top of page

வளர்வோம்... வளர்ப்போம்! பகுதி-4 உணர்வின் விதை


ஒரு குழந்தை கடைக்குச் செல்கிறது. தனக்குப் பிடித்தமான பொம்மையைக் கேட்கிறது. பெற்றோர் வாங்கித் தர மறுக்கிறார்கள். உடனே அழுகை, கூச்சல், தரையில் அமர்ந்து பிடிவாதம்,குழந்தை உருண்டு புரள்கிறது. 

பெற்றோருக்கு இது ஒரு சங்கடமான சூழல். சுற்றியிருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கவலையும் ஏற்படுகிறது. உடனே, “சரி, அழாதே! வாங்கித் தருகிறேன்” என்று குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிவிடுகிறார்கள் அல்லது கதறக் கதற தர தரவென இழுத்து செல்கிறார்கள்.


“அழுதால் எதுவும் கிடைக்காது!” “கோபப்படக் கூடாது!” “நல்ல குழந்தைகள் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள்!” இப்படி நாம் குழந்தைகளிடம் அடிக்கடி பயன்படுத்தும் இந்த வார்த்தைகள், அவர்களின் உணர்வுகளை மாற்றிவிடுமா? அல்லது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு  அவர்களுக்குத் தயக்கத்தை ஏற்படுத்துமா?குழந்தைகள் இதை எப்படி புரிந்து கொள்வார்கள்?

இங்கே நாம் கவனிக்க வேண்டியது, புரிந்து கொள்ள வேண்டியது, என்னவென்றால், அழுகையும் கோபமும் தான் குழந்தையின் மொழி. நாம் தான் அவர்களுக்கு உணர்வுகளைக் கையாளக் கற்றுக்கொடுக்க வேண்டும்.


அந்தக் குழந்தை தனது ஏமாற்றத்தை எப்படிக் கையாள்வது என்று இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. குழந்தையின் அழுகையும் கோபமும் வெறும் பிடிவாதத்தின் வெளிப்பாடுகளோ, நடத்தைக் குறைபாடோ அல்ல. அவை பல நேரங்களில் தன்னுடைய தேவைகள், ஏமாற்றங்கள், பயங்கள், இயலாமைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் தொடர்பு வழிகளாகவே இருக்கின்றன.

உணர்வுகளை வெளிப்படுத்துவது இயல்பு; அவற்றை அடக்குதல்  ஆபத்து. அவற்றை முறையாகக் கையாளக் கற்றுக்கொள்வதே வளர்ச்சி.


ஏன் குழந்தைகள் இவ்வளவு கோபப்படுகிறார்கள்?


ஒரு குழந்தை கோபப்படும்போது, நாம் பெரும்பாலும் அதன் நடத்தையையே கவனிக்கிறோம். ஆனால் அந்தக் கோபத்திற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம்.


1.தன்னுடைய விருப்பம் நிறைவேறாததால் ஏற்படும் ஏமாற்றம்.

2.மற்றவர்கள் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என்ற உணர்வு.

3.பசி, தூக்கமின்மை அல்லது உடல் சோர்வு.

4.விளையாட்டில் தோல்வியடைந்ததால் ஏற்படும் விரக்தி.

5.மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடப்படுவதால் ஏற்படும் மன அழுத்தம்.

6.தன்னால் ஒரு செயலைச் செய்ய முடியாததால் ஏற்படும் இயலாமை.


சிறு குழந்தைகளுக்கு உணர்வுகளை அடையாளம் கண்டு, அவற்றை வார்த்தைகளால் வெளிப்படுத்தும் திறன் அந்த வயதில் முழுமையாக வளர்ந்திருக்காது. அதனால் சில நேரங்களில் அவர்களின் உணர்வுகள் அழுகையாகவோ, கோபமாகவோ, பொருட்களை வீசுவதாகவோ வெளிப்படலாம்.


மூளையின் வளர்ச்சியும் உணர்ச்சிக் கட்டுப்பாடும்


குழந்தைகளின் உணர்ச்சிகளைக் கையாளும் திறனைப் புரிந்துகொள்ள, அவர்களின்  மூளை வளர்ச்சி முறையை  அறிந்துகொள்ள வேண்டும்.

மூளையின் உணர்ச்சிசார் செயல்பாடுகளில் அமிக்டலா (Amygdala) முக்கியப் பங்கு வகிக்கிறது. திட்டமிடுதல், முடிவெடுத்தல், சுயக்கட்டுப்பாடு போன்ற செயல்பாடுகளுக்கு முன்மூளைப் புறணி (Prefrontal Cortex) உதவுகிறது.


இந்த மூளைப் பகுதிகளின் செயல்பாடுகளும் அவற்றுக்கிடையேயான தொடர்புகளும் குழந்தைப் பருவத்திலிருந்து இளம்பருவம் மற்றும் இளமைப் பருவம் வரை தொடர்ந்து வளர்ச்சியடைகின்றன. இருபது வயதில் தான் அந்த மூளைப் பகுதியின் வளர்ச்சி முழுமை அடையும்.


எனவே, பெரியவர்கள் அளவிலான உணர்ச்சிக் கட்டுப்பாட்டை ஒரு சிறு குழந்தையிடமிருந்து நாம்  உடனடியாக எதிர்பார்க்க முடியாது.எனவே குழந்தை கோபப்படும்போது, “உன்னால் ஏன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை?” என்று கேட்பதைவிட, “கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?” என்று கற்றுக்கொடுப்பதே அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். உணர்வுகளை அடக்குவதல்ல; கையாளக் கற்றுக்கொடுப்பதே உணர்வின் விதை!


குழந்தை கோபப்படும்போது நாம் செய்யும் முதல் தவறு, அந்த உணர்வை உடனடியாக நிறுத்த முயற்சிப்பது

“அழாதே!”

“கோபப்படாதே!”

“சத்தம் போடாதே!”

“ஒழுங்காக நடந்துகொள்!”


இப்படி அடக்குவதற்குப் பதிலாக, குழந்தையின் உணர்வை ஏற்றுக்கொண்டு, நடத்தைக்கான எல்லையைத் தெளிவுபடுத்த வேண்டும். உதாரணமாக:

குழந்தை: “எனக்கு அந்தப் பொம்மை வேண்டும்! இப்போதே வேண்டும்!”

பெற்றோர்: “உனக்கு அந்தப் பொம்மை மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் விலை மிக மிக அதிகம். அதை உடனே வாங்க முடியாததால் உனக்குக் கோபம் வருகிறது என்று புரிகிறது. ஆனால் இன்று நிச்சயம் நாம் அதை வாங்கப் போவது இல்லை. உனக்கு கோபமாக இருந்தால் என்னிடம் பேசலாம். உன் எண்ணங்களை வெளிப்படையாக சொல்லலாம்; பிறரை அடிக்கவோ,பொருட்களை வீசவோ, கத்தவோ கூடாது.”


இந்த அணுகுமுறை குழந்தைக்கு இரண்டு முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொடுக்கும்:


1.என்னுடைய உணர்வுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

2.என்னுடைய நடத்தைக்கு சில எல்லைகள் இருக்கின்றன.


எவ்வாறு கோபத்தைக் கையாளக் கற்றுக்கொடுப்பது?


1. குழந்தையின் உணர்வுக்கு ஒரு பெயர் கொடுத்து தான் அனுபவிக்கும் அந்த உணர்வை அடையாளம் காண உதவுங்கள்.

“உனக்கு ஏமாற்றமாக இருக்கிறதா?”

“நண்பன் விளையாட அழைக்காததால் வருத்தமாக இருக்கிறதா?”

“வகுப்பில் ஆசிரியர் திட்டும்போது பயமாக இருந்ததா?”

இது விழிப்புணர்வை (Emotional Awareness) வளர்த்து, தனது உணர்வை அங்கீகரிக்க  உதவும்

2. உடனடி அறிவுரை வழங்காதீர்கள்

குழந்தை கோபத்தின் உச்சத்தில் இருக்கும்போது நீண்ட விளக்கங்களோ, கேள்விகளோ பயனுள்ளதாக இருக்காது.

முதலில் அமைதியாக அருகில் இருங்கள். பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். கைகளைப் பிடித்தபடி அல்லது தோளில் சாய்த்தபடி குழந்தைக்கு அமைதியாக சிறிது நேரம் கொடுங்கள்.

3. உணர்வுகளை வெளிப்படுத்த மாற்று வழிகளைக் கற்றுக்கொடுங்கள்

கோபம் நம்மைப் பாதுகாக்கும், நம் எல்லைகளை உறுதிப்படுத்தும் மிக அழகான உணர்வு. கோபம் வந்தால் அடிப்பதற்குப் பதிலாகப் பேசலாம்; கத்துவதற்குப் பதிலாக ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடலாம்; தன்னுடைய உள்ளக் குமுறலை ஒரு தாளில் எழுதி பிறகு கிழித்துப் போடலாம். உணர்வுகளை ஓவியமாகக் கூட வரையலாம்.

4. தெளிவான எல்லைகளை அமைத்துக் கொடுங்கள்

கோபப்படுவதற்கு அனுமதி உண்டு. ஆனால் தன்னையோ பிறரையோத் துன்புறுத்துவதற்கு அனுமதி இல்லை.

“உனக்குக் கோபம் வரலாம்; அதற்கு எந்தத் தடையும் இல்லை. உணர்வைக் கட்டுப்படுத்தத் தேவை இல்லை. ஆனால் நடத்தைக்கு எல்லை உண்டு” என்ற அணுகுமுறை அவசியம்.

5. அமைதியான பிறகு உரையாடுங்கள்

குழந்தை அமைதியான பிறகு, என்ன நடந்தது, எது கோபத்தை ஏற்படுத்தியது, அடுத்த முறை என்ன செய்யலாம் என்பதைப்பற்றிப் பேசுவது பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்க்கும்.


வயதுக்கேற்ற உணர்ச்சிக் கையாளும் பயிற்சிகள்


2–6 வயது:

1.உணர்வுகளைக் காட்டும் படங்கள் அல்லது முகபாவனை அட்டைகளை அறிமுகப்படுத்தி, (மகிழ்ச்சி, சோகம், கோபம், பயம் போன்ற)உணர்வுகளை அடையாளம் காணச் சொல்லுதல்

2.கதை மற்றும் பொம்மலாட்டத்தின் மூலம் “இந்தக் கதையில் உள்ள குழந்தைக்குக் கோபம் வந்தால் என்ன செய்யலாம்?” என்று சிந்திக்கக் கற்றுத் தருதல்


6–13 வயது:

1.கோபம் ஏற்படுத்தும் சூழ்நிலைகளை அடையாளம் காணவும், மூச்சுப் பயிற்சி, விளைவுகளை எண்ணிப் பார்த்துப் பேசுதல் போன்ற உத்திகளைக் கற்றுக்கொடுத்தல்

2.நண்பர்கள், பள்ளி, மதிப்பெண்கள், சமூக ஒப்பீடுகள் போன்றவற்றால் ஏற்படும் உணர்வுகளைத் திறந்த மனதுடன் பகிர்ந்துகொள்ள ஊக்குவித்தல்,அவர்களின் கருத்துகளையும் தனியுரிமையையும் மதித்து அவர்கள் பேச வாய்ப்பளித்தல்

அனைவரும் ஒரே வேகத்தில் உணர்ச்சிகளைக் கையாளக் கற்றுக்கொள்வதில்லை. எனவே, வயதையும் வளர்ச்சி நிலையையும் கருத்தில் கொண்டு நாம் அணுக வேண்டும்.


குழந்தைகள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள எளிய போக்குவரத்து விளக்கு முறை:


சிவப்பு – நிறுத்து!


கோபம் வந்தவுடன் அடிப்பது, கத்துவது, பொருட்களை வீசுவது போன்ற செயல்களை நிறுத்த வேண்டும்.


மஞ்சள் – யோசி!


எனக்கு ஏன் கோபம் வந்தது? என்ன உணர்கிறேன்? என்னால் இப்போது என்ன செய்ய முடியும்? என்று சிந்திக்க வேண்டும்.


பச்சை – செயல்படு!


ஆழமாக மூச்சுவிடுதல், உதவி கேட்பது, உணர்வுகளை வார்த்தைகளில் கூறுவது போன்ற சரியான வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த மூன்று படிகளையும் ஒரு வண்ண விளக்குப் படமாக வரைந்து குழந்தையின் அறையில் ஒட்டலாம். கோபம் ஏற்படும் தருணங்களில் பெற்றோரும் குழந்தையும் இணைந்து இதைப் பயன்படுத்தலாம்.


பெற்றோர்களும் பெரியவர்களும் உணர்வு மேலாண்மைக்கு முன்மாதிரியாக இருப்பது அவசியம்.குழந்தை கோபப்படும்போது பெற்றோரும் கோபப்பட்டால், அந்தச் சூழல் மேலும் தீவிரமடையலாம்.


“நான் சொன்னதைக் கேட்கவில்லை என்றால் அடிப்பேன்!” என்று கோபத்துடன் கூறும் பெற்றோர், குழந்தை கோபத்திலும் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு முரண்!


குழந்தைகள் பெற்றோரின் வார்த்தைகளைக் காட்டிலும் அவர்களின் செயல்பாடுகளைத்தான் அதிகம் கவனிக்கிறார்கள்.அதையே அவர்களும் செய்து பார்க்கிறார்கள்.


பெற்றோருக்குக் கோபம் வரும்போது, “இப்போது எனக்குக் கோபமாக இருக்கிறது. நான் கொஞ்சம் அமைதியாகிவிட்டு உன்னிடம் பேசுகிறேன்” என்று கூறுவது கூட ஒரு சிறந்த முன்மாதிரி தான்.


எப்போது கூடுதல் கவனம் தேவை?


குழந்தைகளுக்குக் கோபம் வருவதும் அழுவதும் இயல்பு தான். இருப்பினும், அடிக்கடி ஏற்படும் தீவிரமான கோபம், பழி வாங்கல் உணர்ச்சி, தன்னையோ மற்றவர்களையோ காயப்படுத்தும் செயல்கள், நீண்டகாலமாகத் தொடரும் உணர்ச்சி மாற்றங்கள், பள்ளி மற்றும் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் நடத்தை மாற்றங்கள் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும்.


அவற்றை வெறும் பிடிவாதம் என்று ஒதுக்கிவிடாமல், குழந்தையின் வயது, வளர்ச்சி நிலை, சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு குழந்தை உளவியலாளர் அல்லது தகுந்த மனநல நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.



நிறைவாக...


நாம் குழந்தைகளுக்குக் கோபமே வராத வாழ்க்கையை உருவாக்கித் தர முடியாது. ஆனால் கோபம் வந்தாலும் அதை ஆரோக்கியமாகக் கையாளும் திறனை நிச்சயமாகக் கற்றுக்கொடுக்க முடியும்.

உணர்வுகளை அடக்கக் கற்றுக்கொடுக்காமல் உணர்வுகளைப் புரிந்துகொள்ளக் கற்றுக்கொடுப்பது அவர்கள் வாழ்வினை மேம்படுத்தி,உள்ளும் புறமும் அமைதியான சூழலுக்கு வழிவகுக்கும்.

                                         

 -வளரும்


உளவியல் ஆலோசகர் (Counseling Psychologist) மற்றும் 'InnerCircle Nurturing Minds' அமைப்பின் நிறுவனர் ஆவார். குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் (Child & Adolescent) உளவியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவர், சான்றிதழ் பெற்ற பள்ளி ஆலோசகராகவும், வாழ்க்கை முறை திறன் பயிற்சியாளராகவும் (Life Skills Trainer) பணியாற்றி வருகிறார்.

உளவியல் ஆலோசனை மற்றும் திறன் பயிற்சிகளில் சுமார் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், ‘மகிழ் பதின்’ (Teen Psychology) புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். மாணவர்களின் மனநலம், ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்காக 1,500-க்கும் மேற்பட்ட அமர்வுகளையும் (Sessions),

1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தனிப்பட்ட ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page