top of page

தூரிகாவின் கிளி


அது அரையாண்டு விடுமுறைக்காலம். தூரிகா நன்றாகத் தூங்கிக்கொண்டு இருந்தாள்.


எழ மனசே இல்லை. வெளியே பைக் சத்தம் கேட்டது. இரவு வேலைக்குப் போயிருந்த அப்பா வந்திருந்தார். உடனே தூரிகா எழுந்து ஓடிப்போய் அப்பாவைக்கட்டிக்கொண்டாள்.


பிறகு முகத்தைக் கழுவினாள். பல் துலக்க வாசலில் அமர்ந்தாள். அப்போது, “கீச்.. கீச் ” என்ற சத்தம் கேட்டது. அங்குமிங்கும் பார்த்தாள். எங்கிருந்து சத்தம் வருகிறது என்று புரியவில்லை. மறுபடியும் சத்தம் கேட்டது. தூரிகா தலையைச் சாய்த்து தூரத்தில் பார்த்தாள். செம்பருத்தி செடியின் கிளையில் ஒரு கிளி அமர்ந்திருந்தது. அது, தூரிகா வளர்த்த செடி. தூரிகா, கிளிக்கு பக்கத்தில் சென்றாள். கையை நீட்டினாள். உடனே, கையில் வந்து அமர்ந்தது. தூரிகாவுக்கு முகமெல்லாம் சிரிப்பு.


கருப்பும், இளஞ் சிவப்பு நிறமுமுள்ள கழுத்தைத் தொட்டுப் பார்த்தாள். கிளி அசையாமல் அப்படியே இருந்தது. மெல்ல வீட்டுக்குள் நடந்தாள். கிளியும் அவளுடன் வந்தது.


கூடையில் இருந்த வாழைப்பழத்தை எடுத்தாள். சிறிது சிறிதாக பிய்த்துக் கொடுத்தாள். கிளி அதை கொத்தி ருசித்துத் தின்றது.


அப்போது, “என்ன, சத்தத்தையே காணோம்” என்று தேடிக்கொண்டு வந்தார் அம்மா.


கிளியைப் பார்த்ததும், “ஏய், இது பச்சைக்கிளி! உனக்கு எப்படி கிடைத்தது” என

கேட்டார்.


தூரிகா அம்மாவைப் பார்த்து தலையை ஆட்டி, புருவத்தை உயர்த்தி சிரித்தாள். கிளியின் உடலை மெதுவாகத் தடவிக்கொடுத்தாள். மிகவும் பாதுகாப்பாக தூரிகாவின் கைகளில் ஒட்டிக்கொண்டது கிளி.


“இதுக்கு என்ன பெயர் வைக்கலாம்” என்று அம்மா கேட்டார். “இதை, கிளி! கிளின்னே கூப்பிடுவோம்” என்றாள் தூரிகா. விடுமுறை நாட்களில் கிளியுடன் விளையாடினாள். அதனுடன் பேசினாள். சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி கொய்யாப்பழம் கொடுத்தாள். சந்தையில் அப்பா வாங்கி வந்த கேரட், பீட்ருட் ஆகியவற்றையும் நறுக்கிக் கொடுத்தாள். தினமும் கிளியை குளிக்கச் செய்தாள். அதன் தலையை மெதுவாகச் சீவி விட்டாள்.


தூரிகா படிக்கும்போதும் கிளி அவளுக்குப் பக்கத்திலேயே இருக்கும். “கிளியோடவிளையாடாமல் படி!” என்று அம்மா சொல்லும்போது, தூரிகா கிளியைப் பார்ப்பாள். உடனே கிளி மெதுவாக நகர்ந்து கொஞ்சம் தள்ளி நிற்கும்.


அம்மா சிரித்துக்கொண்டு, “இங்க பாரேன்! உன்னைச் சொன்னா கிளிக்கே கோபம் வருது!” என்று சொல்லி கிளியைத் தன் கையில் எடுத்துக்கொள்வார்.

விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் தொடங்கியது. “விடுமுறையில் நீங்கள் புதிதாக என்ன கற்றுக்கொண்டீர்கள். எழுதிட்டு வாருங்கள்” என ஆசிரியர் சொன்னார். தூரிகா நான்கு பக்கங்கள் தயார் செய்திருந்தாள். அதில், அலெக்சாண்ட்ரின் கிளி, மலபார் கிளி, காக்டெயில் கிளி, லவ்பேர்ட், அமேசான் கிளி, மக்கா கிளி, ஆப்ரிக்க சாம்பல் கிளி என பலவகையான கிளிகளின் படங்களை ஒட்டினாள்.


அடுத்த நாள் ஆசிரியர் ஒவ்வொரு கிளியைப் பற்றியும் தூரிகாவிடம் கேட்டார். தூரிகா உற்சாகமாக எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னாள். ஆசிரியர் மகிழ்ச்சியுடன் அவளைப் பாராட்டினார்.

மே மாதம் வந்தது. தூரிகாவின் குடும்பம் புதிய வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்தது. கிளியும் கூடவே போனது.


அந்த வீட்டுக்கு முன்னால் நிறைய மரங்கள் இருந்தன. மாலை வேளையில் புறாக்களும், காக்கைகளும் வந்து தங்கின. திடீரென்று ஒருநாள் கிளிகளும் கூட்டமாக வந்தன. ஒரே நேரத்தில் பல கிளிகளின் சத்தத்தைக் கேட்ட தூரிகா உடனே வெளியே ஓடி வந்தாள்.


கிளிகள் மரத்தில் அமர்ந்தன. பின்னர் ஒன்றாகப் பறந்தன. மீண்டும் வந்து அமர்ந்தன. சிறகுகளைப் படபடவென்று அடித்தன. ஒன்றுக்கொண்டு ஏதேதோ பேசிக்கொண்டன.


அந்தக் காட்சி தூரிகாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. மகளைப் பார்த்து, “உன் நண்பர்களோடு விளையாடினால்தானே உனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அப்படித்தான் உன்னோட கிளிக்கும். விடு போகட்டும்” என்றார் அம்மா.


தூரிகா, “அது திரும்பி வரவில்லை என்றால்?” என கேட்டாள். “ஏன் அப்படி

நினைக்கிறாய். இன்னும் நிறைய கிளிகளை அது கூட்டி வரலாம் அல்லவா? உனக்கும் புதிய நண்பர்கள் கிடைப்பார்களே!” என்றார் அப்பா.

தூரிகா கிளியைப் பார்த்தாள். மரத்தில் இருந்த கிளிகளைப் பார்த்தாள். சிறுது நேரம் அமைதியாக நின்றாள். பிறகு, மெதுவாகக் கூண்டைத் திறந்தாள். கிளி வெளியில் வந்து நின்றது. “கீச்..கீச்..” என்று கத்தியது. மரக்கிளையில் இருந்த சில கிளிகள் அதன் அருகில் வந்தன. அவை சிறிது நேரம் ஒன்றோடொன்று பேசிக்கொண்டன. பின்னர் மீண்டும் பறந்து சென்றன.


அப்படியே ஒரு வாரம் சென்றது. தூரிகாவின் கிளியும் மற்ற கிளிகளுடன் மரத்திற்குச் செல்லத் தொடங்கியது. ஆனால் மாலையில் திரும்பி வந்தது.



ஒருநாள் நிறையக் கிளிகளுடன் தன்னுடைய கிளியும் திரும்பி வந்ததைப் பார்த்த தூரிகா மிகவும் மகிழ்ந்தாள். அதன்பிறகு தினமும் நிறையக் கிளிகள் அந்த மரத்திற்கு வரத் தொடங்கின. தூரிகா அவற்றுக்கெல்லாம் உணவு வைத்தாள். தண்ணீரும் வைத்தாள்.


அவளுடைய வீட்டு வாசல் தினமும் கிளிகளின் கீச்சுச் சத்தத்தால் நிறைந்தது. தூரிகாவுக்கு அவற்றைப் பார்ப்பதே மகிழ்ச்சியாக இருந்தது. அவளுக்கு எல்லாக் கிளிகளும், அவளுடையக் கிளியைப் போலவே தெரிந்தது.

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Jessy
14 hours ago
Rated 5 out of 5 stars.

A lovely moral story that children can easily understand and enjoy. The language is simple, the vocabulary is child-friendly, and the story teaches a good value in an interesting and engaging way.

Like
bottom of page