top of page

அறிவோம் ஆளுமை - ஜவஹர்லால் நேரு

24 hours ago
4 min read

ஜோ: வணக்கம் செல்லங்களே! நவம்பர் 14 என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது?


நகுலன்: குழந்தைகள் தினம்!


ரதி: பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடுவோம். பேச்சுப் போட்டி

விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் எல்லாம் இருக்கும்.


ஜோ: சரி. ஆனால் ஒரு கேள்வி. நவம்பர் 14-ஐ ஏன் குழந்தைகள் தினமாகக்

கொண்டாடுகிறோம்? யாருடைய பிறந்தநாள் அது?


நகுலன்: நேருமாமாவின் பிறந்தநாள்!


ஜோ: மிகச் சரி! ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள்தான் நவம்பர் 14.

அவருடைய பிறந்தநாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம்.


ரதி: நேருமாமா 1889ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி, அன்றைய அலஹாபாத்

நகரத்தில் பிறந்தார். இன்று அந்த நகரம் பிரயாக்ராஜ் என்று அழைக்கப்படுகிறது. அது உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கிறது.

அவருடைய தந்தையின் பெயர் மோதிலால் நேரு. அவர் புகழ்பெற்ற வழக்கறிஞர்.


தாயின் பெயர் ஸ்வரூப் ராணி நேரு. நேருவுக்கு விஜயலட்சுமி பண்டிட், கிருஷ்ணா ஹத்தீசிங் என்ற இரண்டு சகோதரிகள் இருந்தனர்.


நகுலன்: குழந்தைகள் தினத்திற்காக பேச்சுப் போட்டிக்குப் படித்ததை ஒப்பிக்கிறாயா?


ரதி: ஆமாம்! அப்படியே வைத்துக்கொள். அவரைப் பற்றி நீ என்ன தெரிந்து

வைத்திருக்கிறாய்?


நகுலன்: சிறுவயதில் வீட்டிலேயே கல்வி கற்றார். புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். அறிவியல், இயற்கை, வரலாறு போன்ற விஷயங்களில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. சிறிது காலம் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். அவருடைய ஆரம்பக் கல்வி பெரும்பாலும் வீட்டிலேயே நடைபெற்றது. தனிப்பட்ட ஆசிரியர்கள் அவருக்குப் பாடம் கற்பித்தார்கள். அவருடைய ஆசிரியர்களில் ஒருவர் ஃபெர்டினாண்ட் டி. புரூக்ஸ். அந்த ஆசிரியர் நேருவுக்கு அறிவியல் மற்றும் தத்துவத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தினார். எப்படி? நானும் பேச்சுப் போட்டியில் இருக்கிறேன்.


ரதி: ஹ! ஹ! ஹ! தெரியுமே!


அத்தை ஒரு சந்தேகம். நேருமாமா எந்த மாதிரியான புத்தகங்களை வாசித்தார்?


ஜோ: சிறுவயதில் சார்லஸ் டிக்கன்ஸ், மார்க் ட்வைன், எச்.ஜி. வெல்ஸ் போன்ற

எழுத்தாளர்களின் நூல்களை வாசித்தார். ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. புத்தகப் புழு என்று சொல்லலாம்! ஆனால் அவர் வெறும் புத்தகங்களை வாசித்துவிட்டு நிற்கவில்லை. வாசித்தவற்றைப் பற்றிச் சிந்தித்தார்.


உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.


ரதி: அத்தை! சிறிது காலம் மட்டும்தான் பள்ளிக்குச் சென்றாரா? அதன் பிறகு அவர் பள்ளிக்கூடத்திற்கோ கல்லூரிக்கோ சென்று படிக்கவில்லையா?


ஜோ: நேரு 1905ஆம் ஆண்டு, அவருக்கு சுமார் 15 வயதாக இருந்தபோது,

இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே ஹாரோ பள்ளியில் படித்தார். பின்னர்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் படித்தார். 1910ஆம் ஆண்டு அறிவியல் பட்டம் பெற்றார். அதன் பிறகு லண்டனில் சட்டம் படித்தார்.


1912ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். அலஹாபாத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.


ஜோ: 1912ஆம் ஆண்டு பாங்கிபூர் காங்கிரஸ் கூட்டத்தில் பிரதிநிதியாகப்

பங்கேற்றார். 1916ஆம் ஆண்டு மகாத்மா காந்தியை முதன்முதலில் சந்தித்தார்.

காந்தியின் எளிமை, மக்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்பு, அகிம்சை வழியில் போராடும் சிந்தனை ஆகியவை நேருவை மிகவும் கவர்ந்தன.

அவருடைய அரசியல் பயணம் படிப்படியாக வளர்ந்தது.


ரதி: அதன் பிறகுதான் மக்களோடு மக்களாக, மக்களுக்க்காக போராடினாரா அத்தை?


ஜோ: ஆம், விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை மக்கள் ஆகியோரின்

பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளத் தொடங்கினார்.


1920ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளுடன் இணைந்து

பணியாற்றினார். விவசாயிகளின் போராட்டங்களில் பங்கேற்றார். மக்களின்

வாழ்க்கையை நேரில் பார்த்த அனுபவம் அவருடைய அரசியல் சிந்தனையை

மாற்றியது. அதன் பிறகு கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்தார்.

விவசாயிகளின் பிரச்சினைகளைக் கேட்டார். ஒரு நாட்டின் தலைவராக இருக்க விரும்புபவர் அந்த நாட்டின் மக்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார்.


நகுலன்: நேருமாமா ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் போன்ற

போராட்டங்களில் பங்கேற்றார். உப்புச் சத்தியாகிரகத்திற்கும் ஆதரவு அளித்தார்.


வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார். 1929ஆம் ஆண்டு லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முழுச் சுதந்திரம் என்ற தீர்மானம் நிறைவேறுவதில் நேருமாமா முக்கியப் பங்கு வகித்தார்.


ஜோ: 1921ஆம் ஆண்டு அவருடைய முதல் சிறைவாசம் தொடங்கியது. பின்னர்

பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதற்காக மீண்டும் மீண்டும் சிறையில்

அடைக்கப்பட்டார்.


நேரு சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஒன்பது முறை சிறையில் அடைக்கப்பட்டார்.


மொத்தம் 3,259 நாட்கள் சிறையில் இருந்தார்.


ரதி: அவ்வளவு நாட்கள் சிறையில் இருந்தாரா? அத்தை அவர் சிறையில் இருந்தபோது தன் மகள் இந்திராவிற்கு எழுதிய கடிதம் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறதே. அந்தக் கடிதத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?


ஜோ: ஒரு தந்தை தனது மகளுடன் நேரில் பேச முடியாத சூழலில், கடிதங்கள் வழியாக அவளுக்குக் கல்வி கற்பிக்கத் தொடங்கினார். 1928ஆம் ஆண்டு நேரு எழுதிய முதல் 30 கடிதங்கள், அவர் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டவை அல்ல. அப்போது நேரு அலஹாபாத்திலும், பத்து வயது இந்திரா முசோரியிலும் இருந்தார். இருவரும் நேரில் பேச முடியாததால் கடிதங்கள் எழுதினார்.


அந்தக் கடிதங்கள் பின்னர் 'தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்' என்ற நூலாக

வெளியானது. சிறையில் இருந்த போதும் நிறைய கடிதங்கள் எழுதினார்.


ரதி: அந்தக் கடிதங்களில் என்ன எழுதினார்?


நகுலன்: சாதாரணமாக, “சாப்பிட்டாயா? படித்தாயா? உடல்நலம் எப்படி?” என்று மட்டும் எழுதவில்லை.


அவர் தன்னுடைய மகளுக்கு உலகத்தை அறிமுகப்படுத்தினார்.


பூமி எப்படி உருவானது?


உயிரினங்கள் எப்படித் தோன்றின?


மனிதர்கள் எப்படி வளர்ச்சி அடைந்தார்கள்?


நாகரிகங்கள் எப்படி உருவாகின?


உலகின் பல நாடுகள் எப்படி வளர்ந்தன?


வரலாற்றை நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

இவற்றைப் பற்றி மிகவும் எளிமையாகவும் சுவாரசியமாகவும் எழுதினார்.


ரதி: நேரு மாமாவைப் பற்றிய இவ்வளவு தகவல்களை, நீ எங்கிருந்து படித்தாய்?

எனக்கு இது கிடைக்கவில்லையே! ஒரு அப்பா தன் மகளுக்கு இவ்வளவு பெரிய பாடம் நடத்தினாரா?


ஜோ: ஆம். அவர் ஒரு தந்தையாக மட்டுமல்ல, ஒரு ஆசிரியராகவும் இருந்தார். அவர் இந்திராவிடம் உலக வரலாற்றைப் பற்றி எழுதும்போது, இந்தியாவை மட்டும் அறிந்தால் போதாது. உலகின் மற்ற மக்களையும், அவர்களின் வாழ்க்கையையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற சிந்தனையை வளர்த்தார்.


நகுலன்: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேருமாமா தானே?


ரதி: ஆம். இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 1964ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி வரை பிரதமராகப் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில்தான் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால் நிறைய பிரச்சினைகள் இருந்தன.


நகுலன்: பரவாயில்லையே நீ கூட நிறைய படித்திருக்கிறாய் போலிருக்கிறதே!

போட்டி பலமாகத்தான் இருக்கும் போல இருக்கிறதே!


ரதி: இன்னும் சொல்கிறேன் கேள்! சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் வளர்ச்சிக்காக நேருமாமா பல முக்கியமான திட்டங்களைக் கொண்டு வந்தார். 1950-ல் திட்டக்குழு உருவாக்கப்பட்டது. ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் நாட்டின் வளர்ச்சியைத் திட்டமிட்டார்.


ஜோ: அசத்தல் ரதி. நிறைய வாசித்திருக்கிறாய், வாழ்த்துகள். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் விவசாயம், பாசன வசதி, கிராம வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இரண்டாவது திட்டத்தில் தொழில்துறை வளர்ச்சிக்கும், கனரகத் தொழிற்சாலைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பிலாய், ரூர்கேலா, துர்காபூர்

போன்ற இடங்களில் எஃகு ஆலைகள் உருவாக்கப்பட்டன. அணைகள், மின்சார

உற்பத்தி, பொதுத்துறை நிறுவனங்கள் எனப் பல வளர்ச்சிப் பணிகள்

முன்னெடுக்கப்பட்டன.


நகுலன்: அப்படியென்றால் விவசாயத்தையும் தொழில்துறையையும் ஒரே நேரத்தில் வளர்க்க முயற்சி செய்திருக்கிறார்!


ஜோ: ஆமாம். அதுமட்டுமல்ல, அறிவியல் கல்விக்கும் ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். ஐஐடி கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ் மருத்துவ நிறுவனம், அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனங்கள் என இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கான அடித்தளங்கள் உருவாக்கப்பட்டன.


சர்வதேச அளவிலும் நேரு மிக முக்கியமான தலைவராக விளங்கினார். எந்த

வல்லரசின் கட்டுப்பாட்டிலும் இந்தியா இருக்கக் கூடாது என்று விரும்பினார்.

அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் போன்ற நாடுகளின் அதிகாரப் போட்டியில்

சேராமல், இந்தியா தனித்துவமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றார்.


நகுலன்: அதுதான் அணிசேராக் கொள்கையா?


ஜோ: சரியாகச் சொன்னாய்! அணிசேராக் கொள்கையின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக நேரு விளங்கினார். உலக நாடுகளுக்கிடையே அமைதி நிலவ வேண்டும்,


போர்கள் தவிர்க்கப்பட வேண்டும், நாடுகள் ஒன்றுக்கொன்று மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார். ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் சுதந்திரத்திற்கும் ஒத்துழைப்புக்கும் ஆதரவளித்தார்.


ரதி: பிரிவினை, மதக்கலவரங்கள், அகதிகளின் மறுவாழ்வு, வறுமை, கல்வியின்மை, பொருளாதாரப் பற்றாக்குறை என மிக நெருக்கடியான காலகட்டம் அது. இத்தனை சவால்களுக்கிடையிலும் இந்தியாவை ஜனநாயகப் பாதையில் வழிநடத்தவும், வளர்ச்சிக்கான அடித்தளங்களை அமைக்கவும் நேரு தொடர்ந்து முயன்றார்.அதனால்தான் இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கத் தொடங்கியது.


நகுலன்: என்ன ரதி இப்படி மூச்சுவிடாமல் சொல்கிறாயே! நான் இன்னும் நிறைய வாசிக்க வேண்டும்.


ஜோ: ஆமாம். ரதி மிகச் சிறப்பு. சுதந்திரம் பெற்ற புதிய நாடாக இருந்த இந்தியா,

உலக நாடுகளிடையே தனக்கென ஒரு குரலை உருவாக்கியது. இந்தியாவின்

சுதந்திரமான சிந்தனையையும், அமைதிக் கொள்கையையும், ஜனநாயகத்தையும் உலகம் கவனிக்கத் தொடங்கியது. நேருவின் சர்வதேசப் பங்களிப்பும் இதில் முக்கியமானது.


ரதி: நேரு மாமாவைப் பற்றி இவ்வளவு தெரிந்துகொண்ட பிறகு, அவரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?


நகுலன்: ஒரு நாட்டை வழிநடத்துவதற்கு அரசியல் அறிவு மட்டும் போதாது. வரலாறு, அறிவியல், பொருளாதாரம், இலக்கியம், உலக நாடுகளின் பண்பாடு எனப் பல துறைகளிலும் பரந்த அறிவு தேவை. நேருமாமா பல்வேறு துறைகளைப் படித்தவர்.


உலகத்தைப் புரிந்துகொள்ள முயன்றவர். சரிதானே அத்தை?


ஜோ: ஆமாம் செல்லங்களே!


நாமும் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். கேள்வி கேட்க வேண்டும்.


சிந்திக்க வேண்டும். உலகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய அறிவை விரிவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மாலும் நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க முடியும்.


நகுலன்: நேரு மாமாவின் பிறந்தநாளை ஏன் குழந்தைகள் தினமாகக்

கொண்டாடுகிறோம்?


ஜோ: நேரு மாமாவிற்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும். குழந்தைகளும்

இளைஞர்களும் கல்வி பெற வேண்டும் என்பதில் அவர் மிகுந்த கவனம் செலுத்தினார்.


குழந்தைகள் நாட்டின் எதிர்காலம் என்று நம்பினார்.1964ஆம் ஆண்டு நேரு

மறைவுக்குப் பிறகு, அவருடைய பிறந்தநாளான நவம்பர் 14ஆம் தேதியை

இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள் செல்லங்களே!


நகுலன், ரதி: நன்றி அத்தை!



சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.

1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட

 பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.

த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page