குப்பை இல்லா வீடு

“அண்ணா! இங்க பாரு... மீன் குஞ்சி!”
பள்ளியில் இருந்து வந்த ஜோசியா, புத்தகப் பையை இறக்கிக்கொண்டிருந்தான்.
அவனிடம் ஓடிவந்த அவன் தங்கை ஜோனா, கையில் இருந்த சிறு பிளாஸ்டிக்
கவரைத் தூக்கிக் காட்டினாள்.
“மீனா?”
“ஆமா! நிஜமான மீன்!”
கவருக்குள் இருந்த சின்ன மீன் தண்ணீரில் வேகமாக அங்கும் இங்கும் நீந்தியது.
ஜோசியாவின் முகம் உடனே மலர்ந்தது.
“எங்க கிடைச்சுது?”
“இன்னைக்கு எங்க ஸ்கூல்ல இருந்து மீன் பண்ணைக்குப் போனோம்ல. அங்கே எனக்குக் கொடுத்தாங்க. உனக்காகக் கொண்டு வந்தேன்.”
“அப்படியா! அப்போ நாம இதை வளர்க்கலாம்!”
“நான் அதுக்குத் தினமும் சாப்பாடு போடுவேன்!”
“நீயா? நீ தான் மறந்துடுவியே!”
“நான் மறக்க மாட்டேன்!”
இருவரும் சிரித்தனர்.
பல நாட்களாக ஜோசியா வீட்டில் மீன் வளர்க்க வேண்டும் என்று
கேட்டுக்கொண்டிருந்தான்.
“அம்மா, சின்னதா ஒரு மீன் தொட்டி வாங்கலாமே!”
ஆனால் அம்மா ஒவ்வொரு முறையும்,
“மீன் வளர்ப்பது சுலபமில்லை. அதற்குப் பொறுப்பு வேண்டும்,” என்று சொல்லி
மறுத்துவிடுவார்.
இப்போது மீன் தானாகவே வீட்டுக்கு வந்துவிட்டது. மீன் வந்ததில் இருவருக்கும்
மகிழ்ச்சி.
அப்போது கவருக்குள் இருந்த மீன் திடீரென்று மேலே துள்ளியது.
ஜோனா பயந்தாள்.
“அண்ணா, அது கீழே விழுந்துடுமா?”
“கவரை கவனமாகப் பிடி.”
மீன் மீண்டும் துள்ளியது.
ஜோசியா கவரைப் பார்த்தான்.
"அம்மா! பாருங்க!” என்று இருவரும் குரல் கொடுத்தனர்.
அம்மா வந்து எட்டிப் பார்த்தார்.
“அம்மா, இதுக்கு ஏதோ கஷ்டமா இருக்கு.”
“ஆமாம். இவ்வளவு சின்ன கவருக்குள் நீண்ட நேரம் வைக்கக் கூடாது.”
அம்மா உடனே ஒரு சுத்தமான பாட்டிலை எடுத்தார். அதில் தண்ணீர் ஊற்றி, மீனை
அதற்குள் மாற்றினார்.
மீன் சில நொடிகள் அமைதியாக இருந்தது.
பிறகு மெதுவாக நீந்தியது.
“அண்ணா! இப்போ நல்லா போகுது!” என்று மகிழ்ந்தாள் ஜோனா.
“ஆமா. மீன் தொட்டி வாங்குற வரைக்கும் இதுல இருக்கட்டும்.” என்றார்.
“அப்போ, நாம வளர்க்கப் போறோமா?” என்றான் ஆர்வமுடன் கேட்டான் ஜோசியா.
“அம்மா... இன்னைக்கே மீன் தொட்டி வாங்கலாமா?” என்று உடனே கேட்டாள்
ஜோனா.
அம்மா சிரித்தார்.
“நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு நாளா கேட்டுக்கிட்டே இருந்தீங்க. நான் வேண்டாம்
என்று சொன்னேன். இப்போ மீன் வீடு தேடி வந்துடுச்சே! சரி... வளர்க்கலாம்.”
“யேய்!”
இருவரும் கைகளைத் தட்டினர்.
“ஆனா முதல்ல மீனைச் சரியாகப் பார்த்துக்கொள்ளணும்,” என்றார் அம்மா.
"சரிமா நாங்க பார்த்துக்கொள்கிறோம்" என்றனர் இருவரும்.
ஜோனா பாட்டிலைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
“அண்ணா... இதுக்கு முன்னாடி ஏன் மீன் அப்படி பண்ணிச்சி? என்று கேட்டாள்.
"அது கவருக்குள்ள இருந்ததால மூச்சு முட்டிருக்கும். அதனாலதான் மேல மேல வந்திருக்கும்.”
அவள் சிறிது நேரம் மீனைப் பார்த்தாள்.
“நம்ம கடற்கரைக்குப் போனப்போ பார்த்த கவர் மாதிரியா?”
ஜோசியாவுக்கும் அந்தக் காட்சி நினைவுக்கு வந்தது.
“ஆமாம். அன்னைக்கு கடல் ஓரத்துல நிறைய கவர் கிடந்துச்சே.”
“நானும் பார்த்தேன்! ஒரு பெரிய பை தண்ணீர்ல போயிடுச்சு.”
“ஆமாம். அலை வந்ததும் இழுத்துக்கிட்டுப் போச்சு.”
ஜோனா பாட்டிலுக்குள் பார்த்தாள்.
“அப்போ கடல்ல இருக்கிற மீன்கள் எல்லாம் அந்தக் கவருக்குள்ள போயிருமா”
“போகலாம்.”
“அப்போ?”
அவள் முகம் சுருங்கியது.
“அது வெளியே வர முடியாதா?”
“சில நேரம் வர முடியாமல் போகலாம்.”
ஜோனா உடனே மீன் இருக்கும் பாட்டிலை இரு கைகளாலும்
அணைத்துக்கொண்டாள்.
“பாவம்...”
ஜோசியா அவளைப் பார்த்தான்.
“அதனால், இனி கடல்ல கவர் போடக்கூடாது.”
அம்மா அருகில் வந்து சொன்னார்:
“கடலில் மட்டும் இல்லைம்மா. எங்கே போட்டாலும் கவனமாக இருக்க வேண்டும்.”
ஜோனா ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“குளத்துலயும் போடக்கூடாதா?”
“போடக்கூடாது.”
“கால்வாய்ல?”
“அதுவும் கூடாது.”
“ரோட்ல?”
“அங்கேயும் கூடாது”
ஜோனா சிறிது நேரம் யோசித்தாள்.
“ரோட்ல போட்டா மீன் எப்படி பாதிக்கப்படும்?”
ஜோசியா உடனே சொன்னான்:
“மழை பெய்தா அந்தக் கவர் தண்ணியோட போகும். கால்வாய்க்குள்ள போகலாம்.
அங்கிருந்து ஆறுக்குப் போகலாம். அப்படியே கடலுக்கும் போயிடலாம்.
அப்படித்தானே அம்மா”
"ஆமாம். சரியாகச் சொன்ன" என்றார் அம்மா.
ஜோனா கண்களைப் பெரிதாக்கினாள்.
“அப்போ... வீட்டுக்குப் பக்கத்துல போட்ட கவரும் கடலுக்குப் போகுமா?”
“போக வாய்ப்பு இருக்கு.”
அவள் பாட்டிலுக்குள் இருந்த மீனைப் பார்த்தாள்.
“அதனாலதான் மீனுக்குக் கஷ்டமா?”
“ஆமாம்.”
அம்மா மெதுவாகச் சொன்னார்:
“மீன் மட்டும் இல்லை. குளத்திலிருக்கும் தவளை, ஆமை, பறவைகள்... பல
உயிரினங்களும் பாதிக்கப்படலாம். சில உயிரினங்கள் பிளாஸ்டிக் பொருட்களை
உணவு என்று நினைத்து விழுங்கிவிடலாம். சிலவற்றில் சிக்கிக்கொள்ளவும் முடியும்.”
ஜோசியா பாட்டிலைப் பார்த்தபடி,
“நம்ம மீனுக்கு நல்ல தண்ணீரும் நல்ல இடமும் வேணும்னு நாம கவனிக்கிறோம்
இல்லையா?” என்று கேட்டான்.
“ஆமாம்,” என்றாள் ஜோனா.
“அதே மாதிரி கடல்ல இருக்கிற மீன்களுக்கும் அவங்க வாழ்ற இடம் நல்லா
இருக்கணும்.” என்றான்.
ஜோனா உடனே தலையாட்டினாள்.
“அப்போ அவங்க கவர்ல சிக்கக்கூடாது!”
“ஆமாம். சிக்கக்கூடாது,” என்றான் ஜோசியா
ஜோனா உடனே கேட்டாள்:
“அப்போ எங்கையும் கவரைப் போடவே கூடாதது தானே?”
“ஆமாம். பயன்படுத்திய கவரைக் கண்ட இடத்தில் போடக்கூடாது. அதனால் கடல் உயிர் மட்டுமல்ல. ஆடு, மாடு ஏன் நாய்களுக்குக் கூட ஆபத்துத்தான். அதனால் முடிந்தவரை தேவையில்லாமல் பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும்.” என்றார் அம்மா.
அன்று மாலை அவர்கள் அப்பாவுடன் மீன் தொட்டி வாங்கி வந்தனர்.
புதிய தொட்டியில் மீனை விட்டதும் அது வேகமாக நீந்தத் தொடங்கியது.
“மின்னல் ஓடுது!” என்று குதித்தாள் ஜோனா.
ஜோசியா சிரித்தான்.
“இப்போ அதுக்குப் பெரிய வீடு கிடைச்சிருக்கு.” என்ற ஜோனா, மீனைப்
பார்த்துக்கொண்டே சொன்னாள்:
“கடல்ல இருக்கிற மீன்களுக்கும் இது மாதிரி பெரிய வீடு இருக்கணும்... "
அடுத்த நொடி ஜோசியாவுடைய மனதில் கடற்கரை காட்சி மீண்டும் வந்தது.
மணலில் கிடந்த கவர்கள்...
தண்ணீரில் மிதந்த பாட்டில்கள்...
அலைகளோடு கடலுக்குள் சென்ற குப்பைகள்...
அவன் மெதுவாகச் சொன்னான்:
“ஆமாம். கடல்ல இருக்கிற மீன்களுக்கும் இப்படித்தான் நல்ல பெரிய வீடு
கிடைக்கணும்...குப்பை இல்லா வீடு.”





Comments