எட்டு ரூபாய்ப் பொட்டுக் கடலை!
- கொ மா கோ இளங்கோ

- 20 hours ago
- 1 min read

பொட்டுக் கடலை வாங்கிட
போனான் ஒரு சிறுவனே!
எட்டு ரூபாய் பையிலே
வைத்து விட்டார் அம்மாவும்!
இட்டிலியும் சுவைத்திட
பொட்டுக் கடலை சட்டினி!
சிட்டாய் பறந்து போனவன்
சீக்கிரம் வீடு திரும்பலை!
தெருக் கோடியில் இருந்திட்ட
கிணற்றை எட்டிப் பார்த்தவன்
அருகே சென்று தன்முகத்தை
ஆசை தீரப் பார்த்தானே!
கெண்டை மீன்கள் கூட்டமாய்
கிணறுக் குள்ளே ஓடின!
கண்டு அவனும் மகிழ்ந்துமே
கையை ஆட்டிக் கத்தினான்!
கையில் அள்ளி கடலையை
கிணற்றில் சிறுவன் வீசினான்!
ஐயோ பாவம் பசிக்குதா?
இந்தா என்றே கொட்டினான்!
வெறுங்கை வீசி சிரிப்புடன்
வீடு வந்த மகனிடம்,
தருமம் செய்த கதை கேட்டுத்
தாயும் முத்தம் தந்தாரே!

எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.





Comments