அறிவோம் ஆளுமை – 11
- சரிதா ஜோ

- 3 days ago
- 4 min read
கல்வி தான் அமைதியின் சக்தி – மலாலா

ஜோ :-- குழந்தைகளே! இன்று நாம் உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு துணிச்சலான பெண் குழந்தையைப் பற்றி பேசப் போகிறோம். அவர் பெயர் மலாலா யூசுப் சாய்.
நகுலன்:-- நோபல் பரிசு வாங்கியவர் தானே?
ரதி: -- பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காககப் போராடியவர் தானே அவர்?
ஜோ:-- அவரேதான்! மலாலா 12 ஜூலை 1997 அன்று பாகிஸ்தான் நாட்டின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள மிஙோரா என்ற ஊரில் பிறந்தார். அவரது தந்தையின் பெயர் ஜியாவுத்தீன் யூசுப் சாய், தாயார் தூர் பேகை. அவரது தந்தை ஒரு ஆசிரியர். பெண்கள் படிக்க வேண்டும் என்று நம்பியவர். அதற்காகவே ஒரு பள்ளியையும் நடத்தினார். அவர் வாழ்ந்த சமூகத்தில் பெண் குழந்தை பிறந்தால் வருத்தப்படுவார்கள்.
ஆனால்… மலாலா பிறந்த போது மலாலாவின் அப்பா மிகவும் மகிழ்ந்தார்.
“இந்தக் குழந்தை சாதாரண குழந்தை இல்லை… ஒரு நாள் பெரிய மாற்றத்தை உருவாக்கப் போகிறாள்!” என்று கூறினார்.
அவர் குடும்ப மரத்தில் (Family Tree) பெண் குழந்தைகளின் பெயர் எழுதப்படுவதில்லை. மலாலாவின் பெயரை அவருடைய அப்பா பெருமையாக எழுதினார்.
நகுலன்:-- அது ரொம்ப அழகான விஷயம் அத்தை! மலாலா என்ன படித்திருக்கிறார்?
ஜோ --- மலாலாவுக்குச் சிறு வயதிலிருந்தே படிப்பில் ஆர்வம் அதிகம்.
எப்போதும் பள்ளியில் முதல் மாணவியாக இருப்பார். வாசிப்பதையும் பேசுவதையும் மிகவும் விரும்பினார்.
“புத்தகம் தான் எனக்கு சக்தி தரும் நண்பன்” என்று கூறுவார். இங்கிலாந்தில் உள்ள Birmingham நகரத்தில் பள்ளியில் படித்தார். பிறகு உலகப் புகழ்பெற்ற Oxford University-யில்
Philosophy, Politics, Economics போன்ற பாடங்களில் பட்டம் பெற்றார்.
ரதி : --- அத்தை! மலாலா நிறைய கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பாராமே?
ஜோ -- ஆமாம்! நீங்கள் என்னிடம் எத்தனை கேள்விகள் கேட்கிறீர்கள்! உங்களைப் போலவே தான் மலாலாவும்.
சிறு வயதிலிருந்தே தன் தந்தையிடம் நிறையக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பாராம். அவர் தந்தையும் அதற்குச் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டே இருப்பாராம்.
நகுலன்: -- என்ன மாதிரி கேள்விகள் அத்தை?
ஜோ :-- அவர் கேட்ட கேள்விகள் மிகவும் சிந்திக்க வைக்கும்.
“ஏன் குடும்ப மரத்தில் பெண்கள் பெயர் இல்லை?”
“ஏன் பெண்கள் பர்தா போட வேண்டும்?”
“ஏன் சில பெண்கள் பள்ளிக்குச் செல்ல முடியாது?”
“ஏன் பெண்கள் தனியாக வெளியே போகக் கூடாது?”
“நான் படிக்கிறேன்… ஆனால் வீதியில் இருக்கும் அந்த சிறுவன் ஏன் பிச்சை எடுக்கிறான்?”
“ஏன் சில குழந்தைகள் குப்பை பொறுக்குகிறார்கள்?”
இப்படித் தன்னைச் சுற்றி சமூகத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றிக் கேள்விகளைக் கேட்பாராம்.
ரதி : -- என்னுடன் படிக்கும் சஜினா மட்டும் பர்தா அணிந்து வருவாள். முகத்தை கூட காட்ட மாட்டார். எனக்கு அவளைப் பார்க்கும் போது பாவமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தில் படிக்க வரும் முதல் பெண் அவள் தான் என்று கூறினாள்.
அது மட்டுமல்ல பரம்பரையைப் பற்றிப் பேசும்போது அப்பா என் பாட்டியின் பெயரையோ அம்மாவின் பெயரையோ சொன்னதில்லை என்று சொன்னாள்.
இப்போது நானும் அதை யோசிக்கிறேன். பரம்பரையில் என் அம்மாவையும் பாட்டியையும் என்னையும் சேர்க்க வேண்டும் என்று நானும் அப்பாவிடம் சொல்லப் போகிறேன். இனிமேல் பரம்பரை என்று கூறும்போது நான் எல்லோரையும் சேர்த்து தான் சொல்வேன் அது சரி அத்தை. மலாலாவுக்கு எப்படி இவ்வளவு கேள்விகள் கேட்கும் அளவிற்கு தைரியம் வந்தது?
ஜோ-- ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருந்த அவர்களுடைய நகரத்தை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தபோது எல்லாமே மாறியது. தீவிரவாதிகள் தொலைக்காட்சி வைத்திருப்பது, இசை வாசிப்பது மற்றும் பெண்கள் படிப்பது போன்ற பல விஷயங்களைத் தடை செய்தனர். மேலும் தங்கள் உத்தரவுகளை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகளையும் விதித்தனர்.
மலாலாவின் தந்தை பெண்கள் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் நடத்தும் பள்ளியில் பெண் குழந்தைகளும் படித்தனர்.
ஆனால் தீவிரவாதிகள் பள்ளியை மூடச் சொல்லி மலாலாவின் தந்தையை அச்சுறுத்தினர். ஆனால் அவரோ பயப்படாமல் தொடர்ந்து பள்ளியை நடத்தினார். அவரின் துணிச்சல் மலாலாவுக்கும் வந்தது என்று நினைக்கிறேன்.
நகுலன் : அத்தை! மலாலாவை எதற்காகச் சுட்டார்கள்?
ஜோ -- ஒரு முறை BBC செய்தி நிறுவனம், “இங்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி ஒரு பெண் குழந்தை கட்டுரை எழுத வேண்டும்” என்று மலாலாவின் தந்தையிடம் கேட்டது.
முதலில் மலாலாவின் தந்தை ஆயிஷா என்ற மாணவியை முன்மொழிந்தார். ஆனால் அந்தக் குழந்தையின் குடும்பம் தீவிரவாதிகளுக்குப் பயந்து மறுத்துவிட்டது.
அப்போது ஒன்பது வயதான மலாலா எழுத முன்வந்தார்.
முதலில் அவள் “குல் மக்காய்” (Gul Makai) என்ற புனைபெயரில் எழுதினார். குல் மகாய் என்றால் சோளப்பூ என்று அர்த்தம்..
அந்தக் கட்டுரைகளில் அவர் பெண்கள் படிக்க முடியாத துயரத்தையும், அச்சத்தையும் எழுதினார். அந்த பள்ளத்தாக்கை தீவிரவாதிகள் ஆக்கிரமித்து எல்லோரையும் கொடுமைப்படுத்துவதைப் பற்றியும் எழுதினார்.
இது உலக நாடுகளில் மிகப்பெரும் பேசுபொருளாக மாறியது. தீவிரவாதிகள் அதை எழுதிக் கொண்டிருப்பது யார் என்று தேட ஆரம்பித்தார்கள்.
இந்த நேரத்தில் தான் கொஞ்சம் தைரியம் பெற்று தன் சொந்த பெயரிலேயே எழுதத் தொடங்கினார் மலாலா. அதை கண்டுபிடித்த தீவிரவாதிகள் ஒரு நாள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது பள்ளி வாகனத்திற்குள் உட்கார்ந்து இருந்த மலாலாவைச் சுட்டனர். அப்போது அவருக்கு வயது 15.
ஆனால்…மலாலா உயிர் தப்பினார். சிகிச்சை பெற்று மீண்டு எழுந்தார். ஸ்வார்ட் பள்ளத்தாக்கில் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்த “பெண்கள் படிக்க வேண்டும்” என்ற அவர் குரல் உலகம் முழுவதும் ஒலிக்க ஆரம்பித்தது.
2014 ஆம் ஆண்டு…அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 17. மிக இளைய வயதில் நோபல் பரிசு பெற்றவர் மலாலா..
ரதி : -- ஐ.நா. சபையில் மலாலா பேசினார் இல்லையா அத்தை?
ஜோ :-- ஆமாம். மிக முக்கியமான விஷயம் மலாலா தனது 16வது பிறந்த நாளில் ஐக்கிய நாடுகள் சபை மேடையில் (United Nations) பேசினார். அந்த நாள் உலகம் முழுவதும் “Malala Day” என்று கொண்டாடப்பட்டது.
அவர் அங்கு என்ன சொன்னார் தெரியுமா?
“என்னை தாக்கியவர்கள் என் குரலை மௌனமாக்க நினைத்தார்கள்.
ஆனால் அவர்களால் முடியவில்லை.”
“கல்வி தான் அமைதியின் சக்தி.”
“ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா… உலகத்தை மாற்ற முடியும்.”
அந்த உரையை கேட்ட பிறகு உலகம் முழுவதும் மக்கள் கண்ணீர் விட்டார்கள்… பெருமையோடு கைத்தட்டினார்கள்.
நகுலன் - தற்போது மலாலா என்ன செய்கிறார் அத்தை?
மலாலா தற்போது உலகம் முழுவதும் பெண்கள் கல்வி பெற வேண்டும் என்று வேலை செய்து வருகிறார்.
“Malala Fund” என்ற அமைப்பை தொடங்கி பல நாடுகளில் குழந்தைகளுக்கு உதவி செய்கிறார்.
அவர் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார். இப்போது எழுத்தாளர், சமூகப் போராளி, கல்வி உரிமை குரல் கொடுப்பவர் என்ற பன்முக செயல்பாட்டாளராக விளங்குகிறார். ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
பல நாடுகளில் பெண் குழந்தைகள் படிக்க உதவி செய்கிறார்.
அகதிகள், ஏழை குழந்தைகள், போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். இவர்களுக்காக கல்வி உதவித்திட்டங்கள் செய்கிறார்.
உலகத் தலைவர்களைச் சந்தித்து பெண் கல்வி உரிமை பற்றிப் பேசுகிறார். தனது வாழ்க்கையைப் பற்றி “I Am Malala” என்ற புத்தகமும் எழுதியுள்ளார்.
ரதி -- அவரைப் பார்க்க ஒரு போராளி மாதிரி இல்லையே அத்தை?
ஜோ : போராளி என்றால் ஆயுதம் ஏந்தித் தான் போராட வேண்டுமா? ஆயுதம் இல்லாமல் போராடும் கல்விப்போராளி அவர். மலாலா எப்போதும் கோபத்தோடு பேச மாட்டார்.
“நான் யாரையும் வெறுக்க மாட்டேன். என்னைக் காயப்படுத்தியவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும்.” என்று சொன்னார். அது தான் அவரின் உண்மையான பெருமை.
நகுலன்: நாமும் கேள்விகள் கேட்கணும்… படிக்கணும்… மற்றவர்களையும் படிக்க வைக்கணும்.
ஜோ : நகுலா! நீ சொல்வது சரிதான்தான்!
மலாலா நமக்குச் சொல்லும் பாடம் என்ன தெரியுமா?
பயப்படாமல் உண்மை பேச வேண்டும். கல்வி எல்லோருக்குமான உரிமை. ஒரு குழந்தையின் குரலும் உலகத்தை மாற்றும்.
மலாலா ஒரு பெரிய தலைவர் அல்ல…
ஒரு சாதாரணப் பெண் குழந்தை.
ஆனால் அவர் கேட்ட கேள்விகள், அவர் காட்டிய துணிவு, அவர் சொன்ன வார்த்தைகள் இன்று உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு நம்பிக்கை கொடுக்கிறது.
“படிக்க வேண்டும்” என்ற கனவு இருந்தால்…
அந்தக் கனவு உலகையே மாற்றும்!
ரதி, நகுலன் : ஆம்! கனவு காணுவோம்! உலகத்தையே மாற்றுவோம்!

சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.
1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும்,
100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.
த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.




வடிவ முறை, சிறப்பு. குழந்தைகளுக்கு இத்தகைய ஆளுமைகள் குறித்த அறிமுகங்கள் முக்கியமானவை. வாழ்த்துக்கள் சரிதா ஜோ