top of page

டைட்டன் – சனிக்கோளின் மர்ம உலகம்


(காசா விண்கலம் எடுத்த டைட்டனின் புகைப்படம் – பட உதவி – நாசா)


சூரியக் குடும்பத்தின் ஆறாவது கோளான சனியைப் பற்றி நினைக்கும் போதே, அதன் அழகிய வளையங்கள் நம் நினைவுக்கு வரும். ஆனால், அந்த வளையங்களைத் தாண்டி, வானியலாளர்களைப் பெரிதும் ஈர்க்கும் ஒரு விசித்திர உலகம் இருக்கிறது. அது - சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டன். நமது சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் எங்கு இருக்கலாம் என்ற கேள்வி எழும்போதெல்லாம் அறிவியலாளர்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கும் விண்பொருட்களில் ஒன்றாகச் சனிக்கோளின் நிலவு, டைட்டன் திகழ்கிறது. முதற்பார்வையில் அது பனியால் மூடப்பட்ட குளிர்ந்த வெற்று உலகமாகத் தோன்றினாலும், அதன் அடர்த்தியான வளிமண்டலம், மீத்தேன் ஏரிகள், மழை, ஆறுகள், மணற்குன்றுகள், பருவநிலை மாற்றங்கள் என்று பூமியை ஒத்திருக்கும் நிலையை நினைவூட்டுகிறது. அதே நேரத்தில், அங்குள்ள திரவங்கள் நீரல்ல; அங்கிருப்பவை, திரவ மீத்தேன் மற்றும் ஈத்தேன். அங்கிருக்கும் வெப்பநிலை மனித வாழ்விற்கு ஏற்றதல்ல; இந்த முரண்பாடுகளின் கலவையே டைட்டனை சூரியக் குடும்பத்தின் மிக வினோதமான உலகங்களில் ஒன்றாக மாற்றுகிறது.


டைட்டனின் கண்டுபிடிப்பு

1655 ஆம் ஆண்டு நெதர்லாந்து நாட்டின் வானியலாளர் கிறிஸ்டியான் ஹெய்கென்ஸ் தொலைநோக்கியின் உதவியால் டைட்டனை முதன்முதலாகக் கண்டறிந்தார். சனிக்கோளைச் சுற்றிவரும் முதல் நிலவாகக் கண்டுபிடிக்கப்பட்ட டைட்டன், பின்னர் அதன் மிகப்பெரிய துணைக்கோளாகவும் அறியப்பட்டது. இன்று வரை சனிக்கோளைச் சுற்றும் நூற்றுக்கணக்கான நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; அவற்றில் அளவிலும், அமைப்பிலும், அறிவியல் முக்கியத்துவத்திலும் டைட்டன் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. டைட்டன் சனிக்கோளை ஒரு முறை சுற்றி வர சுமார் 16 நாட்கள் ஆகின்றன (பூமியின் நாட்கணக்கின்படி).


அளவும் அமைப்பும்

டைட்டனின் விட்டம் சுமார் 5,150 கிலோமீட்டர். இது புதன் கோளைவிடச் சற்றுப் பெரியதாகும். இருப்பினும் புதன் அதிக அடர்த்தியுடைய பாறைக்கோள் என்பதால் அதன் நிறை டைட்டனைவிட அதிகமாகும். டைட்டனின் உட்புற அமைப்பு பல அடுக்குகளைக் கொண்டதாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். அதன் மையத்தில் பாறைகளும் உலோகங்களும் கலந்த பகுதியாக இருக்கலாம்; அதைச் சுற்றி மிக உயர்ந்த அழுத்தத்தில் நீர்-பனிப் படலம் இருக்கலாம்; அதன் மேலே அமோனியா கலந்த திரவ நீர்க் கடல் இருப்பதற்கான வலுவான சான்றுகள் உள்ளன. வெளிப்புறத்தில் தடிமனான நீர்ப் பனியால் ஆன உறைந்த மேற்பரப்பு காணப்படுகிறது.

இதனால், வெளியில் உறைந்த உலகமாகத் தோன்றும் டைட்டனின் அடியில் ஒரு மாபெரும் மறைகடல் இருக்கலாம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.


வளிமண்டலம்

டைட்டனை மற்ற எல்லா நிலவுகளிலிருந்தும் வேறுபடுத்துவது அதன் வளிமண்டலமாகும். சூரியக் குடும்பத்தில் அடர்த்தியான வளிமண்டலத்தைக் கொண்ட ஒரே நிலவு இதுவே. அதன் வளிமண்டலத்தில் சுமார் 95% நைட்ரஜனும் 5% மீத்தேனும் நிறைந்திருக்கின்றன. மிகச் சிறிய அளவில் ஹைட்ரஜன், ஈத்தேன் மற்றும் பிற கரிம வாயுக்கள் உள்ளன.


டைட்டனின் வளிமண்டல அழுத்தம் பூமியைவிட ஒன்றரை மடங்கு அதிகம். அதன் மேல் வளிமண்டலத்தில் சூரியனின் புற ஊதாக் கதிர்களும், சனிக்கோளின் காந்தப்புலத்தில் சிக்கியுள்ள மின்துகள்களும் மீத்தேனைப் பிரித்து எண்ணற்ற கரிம வேதிப்பொருட்களை உருவாக்குகின்றன. அவை மெல்லக் கீழிறங்கி ஆரஞ்சு நிற மங்கல்மூட்டத்தை உருவாக்குகின்றன. இந்தப் புகைமூட்டத்தினால்தான்  டைட்டனை சாதாரணத் தொலைநோக்கிகளால் காணமுடிவதில்லை.


பூமியைப் போன்ற காலநிலை

டைட்டனில் நீருக்குப் பதிலாக மீத்தேன் சுழற்சி நடைபெறுகிறது. அங்கு மேகங்கள் உருவாகின்றன; மழை பெய்கிறது; மழைநீர் போல மீத்தேன் பள்ளங்களில் தேங்குகிறது; ஆறுகள் உருவாகின்றன; அவை ஏரிகளிலும் கடல்களிலும் கலக்கின்றன; பின்னர் மீண்டும் ஆவியாகி வளிமண்டலத்திற்குச் செல்கிறது. இந்த முழுச் சுழற்சியும் பூமியின் நீர்ச் சுழற்சியைப் போலவே இருக்கிறது; ஆனால் அங்கு நீருக்குப்பதில் மீத்தேனும் ஈத்தேனும் இருக்கின்றன.


டைட்டனின் வட துருவப் பகுதியில் பல நூற்றுக்கணக்கான ஏரிகளும் கடல்களும் உள்ளன. இவை திரவ மீத்தேன் மற்றும் ஈத்தேனால் நிரம்பியுள்ளன. சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர மேற்பரப்பில் நிலைத்திருக்கும் திரவக் கடல்கள் கண்டறியப்பட்ட ஒரே உலகம் டைட்டன்தான்.


ஆறுகளும் பள்ளத்தாக்குகளும் மணற்குன்றுகளும்

டைட்டனைப் படமெடுத்த விண்கலங்கள் அங்கே நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீளமுள்ள ஆற்றுப் பாதைகள் இருப்பதைக் காட்டின. சில ஆறுகள் கிளைகளாகப் பிரிந்து மீண்டும் ஒன்றுசேரும் விதம் பூமியின் ஆற்றுத் தொகுதிகளை நினைவூட்டுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான ஆண்டுகளாக மீத்தேன் மழை நிலப்பரப்பை அரித்துக்கொண்டிருப்பது தெரியவருகிறது.


டைட்டனின் நடுப்பகுதியில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளமுள்ள கருமை நிற மணற்குன்றுகள் உள்ளன. இவை பூமியில் காணப்படும் பாலைவன மணற்குன்றுகளைப் போன்றவை. ஆனால் பூமியின் மணல் போன்றவை அல்ல; வளிமண்டலத்தில் உருவாகும் கரிமத் துகள்கள் காற்றால் சேர்க்கப்பட்டு உருவானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.


மலைகளும் பனிமலை எரிமலைகளும்

டைட்டனில் சில மலைத்தொடர்களும் உயரமான நிலப்பகுதிகளும் கண்டறியப்பட்டுள்ளன. சில ஆய்வுகள் அங்கு பனிமலை எரிமலைகள் இருக்கக்கூடும் எனக் கூறுகின்றன. பூமியில் எரிமலைகள் உருகிய பாறைகளை வெளியேற்றுகின்றன; ஆனால் டைட்டனில் அவை நீர், அமோனியா போன்ற மிகக் குளிர்ந்த திரவங்களை வெளியேற்றியிருக்கலாம். இது இன்னும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், டைட்டனின் உள்பகுதி இன்னும் செயலில் இருக்கலாம் என்பதற்கான சாத்தியத்தை இது முன்வைக்கிறது.


வெப்பநிலை

டைட்டனின் சராசரி வெப்பநிலை சுமார் –179° செல்சியஸ். இந்த அளவுக்குக் குறைந்த வெப்பநிலையில் நீர் பாறையைப் போல உறைந்திருக்கும்; மீத்தேனும் ஈத்தேனும் திரவமாக இருக்கும். மனித இனம் ஒரு கணமும் இங்கு உயிர்வாழ முடியாது.


ஈர்ப்பு விசை

டைட்டனின் ஈர்ப்பு விசை பூமியின் ஏழில் ஒரு பங்கு மட்டுமே. இங்கு மனிதன் வாழ்ந்தால், மிகவும் உயரமாகக் குதித்து நடக்க முடியும். கனமான பொருட்களைக்கூட எளிதாகத் தூக்க முடியும். அடர்த்தியான வளிமண்டலத்துடன் இந்தக் குறைந்த ஈர்ப்பு விசையும் இருப்பதால், சிறகுகள் பொருத்தப்பட்ட ஒரு கருவியின் உதவியோடு இங்கே மனிதன் எளிதாகப் பறக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். 


காசினி – ஹெய்கென்ஸ் ஆய்வுப் பயணம்

1997 ஆம் ஆண்டு ஏவப்பட்ட காசினி – ஹெய்கென்ஸ் திட்டம் டைட்டனைப் பற்றிய மனிதனின் புரிதலை முற்றிலும் மாற்றியது. காசினி விண்கலம் சனிக்கோளைப் பல ஆண்டுகள் சுற்றி ஆய்வு செய்தது. அதனுடன் சென்ற ஹெய்கென்ஸ் ஆய்வுக்கலம் 2005 ஜனவரி 14 அன்று டைட்டனில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதுவே பூமியிலிருந்து மிகத் தொலைவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதல் ஆய்வுக்கலமாகும்.


இந்த விண்கலம் வளிமண்டலத்தின் அடுக்குகளை அளந்தது; இறங்கும் வழியில் நூற்றுக்கணக்கான படங்களை எடுத்தது; தரையிறங்கிய இடத்தில் பனியுடன் கலந்த சிறுகற்களைப் பதிவுசெய்தது; அங்குள்ள காற்று, வெப்பநிலை, வேதியியல் அமைப்பு போன்றவற்றை ஆய்வு செய்தது.


உயிர் தோன்றும் சாத்தியம்

டைட்டனில் கடுமையான குளிர் நிலவுவதால் பூமியைப் போன்ற உயிர்கள் வாழ்வது மிகவும் கடினம். ஆனால் உயிர் உருவாகத் தேவையான கரிம மூலக்கூறுகள் அங்கு மிகுந்தளவில் உள்ளன. அதுமட்டுமல்லாமல், அதன் மேற்பரப்புக்குக் கீழே திரவ நீர்க் கடல் இருப்பது உண்மையெனில், அங்கு வேறுவிதமான நுண்ணுயிர் வடிவங்கள் தோன்றியிருக்குமா என்ற கேள்வி இன்னும் விடைதெரியாத நிலையிலேயே உள்ளது.


உயிர் பூமியில் மட்டும்தான் தோன்றியதா, அல்லது வேறு உலகங்களிலும் தோன்ற முடியுமா என்ற அடிப்படை அறிவியல் கேள்விக்கு விடை காண உதவக்கூடிய இடங்களில் டைட்டன் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


டிராகன்ஃப்ளை திட்டம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, டிராகன்ஃப்ளை எனப்படும் புதிய ஆய்வுத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, அணுசக்தியால் இயக்கப்படும் பறக்கும் ஆய்வுக் கருவி டைட்டனின் பல இடங்களுக்கும் பறந்து ஆய்வு மேற்கொள்ளும். பல்வேறு நிலப்பகுதிகளில் தரையிறங்குவதற்கும், கரிம வேதிப்பொருட்களை ஆய்வு செய்வதற்கும் திட்டமிடப்பட்டு வருகிறது. உயிர் தோன்றுவதற்கான வேதியியல் சூழலையும் இந்தத் திட்டம் ஆராயும். ஒரே இடத்தில் நிலையாக இருப்பதற்குப் பதிலாக பல இடங்களில் பறந்து ஆய்வு செய்யும் முதல் கோளாய்வுத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.


டைட்டன் என்பது சனிக்கோளின் ஒரு நிலவு மட்டுமல்ல. அது பூமியை நினைவூட்டும் பல இயற்கை நிகழ்வுகளைக் கொண்டிருந்தாலும், அவை முற்றிலும் வேறுபட்ட வேதியியல் அடிப்படையில் நடைபெறும் ஒரு அன்னிய உலகம். அங்கு மழை உண்டு; ஆனால் அது நீரல்ல. ஆறுகள் உண்டு; ஆனால் அவற்றில் ஓடுவது மீத்தேன். கடல்கள் உண்டு; ஆனால் அவை குளிர்ந்த கரிமத் திரவங்களால் நிரம்பியவை. உறைந்த மேற்பரப்பின் கீழ் மறைந்திருக்கும் பெருங்கடலும், வளிமண்டலத்தில் உருவாகும் சிக்கலான கரிம வேதிப்பொருட்களும், உயிரின் தோற்றத்தைப் பற்றிய மனிதனின் மிகப் பெரிய அறிவியல் கேள்விகளுக்கு விடையளிக்கக்கூடிய தடயங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கலாம்.


அதனால், டைட்டன் இன்று வெறும் வானியல் ஆய்வின் பொருளாக மட்டுமல்லாமல், “உயிர் எவ்வாறு தோன்றுகிறது?” என்ற மனிதகுலத்தின் அடிப்படை வினாவிற்கு விடை தேடும் அறிவியல் பயணத்தின் முக்கிய இலக்காகவும் விளங்குகிறது.


எழில் சின்னத்தம்பி
எழில் சின்னத்தம்பி

இயற்பெயர்: எழில் மயில் வாகனன்.

தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன. வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’

 ‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page