top of page

அறிவோம் ஆளுமை -18 : தீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - விடுதலைக் கனவு

8 hours ago
3 min read

ரதி: ஜோ அத்தை, இன்று யாரைப் பற்றி பேசப் போறோம்?


ஜோ : உங்களுக்குப் பிடித்த ஒரு வீரத் தலைவரைப் பற்றி.


நகுலன்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்! சரியாங்க அத்தை


ஜோ : மிகச்சரி! நேதாஜி என்றால் உங்களுக்கு முதலில் என்ன நினைவுக்கு

வருகிறது?


ரதி: சுதந்திரப் போராட்டம்!


நகுலன்: இந்திய தேசிய ராணுவம்!


ரதி: “ஜெய் ஹிந்த்!”


ஜோ : அருமை! ஆனால் அந்த மூன்று வார்த்தைகளுக்குப் பின்னால் ஒரு பெரிய

வாழ்க்கை இருக்கிறது.


நகுலன்: அவர் எப்போது எங்கு பிறந்தார்?


ஜோ: 1897 ஜனவரி 23-ஆம் தேதி, ஒடிசாவில் உள்ள கட்டாக்கில் பிறந்தார்.

அவருடைய பெற்றோர் ஜானகிநாத் போஸ், பிரபாவதி தேவி.


ரதி: அவர் சிறுவயதில் எப்படி இருந்தாராம்?


ஜோ: படிப்பில் மிகவும் ஆர்வமுள்ள குழந்தையாக இருந்தார். கட்டாக்கில் உள்ள

ரேவன்ஷா கல்லூரியேட் பள்ளியில் படித்தார். அவருடைய ஆசிரியர் வேணி மாதவ் தாஸ் அவருடைய சிந்தனை வளர்ச்சியில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தினார்.


நகுலன்: அப்பவே நாட்டைப் பற்றி சிந்திக்க ஆரம்பிச்சுட்டாரா?


ஜோ: சிறுவயதிலேயே ஆன்மிகம், ஒழுக்கம், நல்ல சிந்தனைகள் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். பின்னாளில் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும் அவரை மிகவும் ஈர்த்தன.


ரதி: அப்புறம் அவர் நல்லா படிச்சாரா?


ஜோ: ஆம். நன்றாகப் படித்து, பின்னர் இங்கிலாந்து சென்று ஐ.சி.எஸ். தேர்விலும்

வெற்றி பெற்றார்.


நகுலன்: அப்படியென்றால் பெரிய அதிகாரியாக இருந்திருக்கலாமே?


ஜோ: இருந்திருக்கலாம். ஆனால் அவர் அந்தப் பதவியைத் துறந்துவிட்டு இந்தியா

திரும்பினார்.


ரதி: ஏன் அத்தை?


ஜோ : தன்னுடைய நாட்டை ஆட்சி செய்துகொண்டிருந்த பிரிட்டிஷ் அரசின் கீழ்

பணியாற்றுவதைவிட, நாட்டின் விடுதலைக்காகப் பணியாற்றுவதே முக்கியம் என்று அவர் நினைத்தார்.


நகுலன்: அவர் உடனே சுதந்திரப் போராட்டத்தில் சேர்ந்தாரா?


ஜோ : இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

காங்கிரஸ் தலைவர் சித்தரஞ்சன் தாஸ் அவருடைய முக்கிய அரசியல் வழிகாட்டியாக இருந்தார்.


ரதி: காந்தியடிகளுடன் அவர் இருந்தாரா?


ஜோ அத்தை: விடுதலை பெற இரண்டு வழிகளை அரசியல் கட்சிகள் கடைப்பிடித்தன. காந்தியின் அமைதிவழி சத்தியாகிரகம், அகிம்சை மற்றும் ஒத்துழையாமை ஆகியவை என்றால் நேதாஜி யுத்தத்தைத் தேர்ந்தெடுத்தார்.


நகுலன்: அதனால் அவர்களுக்குள் சண்டையா?


ஜோ : இல்லை. கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒருவரை ஒருவர் மதிக்க முடியும்.

இதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.


ரதி: நேதாஜி காங்கிரஸ் தலைவராக இருந்தாரா?


ஜோ : ஆம். 1938-லும் 1939-லும் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அவருடைய அரசியல் அணுகுமுறையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் காங்கிரஸ் தலைமையிலிருந்து விலகினார். பின்னர் ஃபார்வர்டு பிளாக் அமைப்பைத் தொடங்கினார்.


ரதி : நேதாஜி விடுதலைப் போராட்டத்தின் போது சிறைவாசம் சென்றாரா?


ஜோ : பலமுறை கைது செய்தார்கள். பின்னர் வீட்டுக்காவலிலும் வைத்தார்கள். 

1941-ல் வீட்டுக்காவலில் இருந்து தப்பித்து, ஆப்கானிஸ்தான் வழியாக ஐரோப்பாவை அடைந்தார்.


ரதி: அங்கே எதற்குச் சென்றார்?


ஜோ : இந்தியாவின் சுதந்திரத்திற்காக வெளிநாடுகளின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காக. அவர் ஜெர்மனியில் பெர்லினிலிருந்து “சுதந்திர இந்திய வானொலி ”மூலம் இந்தியர்களிடம் உரையாற்றினார்.1943-ல் கிழக்கு ஆசியாவுக்குச் சென்றார். அங்கே இந்திய தேசிய ராணுவத்தின் தலைமையை ஏற்றார்.


நகுலன்: இந்திய தேசிய ராணுவத்தை அவர்தான் ஆரம்பித்தாரா?


ஜோ : ஆரம்பத்திலேயே அவர்தான் உருவாக்கினார் என்று சொல்ல முடியாது.

மோகன் சிங், ராஷ் பிகாரி போஸ் போன்றோர் அதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்குவகித்தனர். பின்னர் நேதாஜி அதன் தலைமையை ஏற்று மிகப் பெரிய இயக்கமாக மாற்றினார்.


ரதி: அந்தப் படையில் பெண்களும் இருந்தார்களா?


ஜோ : நிச்சயமாக!


நகுலன்: பெண்களுக்கென்று தனிப்படை இருந்ததா?


ஜோ : ஆம். ராணி ஜான்சி ரெஜிமென்ட் என்ற பெண்கள் படைப்பிரிவு அமைக்கப்பட்டது.


ரதி: அதன் தலைவி யார்?


ஜோ : கேப்டன் லட்சுமி சேகல்.


நகுலன் : அவர் யார்?


ஜோ : மருத்துவராக இருந்தவர். பின்னர் நேதாஜியின் அழைப்பை ஏற்று இந்திய

தேசிய ராணுவத்தில் இணைந்து, பெண்கள் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கினார்.


ரதி‌ : அப்படியென்றால் பெண்களும் நாட்டுக்காகப் போராட முடியும் என்று நேதாஜி நம்பினாரா?


ஜோ : நிச்சயமாக. பெண்களும் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் சமமாகப்

பங்கேற்க வேண்டும் என்ற முற்போக்கு சிந்தனை அவரிடம் இருந்தது.


நகுலன்: அத்தை, “ஆசாத் ஹிந்த்” என்றால் என்ன?


ஜோ : “சுதந்திர இந்தியா” என்று பொருள்.1943-ல் சிங்கப்பூரில் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசை அறிவித்தார்.


நகுலன்: அவர் இந்தியாவுக்குள் வந்த ஆங்கிலேயர்களுடன் போரிட்டாரா?


ஜோ : இரண்டாம் உலக யுத்தத்தில் உலகையே அடிமைப்படுத்த விரும்பிய பாசிச

ஹிட்லரின் தலைமையிலான கூட்டணியில் சேர்ந்தார். அந்தக் கூட்டணியில் இருந்த ஜப்பானுடன் சேர்ந்து இந்திய தேசிய ராணுவப் படைகள் பர்மா வழியாக

இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளுக்குள் முன்னேறி பிரிட்டிஷ் படைகளுக்கு

எதிராகப் போரிட்டன.


ரதி: வெற்றி பெற்றார்களா?


ஜோ : இல்லை இரண்டாம் உலக யுத்தத்தில் ருஷ்யா, பிரிட்டன், அமெரிக்க நாடுகளின் நேட்டோ படை வெற்றி பெற்றது. INA பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


ரதி: அவருடைய முயற்சி என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது?


ஜோ : இந்தியர்கள் தங்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்தியும் போராடத் தயாராக இருந்தார்கள் என்பதை உலகுக்குக் காட்டியது. INA இந்தியர்களிடம் பெரும் தாக்கத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியது.


நகுலன்: “ஜெய் ஹிந்த்” என்ற முழக்கமும் நேதாஜியுடன் தொடர்புடையதுதானே?


ஜோ : ஆம். “ஜெய் ஹிந்த்” என்ற முழக்கம் அவரது இயக்கத்துடன் மிகவும் வலுவாக இணைந்தது. அதன் பொருள் இந்தியாவுக்கு வெற்றி!


ரதி: தமிழர்களும் நேதாஜியின் படையில் இருந்தார்களா?


ஜோ : ஆம். தென்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த தமிழர்கள் உட்பட பல இந்தியர்கள் INA-வுக்கு ஆதரவளித்தனர். தமிழர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.


நகுலன்: நேதாஜி தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறாரா?


ஜோ : ஆம். அவர் மதுரைக்கும் வந்திருக்கிறார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.


ரதி: அத்தை, நேதாஜி எப்படி இறந்தார்?


ஜோ : 1945 ஆகஸ்ட் 18-ஆம் தேதி விமான விபத்தில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது மரணம் குறித்து நீண்டகாலமாக பல சந்தேகங்களும் விசாரணைகளும் நடைபெற்றன.


நகுலன்: அதனால்தான் நேதாஜியின் மரணம் இன்னும் மர்மம் என்று சொல்கிறார்களா?


ஜோ : ஆம். அந்த விவகாரம் குறித்து பல ஆண்டுகளாக விவாதங்கள் இருந்தன.


ரதி: அத்தை, நேதாஜி வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் என்ன?


ஜோ : தனக்காக மட்டும் வாழாமல், நாட்டு விடுதலைக்காக போரிட்ட தன்னலமற்ற தியாகம்,அர்ப்பணிப்பு, தீரம் இவற்றை எனக்குப் பிடிக்கும்.


நகுலன்: எனக்கு அவர் பெண்களையும் போராட்டத்தில் இணைத்தது பிடிக்கும்.


ரதி: எனக்கு அவர் தோல்வியைக் கண்டு பயப்படாமல் முயற்சி செய்தது பிடிக்கும்.


நகுலன்: எனக்கு “ஜெய் ஹிந்த்!” பிடிக்கும்!


ஜோ : சரி. ஆனால் நேதாஜியை நினைவுகூர்வது “ஜெய் ஹிந்த்” என்று சொல்வதோடு முடிந்துவிடக் கூடாது.


ரதி: அப்புறம்?


ஜோ : துணிச்சலாக சிந்திக்க வேண்டும்.


நகுலன்: பொறுப்புடன் செயல்பட வேண்டும்.


ரதி: நம்முடைய நாட்டையும் மக்களையும் மதிக்க வேண்டும்.


ஜோ : அதுதான். நேதாஜியை ஒரு வரியில் சொல்லணும்னா  “சுதந்திரத்தை கனவு

கண்டதோடு நிற்காமல், அந்தக் கனவுக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த தலைவர்”


ரதி: ஜெய் ஹிந்த்!


நகுலன்: ஜெய் ஹிந்த்!


ஜோ : ஜெய் ஹிந்த்!


சரிதா ஜோ
சரிதா ஜோ

சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.

1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page