கொண்டாட்டம் பண்டிகையாய் வளர்ந்த கதை

கமலி அத்தையும் ரவி மாமாவும் கொடுத்த பரிசுப் பொருள்களைப் பார்த்து சித்து, முத்து இருவரும் “ஹய்யா” என்று குதித்தார்கள். இவர்களின் அம்மா பாரதி, அப்பா செல்வா கொடுத்த பரிசைப் பார்த்து மோனா “ஹய்யா” என்று குதித்தாள்.
பாரதியும் செல்வாவும் தட்டுகளில் பலகாரம் கொண்டுவந்து வைத்தார்கள். “என்ன பசங்களா, பண்டிகை விடுமுறையை ஜாலியா கொண்டாடினீங்களா,” என்று ரவி கேட்டார்.
“ஆமா மாமா. லீவு முடிஞ்சு ஸ்கூலுக்குப் போய் ஃபிரெண்ட்ஸ் எல்லாரையும் பார்க்கலாம்னு உற்சாகமா இருக்குது, தெரு ஃபிரெண்ட்ஸ் கூட ரொம்ப நேரம் விளையாட முடியாதேன்னு ஏக்கமாவும் இருக்குது,” என்றாள் சித்து. அதை முத்து தலையாட்டி ஆமோதித்தான்.
“பண்டிகை லீவுல வீடே கலகலப்பாயிடுது, ஸ்வீட் செய்யுறது, வீட்டை டெக்கரேட் பண்ணுறதுன்னு நிறைய வேலையால அலுப்பாவும் ஆயிடுது,” என்று அம்மா சொன்னார். அதை அப்பா தலையாட்டி ஆமோதித்தார். அம்மா, அப்பா, அத்தை, மாமா நான்கு பேருமே வீட்டு வேலைகளை சமமாகப் பிரித்துக்கொண்டு செய்கிறவர்கள். அதைப் பார்த்துக் குழந்தைகளும் மகிழ்ச்சியோடு வேலைகளைச் செய்யப் பழகுகிறார்கள்.
பக்கவாத்தியங்கள் போல சிற்றுண்டிகள் சேர்ந்துகொள்ள, அரட்டைக் கச்சேரி ஆரம்பமானது. உறவினர்களும் நண்பர்களும் எப்படி இருக்கிறார்கள் என்ற விசாரிப்புகளுக்குப் பிறகு பேச்சு பண்டிகைகள் பக்கம் திரும்பியது.
“பண்டிகைங்கிறது தமிழ் வார்த்தைதானா,” என்று பாரதி கேட்டார்.
“அது தென்னிந்திய மொழிகள்லேயிருந்து வந்த ஒரு திராவிடத் திசைச்சொல்லுன்னு சில அறிஞர்கள் சொல்றாங்க. தெலுங்குல பண்டுகா, கன்னடத்தில பண்டிகே, மலையாளத்தில பண்டிகான்னு பேசுறதோட தொடர்புபடுத்திச் சொல்றாங்க. ஒரு கருத்தரங்கத்திலே பண்டம், ஈகை ரெண்டும் சேர்ந்ததுதான் பண்டிகைன்னு ஒரு தமிழறிஞர் சொன்னதைக் கேட்டேன். பண்டம்னா பொருள். நம்மகிட்ட இருக்கிற பொருளை மத்தவங்களுக்குக் கொடுக்கிறது ஈகை. அதனால பண்டம் ஈகைதான் காலப்போக்குல பண்டிகைன்னு மாறிடிச்சுன்னு அவர் சொன்னார். எதிர்காலத்திலே ஆய்வாளர்கள் சரியான விடையைக் கண்டுபிடிப்பாங்கன்னு நம்புறேன். எப்படியோ, பண்டிகை நாள்ல நம்ம வீட்டுப் பலகாரங்களைப் பக்கத்து வீடுகளுக்குக் கொடுக்கிறோம், அவங்க நமக்குக் கொடுக்கிறாங்க, ஏழைகளுக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் கொண்டுபோய்க் கொடுக்கிறோம்…”
“சூப்பர் மாமா, இதை எங்க கிளாஸ்ல சொல்லுவேனே,” என்றான் முத்து.
“பண்டிகை கொண்டாடுற பழக்கம் எப்படி வந்திருக்கும்?”
இப்படிக் கேட்ட மோனாவின் தலையை வருடிக்கொண்டே பாரதி விளக்கினார். “பரிசுகளைப் பார்த்ததும் நீங்க மூணு பேரும் ஹய்யான்னு குதிச்சீங்கள்ல? மேட்ச் நடக்கிறப்ப நம்ம நாட்டு டீம் சூப்பரா ஆடினாங்கன்னா எந்திரிச்சு விசிலடிக்கிறோம்ல? இப்படி இயற்கையாவே மனசோட பரவசத்தை வெளிப்படுத்துறதுதான் கொண்டாட்டம்.”
“நாம மட்டும் உணர்வை வெளிப்படுத்தினா அது தனிப்பட்ட கொண்டாட்டம். மத்தவங்களோட சேர்ந்து வெளிப்படுத்தினா அது கூட்டுக் கொண்டாட்டம். ஊரே சேர்ந்து கொண்டாடினா அதுதான் திருவிழா,” என்று கூடுதல் விளக்கம் அளித்தார் செல்வா.
இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது கல்லூரி மாணவன் அயான் வந்து சேர்ந்துகொண்டான். “என்னடா, உம்மாவும் வாப்பாவும் வரலையா,” என்று கேட்டுக்கொண்டே அவனுக்கு இனிப்புகளைக் கொடுத்தார் பாரதி.
“வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்க ஆன்ட்டி,” என்று பதிலளித்தபடி அதிரசத்தை எடுத்துக் கடித்தான் அயான்.
“ஆதிகாலத்தில மனுசங்க அவங்க தேடிப்போன உணவு கிடைச்சதும், இல்லாட்டி விலங்குகள்ட்ட இருந்து தப்பிச்சதும் கூச்சல் போட்டு, ஆட்டம் ஆடியிருப்பாங்கதானே? அப்படித்தான் மகிழ்ச்சியை எல்லாருமா கொண்டாடுறது ஆரம்பமாகியிருக்கும்,” என்று முன்பு ஒரு புத்தகத்தில் படித்ததைப் பகிர்ந்தார் ரவி.
இப்போது கமலி கேட்டார். “தீபாவளி எப்படி வந்துச்சு சொல்லுங்க பார்ப்போம்.”
முத்து பதில் சொன்னான். “நரகாசுரன்னு ஒரு கொடுமைக்காரன் இருந்தான். அவனை கிருஷ்ணன் வதம் செய்தார். அவன் சாகுறப்ப, ‘என்னோட மரணத்தை எல்லாரும் மகிழ்ச்சியா தீபம் ஏத்திக் கொண்டாடணும்’னு கேட்டுக்கிட்டான்.”
“இந்தக் கதைக்கு ஒரு மாற்றுக் கதையும் இருக்குது தெரியுமா? ஒரு காட்டுல ஆதிகுடி மக்களுக்குத் தலைவரா வழிகாட்டியவராம் நரகன். எங்கேயிருந்தோ வந்த சில பேரு காட்டைக் கைப்பத்தப் பார்த்தாங்களாம். காட்டையும் மக்களையும் காப்பாத்துறதுக்காக நரகன் வீரத்தோட போராடினாரு. உடல் வலிமையும் காட்டுப் பாதைகள் பத்தின அறிவும் இருந்த அவரை அவங்களால தோற்கடிக்க முடியலை. அப்புறம் சூழ்ச்சியால அவரைக் கொன்னாங்களாம். மக்கள்ட்ட அந்த ஆளுங்க, நரகன் கொடுமைக்கார அசுரன், அவனே தன்னோட மரணத்தை மக்கள் கொண்டாடணும்னு கேட்டுக்கிட்டான்னு பரப்பிவிட்டாங்களாம்…”
“சரி, இப்ப ஜூஸ் டைம்,” என்று சொன்ன அப்பா பழச்சாறு தயாரித்துக் கண்ணாடிக் குவளைகளில் ஊற்றிக் கொடுத்தார்.
“இன்னொரு சுவையான தகவல் தெரியுமா? பொதுவா தென்னிந்திய மாநிலங்கள்ல கிருஷ்ணன்–நரகாசுரன் கதை அடிப்படையில தீபாவளி கொண்டாடுறாங்க. சில வட மாநிலங்கள்ல ராமன் காட்டு வாழ்க்கை முடிஞ்சு நாட்டுக்குத் திரும்பின நாளைத் தீபாவளின்னு கொண்டாடுறாங்க. வங்கத்துல காளியை வணங்கும் விழாவா தீபாவளியைக் கொண்டாடுறாங்க. குஜராத்தில வணிக ஆண்டின் கடைசி நாள்தான் தீபாவளி, மறுநாள் புத்தாண்டு,” என்றார் ரவி.
“ஓ, பல வகையான பண்டிகைகள் இருக்கிறது மட்டுமில்லாம, தீபாவளியையே கூடப் பல வகையாக் கொண்டாடுறாங்களா? இன்ட்ரெஸ்ட்டிங் அங்கிள்,” என்று கைகுலுக்கினான் அயான்.
“நானும் ஒரு கதை சொல்லட்டுமா,” என்றவாறு செல்வா ஆரம்பித்தார். “முன்னொரு காலத்திலே ஒரு ஊர்ல கடுமையான வறட்சி ஏற்பட்டுச்சு. வயல்ல பயிர்கள் கருகிப் போயிடுச்சு. மக்கள் ரொம்பவும் துன்பப்பட்டாங்க.
“திடீர்னு நல்லா மழை பெஞ்சு ஏரி, கிணறெல்லாம் நிரம்பிச்சு. மக்கள் நம்பிக்கையோட வயல்ல இறங்கி உழைச்சாங்க. வயலும் வஞ்சகமில்லாம தாராளமா விளைஞ்சுச்சு. தானியமும் காய்கறிகளும் செழிப்பா கிடைச்சுது.
“ஊர்ப் பெரியவங்க கூடிப் பேசினாங்க. தானியங்களையும் காய்கறிகளையும் எல்லாரும் சமமாப் பிரிச்சு, வீடுகளுக்குக் கொண்டு போய் சாப்பிடலாம்னு சொன்னாங்க. அப்ப இளைஞர்கள் எந்திரிச்சு, ‘பெரியவங்களே, தப்பா நினைச்சுக்காதீங்க. ஊர்ல எல்லாரும் சேர்ந்துதானே துன்பப்பட்டோம்? சேர்ந்துதானே உழைச்சோம்? சேர்ந்துதானே அறுவடை செஞ்சோம்? பிறகு ஏன் தனித்தனியா வீட்டுல சாப்பிடணும்? சேர்ந்தே சமைப்போம், சேர்ந்தே சாப்பிடுவோம்’னு சொன்னாங்க.
“வயசுல சின்னவங்களா இருந்தாலும் அருமையான யோசனையைச் சொல்றீங்கப்பான்னு ஊர் மக்கள் பாராட்டினாங்க. பொது மைதானத்திலே வரிசையா கல் அடுப்புகளை வச்சாங்க, வீடுகள்ல இருந்து பாத்திரங்கள், அரிவாள்மனைன்னு கொண்டுவந்தாங்க. காய்கறிகளை நறுக்கி தானியங்களை வேக வச்சு, மொத்தமா சமையல் பண்ணினாங்க. எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டாங்க,” என்று சொல்லி முடித்தார் செல்வா.
“இப்படித்தான் ஊர் கூடிக் கொண்டாடுற பண்பாடு வளர்ந்துச்சு, அப்படித்தானே அண்ணே,” என்று கமலி கேட்டார்.
“எந்தப் பண்டிகையானாலும் எதுக்காக புது டிரெஸ், ஸ்வீட், பட்டாசுன்னு நிறையா செலவு பண்ணி கொண்டாடனும்,” என்று அயான் கேட்டான்.
“தம்பி, இப்படி ஊர் கூடி கொண்டாடுறதால உறவு வளருது, உழைக்கிறதுக்கு ஊக்கம் பெருகுது, பண்பாடு அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுது. அதனாலதான் எல்லா நாடுகள்லேயும், எல்லா இனங்கள்லேயும், எல்லா மதங்கள்லேயும் விதவிதமான பண்டிகைகளைக் கொண்டாடுற பழக்கம் வந்துச்சு. ஒரு சின்ன பர்த்டே பார்ட்டிக்குக்கூட புது டிரெஸ் போடு, ஸ்வீட் எடு கொண்டாடுன்னு செலவு பண்றோம். இப்படி ஆரோக்கியமான ஒற்றுமை உணர்வுகளைப் பரிமாறிக்கிடறதுக்குச் செலவு பண்றது நல்லதுதானே,” என்றார் ரவி.
“பல நூறு வருசமா கொண்டாடுற பண்டிகைகள் மட்டுமில்ல. பிற்காலத்திலே உழைப்பாளிகளுக்கான மே தினம் போல உலகத்துக்கே பொதுவான பல விழாக்களையும் இனம், மதம்கிற வேறுபாடு இல்லாம உருவாக்கினாங்க. உதாரணமா…” என்று ஏதோ சொல்ல வந்தார் கமலி. அவர் பேச்சைத் தொடர்வதற்கு முன் மோனா குறுக்கிட்டாள்.
“நான் சொல்றேன், நான் சொல்றேன். எங்களை மாதிரி பசங்களுக்குன்னு குழந்தைகள் தினம் கொண்டாடுறாங்க. நம்ம நாட்டிலே நவம்பர் 14, உலக அளவிலே நவம்பர் 20…”
“ஆமா, குழந்தைகளைக் கொஞ்சுறதுக்கு மட்டுமில்ல, அவங்களோட உரிமைகளை மதிக்கிறதுக்கும் பெரியவங்க கத்துக்கிடனும். அதுக்காகத்தான் இந்த தினம். உலக மகளிர் தினம், நண்பர்கள் தினம், அணு ஆயுதங்கள் ஒழிப்பு தினம்… இப்படி நிறைய இருக்குது. அதைப் பத்தி நாளைக்குப் பேசுவோம், ஓகேயா,” என்றார் செல்வா.
“எல்லாப் பண்டிகைகளும் நமக்கு வேணும்தான். எது வேணாம்னா, உங்க சாமி பெரிசா, எங்க சாமி பெரிசான்னு பண்டிகையை வச்சு சண்டையை மூட்டுறாங்க பாருங்க, அது வேணாம்.”
அயான் இப்படிச் சொன்னதை எல்லோரும் கைதட்டி ஆமோதித்தார்கள். பலகாரத் தட்டுகள் காலியாகின. எல்லோரின் மனங்களும் நிறைந்திருந்தன.

பத்திரிகையாளர் பணியில் நாற்பதாண்டுகளாகப் பயணம். தற்போது ‘செம்மலர்’ இதழின் துணையாசிரியர். நேரடிப் புத்தகங்களும் மொழிபெயர்ப்புகளுமாக 42 புத்தகங்கள். சிறாருக்கென எழுதிய ‘எதிர்ப்பதம்’, ‘வனவிலங்கு உடலில் வரி வந்தது எப்படி’ ஆகிய கதைப் புத்தகங்கள் 2, ‘சாரி பெஸ்ட் ஃபிரெண்ட்’, ‘உலகைச் சுற்றி 80 நாட்கள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்புகள் 6. கட்டுரையாக்கங்களில் கூடுதல் ஈடுபாடு. உரை நிகழ்த்துவதிலும், குழந்தைகளோடு உரையாடுவதில் இரட்டிப்பாகவும் ஆர்வம்.






Comments