top of page

கதையும் கலையும்


கதையும் கலையும். இணைந்தால் எப்படி இருக்கும்? 

 

ஒரு எழுத்தாளரின் கதையை, ஒரு கதைச்சொல்லி சொல்ல, அதை குழந்தைகள் உள்வாங்கி வேறொரு கலையாக வெளிப்படுத்தினால் எப்படி இருக்கும்?

 

தன் கதையை வாசகர்கள் உள்வாங்கி விவரிப்பதை எழுத்தாளர்கள் பல மேடைகளில் கேட்டிருப்பார்கள்.

 

ஆனால் அதே கதை, வேறொரு கலையாக கண்முன்னே விரிவதை அனுபவித்திருக்கிறார்களா?

 

ஆம்… அந்த புதிய அனுபவம் அரங்கேறிய நாள் — ஏப்ரல் 25, 2026.

 

திரு.  உதயசங்கர் அவர்களின் கதையை, செல்வி குழலி குழந்தைகளுக்குக் கதையாகச் சொல்ல, அக்கதையை மனதில் உள்வாங்கிய குழந்தைகள், அதனை ஓவியங்களாக உயிர்ப்பித்தார்கள்.

 

கதை வாசிப்பு→விவரிப்பு→உள்வாங்கல்→மனக்கண்ணில்காட்சிஉருவாக்கம்→காட்சியை ஓவியமாக உயிர்ப்பித்தல். 

 

இவ்வாறு படைப்பாற்றலால்  உற்சாகமாகவும் உயிரோட்டமாகவும் கழிந்தது நிகழ்வு.

 

ஒவ்வொரு குழந்தையும் கதையை தனித்தனி கோணங்களில்  வெளிப்படுத்தி இருந்தார்கள்.

 

சிலர் கதையின் நிகழ்வுகளை நேரடியாக காட்சியாக்கியினார்கள்; சிலர் கதையின் மையக் கருத்தை கற்பனையாக வடிவமைத்து இருந்தார்கள்; சிலர் கதையை ஒரு முழுமையான காட்சித் தொடராக உருவாக்கினர்.

 

கதையும் கலையும் இணைந்து, குழந்தைகளின் மனங்களில் ஒரு பசுமையான தடம் பதித்தது. 

 

கதைக் கேட்டல் ஓரனுபவம்; மனக்கண்ணில் காட்சியாக காண்பது அழகிய கற்பனை; அதை ஓவியமாக தீட்டுதல் என்பது மற்றொரு புதிய படைப்பு.

 


ஒரு கதையை காட்சியாக மாற்றும் இந்நிகழ்வு,

அவர்களை கவனமாகக் கேட்கக் கற்றுக்கொடுக்கிறது;

கேட்டதை புதிய வடிவில் வெளிப்படுத்தத் தூண்டுகிறது.

 

மட்டுமல்லாமல், இந்நிகழ்வானது ஆழமான கருத்துகளை எளிய காட்சிகளால் அனைவரும் உணரக்கூடிய வகையில் வெளிப்படுத்தும் கலைப் பரிணாமத்தின் விதையாக அமைகிறது.

 

சமூகத்தில் புரிதலும் உணர்வும் நிறைந்த மாற்றங்களை உருவாக்கும் விருட்சமாக இக்கலைஞர்கள் வளர்வார்கள் என்று நம்புகிறோம்.

 

நிகழ்விற்கு ஒத்துழைப்பு நல்கிய சிவராம் கலைக்கூடம் நிறுவனர் ஆசிரியர் திரு. கணேசன் அவர்களுக்கு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (திருநெல்வேலி கிளை) மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.


தேவர்பிரான்
தேவர்பிரான்

2014ஆம் ஆண்டு, உள்ளூர் இயற்கை விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு நேரடி சந்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், மனைவி சத்தியா அவர்களுடன் சேர்ந்து ஒரு தள்ளுவண்டியில்  இயற்கை பொருட்கள் விற்பனையைத் தொடங்கியவர். இயற்கை விவசாயிகளை ஆதரிப்பதோடு, மக்களிடையே சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய நெல் வகைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கி வருகிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page