top of page

மரங்களின் தாய் - வங்காரி மாத்தாய்

23 hours ago
4 min read

நகுலன்: அத்தை, நம்ம ஊர்ல நாளைக்கு மரம் நடும் விழாவாம். எப்பப் பார்த்தாலும் மரம் நட்டுக்கிட்டே இருக்காங்க. ஆனா மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே இல்லையே!


ரதி: அதானே! எனக்கும் ரொம்ப நாளா இந்தக் குழப்பம் இருக்கு அத்தை.


ஜோ : நல்ல கேள்வி. மரம் நட்டா மட்டும் போதாது. அதை வளர்த்து, பாதுகாக்கவும்

வேண்டும். இயற்கையைப் பாதுகாக்கிறதுக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த ஒரு பெண்ணைப் பற்றி இன்னைக்கு பார்க்கலாம். கென்யாவில் பிறந்து, பெண்களால் மிகப்பெரிய சமூக மாற்றத்தை உருவாக்க முடியும்னு நிரூபிச்சவர்.


ரதி: அத்தை, அது வங்காரி மாத்தாய்தானே? அவர் நிறைய மரங்களை நட்டு தன்

நாட்டைப் பசுமையாக்கினார்னு சொல்லியிருக்கீங்க.


நகுலன்: ஆமாம் அத்தை. அவர் என்ன படித்திருக்கிறார்? எப்படி அவருக்கு இதன்

மேல் ஆர்வம் ஏற்பட்டது? அவரைப் பற்றி கொஞ்சம் கூறுங்களேன்.


ஜோ : வங்காரி முத்தா மாத்தாய் 1940-ஆம் ஆண்டு கென்யாவில் பிறந்தவர்.

உயிரியலில் உயர்கல்வி பயின்று, 1971-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையும் அவருக்கு உண்டு. நைரோபி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் உயர்ந்தார்.


ரதி: அத்தை, அந்தக் காலத்துல ஒரு பெண் இவ்வளவு உயரத்துக்குப் போறது பெரிய விஷயம்தானே?


ஜோ : ஆமாம் ரதி. படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும், பெண் என்பதற்காகவே பல

இடங்களில் அவர் பாகுபாட்டையும் எதிர்ப்பையும் சந்தித்தார். அவர்

திறமையானவராக இருந்தார் என்பதற்காக எல்லோரும் அவரைப் பாராட்டவில்லை.

குறிப்பாக, ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய சமூகத்தில் தனக்கென ஒரு கருத்தைக் கொண்டிருந்த பெண்ணாக அவர் செயல்பட்டது பலருக்கு விருப்பமில்லாமல் இருந்தது.


நகுலன்: அத்தை, அவர் மரம் நடும் பணியை எப்படித் தொடங்கினார்?


ஜோ : கென்யாவின் கிராமப்புறங்களில் காடுகள் அழிக்கப்பட்டதால் மண்ணரிப்பு, விறகுத் தட்டுப்பாடு, தண்ணீர்ப் பிரச்சினை போன்றவை ஏற்பட்டன. இவற்றால் கிராமப்புறப் பெண்கள்தான் அதிகம் சிரமப்பட்டார்கள். விறகு தேடவும் தண்ணீர் கொண்டுவரவும் அவர்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. இதை உணர்ந்த வங்காரி மாத்தாய், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் மூலம் பெண்களின் வாழ்க்கையையும் மேம்படுத்த முடியும் என்று நம்பினார்.


ரதி: அதனால்தான் பெண்களை ஒன்றிணைத்து மரம் நடத் தொடங்கினாரா?


ஜோ : ஆமாம். 1977-ஆம் ஆண்டு கிரீன் பெல்ட் இயக்கத்தை (Green Belt Movement)

தொடங்கினார். பெண்களுக்குப் பயிற்சி அளித்து, மரக்கன்றுகளை நடுவதற்கு

ஊக்கமளித்தார். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டது; பெண்களுக்குச் சிறிய வருமானமும் கிடைத்தது. ஆயிரக்கணக்கான பெண்களை ஒன்றிணைத்து,

அவர்களுக்குள் தலைமைப் பண்பையும் தன்னம்பிக்கையையும் வளர்ப்பது

சாதாரணமான விஷயமில்லை.


நகுலன்: அத்தை, ஒரு பெண் இவ்வளவு பேரை எப்படி ஒருங்கிணைத்தார்? அவருக்கு ஆதரவாக எல்லோரும் இருந்தாங்களா?


ஜோ : அதுதான் அவருடைய வாழ்க்கையில் முக்கியமான பகுதி. அவருக்கு எல்லா

நேரங்களிலும் ஆதரவு கிடைக்கவில்லை. மாறாக, அவருடைய பணிகளைத் தடுக்கப் பல முயற்சிகள் நடந்தன. அவர் பேராசிரியராகப் பணியாற்றிய பல்கலைக்கழகத்திலும் சிக்கல்களை எதிர்கொண்டார். குடும்ப வாழ்க்கையிலும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தார்.


ரதி: குடும்ப வாழ்க்கையிலுமா, அத்தை?


ஜோ : ஆமாம். அவருடைய கணவருடனான திருமண வாழ்க்கை முறிந்தது. மூன்று

குழந்தைகளுடன் தனியாக வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் பொதுவாழ்க்கையில் துணிச்சலாகச் செயல்பட்டதும், உயர்ந்த கல்வியும்

தொழில்முறை வெற்றியும் பெற்றதும் அவருடைய திருமண உறவில் ஏற்பட்ட

சிக்கல்களுக்குக் காரணமான அம்சங்களில் ஒன்றாக இருந்ததாக அவர் தன்

தன்வரலாற்றில் குறிப்பிடுகிறார். குடும்பப் பிரச்சினைகள் ஒருபுறம் இருந்தாலும், தான் எடுத்துக்கொண்ட சமூகப் பணியைக் கைவிடவில்லை.


நகுலன்: அத்தை, மூன்று குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு, இவ்வளவு பெரிய இயக்கத்தையும் நடத்துவது எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும்!


ஜோ : நிச்சயமாக. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளும்

பொதுவாழ்க்கையில் எதிர்கொண்ட தடைகளும் ஒன்றுக்கொன்று சேர்ந்துகொண்டன. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காகப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து விலகியபின், மீண்டும் அந்தப் பணிக்குத் திரும்ப முயன்றபோது அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஒரு பெண்ணாகவும் விவாகரத்து செய்தவராகவும் இருந்த நிலைமை அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதாக அவர் கருதினார். உயர்கல்வி பெற்ற பேராசிரியராக இருந்தவர், தன்னுடைய வாழ்வாதாரத்திற்கே போராட வேண்டிய

நிலைக்குத் தள்ளப்பட்டார்.


ரதி: இவ்வளவு நடந்தும் அவர் ஏன் அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்தார் அத்தை?


ஜோ : அவருடைய நோக்கம் தனக்கான வெற்றி மட்டுமில்லை. மரங்கள்

அழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். பெண்களுக்குப் பொருளாதார வாய்ப்புகள் உருவாக வேண்டும். மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். அதற்காக அவர் தொடர்ந்து செயல்பட்டார். ஒரு கட்டத்தில், அவர் பணியாற்றிய அமைப்பின் அலுவலகத்தைக் காலி செய்யும்படி உத்தரவிடப்பட்டது. அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தே மேற்கொள்ள வேண்டிய சூழலும் ஏற்பட்டது.


நகுலன்: அத்தை, அப்படின்னா அவருடைய அலுவலகத்தைக்கூட இயங்க விடாமல் தடுத்தாங்களா?


ஜோ : ஆமாம். அவருடைய போராட்டங்கள் அரசியல் அதிகாரத்தில்

இருந்தவர்களுக்கு எதிராக அமைந்ததால், அவரையும் அவருடைய இயக்கத்தையும் பலவீனப்படுத்த முயற்சிகள் நடந்தன. பொதுவெளியில் பத்திரிகைகளில் அவரைப் பற்றிய அவதூறுகளும் பரப்பப்பட்டன. அவர் பலமுறை கைது செய்யப்பட்டார். போராட்டங்களின்போது தாக்குதல்களையும் சந்தித்தார். சில நேரங்களில் பாதுகாப்புக்காக இடம் மாறி இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. ஆனால் எந்தத் தடையும் அவருடைய நோக்கத்தை மாற்றவில்லை.


ரதி: பத்திரிகைகளில் அவரைப் பற்றி அவதூறு வந்தால் மனசு உடைந்திருக்குமே

அத்தை!


ஜோ : மனவேதனை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவற்றிலேயே அவர்

உடைந்துவிடவில்லை. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தினார். உஹுரு பூங்கா போன்ற பொது இடங்களைப் பாதுகாக்கவும், காடுகள் அழிக்கப்படுவதை எதிர்க்கவும் போராடினார். அவருடைய செயல்பாடுகள் மரங்களைப் பாதுகாப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஜனநாயக உரிமைகள், ஊழலுக்கு எதிரான குரல், மக்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பாதுகாப்பது என

விரிவடைந்தன.


நகுலன்: அத்தை, அவருக்கு அங்கீகாரமே கிடைக்கவில்லையா?


ஜோ : கிடைத்தன. விருதுகள் அவருடைய பணியை உலகம் கவனிக்க உதவின.

1984-ஆம் ஆண்டு ரைட் லைவ்லிஹுட் விருது உள்ளிட்ட பல அங்கீகாரங்கள்

கிடைத்தன. 2004-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. அந்த

அங்கீகாரத்தை அவர் தனிப்பட்ட பெருமையாக மட்டும் பார்க்கவில்லை. தன்னுடைய அமைப்பின் பணிகளை உலகத்துக்குக் கொண்டு செல்லவும், ஆதரவாளர்களையும் நிதியுதவியையும் ஈர்க்கவும் கிடைத்த வாய்ப்பாகப் பயன்படுத்தினார்.


ரதி: அதாவது, விருது கிடைச்சதும் தன்னுடைய புகழைப் பெருக்கிக்கிறதுக்கு மட்டும் பயன்படுத்தாமல், அந்த அமைப்பை வளர்க்க உதவணும்னு நினைச்சிருக்காங்க!


ஜோ : சரியாகச் சொன்னே. ஒரு விருது அவருடைய பணிக்கு அங்கீகாரம் அளித்தது. அதே நேரத்தில், அந்த அங்கீகாரம் கிரீன் பெல்ட் இயக்கத்துக்குக் கூடுதல் கவனத்தையும் ஆதரவையும் பெற்றுத்தர உதவியது. அவருடைய சிந்தனை தனக்கான புகழோடு முடிந்துவிடவில்லை. இன்னும் பல பெண்களுக்குப் பயிற்சி அளிக்கவும், இன்னும் பல மரங்களை வளர்க்கவும், இயக்கத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவும் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தினார்.


நகுலன்: அத்தை, அப்படின்னா அவருக்கு நோபல் பரிசு கிடைத்ததற்குக் காரணம்

மரங்களை நட்டது மட்டும் இல்லையா?


ஜோ : இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி, ஜனநாயகம்

ஆகியவற்றுக்கான அவருடைய பங்களிப்பை அங்கீகரித்தே 2004-ஆம் ஆண்டு

நோபல் பரிசு வழங்கப்பட்டது. இயற்கையைப் பாதுகாப்பதும் மக்களின்

உரிமைகளைப் பாதுகாப்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதை அவர் உலகுக்கு உணர்த்தினார். பின்னர் கென்யாவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான துணை அமைச்சராகவும் பணியாற்றினார்.


ரதி: அத்தை, அவர் எழுதிய புத்தகத்தில் இந்தப் போராட்டங்களைப் பற்றியெல்லாம் இருக்கிறதா?


ஜோ : இருக்கிறது. ‘Unbowed: A Memoir’ என்ற தன்வரலாற்று நூலில், அவருடைய

குழந்தைப் பருவம், கல்வி, குடும்ப வாழ்க்கை, பேராசிரியர் பணியில் ஏற்பட்ட

சிக்கல்கள், அரசியல் எதிர்ப்புகள், சிறைவாச அனுபவங்கள், கிரீன் பெல்ட்

இயக்கத்தின் வளர்ச்சி எனப் பலவற்றை எழுதியிருக்கிறார். அவருடைய

வாழ்க்கையைப் படிக்கும்போது, ஒரு சமூக இயக்கத்தை உருவாக்குவதற்கு நல்ல எண்ணம் மட்டும் போதாது தொடர்ந்து உழைக்கிற மனவலிமையும் தேவை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.


நகுலன்: அத்தை, இப்போ நம்ம ஊர்ல மரம் நடும் விழா நடந்தா, நாமும் அதைப்

பராமரிக்க வேண்டிய பொறுப்பை எடுத்துக்கணும். அதோடு மரங்கள்

அழிக்கப்படுவதற்கான காரணங்களையும் கேள்வி கேட்கணும்.


ரதி: நானும் அதைத்தான் நினைக்கிறேன். ஒரு மரக்கன்றை நட்டுட்டு புகைப்படம்

எடுத்துக்கிறதோட நம்ம வேலை முடிஞ்சிடக் கூடாது. அது வளர்கிற வரைக்கும் பார்த்துக்கணும்.


ஜோ : வங்காரி மாத்தாயின் வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுப்பது அதைவிடப் பெரிய பாடம். குடும்பப் பிரச்சினைகள், பணியிட எதிர்ப்புகள், அவதூறுகள், கைது என எத்தனை தடைகள் வந்தாலும், தான் நம்பிய நல்ல நோக்கத்தைக் கைவிடவில்லை. ஒரு பெண்ணாகத் தன்னைத் தாழ்த்திப் பார்க்க முயன்ற சூழல்களையும் தாண்டி, பல பெண்களை ஒன்றிணைத்து உலகம் கவனிக்கும் இயக்கத்தை உருவாக்கினார். அவர் 2011-ஆம் ஆண்டு மறைந்தாலும், அவர் தொடங்கிய இயக்கமும் அவர் விதைத்த சிந்தனைகளும் தொடர்ந்து பயணிக்கின்றன.


நகுலன்: அத்தை, ஒரு பெண் தனியாக ஒரு மாற்றத்தைத் தொடங்கலாம். ஆனால் அந்த மாற்றம் பலருடைய பங்களிப்பாக மாறும்போது அது பெரிய இயக்கமாக மாறுது.வங்காரி மாத்தாய் அதைத்தான் செய்து காட்டியிருக்காங்க.


ஜோ : ஆமாம். ஒரு மரக்கன்று வளர்வதற்கு மண்ணும் நீரும் தேவை. ஒரு நல்ல

சிந்தனை வளர்வதற்கு நம்பிக்கையும் உழைப்பும் தேவை. வங்காரி மாத்தாய் ஒருமரக்கன்றை மட்டும் நடவில்லை. ஆயிரக்கணக்கான பெண்களின் மனதில் மாற்றத்துக்கான விதையையும் விதைத்தார். அந்த விதைகள் இன்றும்

வளர்ந்துகொண்டிருக்கின்றன.


நகுலன் : இனிமேல், நாங்கள் நட்ட மரங்களை எங்கள் வாழ்நாள் முழுவதும்

பாதுகாப்போம். அப்படித்தானே ரதி?


ரதி: நிச்சயமாக!


சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.

1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட

 பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.

த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page