top of page

அறிவோம் ஆளுமை - 12

காலத்தால் அழியாத வீரமங்கை



நகுலன் : அத்தை… இன்று என்ன கதை சொல்லப் போறீங்க?


ஜோ : மழை பெய்து முடிந்த பின் அடிக்கிற குளிர்ந்த காற்று இதமா இருக்குது இல்லையா?


ரதி : ஆமாம் அத்தை! இந்த நேரத்துல புத்தகம் படிச்சுக்கிட்டு காபி குடிச்சா ரொம்ப நல்லா இருக்கும்.


ஜோ : இந்தப் புத்தகத்தில் இருக்கிற கதையைத் தான் இன்று நான் சொல்ல போறேன். இது ஒரு சாதாரணக் கதை இல்லை. இது ஒரு உண்மை வரலாறு. ஒரு பெண் எப்படி ஒரு பேரரசை எதிர்த்து போராடினாள் தெரியுமா?”


ரதி: பெண்ணா? யார் அத்தை?


நகுலன் : ஜான்சி ராணியா?


ஜோ : அவங்க பெயர் — வீரமங்கை வேலுநாச்சியார். 1730-ம் ஆண்டு இராமநாதபுரம் அருகிலுள்ள சக்கந்தி என்ற ஊரில் பிறந்தவர் வேலுநாச்சியார். அவருடைய தந்தை மன்னர் செல்லமுத்து சேதுபதி. தாய் முத்தாத்தாள் நாச்சியார். அரசர்கள் பொதுவாக ஆண் குழந்தையை எதிர்பார்ப்பார்கள். ஆனால் பெண் குழந்தை பிறந்தாலும், செல்லமுத்து சேதுபதி ஒருபோதும் வருந்தவில்லை.

‘என் மகள் ஒரு வீராங்கனை ஆக வேண்டும்’ என்று முடிவு செய்தார்.


நகுலன் : அப்படின்னா அவங்க சின்ன வயசிலேயே போர்க் கலை கற்றுக்கொண்டாங்களா?


ஜோ : ஆமாம். வாள்வீச்சு, சிலம்பம், அம்பு எய்துதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம்… எல்லாமே கற்றார்.

அதுவும் மட்டும் இல்லாமல், தமிழோடு சேர்த்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது, சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற பல மொழிகளையும் கற்றார்.

அவர் பத்து மொழிகள் தெரிந்த ஒரு பன்மொழிப் புலமைசாலி.


ரதி : அத்தை… அப்படியென்றால் அவங்க ரொம்ப புத்திசாலியா? அவங்க கல்யாணம் பண்ணிட்டாங்களா?


ஜோ : ஆம். வீரமும் அறிவும் சேர்ந்தவர்.

1746-ல் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் வேலுநாச்சியாரை திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு வேலுநாச்சியாரின் வீரமும் அறிவும் மிகவும் பிடித்திருந்தது.

அதனால் 16 வயதிலேயே வேலுநாச்சியாருக்கு ஒரு படையை ஒப்படைத்து தளபதியாக்கிப் பெருமைப்படுத்தினார்.


நகுலன் : அப்படின்னா அவங்க ராணி மட்டும் இல்ல, படைத்தலைவரும்தானே!


ஜோ : அப்படித்தான்.

அந்தக் காலத்தில் ஆற்காடு நவாப் முகம்மது அலி பல பாளையங்களை கைப்பற்ற முயன்றான். அவன் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து பல இடங்களை ஆட்சி செய்ய முயன்றான்.

ஒருநாள் நவாப் முத்து வடுகநாதரிடம் கப்பம் கேட்டு செய்தி அனுப்பினான்.

.


ரதி : மன்னர் என்ன சொன்னார்?


ஜோ : அவர் கோபமாக, ‘நவாப் எங்களுக்கு மன்னரா? சல்லிகாசு கூட கப்பம் கட்ட மாட்டேன்! என்றார்.

காளையார் கோவில் போர் 1772-ல் நவாபும் ஆங்கிலேய கும்பினி படைகளும் சேர்ந்து சிவகங்கை மீது தாக்குதல் நடத்தினர். ஒருநாள் இரவு காளையார் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த முத்து வடுகநாதரையும் அவரது மனைவி கௌரி நாச்சியாரையும் திடீரென தாக்கினர்.

பீரங்கிகளும் துப்பாக்கிகளும் இருந்ததால் கடும் போர் நடந்தது.

மன்னர் வீரமாகப் போரிட்டாலும் இறுதியில் வீரமரணம் அடைந்தார்.


நகுலன் : அத்தை… வேலுநாச்சியார் அப்போ என்ன செய்தார்?


ஜோ : கணவர் இறந்த செய்தி கேட்டதும் வேலுநாச்சியார் மிகவும் துயரப்பட்டார்.

ஆனால் அழுதபடி உட்காரவில்லை.

‘என் கணவரை கொன்றவர்களை பழிவாங்காமல் நான் அமைதியாக இருக்க மாட்டேன்!’ என்று சபதம் எடுத்தார்.


ரதி : அத்தை அவர் தனியாகவா போரிட்டார்?

ஜோ : மருது சகோதரர்கள் — பெரிய மருது, சின்ன மருது — அவருக்கு உதவினார்கள். வேலுநாச்சியார் தன் மகள் வெள்ளச்சி நாச்சியாருடன் திண்டுக்கல் அருகிலுள்ள விருப்பாட்சிக்கு சென்றார்.

அப்போது மைசூர் மன்னர் ஹைதர் அலி ஆங்கிலேயர்களை எதிர்த்தார்.

வேலுநாச்சியார் அவரிடம் உதவி கேட்க முடிவு செய்தார்.

ஒருநாள் மாறுவேடமிட்டு ஹைதர் அலியின் அரண்மனைக்கு சென்றார். அவர் உருது மொழியில் சரளமாக பேசினார். அதைப் பார்த்து ஹைதர் அலி ஆச்சரியப்பட்டார்.

‘ நான் உதவுகிறேன்’ என்று கூறி படைகளையும் ஆயுதங்களையும் கொடுத்தார்.‌

விருப்பாட்சியில் எட்டு ஆண்டுகள் தங்கி வேலுநாச்சியார் படைகளை திரட்டினார். மருது சகோதரர்களும் புதிய வீரர்களை சேர்த்தனர். இறுதியாக சிவகங்கையை மீட்க பெரிய படையுடன் புறப்பட்டார்கள்.


நகுலன் : இன்னொரு பெண்ணைக் கூடச் சொல்வார்களே அத்தை. அவர் பெயர் கூட குயிலி என்று நினைக்கிறேன்.


ஜோ : இந்த போரில் மிகவும் முக்கியமான ஒருவர் குயிலி.

அவர் வேலுநாச்சியாரின் நம்பிக்கையான பெண் வீராங்கனை.

ஒருநாள் குயிலி தன் உடலில் எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்குக்குள் குதித்தார்.

அதனால் அந்த ஆயுதங்கள் அனைத்தும் வெடித்து நாசமாகின.


ரதி : என்ன அவங்களே போய் விழுந்து செத்து போய்ட்டாங்களா?

அதைவிட பெரிய தியாகம் இருக்க முடியாதே!


ஜோ : ஆம். குயிலி இந்தியாவின் முதல் தற்கொலைப் படை வீராங்கனை என்று கூட சொல்லப்படுகிறார்.


நகுலன் : அத்தை ஒரு சந்தேகம். குயிலி கற்பனை கதாபாத்திரம் என்று என் அப்பா கூறினாரே! அது உண்மையான கதாபாத்திரமா கற்பனைக் கதாபாத்திரமா?


ஜோ : ஆய்வாளர்களில் சிலர் கற்பனை கதாபாத்திரம் என்றும் சிலர் உண்மைக் கதாபாத்திரம் என்றும் கூறுகிறார்கள். அது இன்னும் சரிவரத் தெரியவில்லை.


ரதி : எந்த வருஷம் ஆங்கிலேயரிடம் இருந்து சிவகங்கையை மீட்டார் அப்படி மீட்டதுக்கப்புறம் அவர் நாட்டுக்கு என்னவெல்லாம் செய்தார்?


ஜோ : 1780-ல் வேலுநாச்சியார் படைகள் சிவகங்கையை மீட்டனர்.

ஆங்கிலேயர்களின் கொடி இறக்கப்பட்டது.

அதற்கு பதிலாக வேலுநாச்சியாரின் கொடி ஏற்றப்பட்டது.

அவர் மீண்டும் சிவகங்கை அரசியாக ஆனார்.

அதன் பிறகு அவர் நல்ல ஆட்சியை நடத்தினார்.

குளங்கள் வெட்டினார்.

சாலைகள் அமைத்தார்.

விவசாயத்தை வளர்த்தார்.

அவர் மதச்சார்பற்ற ஆட்சி நடத்தினார்.

சர்ச்சும் மசூதியும் கட்ட அனுமதி கொடுத்தார்.


ரதி : அவருடைய மகள் வெள்ளச்சி என்ன ஆனார்?


ஜோ : ரதி எவ்வளவு கூர்ந்து கவனித்திருக்கிறாய் மகிழ்ச்சி. தனது மகள் வெள்ளச்சி நாச்சியாரை அரசியாக நியமித்தார்.

1796 டிசம்பர் 25-ஆம் தேதி வேலுநாச்சியார் மறைந்தார்.

ஆனால் அவர் செய்த வீரச் செயல்கள் இன்றும் வரலாற்றில் வாழ்கின்றன.


நகுலன் : அத்தை… அப்படின்னா ஜான்சி ராணிக்கு முன்னாடியே ஆங்கிலேயரை எதிர்த்த ராணி வேலுநாச்சியார்தானே?


ஜோ :அப்படித்தான் நகுல். ஜான்சி ராணி 1857-ல் போராடினார்.

ஆனால் வேலுநாச்சியார் அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து போராடினார்.


ரதி : அத்தை… நம்ம தமிழ்நாட்டில் இப்படி ஒரு வீரமங்கை இருந்திருக்கிறார் என்பது எவ்வளவு பெருமை!


ஜோ :வரலாறு சொல்லும் ஒரு பெரிய உண்மை என்ன தெரியுமா?

சில கதைகள் புத்தகங்களில் எழுதப்படாமல் போகலாம்.

ஆனால் உண்மையான வீரர்களின் பெயர் காலத்தால் அழியாது.வேலுநாச்சியாரின் வீரமும் வரலாற்றில் என்றும் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது.


ரதி : நானும் வேலு நாச்சியார் போல தைரியமான பெண்ணாக இருப்பேன்.


நகுலன்: அதற்கு நான் துணை நிற்பேன் ரதி.


சரிதா ஜோ
சரிதா ஜோ

சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.

1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும்,

100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.

த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page