத்தகம் காட்டுது.
Comments