அப்பாவின் ஆலமரம்

ஆதியின் கையில் எப்போதும் மொபைல் போன் இருக்கும். அது இல்லாமல் அவனால் இருக்கவே முடியாது.
காலையில் எழுந்ததும் அம்மாவின் மொபைலைத் தேடுவான்.
பள்ளியிலிருந்து வந்ததும் முதலில் சாப்பிடுவானா, குளிப்பானா என்று
தெரியாது; மொபைலைத்தான் தேடுவான்.
அதில் விதவிதமான கேம்கள் இருந்தன.
ஒரு கேமில் அவன் ஓடிக்கொண்டிருப்பான்.
இன்னொரு கேமில் ஒளிந்துகொண்டு இருப்பான்.
மற்றொரு கேமில் யாரையோ துரத்திக்கொண்டிருப்பான்.
கேம் விறுவிறுப்பாகச் செல்லச் செல்ல ஆதியின் குரலும் பெரிதாகிக் கொண்டே போகும்.
“அங்கே இருக்கான்! அங்கே... அங்கே!”
“சுடு! சுடு!”
“அடடா... தப்பிச்சுட்டானே!”
முகத்தை ஒரு பக்கம் கோணலாக வைத்துக்கொண்டு, உடம்பை முன்னும்
பின்னும் ஆட்டிக்கொண்டு, மொபைல் திரைக்குள் அவனே ஒரு
கதாபாத்திரமாக மாறிவிடுவான்.
“ஆதி...”
அம்மா அழைப்பார்.
அவனுக்குக் கேட்காது.
“ஆதி!”
“ம்...”
“இங்கே வாடா.”
“இதோ வர்றேன்மா.”
ஆனால் அந்த ‘இதோ’ வராது.
அம்மா மீண்டும் கூப்பிடுவார்.
“ஆதி, இந்தத் துணியை எடுத்துக்கொண்டு வா.”
“அப்புறம் வர்றேன்மா.”
சிறிது நேரம் கழித்து அம்மாவே அந்த வேலையைச் செய்துவிடுவார்.
அவருக்குக் கோபம் வரும்.
ஆனால் ஒரே பிள்ளை. செல்லப் பிள்ளை.
அதனால் கோபத்தை முழுவதுமாக அவன்மேல் காட்டவும் முடியாது.
அப்பா மட்டும் கொஞ்சம் வேறு.
அப்பா வீட்டுக்கு வரும் மோட்டார் பைக்கின் சத்தம் தெருவின் முனையில்
கேட்டாலே போதும்.
ஆதி மொபைலைச் சட்டென்று கீழே வைத்துவிட்டு புத்தகத்தை எடுத்துக்கொள்வான்.
புத்தகம் திறந்திருக்கும்.
கண்களும் புத்தகத்தில்தான் இருக்கும்.
ஆனால் சில சமயம் புத்தகத்தை தலைகீழாக வைத்திருப்பான்!
ஒரு நாள் விடுமுறை.
ஆதியின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தார்கள்.
“ஆதி... வாடா!”
“எங்கே?”
“மைதானத்துக்கு. கிரிக்கெட் விளையாடலாம்.”
“நான் வரலடா.”
“ஏண்டா?”
“நீங்க போங்க.”
“சரி.”
நண்பர்கள் ஓடிச்சென்றார்கள்.
ஆதி மொபைலை எடுத்துக்கொண்டான்.
அதைப் பார்த்த அம்மா,
“எப்ப பார்த்தாலும் இதுதானா?” என்று கேட்டார்.
ஆதி சிரிக்கவே இல்லை.
திரையில்தான் அவன் கண்கள்.
“பசங்க எல்லாம் வெளியே விளையாடப் போறாங்க. நீ மட்டும்
வீட்டுக்குள்ளேயே இருக்கியே.”
ஆதி எதுவும் சொல்லவில்லை.
“கொஞ்சம் வெளியே போயிட்டு வாடா.” ஆதி தலையை மட்டும் அசைத்தான்.
மொபைலில் மீண்டும் ஒரு கேம் தொடங்கியது.
மாலை.
ஆதி விளையாடிக்கொண்டிருந்தான்.
அவனுக்குப் பின்னால் கதவு திறந்த சத்தமே கேட்கவில்லை.
“ஆதி!”
அப்பாவின் குரல்.
ஆதி திரும்பிப் பார்த்தான்.
அப்பா கதவருகில் நின்றுகொண்டிருந்தார்.
ஆதியின் கையில் மொபைல்.
சிறிது நேரம் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“என்னடா?”
ஆதி மெதுவாக,
“கொஞ்சம் விளையாடிட்டு இருந்தேன்,ப்பா,” என்றான்.
அப்பா அவன் அருகில் வந்து உட்கார்ந்தார்.
“சரி.”
அம்மாவிடம்,
“ஒரு காபி கொடு,” என்றார்.
காபி வந்தது.
அப்பா மெதுவாகக் குடித்துக்கொண்டிருந்தார்.
ஆதி அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“வெளியே போகலாமா?”
“எங்கேப்பா?”
“வா. சொல்றேன்.”
மோட்டார் பைக்கில் இருவரும் கிளம்பினார்கள்.
ஊரின் கடைசி தெருவைத் தாண்டி சிறிது தூரம் சென்றதும் ஒரு மைதானம்
வந்தது.
அப்பா வண்டியை நிறுத்தினார்.
ஆதி இறங்கினான்.
அங்கு நிறையப் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
ஒரு பக்கம் கிரிக்கெட்.
மற்றொரு பக்கம் கால்பந்து.
சிறிது தூரத்தில் சில சிறுவர்கள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
ஆதி நின்றுகொண்டு பார்த்தான்.
“அப்பா... இங்க இவ்வளவு பேர் விளையாடுறாங்க!”
“ம்.”
அப்பா அவனுடன் நடக்கத் தொடங்கினார்.
சில அடிகள் சென்றதும் திடீரென்று நின்றார்.
“ஆதி... அந்த ஆலமரத்தைப் பாரு.”
ஆதி பார்த்தான்.
பெரிய ஆலமரம்.
அதன் விழுதுகள் கீழே தொங்கிக்கொண்டிருந்தன.
“இந்த மரத்துக்குப் பக்கத்துலதான் நாங்க சின்னப் பசங்களா இருக்கும்போது
விளையாடுவோம்.”
“நீங்களா?”
“ஆமாம்.”
“என்ன விளையாடுவீங்க?”
அப்பாவின் முகத்தில் ஒரு சிரிப்பு.
“கோலி.”
“கோலி?”
“பம்பரம்.”
“பம்பரமா?”
“கண்ணாமூச்சி.”
“அதுவும் தெரியுமே!”
“ஐஸ் பாய்.”
“அது என்ன?”
அப்பா சிரித்தார்.
“அதை விளையாடித்தான் தெரிஞ்சுக்கணும்.”
ஆதி அப்பாவை இன்னும் நெருக்கமாகப் பார்த்தான்.
“வேற?”
“சீட்டு... கில்லி... இன்னும் எத்தனையோ.”
“எல்லாத்துக்கும் பெயர் இருந்ததா?”
“சிலதுக்கு பெயரே இல்ல.”
“அப்புறம்?”
“நாங்க விளையாட ஆரம்பிச்சுடுவோம். விளையாட்டு முடிஞ்சதும் அதுக்கு
ஒரு பெயர் வச்சுக்குவோம்.”
ஆதி சிரித்தான்.
அப்பாவும் சிரித்தார்.
ஆலமரத்துக்கு அப்பால் ஒரு சிறிய பள்ளம் இருந்தது.
அதில் மழைநீர் தேங்கி பச்சை நிறமாக இருந்தது.
அப்பா அதைச் சுட்டிக்காட்டினார்.
“இங்க முன்னாடி வயல் இருந்தது.”
ஆதி சுற்றிப் பார்த்தான்.
அப்பா பேசிக்கொண்டே இருந்தார்.
“இந்தப் பக்கமெல்லாம் நெல்வயல். மாலை நேரத்துல வயல்ல இருந்து
காத்து வீசும் பாரு...”
அவர் ஒரு நிமிடம் அமைதியாக நின்றார்.
அந்தக் காற்று அவரை எங்கோ அழைத்துச் சென்றது போல இருந்தது.
“நாங்க பள்ளியிலிருந்து வந்ததும் புத்தகத்தை வீட்டுல போட்டுட்டு
ஓடிவந்துடுவோம்.”
“அப்போ உங்க அம்மா திட்ட மாட்டாங்களா?”
“திட்டுவாங்க.”
“அப்போ?”
“திட்டிக்கிட்டே இருப்பாங்க. நாங்க கேட்டுக்கிட்டே ஓடுவோம்.”
ஆதி சிரித்தான்.
அப்பாவும் சிரித்தார்.
“சில நாள்ல மழை பெய்யும். வயல் வரப்பெல்லாம் வழுக்கும். எல்லாரும்
ஓடுவோம். ஒருத்தன் விழுவான். அவனைப் பார்த்து எல்லாரும் சிரிப்போம்.
அடுத்த நிமிஷம் நாமே விழுவோம்.”
அப்பா சொல்லச் சொல்ல ஆதியின் கண்களுக்கு முன்னால் அந்தக் காட்சிகள்
தோன்றின.
மண்ணில் ஓடும் சிறுவர்கள்.
ஆலமரத்தின் கீழ் கிடக்கும் பம்பரங்கள்.
கையில் கோலிகள்.
வயல்வெளியின் நடுவே ஓடும் காற்று.
சூரியன் மறையும் நேரம்.
தூரத்தில் யாரோ,
“டேய்... வீட்டுக்குப் போங்கடா!” என்று கத்தும் குரல். அதற்குப் பிறகும் ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள்.
ஆதிக்கு அந்தக் காட்சிகள் புதிதாக இருந்தன.
அவன் அப்பாவை இவ்வளவு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பதை அதற்கு
முன்பு பார்த்ததே இல்லை.
“அப்பா...”
“என்னடா?”
“நீங்க இங்கதான் விளையாடினீங்களா?”
“ம்.”
“தனியா?”
“இல்லடா. நண்பர்களோட.”
அப்பா சிறிது நேரம் மைதானத்தைப் பார்த்தார்.
“நாங்க விளையாடிய இடம் இப்ப இப்படி மாறிப்போச்சு.”
ஆதி சுற்றிப் பார்த்தான்.
“ஆனா இந்த மைதானம் இருக்கு இல்லப்பா?”
அப்பா அவனைப் பார்த்தார்.
“இருக்கு.”
இருவரும் மீண்டும் நடந்தார்கள்.
மைதானத்தின் ஒரு மூலையில் ஒரு பந்து உருண்டுவந்து ஆதியின்
காலருகில் நின்றது.
ஒரு சிறுவன் தூரத்திலிருந்து கத்தினான்.
“அண்ணா... பந்தை போடுங்க!”
ஆதி பந்தை எடுத்தான்.
சிறிது நேரம் கையில் வைத்திருந்தான்.
பிறகு வேகமாக அந்தப் பந்தை அவன் பக்கம் வீசினான்.
“தேங்க்ஸ்!”
அந்தச் சிறுவன் ஓடிச்சென்றான்.
ஆதி அவனைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“அப்பா...”
“ம்?”
“நாளைக்கும் இங்கே வரலாமா?”
அப்பா பதில் சொல்லாமல் சிரித்தார்.
இருவரும் வீட்டுக்குத் திரும்ப நடந்தார்கள்.
அந்த மாலை ஆதியின் கையில் மொபைல் இல்லை.
அவனுடைய கையில் ஒரு சிறிய கல் இருந்தது.
அதைப் பார்த்துக்கொண்டே அவன் நடந்தான்.
“அப்பா... கோலி விளையாடக் கத்துக்கணும்.”
அப்பா சிரித்தார்.
“முதல்ல கோலி வாங்கணும்.”
“நாளைக்கு வாங்கலாமா?”
“வாங்கலாம்.”
ஆதி வேகமாக முன்னால் ஓடினான்.
சிறிது தூரம் சென்றதும் திரும்பிப் பார்த்தான்.
“அப்பா... சீக்கிரம் வாங்க!”
அப்பா மெதுவாக நடந்துகொண்டிருந்தார்.
அவருடைய முகத்தில் மட்டும்,பல ஆண்டுகளுக்கு முன்பு ஓடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனின் சிரிப்பு இருந்தது.





Nice
ஒரு கதை படிச்சேன் தோழர் சூப்பரா இருக்கு ...
கதையில் வருவது போல தான் குழந்தைகள் அனைவரும் இப்பொழுது செல்போனில் மூழ்கிக் கிடக்கிறார்கள் ஆதியின் அப்பா அவனை மைதானத்திற்கு கூட்டிச் சென்று அவரின் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுகளை எல்லாம் விவரிப்பது மிகவும் அழகாக இருந்தது சூப்பர் வாழ்த்துக்கள் தோழர்💐💐
நல்ல கதை அருமை
நன்றி
இன்றைய தலைமுறை குழந்தைகள் சமூக வலைதளங்களிலும் ஆன்லைன் விளையாட்டிலும் மூழ்கி விட்டு குழந்தை பருவத்திற்கான அத்தனை மகிழ்ச்சிகளையும் குழந்தைகளுக்கான உலகத்தையும் மறந்து இருக்கும் சூழ்நிலையில் இது போன்ற கதைகள் அவர்களை மீண்டும் பழைய உலகிற்கு வரவழைக்கும் என்று நம்புகிறேன்.வாழ்த்துகள் அமுதன் தேவேந்திரன் அவர்களுக்கு.