முன்னோடிகள் - வாண்டுமாமா
- அமிதா
- Apr 5
- 2 min read
Updated: Apr 6

வாண்டுமாமாவைக் கொண்டாடுவோம்!
அழ.வள்ளியப்பா என்றவுடன் சிறார் பாடல்கள் நம் நினைவுக்கு வரும். அதுபோல் வாண்டுமாமா என்றவுடன் சிறார் இலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளும் நம் நினைவுக்கு வருகிறது. சிறார்களுக்கு வாண்டுமாமா எழுதாத விஷயமே இல்லை எனச் சொல்லலாம்.
அவருடைய இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. கௌசிகன், விசாகன், சாந்தா மூர்த்தி எனப் பல பெயர்களில் அவர் எழுதியிருக்கிறார். இருந்தாலும், வாண்டுமாமா என்கிற பெயரே அவருடைய அடையாளமாக மாறியது. 50 ஆண்டுகளுக்கு மேல் சிறார் இலக்கியம் படைத்து, தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் ஒரு தனி உலகைப் படைத்தவர்.
'கோகுலம்' என்கிற சிறார் இதழை உங்கள் அப்பா, அம்மா அல்லது தாத்தா, பாட்டி வாசித்திருக்கலாம். அந்த இதழை வாண்டுமாமாவுக்காகவே கல்கி நிறுவனம் 1972இல் தொடங்கியது. தொடர்ந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். அதன் பின், 1984இல் 'பூந்தளிர்' என்கிற சிறார் இதழுக்கு வாண்டுமாமா ஆசிரியர் ஆனார். அந்த இதழ் தமிழ் சிறார் இதழியல் வரலாற்றில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதற்கு முதல் காரணம் அதில் இடம்பெற்ற ஆங்கில இதழான 'டிங்கிளி'ன் மொழிபெயர்ப்புப் படக்கதைகள். எஞ்சிய இதழை வாண்டுமாமாவின் எழுத்துத் திறமை சிறப்பாக்கியது.
கதைகள், சித்திரக்கதைகள், வரலாறு, அறிவியல், பொது அறிவு, சிறார் இதழியல் என சிறார் இலக்கியத்தில் வாண்டுமாமா தொடாத பகுதிகளே இல்லை. இந்தப் பிரிவுகளில் தனித்துவமான முத்திரையை அவர் பதித்திருக்கிறார். நிறைய புதுமை முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அவர் உருவாக்கிய பலே பாலு, சமத்து சாரு போன்ற கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமானவை.
தமிழில் சிறாருக்கான சித்திரக்கதைகளை அவர் அளவுக்கு வேறு யாரும் விரிவாகவும் சிறப்பாகவும் முயன்று பார்க்கவில்லை. ஓவியர் செல்லம், ராமு, வினு, கோபன் ஆகியோருடன் இணைந்து பல சித்திரக்கதைகளை அவர் உருவாக்கியிருக்கிறார். ‘கனவா, நிஜமா?', ‘ஓநாய்க்கோட்டை', ‘மர்ம மாளிகையில் பலே பாலு’, ‘கழுகு மனிதன் ஜடாயு’, ‘கரடிக் கோட்டை’ போன்ற சித்திரக்கதைகள் பிரபலமானவை.
‘குள்ளன் ஜக்கு’, ‘புலி வளர்த்த பிள்ளை’, ‘பலே பாலுவும் பறக்கும் டிராயரும்’ போன்ற கதைகள், நெடுங்கதைகள் குறிப்பிடத்தக்கவை. அவர் எழுதி வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்த பல கதைகள், மர்மம் நிறைந்தவையாகவும், குழந்தைகளின் துப்பறியும் ஆற்றலைத் தூண்டும் வகையிலும் அமைந்துள்ளன. ‘தோன்றியது எப்படி' (4 பாகங்கள்), ‘தெரியுமா, தெரியுமே’,‘தேதியும் சேதியும்’, ‘மருத்துவம் பிறந்த கதை', ‘நமது உடலின் மர்மங்கள்' ஆகியவை அவருடைய பிரபலமான பொது அறிவு / அடிப்படை மருத்துவ நூல்கள்.
150-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை குழந்தைகளுக்கானவை. தமிழின் சிறந்த சிறார் எழுத்தாளர்களில் ஒருவரை வேறு மொழிக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றால், அதில் முதல் வரிசைப் பெயராக வாண்டுமாமாவைச் சொல்லலாம். 1970 முதல் 2000 வரை தங்கள் குழந்தைப் பருவத்தைக் கழித்தவர்களின் உலகில் தவிர்க்க முடியாத பெயராக இருந்தது வாண்டுமாமா. 2014இல் 89 வயதில் அவர் காலமானார்.
தன் வாழ்நாள் முழுவதும் சிறார் எழுத்துக்காக அர்ப்பணித்துக்கொண்ட வாண்டுமாமாவுக்கு, அரசின் மிகப் பெரிய அங்கீகாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இது அவருடைய நூற்றாண்டு. இந்த ஆண்டிலாவது அவர் பெயரில் சிறார் இலக்கியத்துக்கான ஒரு விருதை தமிழ்நாடு அரசு நிறுவ வேண்டும்.
Comments