top of page

வண்ணங்களினூடே ஓர் காலப் பயணம்


குழந்தைகள் புதுவருடம் தொடங்கியதும் புதிய நாட்காட்டியில் தேடிப் பார்க்கும் நாளாக இருப்பது, தீபாவளிப் பண்டிகை எப்போது? என்பதுதானே! இந்த ஆண்டு கூட, குழந்தைகள் தம் நினைவுகளில் தூக்கிச் சுமந்த தீபாவளியை இந்த கடந்த வாரம்தான் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள்.

தீபாவளி என்றாலே புத்தாடையும் இனிப்பும் பட்டாசும் இல்லாமல் இல்லை. ஆனால் சென்ற தலைமுறையோடு ஒப்பிடுகையில் இன்றைய குழந்தைகளின் தீபாவளி கொண்டாட்டங்களில் சில மாறுதல்களை காண முடியும். ஊரே அதிரும் வண்ணம் வெடிச்சத்தம் எழுப்பும் வெடிகளை பகலெல்லாம் வெடித்துக் கிடந்த பழைய குழந்தைகள் இப்போது பெரியவர்களாகி விட்டார்கள். அத்தகைய வெடிகளும் இன்றைய குழந்தைகளுக்கு உவப்பானதாக இல்லை.


இன்றைய குழந்தைகளின் தீபாவளி பகலெல்லாம் ஒடுங்கிக் கிடக்கிறது. இரவிலோ வெகு ஆர்ப்பாட்டமாகத் தொடங்கிவிடுகிறது. வெடிகளில் ஆர்வம் காட்டாத குழந்தைகளின் உள்ளம் வானத்தில் வர்ணஜாலம் காட்டும் வெடி வகைகளுக்கு மயங்கிக் கிடக்கின்றனர். சின்ன விசில் சத்தத்தோடு மேலெழும் வானவெடி ஆகாயத்திற்குச் சென்றதும் சட்டென சிதறி எண்ணற்ற வண்ணங்களைப் பொடிப்பொடியாகத் தூவி நட்சத்திரங்களெனத் தரையிறங்குகையில் குழந்தைகளின் உள்ளம் விரிந்து பரவுகிறது ஆகாயத்தில்.


இதுமட்டுமல்ல, மயில்தோகையென விரியும் வண்ணங்கள், மணித்துளிக்குள் வண்ண வண்ணப் பூக்களாய் மலர்ந்து உதிரும் வெடிகள் என வகைவகையான பட்டாசுகள் குழந்தைகளின் மனம் ஈர்க்கின்றன.

பட்டாசு மட்டுமின்றி நாம் தேர்ந்தெடுக்கும் புத்தாடை, இனிப்பு என தீபாவளி

பண்டிகை முழுவதின் உள்ளடக்கமாக வண்ணங்களே முதன்மையாக இருக்கிறது.


மனித மனங்களிடையே இன்னமும் அறுபடாத விருப்பமாய் வண்ணங்களின் மீதான ஈர்ப்பு தொடர்ந்து வருவதையே இப்படியான தருணங்களின் வழியே நாம் உணர்ந்து கொள்ள முடியும்.


தீபாவளி மட்டுமின்றி வாழ்வின் எல்லா தருணங்களிலும் மனித வாழ்வோடு ஒன்றிப் பிணைந்துள்ள நிறங்களைப் பற்றி நாம் எப்போதாவது ஆழமாக சிந்தித்திருப்போமா?


சந்தேகந்தான். ஆனால், தற்சமயம் புதிதாக வெளியாகியுள்ள ‘நிறங்கள்’ என்கிற புத்தகத்தின் வழியே ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு அவர்கள் நிறங்கள் குறித்த ஆழமான பல தகவல்களை தந்திருக்கிருக்கிறார்.


தகவல்களாக வாசிப்பதைக் காட்டிலும் காலப் பயணமாக நிறங்களோடு பயணிப்பது குழந்தைகளுக்கு மறக்கமுடியாத நல்ல அனுபவமாக இருக்கும் என்கிற புரிதலோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. ஆகவே ஓவியர் தியானேஸ்வரன் படைத்துள்ள கால இயந்திரம் தயாராக காத்திருக்கிறது புத்தகத்தில். குழந்தைகள் செய்ய வேண்டியதெல்லாம் கால இயந்திரத்தின் ஜன்னல் இருக்கையை கைப்பற்றிக் கொள்வது மட்டும்தான்.


கால இயந்திரம் கடந்து செல்லவுள்ள பாதையை தன் முன்னுரையால் வரைபடமாகவே வரைந்து பயணிக்கும் குழந்தைகளின் கைகளில் வழங்கிவிடுகிறார் பேராசிரியர் த. வி. வெங்கடேஸ்வரன் அவர்கள். பயணத்தின் பாதையெங்கும் இவரது வார்த்தைகளில்

துலக்கமாகிவிடுகிறது.


என்பத்தைந்து பக்கங்களில் விரியும் ‘நிறங்கள்' குறித்தான காலப் பயணம் எட்டு நிறுத்தங்களில் நின்று செல்கிறது. ஆனால் ஒவ்வொரு நிறுத்தங்களுக்குள்ளும் நாம் சில நூற்றாண்டுகளை கடக்க வேண்டியதிருக்கிறது.


மனித வாழ்வோடு பிரித்தறிய முடியாதபடி பிணைந்திருக்கும் நிறங்களின் உலகை நாம் புரிந்து கொள்வதற்கு எத்தனை காலம் தேவையாயிருந்திருக்கிறது? எத்தனைஆளுமைகள் எத்தனையெத்தனை தளங்களில் இது குறித்து சிந்தித்திருக்கின்றனர்?


என்கிற வியப்பு இந்நூலை வாசிக்கையில் படர்ந்திடுகிறது. ஒவ்வொருவரது

உழைப்பின் மீதும் மதிப்பு கூடுகிறது. புத்தகத்தின் தொடக்கத்திலேயே

கொடுக்கப்பட்ட அரிஸ்டாடிலின் கூற்றினை இப்பொழுதே உண்மையென உணரமுடிகிறது.


புவியில் மனிதர்களின் தோற்றத்தில் இருந்து நிறங்களுக்கும் நமக்குமான

தொடர்புகளை இன்றைக்கு வரைக்குமான காலம் வரை கதைகளாலும் வரலாற்று சம்பவங்களாலும் பின்னப்பட்ட நூலிலையினால் கட்டி இழுத்துவரப்படுகிறது ‘நிறங்கள்’ என்கிற இந்நூலில்.


முன்பே குறிப்பிட்டபடி நிறங்களை குறித்து உணரத் தொடங்கும் வேளையில்

தொல்லியல், அறிவியல், வரலாறு, தத்துவங்கள், உலகம் போற்றும் ஆளுமைகள் இலக்கியம், உளவியல் போன்றவற்றினை அறிந்து கொள்வதற்கான வாசலாகவும் இந்நூல் குழந்தைகளுக்கு இருக்கும். சமூகத்தின் பல்வேறு மூலங்களையும் தனித்தனியாகவே கற்றுணர அனுமதிக்கும் பாட புத்தக அனுபவத்தில் இருந்து புதியதும் சரியானதுமான கற்றல் அனுபவத்தை குழந்தைகளுக்கு இதன் வழியே நாம் உருவாக்கித்தர முடியும்.


‘நிறங்கள்’ குறித்த இந்த வாசிப்பு பயணம் குழந்தைகளுக்கு மட்டுமானது என்கிற தப்பெண்ணம் நமக்கு வேண்டியதில்லை. பெரியவர்களும் வியந்து வாசிக்க வேண்டிய செய்திகள் நிறையவே உள்ளன. முதன்மை நிறங்கள் குறித்த பகுதியும் நிறங்களை பிரித்தறிய நம் கண்களில் காணப்படும் மூன்று கூம்புகள் குறித்த செய்திகளையும் இந்நூலின் வழியாகவே நான் அறிந்து கொண்டேன். கண் மருத்துவர் தாமஸ் யங் அவர்களின் இயற்பியல் மீதான ஆர்வம், நியுட்டன் மீதான அவரது அபிமானம், நிறங்கள் குறித்த ஆய்வில் ஓவியர் கதெ அவர்களது பங்களிப்பு என்பவையும் கூட எனக்கு புதிய செய்திதான்.


தேவையான இடங்களில் சரியாக கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கப்படங்களும் காலப் பயணத்தில் நமது இருப்பிடத்தை குறிப்பிடும் சிறிய வரைபடங்களும் கதையின் போக்கை சித்தரிக்கும் ஓவியங்களும் நூலின் வடிவ நேர்த்திக்கும் குழந்தைகளின் புரிதலுக்கும் அழகாகப் பொருந்திப் போகின்றன.


கூடவே நிறங்கள் குறித்து தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள செய்திகள்

ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழும் நிறமும் என்பதாக கொடுக்கப்பட்டுள்ள சட்டகச் செய்திகளைத் திரட்டுவதற்கான உழைப்பும் இந்நூல் உருவாக்கத்திற்கான உழைப்பிற்கு இணையாகவே இருந்திருக்கக்கூடும்.


படைப்பாக்கத்தின் மீதான ஆர்வமே இத்தகைய செம்மையாக்கத்திற்கு ஆதாரம்.


நூலாசிரியருக்கு சிறப்பான வாழ்த்துகள்.


திருவிழா குடை இராட்டினத்தில் இருந்து இறங்க மனமில்லாது இறங்கி இன்னொரு பயணத்திற்காக அப்பாவின் முகம் பார்க்கும் குழந்தைகளைப் போல ‘நிறங்கள்’ குறித்த இந்த காலப் பயணம் படிப்போர்க்கு இன்னுமொரு பயணத்திற்கான ஆர்வத்தினை மனதிற்குள் கிளர்த்திவிடும். எனக்குள்ளும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது.


நல்வாய்ப்பாக, நமக்கு இன்னுமொரு பயணமும் உறுதியாகியிருக்கிறது. ‘நிறங்கள்’ பாகம் இரண்டு இன்னும் நாம் பார்த்திராத பக்கங்களை காட்டிடும் என உறுதியாக நம்பலாம். அதுவரை காத்திருப்போம்.


முன்னதாக, இந்நூலை குழந்தைகளின் கைகளில் சேர்ப்போம்; அறிமுகப்படுத்துவோம்.


நிறைவாக நிறங்களின் உலகில் பயணிக்கட்டும் குழந்தைகள்.


சம்பத்குமார்
சம்பத்குமார்

அரசுப்பள்ளி ஆசிரியர். "பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று" என்கிற கவிதை தொகுப்பு ஒன்று எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அவிநாசி கிளை பொறுப்பாளர்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page