top of page

குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குவோம்!


ஏப்ரல் 14 அன்று காலை மணி ஏழு ஆகிவிட்டிருந்தது. எனது குழந்தைகள் இருவரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் எழுப்பி விடுங்கள். பொழுது விடிந்து எவ்ளோ நேரமாச்சு? என்று இணையர் சொல்லிக் கொண்டிருந்தார். 


நான் இருவரையும் பெயர் சொல்லி எழுந்திருக்கச் சொன்னேன். அப்போது இளையவள், கண்ணைத் திறக்காமலே, “இன்னைக்கு லீவு” என்றாள். 


“அதுக்கு?“ என்றேன். 


“லீவுன்னா ஸ்கூலுக்குப் போகத் தேவையில்ல. அதனால லேட்டா எந்திரிச்சா போதும்” என்று கண்ணைத் திறக்காமலே பதில் சொல்லிவிட்டு படுத்திருந்தாள். 


அவளுக்கு உறக்கம் அதற்கு மேல் வரவில்லை. ஆனாலும் லீவு என்றால் எழுந்திரிக்க தேவையில்லை என்ற விசயம் மண்டைக்குள் உட்கார்ந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. 

பள்ளிக்கு விடுமுறை என்றால் எல்லாமே மாறுகிறது. காலையில் சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டியதில்லை. சாப்பிடுவது உள்பட எல்லாமே நேரம் தவறிச் செய்யலாம் என்றொரு புரிதல். அதை ஒருவிதத்தில் குழந்தைகள் அவர்களுக்கான சுதந்திரம் என்றுகூட புரிந்து கொண்டிருக்கக்கூடும். 


ஒருநாள் என்றால் பரவாயில்லை. இது தொடரும் போது வீட்டிலுள்ள எல்லாருக்கும் பெரும்பாலான நேரங்களில் சிரமமாகக்கூடும். 


 பள்ளி நாட்கள் என்றால் காலை எழுந்து கிளம்புவதற்கு நேரம் சரியாக இருக்கும். அதனால் டிவி போடுவது இல்லை. செல்போனை எடுப்பதும் இல்லை. 


விடுமுறை என்றதும், காலையிலிருந்தே டிவியை பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள். இது பல வீடுகளில் இயல்பான ஒன்றாக இருக்கக்கூடும். தொடக்கத்தில் லீவு நாள்தானே என்று அனுமதிப்பதும், பின்னர் அதுவே பழக்கமாகிவிடுவதும் இயல்பானதுதான். எதையுமே தொடக்கத்தில் சரிசெய்யாவிட்டால் அன்றாடப் பழக்கமாகிவிடும் அல்லவா? 


பள்ளி நாட்களில் எப்போதாவது மாலை அல்லது இரவு நேரங்களில் அலைபேசியில் நேரம் செலவிட குழந்தைகள் கேட்பதுண்டு. கொஞ்சநேரம் எனக் கெஞ்சி வாங்கி ரீல்ஸ் பார்ப்பதுண்டு. ஆனால் விடுமுறை நாள் என்றால் அலைபேசியைக் கேட்பதில்லை. நம் கையில் இருந்து பிடுங்கிக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள். நம் பிள்ளைகள்தானே என்று கொஞ்சநேரம் எனக் கொடுத்துவிட்டால், அவர்களிடமிருந்து அலைபேசியை வாங்குவது ரெம்ப கடினமாகி விடுகிறது. 

இதற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும்?


யாராக இருக்கக்கூடும்? 


முதல்நாள் இரவே தூங்கப் போகும் முன்னோ, அல்லது இரவு உணவின் போதோ நாம் பேசாமல் விட்டது. 


எதைப் பேசுவது?


காலையில் எத்தனை மணிக்கு எந்திரிப்பது…

அன்றைய நாளில் என்ன செய்வது? 

என்னென்ன செய்ய வேண்டியது இருக்கிறது…

என்ன கற்றுக் கொள்ளப் போகிறோம்? 

எங்கு போகலாம்? 


இதையெல்லாம் குழந்தைகளோடு உரையாடலாம். அப்போது குழந்தைகள் மனதில் நாளைய தினம் இதையெல்லாம் நாம் செய்யப் போகிறோம் என்று ஏற்கனவே பதிந்துவிடும். அதற்கேற்ப அவர்களும் தயாராகிக் கொள்வார்கள். நமக்குத் தோன்றுகிற நேரம் ஒன்றைச் சொல்லும் போதுதான் அச்செயலில் குழந்தைகள் ஈடுபாடு காட்டுவதில் சிரமப்படக்கூடும். 


குழந்தைகள் படிக்கும்போது அவர்களின் கூடவே இருந்து வழிநடத்துவதும், கண்காணிப்பதையும் செய்யும் பெற்றோர் மற்ற காரியங்களில் குழந்தைகளுடன் இருப்பதை விரும்புவதில்லை. படிப்பிற்கு அதிக நேரத்தைச் செலவிட வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் குழந்தைகளின் படிப்புக்காக ஒதுக்குகின்ற நேரத்தைப் போலவே அவர்களுடன் விளையாடவும் நேரம் ஒதுக்க வேண்டும். முடிந்தால் அவர்களின் படிப்புக்கு உதவுவதற்காகச் செலவிடும் நேரத்தைவிட, கூடுதலான நேரத்தை விளையாடுவதற்காகப் பெற்றோர் ஒதுக்க வேண்டும் என்பது குழந்தைகளின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கிறது. 


இதில் எல்லாவிதப் பெற்றோர்களும் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட வாய்ப்பிருக்காது. சில வீடுகளில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கக்கூடும். அதற்கான மாற்று வழிகளையும் நாம் கண்டடையலாம். அப்படிப்பட்ட நேரங்களில் எப்போது வீட்டில் இருக்கிறோமோ? அப்போதெல்லாம் நேரம் செலவழிக்க முயற்சிக்கலாம்.  


விளையாட்டில் குழந்தைகளுடன் ஒன்றாக நேரத்தைச் செலவிடுவது அவர்களுடன் நெருக்கமான உறவை பேண உதவும். குழந்தைகள் ஒன்றாக விளையாடும் போது, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதோடு அவர்களின் மன அழுத்தமும் குறைகிறது. அதுமட்டுமல்லாமல் ஒருவருக்கொருவர் மிக இயல்பாக பல்வேறு விசயங்கள் குறித்து உரையாடல்களை நிகழ்த்தும் வாய்ப்பையும் பெறுகின்றனர். இப்படி மகிழ்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தும் போது அவர்கள் குடும்பத்தோடு ஒன்றிணைகின்றனர். 


குறிப்பாக குழந்தைகள் பெற்றோருடன் அதிக நேரம் விளையாடும் போது குழந்தைகள் அவர்களிடமிருந்து அதிக அறிவைப் பெறுகின்றனர். ஏனென்றால் விளையாடுவது என்பது வெறும் கேளிக்கை சார்ந்த விஷயமாக மட்டும் இல்லாமல், பெற்றோர் தங்களது அறிவையும் அனுபவங்களையும் தங்கள் குழத்தைகளிடம் கடத்துவதற்கான களமாகவும் அமைந்து விடுகிறது. அதனால் மின்னணு சாதனங்கள் இல்லாமல் ஒருமணி நேரத்தை குழந்தைகளுடன் செலவிட்டுப் பாருங்கள். எத்தனை மகிழ்ச்சிகரமான சூழல் உங்களுக்குக் கிடைக்கிறது என்று. 


பின்னர் தினமும் ஒருமணி நேரப் பழக்கமாகவும் இதனை மாற்றுவதற்கு முயற்சி செய்யலாம். தொடக்கத்தில் இதைக் கடினமாக உணர்ந்தாலும் அன்றாடச் செயல்பாடுகளில் ஒன்றாகவே நாள்பட மாறிவிடும். 


அதன் பிறகு குழந்தைகளோடு குழந்தைகளாக நாமும் நமக்குத் தெரிந்த விளையாட்டில் நடை போடுவோம்…


விளையாட்டின் நோக்கத்தினையும், அதன் காரணத்தையும் அறியச் செய்யும் வகையில் தொடர்ந்து உரையாடுவோம்…


இது பல வகையில் நம் மனங்களுக்குப் புத்துணர்ச்சியையும், குதுகலத்தையும் கொடுக்கும்!

மிக முக்கியமாக, சமூகத்தில் பிறருடன் இணக்கமாக குழந்தைகள் பழகும் வாய்ப்பினை விளையாட்டின் வழியாகக் கற்றுக் கொடுக்க முடியும். 


இதை எல்லாவற்றையும்விட, குழந்தைகள் அலைபேசி உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்களின் மீதான அதீத ஆர்வத்தினை கைவிட துணை புரியும். தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாட்டினை படிப்படியாக குறைக்கவும் வழி வகுக்கும். 


குழந்தைகள் ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சி மிக்கவர்களாக மிளிர்வார்கள் என்பதிலும் ஐயமில்லை!  


குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குவோமா…?


ரெடியா நீங்க? 


என்னது எப்போதிருந்தா…?


இன்னைக்கே ஆரம்பிங்க!


மு.தமிழ்ச்செல்வன்
மு.தமிழ்ச்செல்வன்

இவர் சமூகம், அரசியல், கல்வி, ஊடகம், விமர்சனம் எனப் பல தலைப்புகளில் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை எழுதி வருகிறார். இளைய தலைமுறையினரிடம் பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எளிமையாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் எழுதி வருகிறார். இவரின் சிறுகதை, சிறார் கதைகள் பல்வேறு இதழ்களில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஊடகக்கல்வி, எழுத்தாற்றல், மேடைப் பேச்சாற்றல் உள்ளிட்ட பயிற்சிகளை 400 க்கும் மேற்பட்ட பல்வேறு குழுக்களுக்கு வழங்கியிருக்கிறார்.

பட்டாசுத் தொழிலாளிகள் துயர்மிக்க வாழ்வியலை மையமாகக் கொண்ட கரிக்காசு இவரது முதல் நாவல். இவர் இதுவரை 20 நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.


1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
May 15
Rated 5 out of 5 stars.

மிக அருமையான தலைப்பு. குழந்தைகளுடன் நேரத்தை செலவழிப்பது என்பது ஒரு அத்தியாவசியமான தேவையாக இன்றைய காலகட்டத்தில் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நேரத்தை செலவிடும்போது குழந்தைகள் புத்துணர்ச்சி அடைவது மட்டுமல்ல மனரீதியாகவும் உடனடியாகவும் ஆரோக்கியம் அடைகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்ச்செல்வன் எழுதியிருக்கும் கட்டுரை ஆனது மிகவும் அருமையாக உள்ளது. இரவு தூங்குவதற்கு முன் குழந்தைகளோடு பேசுவது என்பதும் அடுத்த நாட்களுக்கான திட்டம் என்ன என்பதை கேட்டு அதற்கேற்ற வழியில் நடந்து கொள்வது என்பது அவசியமானது. வாழ்த்துகள் தமிழ்ச்செல்வன் தொடர்ந்து இது போன்ற கட்டுரைகள் இன்றைய பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவை என்பதை உங்கள் கட்டுரையை உணர்த்துகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

Like
bottom of page