top of page

பாப்பி பூந்தோட்டம்


இம்மாதம் 'லண்டனிலிருந்து அன்புடன்' தொடரில், பிரிட்டனின் புகழ்பெற்ற எழுத்தாளர் மைக்கேல் மார்பர்கோ (Michael Morpurgo) அவர்களின் “பாப்பி பூந்தோட்டம்” (Poppy Field) என்ற புத்தகத்தைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.


இது உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு கற்பனைக் கதை. அழகிய ஓவியங்களுடனும், உண்மையான மனிதர்களைப் பற்றிய சுவாரசியமான குறிப்புகளுடனும் இந்தப் புத்தகம் வெளியாகியிருக்கிறது.


பாப்பி மலர் என்றால் என்ன தெரியுமா? அது செம்பருத்திப் பூவைப் போன்ற சிவந்த நிறம் கொண்ட ஒரு அழகான மலர். இங்கிலாந்தில் மட்டுமல்லாமல் ஐரோப்பா முழுவதிலும், போரில் உயிரிழந்த அல்லது காயமடைந்த வீரர்களின் நினைவாக இந்த மலர்களை அணிவது வழக்கம்.


கடந்த நூற்றாண்டில், அதாவது 1900 முதல் 2000 வரையிலான காலத்தில் நமது உலகம் இரண்டு பெரிய போர்களைச் சந்தித்தது. 1914-இல் முதலாம் உலகப் போரும், 1939 - 1945 காலத்தில் இரண்டாம் உலகப் போரும் நடந்து பலரைக் கவலைக்குள்ளாக்கின. “பாப்பி பூந்தோட்டம்” புத்தகம் அந்தப் போர்களைப் பற்றித்தான் பேசுகிறது.


இந்தக் கதை 2005-ஆம் ஆண்டில் நடக்கிறது. மார்ட்டென்ஸ் எனும் சிறுவன், அவனுடைய கதையை நம்மிடம் சொல்லத் தொடங்குகிறான். பெல்ஜிய நாட்டிலுள்ள 'ஃப்லான்டர்ஸ்' (Flanders, Belgium) ஊரில்தான் அவன் வசிக்கிறான். அவனது குடும்பத்திற்குச் சொந்தமான அந்தப் பாப்பி பூந்தோட்டம் பத்திப் பேச அவனுக்கு ரொம்பப் பிடிக்குமாம். அந்த ஊரில் அவர்களது குடும்பம் மட்டும்தான் பல வருடங்களாக இந்தப் பாப்பி பூந்தோட்டத்தை வளர்த்து வருகிறார்கள்.


ஆனால், அந்தப் பூந்தோட்டம் மிகவும் அழகாக இருந்தாலும் அது ஆபத்தான இடமும்கூட! எதனாலத் தெரியுமா? முதலாம் உலகப் போர் நடந்தபோது, அங்கு ரகசியமாக மண்ணுக்கு அடியில் குண்டுகளைப் புதைத்து வைத்திருந்தனர். அப்படிப் புதைத்து வைத்திருந்த ஒரு குண்டு பல ஆண்டுகள் கழித்து வெடித்ததில்தான் மார்ட்டென்ஸின் அப்பா இறந்துவிட்டார்!

இவ்வளவு ஆபத்தான இடத்தில்தான் அவர்கள் இன்றும் வசித்து வருகிறார்கள். அது ஏன்? அந்த காரணத்தை, கதையாக அவனது தாத்தா எப்படிச் சொன்னாரோ, அப்படியே இந்தப் புத்தகம் மூலம் நமக்கும் சொல்கிறான் மார்ட்டென்ஸ்.


அது மார்ட்டென்ஸின் கொள்ளுப் பாட்டியான மேரியின் கதை. முதலாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது மேரி வெறும் எட்டு வயதுச் சிறுமிதான். போர் நடந்த காலத்தில், அவர்களது ஊருக்கு அருகில்தான் காயமடைந்த வீரர்களுக்கான மருத்துவ முகாம் இருந்தது. அங்கு சென்று தனது வீட்டிலிருந்து கோழி முட்டைகளை எடுத்து விற்பது மேரியின் வழக்கம். அப்படி அவள் செல்லும்போது, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்பி, அவர்களுக்காகப் பாப்பி மலர்களையும் பறித்துச் செல்வாள்.


அப்படி ஒரு நாள் அவள் சென்றபோது, அங்கிருந்த ஒரு வீரர் காகிதத்தில் எதையோ எழுதிவிட்டு, "இது வேண்டாம்" என்று கசக்கி எறிந்துவிட்டார். அப்பெல்லாம் காகிதம் என்பது தீ மூட்டப் பயன்படும் ஒரு முக்கியமான பொருள் என்பதால், மேரி அதை எடுத்துப் பார்த்தாள். அதில் ஆங்கிலத்தில் ஏதோ எழுதியிருந்தது.


அப்பொழுது அந்த வீரர், "என் நண்பனுக்காக இதை எழுதினேன்; ஆனால், என் மனதுக்கு இது சரியா வரலை" என்றார் கவலையாக. உடனே மேரி, "உங்கள் நண்பர் எங்கே?" என்று கேட்டாள்.


அவரோ ஒரு மண் மேட்டைக் காட்டிவிட்டு, "அவன் நேற்று இறந்துவிட்டான்... முடிந்தால் அந்த மணல் மேட்டில் என் சார்பாக இந்தப் பாப்பி மலர்களை வைத்துவிடு" என்றார்.


இந்தச் சம்பவம் சிறியவளான மேரி மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவள் வீட்டிற்குச் சென்று அந்தத் தாளைப் பெற்றோரிடம் காட்டினாள். அவர்களது மொழி டச்சு என்பதால், ஆங்கிலம் தெரிந்தவர்கள் மூலம் அதைப் படிக்கச் செய்து தெரிந்துகொண்டார்கள்.


போர் ஏற்படுத்திய சோகத்தைச் சொல்லும் ஒரு கவிதை அது! அதை வாசித்துவிட்டு அவர்களது குடும்பமே கண்ணீர் விட்டு அழுதது. அதன் பிறகு, அந்தக் கவிதையைத் தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக அவர்கள் நினைத்தார்கள். வீட்டிலிருந்த பழைய கண்ணாடித் துண்டுகளைக் கொண்டு அதை அழகிய பிரேம் செய்து சுவரில் மாட்டினார்கள். ஒரு கடவுள் போலப் போற்றிப் பாதுகாக்கத் தொடங்கினார்கள்.


அந்தக் கவிதையிலுள்ள ஒவ்வொரு வரியும் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதுமட்டுமல்ல, மேரியின் திருமணத்திற்கும் அந்தக் கவிதையே ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது!


மேரிக்குப் பிறகும் அந்தக் கவிதை தங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறது என்றும், இவ்வுலகில் போரில் மறைந்த ஒவ்வொருவருக்கும் நமது தோட்டத்தில் ஒரு பாப்பி மலரும், அது போரற்ற ஓர் உலகைக் காணும் என்ற தாத்தாவின் நம்பிக்கையோடு அந்தக் கதை முடிகிறது.


இது ஒரு கற்பனை கதை என்றாலும், பல உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே இக்கதையை எழுதியிருக்கிறார் ஆசிரியர். இந்தக் கதை எழுத காரணமாக இருந்த கவிதை இதுதான்,


In Flanders Fields


In Flanders fields the poppies blow

Between the crosses, row on row,

That mark our place; and in the sky

The larks, still bravely singing, fly

Scarce heard amid the guns below.


We are the Dead. Short days ago

We lived, felt dawn, saw sunset glow,

Loved and were loved, and now we lie,

In Flanders fields.


Take up our quarrel with the foe:

To you from failing hands we throw

The torch; be yours to hold it high.

If ye break faith with us who die

We shall not sleep, though poppies grow

In Flanders fields.


இந்தக் கவிதையை வாசித்தவுடன் என் மனதில் தோன்றியது இதுதான்,

போர்க் களத்தில் சிதறும் குண்டுகள் மத்தியிலிருந்த பாப்பி மலர்கள் சொல்லும் செய்தி ஒன்றே ஒன்றுதான்: போரற்ற உலகம் அமைப்போம், அன்புடன் ஒன்றாய் வாழ்வோம்..


என்ன குட்டீஸ்! நான் சொல்வது சரிதானே!


பஞ்சு மிட்டாய் பிரபு
பஞ்சு மிட்டாய் பிரபு

தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page