தத்துவம் அறிவோம் - 20

கட்டுக்கதைகளின் தாய் கற்பனை.
கட்டுக்கதை என்றால் என்ன?
ஹோமோ சேப்பியன்ஸ் என்ற பகுத்தறிவுள்ள மனிதன் தோன்றிய போதே கட்டுக்கதைகளும் தோன்றிவிட்டன.
எப்படி?
அனைத்து விலங்குகளுக்கும் தங்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ள குறிப்பிட்ட ஒலிக்குறிப்புகள், உறுமல்கள், சீற்றம், பல்லிளிப்பு, முனகல், முக்கல், உடல்மொழியில் மாற்றம் என்று விதவிதமாக வெளிப்படுத்துவதைப் பார்க்கலாம். காகம் உணவைக் கண்டதும் கரைகிறதே!
நாய் மற்றொரு நாயைக் கண்டதும் பற்களைக் காட்டி உறுமுகிறதே!
ஆபத்து வந்தால் பூனை வாலை நட்டமாய் தூக்குகிறதே!
இப்படி ஒவ்வொரு விலங்கும் தங்களுடைய உணர்வுகளை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த குறிப்பிட்ட உடல், குரல், சைகைகளைப் பயன்படுத்தின. இவை எல்லாம் அவற்றின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொண்டவை.
உணவு, தாகம், இணை சேருதல்,போன்ற வாழ்க்கையின் அடிப்படையான நோக்கங்களுக்காக உருவானவை.
இவற்றில் பொய்யோ, புனைவோ, கற்பனையோ கிடையாது.
சரியா!
ஆனால் மனித இனம் தோன்றிய பிறகு மூளை என்னும் உறுப்பில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன.
இந்த மாற்றங்களின் விளைவாக மூளையில் புதிய குணாதிசயங்கள் உருவாயின.
அவை என்ன?
முதலாவதாக இயற்கையிலிருந்து விலகி நின்று இயற்கையின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் பகுத்தறிவு தோன்றியது.
இரண்டாவதாக கற்பனை என்ற புதிய செயல்பாடு தோன்றியது.
கற்பனை என்றால் என்ன?
மூளையில் ஞாபகசக்தி என்ற உணர்வு வளர்ச்சியடைந்தது.
விலங்குகளுக்கும் ஞாபகசக்தி இருக்கும். எப்படி என்றால், உணவு கிடைக்குமிடம் ஞாபகத்துக்கு வரும், நாய்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு உணவு தேடி வரும். குறிப்பிட்ட நேரத்தில் உணவு கிடைக்கும் என்றால் அந்த நேரத்துக்குக் காகங்கள் வரும்.
ஆனால் அதற்கும் மனிதனின் ஞாபகசக்திக்கும் வேறுபாடு உண்டு. என்ன வேறுபாடு? மனிதன் மட்டுமே பார்த்த, அனுபவித்த, உணர்ந்த அனுபவங்களிலிருந்து புதிய காட்சிகளை, புதிய உணர்வுகளை, புதிய திட்டங்களை உருவாக்குகிறான்.
விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஞாபகசக்தி என்பது எளிமையான செயல்பாடாக இருக்கும். சீக்கிரத்தில் மறந்தும் விடும். அணில் தான் சேகரிக்கும் கொட்டைகளைப் பூமியில் குழி தோண்டி புதைத்து வைத்து விட்டு மறந்து விடும்.
அதேபோல காகம் உணவை ஒளித்து வைக்கும். ஆனால் இடத்தை மறந்து விடும்.
ஆனால் மனிதனின் மூளையில் அவனுடைய குழந்தைப்பருவம் முதல் முக்கியமான அனைத்து நிகழ்ச்சிகளும் உணர்வுகளும் ஞாபகத்தில் இருக்கும்.
உங்களுடைய குழந்தைப்பருவத்தில் நடந்த நிகழ்ச்சிகளை இப்போதும் நினைவுபடுத்த முடியும்.
இந்த ஞாபக சக்தியினால் நாம் பார்க்கும் காட்சிகளும் அனுபவிக்கும் உணர்வுகளும் மூளையில் சேகரமாகிக் கொண்டேயிருக்கும்.
அந்தக் காட்சிகளும், உணர்வுகளும் கனவிலும் நனவிலும் வேறு ஒன்றாக மாறி வந்தன.
விலங்குகளும் கனவு காணும். ஆனால் அந்தக் கனவுகள் மிக எளிமையாக இருக்கும். உணவு, ஆபத்து, தற்காப்பு, போன்ற உணர்வுகளையே பிரதிபலிக்கும்.
நீங்கள் காணும் கனவுகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.
எல்லாம் குழம்பிக் குழம்பி வருகிறது அல்லவா?
மூளையின் செயல்பாடுகளில் ஒன்றான தேவையில்லாத காட்சிகளை, உணர்வுகளை நீக்குவது நடக்கும்போது காட்சிகள் மாறி மாறி வருகிறது.
அந்தச் செயல்பாடுகளின் தொடர்ச்சியாக மனிதன் விழித்திருக்கும்போது மூளை புதிய காட்சிகளை உருவாக்கியது.
உணர்வுகளைப் பகுத்து நுட்பமாக மாற்றியது. பசி, தாகம், இணைச்சேர்க்கை, போன்ற அடிப்படை உணர்வுகள் பல்லாயிரம் உணர்ச்சிகளாக மாறியது.
கோபம், அன்பு, நட்பு, நேசம், பக்தி, உத்வேகம், லட்சியம், அவமானம், மனஅழுத்தம், பாசம், தன்மானம், மரியாதை, அவமரியாதை இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
கடந்த காலத்தை மீண்டும் யோசித்தது. ஆய்வு செய்தது. அதே போல நிகழ்காலத்தையும் ஆய்வு செய்தது,இரண்டுக்கும் இடையிலான காரணகாரியத் தொடர்பை உருவாக்கியது.
அப்படிக் காரண காரியத்தைக் கண்டுபிடிக்க முடியாதபோது தற்செயல் என்றோ, அதிசயம், அற்புதம் என்றோ நினைத்தது மூளை.
கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யூகித்தது.
அதற்காகத் திட்டங்களை உருவாக்கியது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
முக்கியமான விஷயத்தை மறந்து விடக் கூடாது.
மூளை என்ற உறுப்பில் ஐம்புலன்கள் ஏற்படுத்திய உணர்வுகளின் பாதிப்பினால் தான் மேலே சொன்ன அத்தனைச் செயல்பாடுகளும் நடந்தன என்பதை மறந்து விடக் கூடாது.
முதலில் ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில் இருந்த மூளை கொஞ்சம் கொஞ்சமாக ஐம்புலன்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைய ஆரம்பித்தது.
இவை எல்லாம் ஒரு ஆண்டு இரண்டு ஆண்டுகளில் நடந்து விடவில்லை லட்சக்கணக்கான ஆண்டுகளாக நடந்த மாற்றங்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மூளையில் நடந்த மாற்றங்களின் விளைவாக உருவான மிக உயர்ந்த, மிகச் சிறந்த உணர்வு தான் கற்பனை.
இந்தக் கற்பனை தான் அனைத்துக் கட்டுக்கதைகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும், மனிதர்களை அடிமைப்படுத்தும் ஆதிக்கத்துக்கும் காரணம்.
நல்லதுக்கும் காரணம் அதுதான். கெட்டதுக்கும் காரணம் அது தான்.
மனிதர்கள் நல்லவர்களாக இருப்பதற்கும் கெட்டவர்களாக இருப்பதற்கும் அதுவே காரணம் என்றால் நம்ப முடிகிறதா?
( அறிவோம் தத்துவம்)
200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.
சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்
பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்
விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.







சிறப்பு மகிழ்ச்சி 💐
Very good
Very good