சிறார் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வுப் பயணத்தில் இன்னொரு அடி.

பயணம் என்றாலே குழந்தைகளுக்குப் பிடிக்கும். அதுவும் வேனில் பயணம் செய்வதென்றால் இன்னும் பிடிக்கும். வேன் முன்னேறிச் செல்லும்போது மரங்களும், மேகங்களைத் தாங்கிய வானமும் பின்னோக்கி நகர்வதைப் பார்ப்பதற்கும், காற்று முகத்தை வருடி, தலைமுடியைக் கோதிவிடுவதற்கும், ஒரு ஜன்னலோர இருக்கையைப் பிடிப்பதற்காக ஓடிச்செல்வோம். இத்தகைய குழந்தைப் பருவ நினைவுகள் இல்லாதவர்கள் இருக்க முடியுமா என்ன?
இன்றும் கூட இப்படி பயணம் வாய்க்கும் போது குழந்தைகளாக உணர்வோம்.
அப்படித்தான் கனல் என்ற சிறுமியும், தான் மேற்கொள்ளவிருக்கும் பயணத்தைப் பற்றிக் கனவுகள் காண்கிறாள். ஐந்தாம் வகுப்பு வரை உள்ளூர் பள்ளியில் படித்தாள். கராதே, சிலம்பம், பாடல், நடனம் போன்ற கலைகள், மேம்பட்ட கல்வி போன்றவை இருக்கும் ஒரு பெரிய பள்ளியில் கனலை அம்மா சேர்த்தார். தன் ஊரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் புதிய பள்ளியில் சேர்ந்திருக்கும் கனலுக்கு, வேனில் தினமும் பயணம் செய்யப் போகிறோம் என்பதே பெரிய உற்சாகத்தைத் தந்தது.
வேன் பயணம், புதிய நண்பர்கள், பெரிய கட்டிடங்கள், விசாலமான விளையாட்டுத் திடல் என்று ஒவ்வொன்றும் கனலுக்கு புதிய அனுபவமாக இருந்தது. அந்த வேனில் வருபவர்களிலேயே அவள்தான் தொலைவிலிருந்து வருகிறாள். அதனால் அவள்தான் முதலில் ஏறுவாள், கடைசியில் இறங்குவாள். அதனால் பிடித்த இருக்கையைத் தேர்வு செய்துகொள்ளலாம். போட்டியே இல்லை. கனலின் தோழி அமிர்தா அடுத்த ஊரில் ஏறுவாள். அவளுக்கு இவள் அருகில் இடம் கிடைத்துவிடும். போகும் போதும் வரும்போதும் அரட்டை அடித்துக் கொண்டே இருப்பார்கள். பச்சை வயல் வெளிகள், மயில்கள் என்று பயணம் அழகாக இருந்தது.
இப்படி பயணத்தின் அற்புதங்கள் கனலுக்கு தினமும் குதூகலத்தைக் கொடுத்தபோதிலும், ஒவ்வொரு நாளும் அவளை அச்சமும் பீடித்தது. அந்த வேன் பயணத்தின் சில நிமிடத் தனிமையில் அவள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்களே அதற்குக் காரணம்.
அதே வேனில் வரும் கிளீனர் தாத்தா, அனைவருக்கும் பிடித்த நபர். அக்கறையோடு பேசவும் அன்போடு பழகவும் செய்கிறார். கனலின் அம்மாவிடம் கூட நன்றாக பேசுகிறார். ஆனால் சில நாட்களில் பாலியல் அத்துமீறல் செய்கிறார். எல்லோருக்கும் தெரிந்த இனிமையான ஒரு முகமும், கனலுக்கு மட்டுமே தெரிந்த கோரமான இன்னொரு முகமும் கொண்டவராக இருக்கிறார் கிளீனர் தாத்தா. ஒரு குழந்தையின் உளவியல் புரிதலுக்கு அப்பாற்பட்ட இந்த முரண்பட்ட ஆளுமை, கனலை மேலும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அம்மாவுக்குத் தெரியாமல் கனல் மறைக்கும் ஒரு சின்ன ரகசியத்தில் தொடங்கி, தனிமை, பயம், குற்றவுணர்ச்சி என்று கனல் சிக்கிக்கொள்ளும் மோசமான சூழலைக் கதையின் போக்கில் விவரிக்கிறார் நூலாசிரியர்.
இந்தத் துயரச் சுழற்சியிலிருந்து கனல் விடுபட்டாளா? கனலை காப்பாற்ற வந்தது யார்? எது? என்று தெரிந்துகொள்ள நூலை வாசித்துப் பாருங்கள்.
சிறார் பாலியல் வன்கொடுமைகளில் பெரும்பாலானவை குழந்தைகளுக்கு அறிமுகமான அல்லது நம்பிக்கைக்குரிய நபர்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன. அவை நிகழும் முறையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாகவே இருக்கிறது. நாம் குழந்தைகளுக்குச் சொல்லித்தரும் ‘குட் டச்’, ‘பேட் டச்’ குறித்த புரிதல் மட்டுமே இத்தகைய சம்பவங்களைத் தடுத்துவிடப் போதுமானதல்ல. குழந்தைகளிடம் மட்டுமல்லாமல், பொதுச் சமூகத்திடமும் இதுகுறித்த போதிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டியது அவசியம். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே குழந்தைகளைக் காப்பதற்காக நாம் உடனடியாக எடுத்து வைக்க வேண்டிய முதல் அடி. அந்த வகையில் ‘கனலின் பயணம்’ துணிச்சலான மற்றும் தெளிவான ஒரு படைப்பு.
பாலியல் அத்துமீறல்கள் செய்வதற்கு முன், ஒரு குழந்தையை எவ்வாறு தயார்படுத்துகிறார்கள் என்பதை படிப்படியான நிலைகளில் விவரிக்கிறது. ஒரு கனமான கருவைக் குழந்தைகள் மொழியில், எளிய நடையில், அன்றாடக் காட்சிகளின் வழியே பேசுகிறது இந்த நூல். குழந்தைகள் தாங்களாகவே வாசிக்கவும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து வாசித்து உரையாடவும் இந்த நூல் வழிவகுக்கிறது.
இலக்கியத்தின் பெரும் பயன்களில் ஒன்று, நாம் நேரடியாக ஓர் அனுபவத்தைப் பெறாமலேயே, அந்த அனுபவத்தின் வழியே கிடைக்கும் பாடத்தைக் கற்றுக்கொள்வது. அத்தகைய பாடத்தை வாசகர்களுக்குக் கிடைக்கச் செய்யும் நூல் இது. தன்னைத் தற்காத்துக்கொள்ளவும், சக குழந்தைகளைப் பாதுகாக்கவும் இது உதவலாம். பெரியவர்கள் நம்மைச் சுற்றியிருக்கும் குழந்தைகளைப் புரிந்துகொள்ளவும், நிகழக்கூடிய சிறார் பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், ஏற்கெனவே நிகழும் அத்துமீறல்கள் தொடராமல் தடுக்கவும் இந்த நூல் உதவலாம்.
உணர்ச்சி வேகத்தில் கொந்தளித்துவிட்டு, பின்னர் அவரவர் வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடும் தமிழ் சமூகத்தை, இந்தப் பிரச்சினையை அறிவுத்தளத்தில் அணுகத் தூண்டும் ஒரு நல்ல முயற்சி எழுத்தாளர் ராஜலக்ஷ்மி நாராயணசாமியின் ‘கனலின் பயணம்’. வாசிக்கத் தூண்டும் அட்டைப்படம் மற்றும் நூலின் வடிவமைப்பு பாராட்டுக்குரியது. ஓவியர் அப்பு சிவாவின் படங்கள் கதைக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன. 2025ஆம் ஆண்டுக்கான பெண்ணெழுத்து போட்டியில் சிறந்த சிறார் புனைவு நூலுக்கான விருதைப் பெற்றுள்ள இந்த நூலை அழகியலோடு பதிப்பித்திருக்கும் ‘ஹெர் ஸ்டோரிஸ் விங்ஸ்’ பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்.
நூலின் பெயர்: கனலின் பயணம்
ஆசிரியர்: ராஜலக்ஷ்மி நாராயணசாமி
விலை: 80 /-
பக்கம்: 32
வெளியீடு: விங்ஸ்
தொடர்புக்கு: +91 96003 98660





கதை உள்ளடக்கம் மனதை பதட்டம் கொள்ள வைக்கிறது.
மாமா, சித்தப்பா, தாதாவென்று நன்கு அறிமுகமானவரிடமிருந்தே முதல் கல் எறியப்படுகிறதென்பது மனதை அலட்ட செய்கிறது. நம் விரலே நம் கண்ணை குத்துகிறது...
குழந்தைகள் நாட்டின் எதிர்காலம் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் ஒவ்வொரு அத்துமீறல்களும் நாட்டின் மீது தாக்குதல் நடைபெற்றதற்கு சமம்.
குழந்தைகளின் நலனில் அக்கறையுள்ள, இத்தகைய நல்ல படைப்பை அளித்த ஆசிரியருக்கு பாராட்டுகள்.