top of page

அறிவோம் ஆளுமை -17 : மணலூர் மணியம்மா


நகுலன்: அத்தை, இன்னைக்கு சிலம்பப் பள்ளிக்குத்தானே போறோம்?


ஜோ: ஆமாம். சிறுவயதில் நான் குங்பூ  கற்று இருக்கிறேன். இன்றிலிருந்து நீங்கள் இருவரும் சிலம்பப் பள்ளிக்குச் சென்று சிலம்பம் கற்றுக் கொள்ளுங்கள். 


நகுலன் : பெரிய சாதனை செய்து இருக்கிறீர்கள் அத்தை.  அந்தக் காலத்திலேயே நீங்கள் குங்ஃபூ  எல்லாம் கற்று இருக்கிறீர்கள்! 


ஜோ: இதெல்லாம் சாதனை இல்லை. சுதந்திரப் போராட்ட காலத்திலேயே பெண்கள் சிலம்பம் கற்று இருக்கிறார்கள். 


ரதி : தெரியும் அத்தை. வேலுநாச்சியாரைத் தானே கூறுகிறீர்கள்?


ஜோ: அவரும்தான். வேறொருவரும் இருக்கிறார்.


ரதி: அப்படியா!  அவங்க யாருங்க அத்தை?


ஜோ: அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமென்றால், முதலில் அவர் வாழ்ந்த காலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  அவரை  எதிர்த்து நின்ற சமூகத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.


ரதி: சரி அத்தை. சொல்லுங்க.


ஜோ: பெண்கள் இயற்கையாகவே ஆளுமைப் பண்பு கொண்டவர்கள். மனித இனம் தோன்றிய காலத்திலும், அதற்கு முற்பட்ட விலங்காகத் திரிந்த காலத்திலும் பெண்களே பல குழுக்களை வழிநடத்தி இருக்கிறார்கள் என்று மானுடவியல்  ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் நாகரிகம் வளர்ந்த பிறகும், பெண்கள் எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு இணையாகத் திறமையானவர்களாக வளர்ந்த பிறகும், பெண்களைத் தலைமைப் பொறுப்பில் கொண்டுவருவதில் இன்னும் தயக்கம் இருக்கிறது.


நகுலன்: ஏன் அத்தை?


ஜோ: சமூகமே உருவாக்கிய சில கற்பிதங்கள். பெண் இப்படித்தான் இருக்க வேண்டும்.‌ பெண் இப்படித்தான் உடை அணிய வேண்டும். பெண் இதைத் தான் செய்ய வேண்டும் என்று காலம் காலமாகச் சொல்லப்பட்ட கருத்துகள்.


ரதி:  அதை எல்லாம் தகர்த்த பல ஆளுமைகளைப் பற்றி நாம் பேசியிருக்கிறோமே..அத்தை..  நீங்கள் இப்போது கூறப்போகும் ஆளுமையும்  அப்படிப்பட்டவர் தானா அத்தை?


ஜோ: ஆமாம், சிலருடைய  வாழ்க்கையே போராட்டமாக மாறியிருக்கிறது... அப்படிப்பட்ட ஒரு வீரமங்கைதான் மணலூர் மணியம்மா.


நகுலன்: அவர் என்ன செய்தார் அத்தை?


ஜோ: நாகைப் பகுதியில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தை முதன்முதலில் உருவாக்கியவர்களில் முக்கியமானவர். ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகத் தீவிரமாகப் போராடியவர்.


ரதி: அந்தக் காலத்தில்  ஒரு பெண் விவசாயத் தொழிலாளர்களுக்காகப் போராடினாரா?


ஜோ: அதுதான் மணியம்மாவின் தனிச்சிறப்பு. அவர் பெண்களுக்காக மட்டுமல்ல. சாதி, வர்க்கம், வறுமை, உழைப்புச் சுரண்டல் என்று ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்காகப் போராடினார். சமத்துவத்துக்காகப் போராடினார்.


நகுலன்: அவர் எப்படி இருப்பார்?


ஜோ: அவருடைய தோற்றமே அந்தக் காலத்தில் மாற்றத்தின் அடையாளமாக இருந்தது. மேல்பாக்கெட் வைத்த ஜிப்பாவைப் போன்ற ஒரு உடையைத் தானே வடிவமைத்து அணிந்துகொள்வார். தோளில் துண்டு. கதர் வேட்டி. ஆண்களைப் போல கிராப் வெட்டிய தலை. தோளில் ஒரு பை. காலில் செருப்பு. கையில் குடை. அந்தக் குடைக்குள் தன்னுடைய பாதுகாப்புக்காக ஒரு குறுவாளையும் வைத்திருப்பார்.


நகுலன்: குடைக்குள்ளேயா?


ஜோ: ஆமாம்.


நகுலன்: குடை மழைக்காகவா, குறுவாளுக்காகவா?


ரதி: இரண்டுக்கும் போல!


ஜோ: மழைக்கு குடை. தேவையானால் தற்காப்புக்கு குறுவாள்!


ரதி: கிராப் வெட்டிக்கொண்டு ஆண்கள் போல் உடை அணிவதெல்லாம் பெரிய விஷயமா அத்தை? இப்போது நிறையப் பேர் அப்படித்தானே இருக்கிறார்கள்? 



ஜோ: அந்தக் காலம் வேறு இந்த காலம் வேறு அந்த காலத்தில்  பெண்கள் அப்படி தன் உடையை  மாற்றிக் கொள்ள முடியை வெட்டிக்கொள்ள மிகப்பெரிய தைரியம் வேண்டும்.  இன்னும் கேளு. ஒற்றைக் காளை பூட்டிய வண்டியையும் அவரே ஓட்டிச் செல்வார்.


ரதி: வாவ்! 


நகுலன் : அப்போது பெண்கள் வண்டி ஓட்ட முடியாதா?


ஜோ: வீட்டை விட்டு வெளியே வரவே அனுமதி வேண்டும்.  அப்படி என்றால் வண்டி ஓட்டுவது எல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது… அப்படிப் பட்ட காலத்தில் தான் அவர் வண்டி ஓட்டினார்…அது மட்டுமல்ல.. அவர் கீழத்தஞ்சை முழுவதும் நிலவுடைமையாளர்களுக்கு சிம்மசொப்பனமாகவும், ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு தோழமையின் அடையாளமாகவும் இருந்தார்.


நகுலன்: அத்தை, அவருடைய உண்மையான பெயர் மணியம்மாவா?


ஜோ: இல்லை. அவருடைய இயற்பெயர் வாலாம்பாள். மணி என்பது செல்லப்பெயர். பின்னாளில் அதுவே மணியம்மா என்ற பெயராக நிலைத்துவிட்டது.


ரதி: என் பெயர் ரதி தான். ஆனால் வீட்டில் பாப்பா என்றும் குட்டி என்றும் செல்லமாக அழைக்கிறார்கள் அதுபோல! 


ஜோ: ஹ ஹ ஹ அது போல தான்.  


நகுலன்: சிறுவயதிலேயே நிறைய படித்திருப்பாரோ? 


ஜோ: இல்லை. சனாதனமான பிராமணக் குடும்பத்தில், மூன்றாம் தாரத்தின் பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தார். அவருக்குப் பத்து வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.


ரதி: பத்து வயதிலேயே?


ஜோ: ஆமாம். நாகையைச் சேர்ந்த செல்வந்தரும் வழக்கறிஞருமான குஞ்சிதபாதத்துக்கு இரண்டாம் தாரமாக பால்ய விவாகம் செய்து வைக்கப்பட்டார்.


நகுலன்: பத்து வயது குழந்தைக்கு திருமணம்? இப்போது நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கு..! 


ஜோ: ஆமாமா!. அப்போது  குழந்தைத் திருமணம் சாதாரணமாக நடைமுறையில் இருந்தது. பெண்களின் வாழ்க்கை அவர்களுடைய விருப்பப்படி அமையவில்லை.


ரதி: அப்படியென்றால் மணியம்மாவின் வாழ்க்கை எப்படி மாறியது?


ஜோ: திருமண வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த முக்கியமான ஒன்று ஆங்கிலக் கல்வி. கிறித்துவ திருச்சபையைச் சேர்ந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி அவருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார்.


நகுலன்: ஆங்கிலம் கற்றுக்கொண்டதாலேயே அவர் போராளியாக மாறிவிட்டாரா?


ஜோ: ஆங்கிலம் என்பது ஒரு மொழி அவ்வளவுதான். ஆங்கிலக் கல்வி மட்டும் காரணமல்ல. அந்தப் பெண்மணி அவரிடம் பல கேள்விகளை எழுப்பினார். சீர்திருத்தக் கருத்துகளையும் அறிமுகப்படுத்தினார். சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் கற்றுக்கொடுத்தார்.


ரதி: அதுதான் அவருடைய மாற்றத்துக்குக் காரணமா?


ஜோ: ஆமாம் ரதி.  கல்வி என்பது எண்ணையும் எழுத்தையும் தெரிந்து கொள்வதல்ல... ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று கேள்வி  கேட்க வைப்பதும் கல்வியின் பணி தான்.. 


நகுலன்: பிறகு என்ன நடந்தது?


ஜோ: தனது 27-வது வயதில் மணியம்மா கணவரை இழந்தார். அதன் பிறகு மணலூரில் இருந்த தாய் வீட்டுக்குத் திரும்பினார்.


ரதி: அப்போது விதவைகளுக்கு மொட்டை அடித்து விடுவார்களே? 


ஜோ: ஆமாம். மிகவும் கொடுமையானது. மணியம்மாவும் ஒரு சராசரி பிராமண விதவைப் பெண்ணைப் போல மொட்டை அடித்து, எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.


நகுலன்: அவர் எப்படி அதிலிருந்து வெளியே வந்தார்?


ஜோ: அவர் கற்ற ஆங்கிலமும், சீர்திருத்தக் கருத்துகளும் அவரை அமைதியாக இருக்க விடவில்லை. எல்லாவற்றையும் கேள்வி கேட்கத் தொடங்கினார்.

அப்போது காந்தியடிகள் தஞ்சைக்கு வந்திருந்தார். உறவினர் ஒருவரின் மூலம் காந்தியைக் காணச் சென்றார். அந்தச் சந்திப்பு அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.


நகுலன்:  அரசியலில் இறங்கினாரா?


ஜோ:  ஆமாம் ஒருமுறை காந்தியைச் சந்தித்தார்.அந்தச் சந்திப்பு அவரை முழுநேர அரசியல் பணிக்குள் இழுத்துச் சென்றது. சமூகத்தையும் அரசியலையும் வேறொரு பார்வையில் பார்க்கத் தொடங்கினார்.


ரதி: அதன்பிறகுதான்  அவர் தன் தோற்றத்தை  மாறினாரா?


ஜோ: முதலில் மொட்டைத் தலையை மாற்றி கிராப் வைத்துக்கொண்டார். புடவைக்குப் பதிலாக ஆண்கள் அணியும் வேட்டி, அரைக்கை ஜிப்பா போன்ற உடைகளை அணியத் தொடங்கினார். செருப்பு அணிந்தார். குடை எடுத்துக்கொண்டார்.


நகுலன்: அதாவது அவர் ஆணுடைகளுக்கு  மாறியது ஒரு சமூக எதிர்ப்பு தான் இல்லையா அத்தை?


ஜோ: ஆமாம். நான் பெண் என்பதற்காக என் உடையையும் வாழ்க்கையையும் மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது என்ற சுயமரியாதையின் வெளிப்பாடாக அது இருந்தது.


ரதி: அந்தக் காலத்தில் இதை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா?


ஜோ:  எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? சனாதனவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் மணியம்மா யாருடைய எதிர்ப்பையும் பொருட்படுத்தவில்லை. தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். காங்கிரஸின் முக்கியமான கொள்கைகளில் மதுவிலக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சேவையும் இருந்தன. ஆனால் அந்தக் கொள்கைகளைப் பேசிக்கொண்டிருந்தவர்களே அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை என்பதை மணியம்மா பார்த்தார்.


ரதி:  அதற்கு அவர் என்ன செய்தார்?


ஜோ: தாழ்த்தப்பட்ட  மக்களோடு நெருக்கமாகப் பழகினார். அவர்களின் வாழ்க்கையை நேரில் அறிந்தார். விவசாயத் தொழிலாளர்களின் கூலி பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளில் தலையிட்டார்.

தன்னுடைய சொந்த நிலத்தில் பணியாற்றிய ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு முறையான கூலி கொடுக்கத் தொடங்கினார். அவர்களைப் பாதுகாத்தார்.


ரதி: அதை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்களே?


ஜோ: அவர்கள் தொழிலாளர்களைச் சுரண்டிக்கொண்டிருந்த சூழலில் மணியம்மா நியாயமான கூலி கொடுத்தது அவர்களுக்கு இடையூறாக இருந்தது. அதனால் அவருக்குத் தொடர்ந்து தொல்லைகள் கொடுக்கத் தொடங்கினார்கள்.

ஒரு கட்டத்தில் தனது நிலங்களையும் வீட்டையும் இழந்தார். சிறிய வாடகை வீட்டில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


ரதி: அப்படியும் கூட தொடர்ந்து போராடினாரா? 


ஜோ: ஆமாம். அந்த நேரத்தில் பொதுவுடைமை இயக்கம் அவரை ஈர்த்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

 கீழத்தஞ்சை விவசாயத் தொழிலாளர்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தீவிரமாகப் பணியாற்றினார்.

 கீழத்தஞ்சை பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி மணியம்மா கட்சி அல்லது மணியம்மாவின் செங்கொடி கட்சி என்று மக்கள் மத்தியில் அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.


ரதி: அவ்வளவு பெரிய செல்வாக்கா?


ஜோ: ஆமாம். விவசாயத் தொழிலாளர்களை அணி திரட்டுவதிலும், போராட்டங்களுக்கு அழைத்துச் செல்வதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார். தொழிற்சங்கங்கள் உருவாக்குவதிலும், விவசாய மாநாடுகள், பேரணிகள் நடத்துவதிலும் தீவிரமாகச் செயல்பட்டார்.


நகுலன்: அது சரி சிலம்பம் எதற்குக் கற்றார்?


ஜோ: தற்காப்புக்காக சிலம்பம் கற்றுக்கொண்டார். சைக்கிள் ஓட்டவும் தானே கற்றுக்கொண்டார்.


ரதி: அந்தக் காலத்தில் ஒரு பெண் தனியாக சைக்கிள் ஓட்டுவது  பெரிய விஷயம்தானே?


ஜோ: ஆமாம். தன்னுடைய பயணங்களுக்காகச் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டார். யாரையும் சார்ந்து இருக்காமல் தன் வேலைகளைத் தானே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.


ரதி: அவர் சிறைக்குச் சென்று இருக்கிறாரா?


ஜோ: ஆமாம். அவரது காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. பல முன்னணி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மணியம்மாவும் கைது செய்யப்பட்டு கடலூர், வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார்.


நகுலன்:  கேட்கவே பிரமிப்பாக இருக்கிறது அத்தை. அவரின் இறப்பு எப்படி ஏற்பட்டது?


ஜோ:   பூந்தாழங்குடி என்ற கிராமத்திலிருந்து ஒரு பண்ணை விவகாரத்தைத் தீர்க்க மணியம்மாவை அழைத்தனர். விவசாயத் தொழிலாளர்களுக்காகப் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, விவசாயிகள் விட்டுக்கொடுக்காமல் தங்கள் உரிமைக்காகப் போராட வேண்டும் என்று உரையாற்றினார்.  அங்கிருந்து திருவாரூர் செல்லப் பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் அங்கே ஒரு பண்ணையாரின் வளர்ப்பு விலங்காக  இருந்த ஒரு கலைமான் பாய்ந்து வந்து அவரைத் தாக்கியது. அதில் மணியம்மா உயிரிழந்தார் என்று அரசு ஆவணங்கள் கூறுகின்றன.


நகுலன்: அரசு ஆவணங்கள் கூறுகிறது என்கிறீர்கள்.  உண்மையில் நடந்தது என்ன அத்தை?


ஜோ: அதுதான் இன்றுவரை தெளிவாகத் தீர்க்கப்படாத கேள்வி.


ரதி: வேறு கருத்தும் இருக்கிறதா?


ஜோ: இருக்கிறது. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் 1980களில் பாதையில் பதிந்த அடிகள் என்ற நாவலுக்காக கள ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்கள் இந்த மரணம் விபத்து அல்ல, திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.


நகுலன்: அந்தத் தகவல் யாரிடமிருந்து கிடைத்தது?


ஜோ: பிணவாசலைச் சேர்ந்த நாகப்பன் என்ற விவசாயி கிடைத்த தகவல்.  ஒரு பண்ணையார் கலைமானை வளர்த்துக்கொண்டிருந்ததாகவும் அந்த மானைப் பராமரித்த ஒரு பையன் அதன் மூக்கில் குச்சியை நுழைத்து அதை வெறியேற்றி மணியம்மா நடந்து வந்த திசையில் ஏவியதைத் தாம் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.


ரதி: அப்படியென்றால் அது திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று கருதுகிறார்களா?


ஜோ: ஆம். ஆனால் அந்தப் படுகொலை இதுவரை உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. அரசு ஆவணங்களில் அது மான் தாக்கிய விபத்து என்றே உள்ளது.


நகுலன்: இவ்வளவு பெரிய வாழ்க்கை வாழ்ந்த ஒருவரைப் பற்றி  வெளியில் ஏன் தெரியவில்லை?


ஜோ: அதுதான் நாம் சிந்திக்க வேண்டிய கேள்வி. குறிப்பாக கட்சி அரசியலின் வரலாற்றை ஆண்மைய மையமாகப் பதிவு செய்தபோது, பெண்களின் பங்களிப்பு பல நேரங்களில் இருட்டடிப்புக்குள்ளானது.


ரதி: மணியம்மாவை அந்த மக்கள் கூட மறந்து விட்டார்களா?


ஜோ: இல்லை. படிக்கத் தெரியாத ஏழை எளிய விவசாய மக்கள்கூட அவருடைய பெயரை நாட்டுப்புறப் பாடல்களில் தலைமுறைகளாகப் பாடி வந்திருக்கிறார்கள்.


நகுலன்: என்ன பாடல்?


ஜோ: மணியம்மாவைப் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களில், அவர் கொடியைப் பிடித்துக்கொண்டு வந்து அநியாயத்துக்கு எதிராகக் கேள்வி கேட்பவர், ஏழை மக்களின் வாழ்க்கையை வளப்படுத்த வந்தவர் என்ற உணர்வு வெளிப்படும்.


ரதி: அதாவது புத்தகங்களில் இல்லாவிட்டாலும் மக்களின் நினைவில் இருக்கிறாரே?


ஜோ: சரியாகச் சொன்னாய். வரலாறு புத்தகங்களில் மட்டும் இருப்பதில்லை. மக்களின் நினைவிலும், பாடல்களிலும், போராட்டங்களிலும் இருக்கிறது.


நகுலன்: அத்தை, மணியம்மாவைப் பற்றி கேட்ட பிறகு ஒரு விஷயம் புரிகிறது.


ஜோ: என்ன?


நகுலன்: சிலம்பம் கற்றுக்கொள்வது தற்காப்புக்காக மட்டும் இல்லை போல.


ரதி: ஆமாம். தன்னம்பிக்கைக்கும்.


ஜோ: அதுதான். மணியம்மா சிலம்பம் கற்றது மட்டும் முக்கியமல்ல. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் தீர்மானிப்பேன் என்ற சுயமரியாதையோடு வாழ்ந்தது முக்கியம்.


ரதி: பத்து வயதில் திருமணம். 27 வயதில் கணவர் இறப்பு. அதன்பிறகு கல்வி, கேள்வி, அரசியல், விவசாயத் தொழிலாளர்களின் உரிமை, சிறை, போராட்டம்... இவ்வளவு மாற்றமா?


ஜோ: ஆமாம். ஒரு மனிதரின் வாழ்க்கை அவருக்குக் கிடைத்த சூழ்நிலையால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. அந்தச் சூழ்நிலையை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதும் முக்கியம்.


நகுலன்: அப்படியென்றால் மணியம்மாவின் மிகப்பெரிய ஆயுதம் என்ன?


ஜோ: கேள்வி கேட்கும் துணிவு. சுயமரியாதை. உழைக்கும் மக்களுடன் நிற்கும் மனம். அநியாயத்தை எதிர்க்கும் தைரியம்.


நகுலன்: அத்தை, ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்த பெண், பத்து வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்,  இளம் வயதில் விதவையான பெண், அதற்குப் பிறகு ஒரு போராளியாக மாறியிருக்கிறார்.


ஜோ: அதுதான் மணலூர் மணியம்மாவின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் மிகப்பெரிய செய்தி.


ரதி: என்ன செய்தி?


ஜோ: ஒரு பெண்ணின் வாழ்க்கையை அவள் பிறந்த குடும்பம் தீர்மானிக்க வேண்டியதில்லை. அவள் மீது சமூகம் கட்டிய கற்பிதங்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை. அவளுடைய கேள்விகளும், சிந்தனையும், செயல்களும் அவளுடைய வாழ்க்கையை மாற்ற முடியும்.


நகுலன்: அப்படியென்றால் நம்மைச் சுற்றியிருக்கும் பெண்களிலும் அப்படிப்பட்ட போராளிகள் இருக்க முடியுமா?


ஜோ: ஏன் முடியாது? நம் வீட்டில் இருக்கும் பெண்களிலும், பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களிலும், அலுவலகத்தில் இருக்கும் சக தோழிகளிலும், நம்மைச் சுற்றியிருக்கும் ஒவ்வொரு பெண்ணிடமும் பெரும் ஆளுமை இருக்கலாம்.


ரதி: அந்த ஆளுமையை வெளிப்படுத்த என்ன செய்ய வேண்டும்?


ஜோ: முதலில் அவர்களைத் தடுக்காமல் இருக்க வேண்டும்.

பெண்களுக்குள் இருக்கும் போராளி வெளியே வரும்போது, ஆண்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்.


தி: என்ன?


ஜோ: குறுக்கே நிற்காமல் இருப்பது.


நகுலன்: ரதி இப்போ சிலம்பம் கத்துக்கறதுக்கு ரெடியா?


ரதி:  ரெடி.


நகுலன்: ஆனால் ஒரு விஷயம்...


ரதி: என்ன?


நகுலன்: குடைக்குள்ள குறுவாள் வைக்க வேண்டாம்!


ஜோ: மணியம்மாவைப் புரிந்துகொண்டால், குறுவாளைத் தேட வேண்டிய அவசியமே இல்லாமல் தைரியமாக வாழக் கற்றுக்கொள்வாய்.


ரதி, நகுலன்: நன்றி அத்தை!


சரிதா ஜோ
சரிதா ஜோ

சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.

1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும்,

100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.

த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page