மாயாஜாலக்கதைகளின் ராணி ரௌலிங்
- சரிதா ஜோ

- Sep 15
- 3 min read

ஜோ: இன்று நாம் பேசப்போகிற உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவரைப் பற்றி. அவர் பெயர் ஜே.கே. ரௌலிங்.
அவருடைய முழு பெயர் Joanne kathleen Rowling.
நகுலன்: ஹாரி பாட்டர் கதையை எழுதியவர் தானே?
ஜோ: சரியாகச் சொன்னாய், நகுலா! ரௌலிங் 1965-ல் இங்கிலாந்தில் பிறந்தார். அவருடைய வீட்டில் புத்தகங்கள் நிறைய இருந்தன. அவர் சிறு வயதில் கனவுகள் நிறைந்தவராக இருந்தார். கற்பனை வளம் அவருக்கு அதிகம்.
நகுலன்: அவர் அப்போவே கதைகள் எழுதினாரா?
ஜோ: ஆம். சிறு வயதில் அவருக்கு கதைகளில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர் ஆறு வயது இருக்கும்போது “Rabbit” என்ற கதையை எழுதினார். பத்து வயதில் “Seven Cursed Diamonds” என்ற ஒரு சாகசக் கதையை எழுதினார். அந்த வயதிலேயே எவ்வளவு கற்பனைக்காரியாக இருந்திருக்கிறார்.
சிறுவயதில் பாட்டியிடம் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர். பதின் பருவத்தில் ஏராளமான புத்தகங்களை வாசித்தார். மாயாஜால மந்திர சாகசங்கள் நிறைந்த கதைகள் இவருக்கு மிகவும் பிடிக்கும்.
ரதி: அவர் அப்போவே ஹாரி பாட்டர் கதையை உருவாக்கி விட்டாரா?
ஜோ: ஹாரி பாட்டர் நேரடியாக அப்போ யோசிக்கப்படவில்லை. ஆனால் அவரது பால்யகால அனுபவங்கள், தனிமையான மனநிலை, அதிகம் கனவு காணும் பழக்கம் — எல்லாமே பின்னாளில் ஹாரி பாட்டர் உலகத்தை உருவாக்க உதவின
நகுலன்: அவர் படிப்பில் எப்படி இருந்தார்?
ஜோ: பள்ளியில் அவர் ஆங்கிலப் பாடத்தை மிகவும் விரும்பினார். கதைகளைப் படித்து, எழுதுவது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
நகுலன்: எப்போது அவர் ஹாரி பாட்டர் கதை எழுத ஆரம்பித்தார்?
ஜோ: 1990-ல், மான்செஸ்டர் ரயில் நிலையத்தில் தாமதமாக வந்த ரயிலுக்காக காத்திருந்தபோது திடீரென்று ஒரு சிந்தனை வந்தது. “ஒரு சிறுவன் – அவன் சாதாரணமா இருக்கிறான் என்று நினைத்தாலும், அவன் ஒரு மந்திரவாதி” என்ற யோசனை. அப்படித்தான் ஹாரி பாட்டர் பிறந்தது.
ரதி: வாவ்! உடனே புத்தகமா வெளியானதா?
ஜோ: இல்லை ரதி. அவர் அப்போது மிகவும் மோசமான சூழ்நிலையில் இருந்தார். அம்மா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அதன் பிறகு போர்ச்சுகல் நாட்டில் ஆங்கிலம் கற்பிக்கச் சென்றார். அங்கே திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. கணவனிடமிருந்து பிரிந்து, தன் குழந்தையுடன் தனியாக வாழத் தொடங்கினார். அப்போது அவர் மிகவும் வறுமையில் இருந்தார். வேலை இல்லாமல், அரசாங்க உதவியில்தான் வாழ்ந்தார். அதற்கிடையில் அவர் ஹாரி பாட்டர் கதையை எழுதிக் கொண்டிருந்தார். அவர் தனது முதல் “Harry Potter and the Philosopher’s Stone” கையெழுத்துப் பிரதியை பல பதிப்பகங்களுக்கு அனுப்பினார். பன்னிரெண்டு பதிப்பகங்கள் மறுத்துவிட்டன. “குழந்தைகளுக்கு மந்திரக் கதைகள் சந்தையில் விற்காது” என்று சொல்லிவிட்டார்கள்.
நகுலன்: பன்னிரெண்டு தடவை நிராகரிப்பா?
ஜோ: அதுதான் அவரின் தன்னம்பிக்கை. “இது தான் என் வாழ்க்கையின் கதை” என்று நம்பி தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருந்தார். இறுதியில் ஒரு சிறிய பதிப்பகம் ஏற்றுக்கொண்டது.
ரதி: அப்புறம் என்ன நடந்தது?
ஜோ: 1997-ல் ஹாரி பாட்டர் முதல் பாகம் வெளிவந்தது. ஆரம்பத்தில் ஆயிரம் பிரதிகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டன. ஆனால் படிப்படியாக பள்ளி மாணவர்கள் அதை விரும்ப ஆரம்பித்தார்கள். செய்தித்தாள்கள், விமர்சகர்கள் எல்லாரும் பாராட்டினார்கள். அடுத்தடுத்து பாகங்கள் வெளிவந்தன. உலகம் முழுவதும் குழந்தைகள் ஹாரி பாட்டர் கதையை ஆவலுடன் காத்திருந்தனர்.
ரதி: ஹாரி பாட்டர் மொத்தம் எத்தனை பாகங்கள்?
நகுலன் : ஏழு பாகங்கள். நான் மூன்று பாகங்கள் வாசித்திருக்கிறேன். இரண்டு படங்களும் பார்த்திருக்கிறேன்.
ஜோ: அருமை நகுலா! ஹாரி பாட்டர் தொடர் உலகின் மிகவும் அதிகம் விற்கப்பட்ட குழந்தைகள் நாவல். உலகம் முழுவதும் 500 மில்லியன் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. அது மட்டும் இல்லாமல் 80க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
ரதி: வாவ்! அப்படின்னா நாவலே ஒரு உலக சாதனையா?
ஜோ: கண்டிப்பாக! ஹாரி பாட்டர் புத்தகங்கள் இவ்வளவு பிரபலமாக இருந்ததால், உலகம் முழுவதும் “ஹாரி பாட்டர் கலாசாரம்” உருவானது. குழந்தைகளும் பெரியவர்களும் ஒரே மாதிரி ரசிக்க ஆரம்பித்தார்கள்.
நகுலன்: ஹாரி பாட்டர் படமும் சாதனை செய்திருக்கிறதா?
ஜோ: நல்ல கேள்வி நகுலா. ஹாரி பாட்டர் திரைப்படத் தொடர் உலகின் மிகவும் வசூல் செய்த திரைப்படத் தொடர்களில் ஒன்று. எல்லா படங்களையும் சேர்த்துப் பார்த்தால், பில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது. உதாரணமாக Harry Potter and the Deathly Hallows – Part 2 படம் மட்டும் வெளியான முதல் நாளிலேயே உலக சாதனை படைத்தது.
நகுலன்: ஜே. கே. ரௌலிங் உலகின் பணக்கார எழுத்தாளர்களில் ஒருவராக மாறிவிட்டார் தானே அத்தை.
ஜோ: மிகச் சரியாகச் சொன்னாய் நகுலா! ஜே.கே. ரௌலிங் உலகின் மிகவும் பணக்கார எழுத்தாளர்களில் ஒருவர் ஆனார். அவர் எழுதிய ஹாரி பாட்டர் நாவலால் எழுத்தாளர் உலகில் புதிதாக ஒரு உயரத்தை எட்டினார். ரௌலிங் “Forbes” பத்திரிகை பட்டியலில், “பில்லியனராக மாறிய முதல் எழுத்தாளர்” என்ற பெருமையையும் பெற்றார்.
ரதி: அதனால் ரௌலிங் மட்டும் இல்லாமல், அவர் உருவாக்கிய ஹாரி பாட்டரும் உலக சாதனையே!
ஜோ: ஆம் ரதி. ஹாரி பாட்டர் நாவலும், திரைப்படமும், எழுத்தாளரின் வாழ்க்கையும்—மூன்றும் சேர்ந்து உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
நகுலன்: வாவ்! இப்போ எனக்கு ரௌலிங் மேல் ரொம்ப மதிப்பு வந்துவிட்டது.
ஜோ: அதுதான் இன்றைய பாடம். முயற்சி, கற்பனை, நம்பிக்கை இருந்தால், உலக சாதனைகள் கூட உங்களை வந்து சேரும்.
ரதி : நான் வாசிக்க போகிற அடுத்த புத்தகம் ஹாரிபட்டார். பார்க்கப் போகிற அடுத்த படம் ஹரி பட்டர்.
ஜோ: கண்டிப்பாக நீ வாசிக்கனும்.
ரதி: அத்தை, அவருடைய கதையில் மாயாஜாலத்தை தாண்டி நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏதாவது இருக்கிறதா?
ஜோ: மிகச் சிறந்த கேள்வி ரதி.
கனவு காணுங்கள்.
எத்தனை தடைகள் வந்தாலும் விடாமல் முயற்சி செய்யுங்கள்.
நிராகரிப்புகள் வந்தாலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்.
தன்னம்பிக்கை இருந்தால் எதையும் வெல்லலாம்.
இவையெல்லாம் இருக்கின்றன.
நகுலன்: அப்படியானால் நாமும் எத்தனை தடைகள் வந்தாலும் கைவிடக்கூடாது.
ஜோ: சரி நகுலா! அதுதான் ரௌலிங் அவர்களின் வாழ்க்கை சொல்லும் மிகப் பெரிய பாடம்.
ரதி, நகுலன் : நன்றிங்க அத்தை!

சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.
1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும்,
100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.
த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.




Comments