பயந்தாங்கோலி சிங்கம்... இளவரசனும் மந்திர மோதிரமும்...
- கனகா பாலன்
- Apr 15
- 2 min read

பயந்தாங்கோலி சிங்கம்- எழுத்தாளர் - சே.யுவராஜ் (ஐந்தாம் வகுப்பு)
நூல்-இளவரசனும் மந்திர மோதிரமும் - எழுத்தாளர்- ஆ.கௌதம் சந்திரன்.
" எம் புள்ளைங்கள நாங்கூட இப்படி பக்கத்துல உட்கார வச்சி பேசியிருக்கமாட்டேன், ஆனா எங்க முகிலன் சார் தான் பத்து வயசுல எம்மகனை ஒரு எழுத்தாளரா அடையாளம் காணவச்சாரு, எப்பவுமே அவருக்கு எங்க குடும்பம் நன்றி சொல்லக் கடைமைப்பட்டிருக்கு" குரல் தழுதழுக்க எழுத்தாளர் யுவராஜ் அவர்களின் அம்மா தன் மகிழ்வினைப் பகிர்ந்தபோது அத்தனை நெகிழ்ச்சியாக இருந்தது.
வகுப்பறைப் பாடங்களை மட்டுமல்லாது வெளியுலகத்தை நோக்கி குழந்தைகளின் பார்வை எவ்வளவு கூர்ந்துள்ளது என்பதை அனைத்து ஆசிரியர்களாலும் தனித்தறிய முடிந்தாலும், அவை நல்லனவாகவும், அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்குமாயின் அதற்கொரு நல்ல வழிகாட்டலாக இருந்து, அக்குழந்தைகளை இவ்வுலகத்திற்கு புகழ்தரக்கூடிய புதியவராக அடையாளப்படுத்துபவர்கள் சிலரே. அவ்வகையில் தம்பணிக்கு உண்மையுள்ளவராக பிற ஆசிரியர்களுக்கு உதாரணமாகவும் இருக்கிறார், நல் ஆசிரியரும் எழுத்தாளருமான மதிப்புமிகு முகிலன் அவர்கள். இனிய வாழ்த்துகள்.
சிங்கம் னா எந்நேரமும் உர்ர்ன்னு இருக்கனும், பிற மிருகங்களோட சண்டை போட்டு ஜெயிக்கனும், அப்புறம் யானை, புலி, குரங்கு, மான் இன்ன பிற எல்லா மிருகங்களுக்கும் ராஜாவா இருக்கனும் அப்படிங்குற மாறாத விதியை மாத்திப் பார்த்தா எப்படி இருக்கும்னு சொல்றதுதான் இந்த
"பயந்தாங்கோலி சிங்கம்" என்ற நூல்.
இந்த நூலின் ஆசிரியரான யுவராஜ், ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.
'அமைதி ஒரு நாளும் கோழைக்குரிய அடையாளம் அல்ல' , 'வாழ்க்கையில் நிதானம் ரொம்ப முக்கியம்' ஆகிய கருத்துகள் கதையின் கருக்களாக அமையப்பெற்று ஒரு கதையாக வடிமேற்றிருக்கிறது இந்நூல். நூலாசிரியருக்கு எனது வாழ்த்துகள்.
****
குழந்தைகள் பேசும் ஒரு சொல்லுக்கு கூட இனிமை உண்டு. அதுவே அவர்கள் ஒரு விசயத்தை கதையாக உருவகித்து நம்மிடம் பகிரும் போது அவர்களின் உலகம் நம் கண் முன் கொஞ்சம் கொஞ்சமாக விசாலமாகிக்கொண்டே வருவதை பெருமையோடு காணுதல் எத்தனை கொடுப்பினை இல்லையா?
அப்படியாகத்தான் 'இளவரசனும் மந்திர மோதிரமும்' என்று நூலுக்கு தலைப்பிட்டு ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவன்,
ஒரு நூலாசிரியராக உயர்ந்திருக்கிறார். அவரது பெயர் ஆ.கௌதம் சந்திரன்.
இவ்வுலகில் எல்லாம் எல்லோருக்கும் கிடைக்கும் என்பதில்லை. ஆனால் கிடைத்தவற்றைக் கொண்டு தன்னைச் செழுமைப்படுத்திக் கொள்ளுதல் எல்லோராலும் சாத்தியமாக்கிவிட முடியும் என்பதுகூட சந்தேகம்தான்.
எழுத்தாளர் கௌதம் அவர்களின் கதையில் " ஒருவர் அடுத்தடுத்து புரியும் நற்செயல்கள் மற்றும் அதனால் உண்டாகும் பலன்கள் குறித்து எழுதியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல அவர் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் நிறைவாக வாழவேண்டுமென்று விரும்புகிறார். அந்த சின்னஞ்சிறு மனதில் இப்படியொரு சிந்தையை விதைத்தது அவரது தாய்மாமாவாகவும் இருக்கலாம் என்பதை அவர்களோடான உரையாடலால் புரிய வந்தது.
ஒரு குழந்தை, தான் வளரும் சூழலை எப்படியெல்லாம் கிரகித்து அதன்படி தனது பண்பினை, குணத்தினை, செயல்பாடுகளை உருவமைத்துக் கொள்கிறதென்பதற்கு உதாரணம் தான் இந்த எழுத்தாளர் என்று எண்ணத் தோணுகிறது.
மேற்கூறிய இரண்டு நூல்களும் மிகச் சிறப்பு. இரு நூலாசிரியர்களுக்கும் பாராட்டுகள்.
மிக முக்கியமாக தன்னிடம் கல்வி கற்கும் மாணவர்களிடம் 'இன்னும் இன்னும் உங்களால் முடியும்' என்று உற்சாகப்படுத்தி வழிகாட்டும் ஆசிரியர் ச.முகிலன் போன்ற மற்ற ஆசிரியர்களுக்கும் நல்வாழ்த்துகள்





Comments