அறிவியலும் அன்பும்
- விழியன்
- Apr 6
- 2 min read

நேர்காணல்
கேள்விகள்: எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன்
பதில்கள்: எழுத்தாளர் விழியன்
1.எந்த நோக்கத்திற்காக சிறுவர்களுக்காக எழுத வந்தீர்கள்?
வாசிப்பு மற்றும் குழந்தைகளுக்கான செயல்பாட்டின் தொடர்ச்சியாகத்தான் சிறார்களுக்கு எழுத ஆரம்பித்தேன். வீட்டில் சின்ன வயது முதலே ஏராளமான புத்தகங்கள் இருக்கும். கூடவே அப்பா அறிவியல் இயக்கத்தில் செயல்பட்டதால் குழந்தைகள் சார்ந்த நிகழ்வுகளில் எனக்கு ஆர்வம் அதிகம். கல்லூரிக் காலங்களில் அறிவியல் முகாம்களை நண்பர்களுடன் சேர்ந்து நடத்தினோம். அது குழந்தைகளுடன் வேலை செய்ய மேலும் உந்தியது. பணிக்குச் சேர்ந்த பின்னரே எழுத ஆரம்பிக்கின்றேன். சிறுகதை மற்றும் கட்டுரைகள் முயன்று வந்தேன். தோழர் ச.தமிழ்செல்வனின் பேட்டி ஒன்றினைக் கண்டேன். குழந்தைகளுக்கு எழுத வாருங்கள் என்ற வரியே சிறார் எழுத்து பக்கம் திருப்பியது. அந்தக் காலகட்டத்தில் குழந்தைகளாக மட்டும் என எழுதிக்கொண்டு இருந்தவர்கள் வெகு சிலரே. சில வருடங்களாகச் சிறார் இலக்கியம் குறித்து வாசித்தேன். இதுவே நாம் இயங்க வேண்டிய தளம் என்பது புரிந்தது. சிறார்களுக்கு மட்டும் எழுத வேண்டும் என நின்றுகொண்டேன்.
2. பென்சிகளின் அட்டகாசம், மலைப்பூ போன்ற உங்கள் படைப்புகளில் கல்வி சார்ந்த ஓர் இழைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அது திட்டமிட்டதா… இல்லை, இயல்பாக நிகழ்கிறதா?
சில படைப்புகள் திட்டமிட்டு நடக்கின்றன, சில படைப்புகள் இயல்பாக நடக்கின்றன. சிறார்களுக்கு எழுத வேண்டும் என நினைத்தபோது குழந்தைகளுடன் அன்பாய் இருந்தால் போதும் என்று நினைத்தேன். ஆனால் நான் உடன் வளர்ந்த அறிவியல் இயக்கம் எதையும் அறிவியல்பூர்வமாக சிந்திக்கக் கற்றுக்கொடுத்தது. குழந்தைகளுடன் அன்பாய் இருத்தலில் என்ன அறிவியல் இருந்துவிடப்போகின்றது என ஆரம்பத்தில் தோன்றினாலும் அது அறிவியல் கலந்த அன்பாக இருப்பதே சரி என்பதைச் சீக்கிரம் உணர்ந்தேன். குழந்தைகள் பற்றிய புரிதல்களைப் பல கோணங்களில் அணுகினேன். ஒரு இடத்தில் கல்வியே குழந்தையின் ஆளுமையையும் வளர்ச்சியையும் பெரிதாகப் பாதிக்கின்றது என்பதை உணர்ந்தேன். கல்வி சார்ந்து நிறைய வாசிக்கவும் எழுதவும் தொடங்கினேன். அதனால் கல்வி சார்ந்த கருத்துக்களும், மாற்றம் நிகழ வேண்டியவைகளும், அவலங்களும் சிறார் எழுத்துக்களில் வெளிப்பட்டுவிடுகின்றது.
3. யதார்த்தக் கதைகள் எழுதுவதில் உள்ள சவால்கள் என்னென்ன… சௌகரியங்கள் என்னென்ன?
யதார்த்தக் கதைகள் மட்டுமல்ல கற்பனைக் கதைகளும் சௌகரியங்களும் சவால்களும் நிறைந்தவையே. யதார்த்தக் கதைகளில் மிக முக்கியமான சவால் எந்தப் புள்ளியில் குழந்தைகள் தங்களை இணைத்துக்கொள்கின்றனர் என்பதுதான். அதற்கான திறப்புகளைக் கதையில் வைத்திருக்க வேண்டும். அப்படித் திறப்புகளை உருவாக்காமல் ஒரு படைப்பாளியாக மட்டும் நினைத்தால் அது குழந்தைகளிடம் அல்லது யார் வாசகர்கள் என நினைக்கின்றோமோ அவர்களிடம் சென்று சேராது. மேலும் அந்தக் கதையில் கதாபாத்திரமும் சூழலும் நம்பும்படியாக அமையவேண்டும். அதுவே சௌகர்யமும் கூட. அதே சூழலை நாம் நேரிடையாகப் பார்த்திருப்போம் அல்லது செவி வழியாகக் கேட்டிருப்போம். அப்படி இருக்கும் போது விவரிப்புகள் எளிதாக அமைந்துவிடும். அதுவே மாய யதார்த்தமோ, மாயாஜாலமோ கூடுதலான விவரிப்புகள் மூலம் வாசகர்கள் மனதில் அந்தக் காட்சியை உருவாக்க வேண்டும். இந்த யதார்த்தக் கதைக்குள், வரவழைத்துவிட்டு அதனை எளிமையாக எப்படித் தான் விரும்புவதைச் சொல்வது என்பது அடுத்தகட்டச் சவால்.
Commenti