top of page

நம்மீதும் பொழியட்டும் எழுத்து மழை


மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்கவுள்ள காலத்தில் அதற்கு ஏதுவான ஒரு நூலை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சிதான். அப்படியென்ன புத்தகம்? என்றுதானே யோசிக்கிறீர்கள். இயல் வாகை பதிப்பகத்திலிருந்து வெளியாகியுள்ள ‘ குட்டி இயலும் சுட்டி யானையும்’ என்கிற நூல்தான் அது.


கோடை விடுமுறை என்பது இப்போதெல்லாம் முன்பு போலல்ல. வெகு ஆர்வத்தோடு இவ்விடுமுறையை எதிர்பார்க்கும் குழந்தைகளுக்கு சில நாட்களிலேயே அவை அவ்வளவு உவப்பானதாக இருப்பதில்லை. வீட்டிலிருந்து வெளியே வந்து கூடி விளையாட வாய்க்காத தருணம், உறவினர் இல்லங்களுக்கு செல்வதில் உள்ள சிக்கல், அப்படியே சென்றாலும் உரையாடல்களற்று தொலைபேசியிலும் தொலைக்காட்சிகளிலும் கழியும் காலம் என இப்போதைய குழந்தைகளின் விடுமுறைக் காலங்கள் இயல்புகள் திரிந்து காணப்படுகின்றன. பள்ளி வளாகத்திலிருந்து வெளியேறிய குழந்தைகள், விடுமுறை காலம் முழுவதும் வீட்டுச் சிறையினில் அடைபடும் துயரமே எஞ்சுகிறது.


குழந்தைகள் தனது சிறகுகளை விரிக்க இயலாத அழுத்தத்தினை பிடிவாதமாகக், குறும்புகளாக வெளிப்படுத்திக் கொள்ள முனையும்போது பெற்றோர்கள் ‘சம்மர் களாஸ்’ என்கிற அஸ்திரத்தை பிரயோகிக்கத் துவங்கிவிடுகின்றனர்.


நாடுகளுக்கிடையேயான போரினை விட்டு விடுவோம். வீட்டில் நடைபெறும் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையேயான கண்ணுக்குத் தெரியாத இப்போரினை சச்சரவுகள் ஏதுமின்றி தீர்த்துக் கொள்ள எளிய வழியொன்று உள்ளது. வேறொன்றுமில்லை, அது குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை உருவாக்குவதும், வாய்ப்புள்ள தருணங்களில் குழந்தைகளோடு அமர்ந்து பற்பல கதைகளைக் கூறி ஈர்ப்பதும்தான்.


‘ குட்டி இயலும் சுட்டி யானையும்’ என்கிற சிறார் நாவல் இந்த சிக்கலைத்தான் கதையின் மையமாக வைத்து சூழலியல் பின்னணியோடு பேசுகிறது. நாவலின் முதல் அத்தியாயத்திலேயே சுட்டிக் குழந்தையான இயல் தனது ஒருநாளில் மிச்சமிருக்கும் பொழுதை என்ன செய்வதென்று தெரியாது பெற்றோர்களை இம்சிக்கிறாள். நல்லவேளை அவளின் பெற்றோர்கள் அவளின் வயதிற்கேற்ற புத்தகங்களை வைவசம் வைத்திருக்கிறார்கள்.


நடுத்தர வர்க்க குடும்பத்தை சார்ந்தவர்களாக காட்சிப்படுத்தப்படும் அவளின் பெற்றோர்கள் தங்களது அன்றாட பணிகளுக்கு பாதிப்பில்லாமல் தனது குழந்தையினையும் கவனித்துக் கொள்கிற பாங்கு ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி கதையின் தொடக்கத்தில் அவளின் அம்மா கணினியில் பணியாற்றிக் கொண்டிருக்க அவளது அப்பா சமையலறையிலிருந்து வெளிப்படுகிறார். இது குழந்தைகளின் மனதில் அவசியம் படிய வேண்டிய காட்சி பிம்பம்தானே!


கதையின் தொடக்கத்தில் இயல், நேரம் போவதே தெரியாதபடி மாலை வரை விளையாடிக் கழித்துவிட்டுத்தான் வீடு திரும்புகிறாள். இப்பதிவின் முதலிலேயே குறிப்பிட்டதைப் போல இன்றைய குழந்தைகள் பலருக்கும் கிடைக்காத வாய்ப்பு இயலுக்கு கிடைத்திருப்பதே கதையாசிரியரின் கருணை என்றே எண்ணத் தோன்றுகிறது.


வாசிப்பின் சுவையை குழந்தைகள் அறிய முடியாதபடி செய்வதே, பள்ளிகளும் அவை தரும் பாடபுத்தகங்களும் குழந்தைகளுக்குச் செய்யும் முதல் துரோகம் எனலாம். அப்படி புத்தகங்களின் மீது வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் குழந்தைகளை மெல்ல வாசிப்பின் பக்கம் நகர்த்துவதற்கு கோடை விடுமுறை்நாட்கள் பயனுள்ளவை ஆகும். குழந்தைகளில் கண்ணில் படும்படியாக அவர்களின் வாசிப்பிற்கேற்ற புத்தகங்கள் உள்ளவாறு வீட்டுச்சூழலை மாற்றுவதே பெற்றோர்கள் செய்ய வேண்டிய முதல் பணியாக இருக்க வேண்டும். இந்நாவலில் வரும் பெற்றோர்கள் அதை சரியாகவே செய்திருக்கிறார்கள்.


வேறு வாய்ப்புகளின்றிப் போனதால் கையிலொரு புத்தகத்தை எடுத்துக் கொண்ட இயலின் உலகம் அதிலிருந்து வேறொன்றாக மாறிவிடுவதை ஒவ்வொரு அத்தியாயங்களுக்குள்ளும் புகுந்து நாம் ஒற்றறிந்து கொள்கிறோம். இயலின் பின்னாகவே பயணிக்கும் நமக்கும் இதுவொரு நல்ல அணுபவமாகவே அமைகிறது.


வாசிப்பின் வழியே ஐவகை நிலங்களுக்குள்ளாக பயணமாகும் இயல் ஒவ்வொரு சூழலிலும் நெகிழி ஏற்படுத்தியிருக்கும் அபாயங்களை உணர்கிறாள். ஓ! இது வழமையான வடிவில் குழந்தைகளை சூழலியல் பாடங்களைச் சொல்லி அச்சுறுத்தும் நூல்தானோ? என எண்ணிட அவசியமில்லை.


குழந்தைகளின் மனம் ஈர்க்கும் கற்பனைகள் நிறைந்ததாக இந்நூல் அமைந்திருக்கிறது. இயல்பிற்கு முரணாகச் சிந்திப்பதே குழந்தைகளுக்கு தனது அகவுலகை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. அப்படித்தான் இந்நூலில் வெளிப்படும் பறக்கும் யானைகளும் பெரிய பெரிய எறும்புகளும் எழுத்து மழையும் வாகனத்தில் பறக்கும் பென்சில்களுமென நூல் முழுவதும் காட்சிப்படும் உலகம் குழந்தைகளின் கற்பனைகளுக்கு சரியான தீனியாகின்றன.


கதையின் போக்கில் கெளரவ வேடத்தில் ஆங்காங்கே தலைகாட்டும் சமகால சிறார் எழுத்தாளர்களான உதயசங்கர், விழியன், சரிதா ஜோ போன்றவர்கள் கார்ட்டூன் கதாபாத்திரங்களாக மிளிர்கிறார்கள். எதனோடும் பொருத்திப் பார்க்க முடியாத புதிய தமிழ் கார்ட்டூன் சித்திரங்களாக இவர்களை வாசிப்பவர்கள் தம் மனதில் இருத்திக் கொள்வார்கள். புதிய வடிவில் சமகால சிறார் எழுத்தாளர்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த இப்படியான உத்திகள் உதவக்கூடும்.


இச்சிறார் நாவலை வாசித்து மிடித்த தருணத்தில் ஒவ்வொரு நிலப்பகுதிகளுக்காக இயல் இடம்பெயரும்போதும் கூடுதல் தகவல்களோடு அப்பகுதியினை அறிமுகப்படுத்தி இருக்கலாமோ எனத் தோன்றியது. அதேசமயம் இறுதியாக தர்க்கரீதியாக பொருந்தாத தீர்வினை சொல்லாமல் தவிர்த்தது; நெகிழி குறித்த செய்திகளை இறுதியில் தகவல்களாக அளித்தது போன்றன நல்ல கூறுகள் உள்ளடங்கி இருப்பதையும் கவனிக்க முடிந்தது.


பல வண்ண காகிதங்கள், கதையின் போக்கை காட்சிப்படுத்தும் அழகான ஓவியங்கள், வாசிப்பிற்கேற்ற எழுத்துரு, புத்த வடிவம் என நேர்த்தியான படைப்பு இது.


ஒவ்வொரு வருடமும் குழந்தைகளுக்கான சிறப்பானதொரு நூலினை வெளியிடும் இயல் வாகை பதிப்பகத்தின் மற்றுமொரு சிறந்த உருவாக்கம் இந்நூல். அதுபோலவே, தனது முதல் நூலிலிருந்தே பலரின் கவனத்திற்கு உள்ளான பிரசாந்த் வே அவர்களின் நான்காவது படைப்பு இந்நூல்.


இந்த கோடை விடுமுறைகாலத்தில் வாசிப்பின் அவசியத்தை நமது குழந்தைகளிடமும் கடத்திட இந்த புத்தகத்தை முதலில் நாம் வாசிப்போம். பிறகு குழந்தைகளுக்கு அளித்திடுவோம்.


இயலுக்குப் பெய்த எழுத்தின் மழை இக்கோடையில் நம் குழந்தைகளின் மீதும் பொழியட்டும்.



க.சம்பத்குமார்
க.சம்பத்குமார்

அரசுப்பள்ளி ஆசிரியர். "பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று" என்கிற கவிதை தொகுப்பு ஒன்று எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அவிநாசி கிளை பொறுப்பாளர்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page