குழந்தைகளின் உரிமைகள் - 9
- கமலாலயன்

- 3 days ago
- 3 min read
குழந்தைகளுக்குக் குரலெழுப்பும் உரிமை - யூனிசெஃப் பிரகடனம்

காலங்காலமாகக் குழந்தைகள், தங்களைப் பாதிக்கும் அல்லது தாங்கள் எதிர் கொள்ளும் ஏதேனும் ஒரு பிரச்னையில் தங்களின் கருத்தைக் கூற பெரியவர்கள் ஒரு போதும் அனுமதிப்பதில்லை. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள்; ஏழைகள் - பணக்காரர்கள்; அதிகாரிகள் - சாதாரணக் கூலி உழைப்பாளிகள்; ஆண்கள் - பெண்கள்; கிராமத்தவர் - நகர மக்கள் - என்று எந்த வித வேறுபாடும் கிடையாது. உலகம் முழுவதிலும், எல்லா இடங்களிலும், எல்லா மக்களிடை யே யும் இந்த ஒரு விஷயத்தில் பரிபூரண ஒற்றுமை நிலவுகிறது.
"நீ சின்னப்பொண்ணு, ஒனக்கு என்ன தெரியும்?"
"மொளச்சு மூணு எல உடல, அதுக்குள்ள பெரியவங்ககிட்டயே யோசன சொல்றியா நீ?"
"பெரியவங்க பேசிக்கிட்டிருக்கறப்ப நீ என்ன பெரிசாக் கருத்துச் சொல்ல வந்துட்ட?"
"பெரியவங்க சொன்னாங்கன்னாக் கேட்டுக்கணும்…ஒவ்வொரு வார்த்தைக்கும் எதிர் வார்த்தை பேசக்கூடாது…"
"பெத்தவங்க நாங்க, ஒனக்கு எது நல்லதுன்னு எங்களுக்குத் தெரியாதா? நாங்க சொல்றபடி செய்யி, போ!"
– இப்படிப்பட்ட வசனங்களை அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். பெரியவர்கள் வலியுறுத்தும் எல்லா 'அறங்'களும் இந்த ஒற்றைத் தொனியிலேயே எவ்வித மாறுதலும் இன்றிக் குழந்தைகள் மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நம்மில் யாரேனும் மறுக்க முடியுமா?
குழந்தைகளின் உரிமைகள் பற்றிய ஐ.நா. அமைப்பின் பிரகடனமும், சர்வதேச நாடுகளின் கூட்டு மாநாட்டில் அனைத்து நாடுகளும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையும், இன்னும் இவை போன்ற பிற ஆவணங்களும் மேற்கண்ட 'பெரிய'வர்களின் கருத்துகளைத் தீர்மானகரமாக மறுக்கின்றன.
"தங்களைப் பாதிக்கும் எந்த ஒரு பிரச்னையைப்பற்றியும் கருத்துக் கூறுவதற் குக் குழந்தைகள் அனைவருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. தங்களின் கண்களில் படும் எந்த ஒரு விஷயம் குறித்தும் குழந்தைகள் ஏதேனும் ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளவே செய்கின்றன. அது முற்றிலும் சரியான கருத்தாக இருந்தாக வேண்டுமென்று எந்தக் கட்டாயமுமில்லை. தவறான கருத்தாகவே கூட இருக்கலாம். அல்லது சரியான கருத்தையும் ஒரு குழந்தை கூறக் கூடும். 'பெரியவர்'கள் .மட்டும் எல்லா நேரங்களிலும், எல்லா விஷயங்க ளிலும் மிகவும் சரியான கருத்துகளைக் கூறி விடுகிறார்களா, என்ன? எனவே, தன்னைப் பாதிக்கும் அல்லது தன் கண்களில் படும் எந்த ஒரு விஷயம் குறித்தும் தனக்குத் தோன்றும் எந்த ஒரு கருத்தையும் எவ்விதத் தயக்கமுமின்றி, சுதந்திரமாக எந்த ஒரு குழந்தையும் கூற வேண்டும். அவ்வாறு குழந்தைகள் கூறும் எந்த ஒரு கருத்தையும் யாரும் தடை செய்யக்கூடாது என்கிறது யூனிசெஃப் பிரகடனம்.
குழந்தைகளின் கருத்துகளைக் காது கொடுத்துக் கேட்டுக்கொள்வதும், அவர்களின் கருத்துகள் சரியானவைதாம் எனில் அவற்றை மனதார ஏற்றுக் கொள்வதும் நமது கடமை. அரசாங்கங்களின், ஆளுவோரின் கடமை. பெற்றோரின், ஆசிரியர்களின், அதிகாரிகளின், ஏன், நம் அனைவரின் கடமையுமாகும்.
வயது வந்த பெரியவர்கள், குழந்தைகள் கூறும் கருத்துகளைத் தீவிர கவனம் கொடுத்துக் கேட்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென்ற இந்த விதியை உலகம் மதிக்கிறதா? பெரிய ஏமாற்றமே நமக்குக் காத்திருக்கிறது. கொஞ்ச நாள்களுக்கு முன்னாள், உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றிய ஜெனீவா உச்சி மாநாட்டில், கிரெட்டா துன்பர்க் என்னும் பெண் உலக நாடுகளின் தலைவர்கள் அத்தனை பேரையும் நோக்கிக் கேள்விகளை அடுக்கினாள். "சுற்றுச்சூழலும், உலகளாவிய வெப்பமய மாதல் நிலைமைகளும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகின்றனவே, உலக நாடுகளும், அவற்றை ஆளும் இத்தனை தலைவர்களும் நம்மைச் சுற்றி லும் என்ன நடந்து கொண்டிருக்கின்றன என்பதைப்பற்றி என்றேனும் கொஞ்ச நேரமாவது யோசிக்கிறீர்களா? எங்களைப்போன்ற குழந்தைகளுக்கு நாளை நீங்கள் எந்த மாதிரியான உலகத்தை விட்டு விட்டுப்போவீர்கள்?" என்று கேட்டாள் அந்தப்பெண்.
முதன்முதலில் இதே கேள்விகளை அவள் தன் பெற்றோரிடம் எழுப்பினாள். அவர்கள் சொன்ன மறுமொழிகளும், சமாதானங்களும் கிரெட்டாவுக்குத் திருப்தி அளிக்கவில்லை. பள்ளியில், சக மாணவிகளிடம் பேசினாள். ஆசிரியர்களைக் கேட்டாள். கண்களில் படும் அத்தனை மனிதர்களிடமும் இதே கேள்விகளைக் கேட்டாள். சரியான பதிலை யாரும் அவளுக்குத் தர முடிய வில்லை. பள்ளியில் சக மாணவிகளைத் திரட்டிக்கொண்டு நேரடி நடவடிக்கைகளில் இறங்கினாள். பள்ளிகளின் முன்னால், அரசு அலுவலகங் களின் முன்னால், பொது மன்றங்கள்- சட்டமன்றங்கள்- நாடாளுமன்றங்கள் அனைத்தின் முன்னாலும் இத்தகைய முற்றுகைப்போராட்டங்களை சாத்தியமான எல்லா நாடுகளிலும் அவள் முன்னெடுத்தாள். முதலில் எந்த இடத்திலும், யாரும் கிரெட்டாவையோ அல்லது அவளைப் போல் கேள்விகளை எழுப்பிய பிற குழந்தைகளையோ சட்டை கூடப் பண்ணவில்லை. அவர்கள் தொடர்ந்து பள்ளிகளுக்குப் போகாமலே இருந்தார்கள். தேர்வுகளை எழுத மறுத்தார்கள்.
பயணங்கள் எவற்றையும் மேற்கொள்ளாமல் தவிர்த்தார்கள். ஒரு சிறு புள்ளியில் தோன்றிய இந்த இயக்கம், பெரும் சூறாவளியாய்ச் சுழன்று பெரிதான பிறகுதான் உலகம் அவர்களின் குரல்களைக் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கியது. சுற்றுச் சூழல் பாதுகாப்புத் தொடர்பான எல்லா சர்வதேச மாநாடுகளுக்கும் கிரெட்டா துன்பர்க் அழைக்கப்பட்டாள். அவள் கேட்ட பல கேள்விகள், அமெரிக்க நாட்டின் செயல்களைப் பற்றியதாக இருந்தது. உலக வெப்பமயமாதலுக்கு அந்த நாடுதான் உலகிலேயே அதிக சதவீத அளவுக்குக் காரணமாக இருக்கிறது என்னும் உண்மையைக் கிரெட்டா புள்ளிவிவரங்களுடன் நிறுவினாள். இன்றைய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முந்தைய ஆட்சியின் போது, அவரே எரிச்சலடைந்து 'இந்தப்பெண் சிறுபிள்ளைத்தனமாக உளறிக்கொண்டிருக்கிறாள்" என்று கத்திய செய்தியைப் பத்திரிகைகளில் நாம் படித்திருப்போம்.
இதுதான் நாம் குழந்தைகளின் உரிமைக்குரல்களுக்குக் கொடுக்கும் மரியாதை! ஆரம்பத்தில் கிரேட்டாவின் முரல் அலட்சியப்படுத்தப்பட்டது. அவள் ஒரு தனியாளாக இருக்கவில்லை; அவளுக்குப் பின்னால் பல்லாயிரம், பல லட்சம் குழந்தைகள் திரண்டு குரல்களை எழுப்பியபின், உலக நாடுகள் கொஞ்சம் அசைந்தன. ஒரு சில உறுதிமொழிகளை அந்தக்குழந்தைகளுக்கு அரசாங்கங் களின் தலைவர்கள் கொடுத்தார்கள். பெரியவர்கள் அளிக்கும் உறுதிமொழி களை எவ்வளவு தூரத்திற்கு அவர்களே மதிப்பார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரிந்தவைதானே? ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அத்தகைய குரல்கள் ஓய்ந்து விட்டன.
இப்போது கிரெட்டா துன்பர்க் என்ன செய்கிறாள்?
யாருக்கேனும் தெரிந்திருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.

சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று
பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார்.
மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.




Comments