top of page

வாத்து சொன்ன ரகசியம்.


“டேய் முகிலா, நேத்து நம்ம ஸ்கூல்ல பெரிய டிவியில ஒரு கதை போட்டாங்களே,பார்த்தியா?”


“ஆமாண்டா அகிலா! அந்த வாத்து கதைதானே?”


“ஆமாண்டா! டின் டின் வாத்து. அதுக்குப் பல் தேய்க்கவே பிடிக்காதாம். குளிக்கவும் பிடிக்காதாம். அதனால எவ்வளவு கஷ்டப்பட்டது பார்த்தியா?”


“ஆமா டா! எங்க அம்மா தினமும் என்னைக் குளிக்கச் சொல்லும்போது நானும்

இப்படித்தான் ஓடுவேன்!” என்று சொல்லிச் சிரித்தான் முகிலன்.


“ஹா... ஹா... ஹா... எங்க வீட்டிலயும் இதே கதைதான் டா!”


இருவரும் சிரித்துக்கொண்டே பள்ளியிலிருந்து வீட்டுக்குச் சென்றார்கள்.


அகிலனும் முகிலனும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் நண்பர்கள். இருவரும் ஒரே தெருவில் வசித்து வந்தார்கள். பள்ளி விட்டதும் ஒன்றாக விளையாடுவார்கள். விடுமுறை நாள்களில் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்று தொலைக்காட்சியில் சோட்டா பீம், சிங் சாங் என்று கார்ட்டூன் பார்ப்பார்கள்.


அன்று பள்ளியில் பார்த்த டின் டின் வாத்து கதை மட்டும் அவர்கள் மனதில்

ஓடிக்கொண்டே இருந்தது.


மறுநாள் காலையில் அகிலன் எழுந்ததும் அம்மா வழக்கம்போல்,


“அகிலா, பல் தேய்ச்சிட்டியா?” என்று கேட்டார்.


“இதோ தேய்க்கப் போறேன் மா!” என்றவன், குளியலறைக்குள் போய்ப் பல் தேய்க்கத் தொடங்கினான்.


அம்மாவுக்கே ஆச்சரியமாக இருந்தது.


“என்னடா இன்னைக்கு சொன்ன உடனேயே பல் தேய்க்கிற?”


“ஸ்கூல்ல ஒரு கதை போட்டாங்கம்மா. அதுல ஒரு வாத்து பல் தேய்க்காம இருந்து கஷ்டப்படுது!”


“ஓ அப்படியா? ஸ்கூல்ல கதையெல்லாம் போடுறாங்களா சரி, சீக்கிரம் குளிச்சிட்டுச் சாப்பிட வா!” என்றார் அம்மா.


அகிலன் குளித்துவிட்டு, சீருடையை அணிந்துகொண்டு சாப்பிட உட்கார்ந்தான்.


அதே நேரத்தில் முகிலன் வீட்டில் வேறு காட்சி.


“முகிலா, இன்னும் குளிக்கலையா? ஸ்கூலுக்குப் போக நேரமாச்சு!” என்று அம்மா குரல் கொடுத்தார்.


“இதோ வந்துட்டேன்மா!” என்று சொல்லிக்கொண்டே குளியலறைக்குள் ஓடினான் முகிலன்.


அன்று பள்ளிக்குச் செல்லும் வழியில் இருவரும் சந்தித்தார்கள்.


“டேய் அகிலா, இன்னைக்கு நான் பல் தேய்ச்சிட்டுக் குளிச்சிட்டுத்தான் வந்தேன்!”


“நானும்தான் டா! ஆனா நாளைக்கும் மறுபடியும் நாம இப்படித்தான் செய்யனும்.”


“ஏன் செய்ய மாட்டோம்? தினமும் பல் தேய்க்கணும்னு டின் டின் வாத்தே

சொல்லிடுச்ச!”

ஹா.. ஹா என்று சிரித்துக் கொண்டனர்.


“சரிடா. இனிமே நாம மறக்கவே கூடாது!”


இருவரும் பேசிக்கொண்டே பள்ளிக்குச் சென்றார்கள்.


அன்று வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். கரும்பலகையில் சில சொற்களை எழுதினார்.


“குழந்தைகளே, இதை எல்லாரும் படிச்சுப் பாருங்க!” என்றார்.


அகிலன் எழுந்து ஒவ்வொரு சொல்லாகப் படித்தான். முகிலனும் தன் புத்தகத்தைப் பார்த்துப் படிக்க முயன்றான்.


அப்போது அகிலனுக்குப் பக்கத்தில் இருந்த முகிலன் மெதுவாகக் கேட்டான்.


“டேய், நேத்து டிவியில வந்த கதை மாதிரி புத்தகத்துலயும் நிறைய கதைகள்

இருக்கும்ல?”


“ஆமாண்டா! நம்ம ஸ்கூல் லைப்ரரியிலே இருக்குமே. சாயங்காலம் போய் ஒரு கதைப் புத்தகம் எடுக்கலாமா?”


“சரி டா! ஆனா எனக்கு சில வார்த்தைகள் படிக்கக் கஷ்டமா இருக்கும். நீ சொல்லித் தருவியா?”


“நானும் இன்னும் நல்லா படிக்கக் கத்துக்கிட்டு இருக்கேன்டா. ரெண்டு பேரும் சேர்ந்து படிப்போம்!”


பள்ளி முடிந்ததும் இருவரும் நூலகத்துக்குச் சென்றார்கள். அங்கே விலங்குகள் படங்களுடன் ஒரு கதைப் புத்தகம் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு ஆசிரியரிடம் சென்றார்கள்.


“டீச்சர், இந்தப் புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துட்டுப் போய்ப் படிக்கலாமா?” என்று கேட்டான் அகிலன்.


“தாராளமாக எடுத்துக்கிட்டுப் போங்க. படிச்சிட்டு அடுத்த வாரம் திருப்பிக்

கொடுத்துடுங்க!” என்றார் ஆசிரியர்.


புத்தகத்தை வாங்கிக்கொண்டு இருவரும் மகிழ்ச்சியாக வீட்டுக்குப் புறப்பட்டார்கள்.


வழியில் முகிலன் சொன்னான்:


“டேய் அகிலா, அந்த டின் டின் வாத்து கதையை நம்ம வகுப்புல எல்லாரும்

பார்த்தாங்கல்ல? நம்மள மாதிரி அவங்களும் தினமும் பல் தேய்க்க

ஆரம்பிச்சிருப்பாங்களா?”


“தெரியலடா! நாளைக்கு கேட்டுப் பார்ப்போம்!” என்றான் அகிலன்.


இருவரும் சிரித்துக்கொண்டே நடந்தார்கள்.


அன்று இரவு அகிலன் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். சில சொற்கள் புரியவில்லை. அம்மாவிடம் கேட்டான். அம்மா சொல்லிக் கொடுத்தார். முகிலனும் தன் வீட்டில் புத்தகத்தைப் படிக்க முயன்றான்.


அடுத்த நாள் பள்ளியில் சந்தித்ததும் இருவரும் தாங்கள் படித்த கதையைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள்.


அவர்களுக்குள் ஒரு புதிய பழக்கம் மெதுவாகத் தொடங்கியிருந்தது.


காலையில் பல் தேய்ப்பது, குளிப்பது என்று மட்டுமல்ல; கிடைக்கும் நேரத்தில் கதைப் புத்தகங்களை எடுத்துப் படிப்பதிலும் இருவருக்கும் ஆர்வம் வந்திருந்தது.


அதற்குக் காரணம், பள்ளியின் தொலைக்காட்சியில் அவர்கள் பார்த்த அந்தச் சின்ன டின் டின் கதைதான்!

5 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Ezhilasari
3h
Rated 4 out of 5 stars.

சிறப்பு

Like

Rani
4h
Rated 4 out of 5 stars.

டின் டின் வாத்து சூப்பர்

Like

Amudhan devendiran
7h
Rated 4 out of 5 stars.

நன்றி

Like

நளினி
14h
Rated 5 out of 5 stars.

எழுத்தாளர் உதய சங்கர் அவர்களின் டின் டின் வாத்து கதைகளை தழுவி எழுதிய கதை..சிறப்பு...வாழ்த்துகள்


Like
Amudhan devendiran
4h
Replying to

மகிழ்ச்சி நளினி

Like
bottom of page