குழந்தைகளுக்கான நாடக அரங்கேற்ற நிகழ்வு
- வாலெண்டினா
- 20 hours ago
- 1 min read

தூத்துக்குடி நகரில் குழந்தைகளுக்கான நாடக அரங்கேற்ற நிகழ்வு.
தேடல் கலைக் குழுவினர் 7/7/26 செவ்வாய் கிழமை மாலை 7மணியளவில் எழுத்தாளர் விழியன் அவர்கள் எழுதிய
'மாகடிகாரம்' என்ற நாவலை நாடகமாக மிகச் சிறப்பாக நிகழ்த்திக் காட்டினார்கள். இந்நிகழ்வானது தூத்துக்குடி ஆகம் நாடக வெளி அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் குழந்தைகள், பெரியவர்கள் கலைஞர்கள் என வெளியூர்களிலிருந்தும் கலந்து கொண்டனர்.
சமூகத்தில் இன்னும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் அறிவியலுக்குப் புறம்பான பல மூட நம்பிக்கைகளைக் கண்டு குழந்தைகளைக் கேள்வி கேட்கத் தூண்டும் விதமாக இந்நாடகம் அமைந்தது.
இதில் நடித்த ஒவ்வொரு கலைஞர்களும் 'மாகடிகாரம்' நாவலுக்குள் எழுதப்பட்ட அந்த இடத்திற்கே பார்வையாளர்களை அழைத்துச் சென்று விட்டனர்.
அவர்கள் வடிவமைத்த அரங்கு, பயன்படுத்திய பொருள்கள், எழுப்பிய ஒலிகள் அனைத்தும் அந்த நாவலில் குறிப்பிட்டிருந்த இடத்திற்குள் நேரடியாக சென்று வந்த உணர்வையே கொடுத்தது.
அடம்பிடித்து அழும் குழந்தையாகட்டும், காலில் காயம் பட்டு வருந்தும் யானையாகட்டும், பாம்பு, மீன் தவழ்வதாகட்டும் அத்தனை நிகழ்வுகளும் வெகு இயல்பான நடிப்பில் அசத்தி விட்டார்கள்.

நாடகத்தினூடே அவர்கள் பாடிய குழந்தைகளுக்கான பாடல்களும், ஆடல்களும், உடல் மொழிகளும், நாடகம் பார்க்க வந்த குழந்தைகளையும் ஒருங்கிணைத்து ஆடியவிதமும் குழந்தைகளை மகிழ்ச்சிக்குள்ளாக்கியதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
இந்நாடகத்தின் நோக்கமே அறிவியலுக்கு புறம்பாக நடக்கும் நிகழ்வுகளைக் குழந்தைகள் கேள்வி கேட்க வேண்டும் என்பதே என்று நாடகத் தொடக்கத்தில் நாடக நெறியாளர் வசந்த் பா அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
அதன்படி நாடகத்தின் இறுதியில் குழந்தைகளிடம் நாடகம் பற்றியும், தங்களுக்குள் எழும் கேள்விகள் பற்றியும் உரையாடினார்கள். குழந்தைகளும் அவர்கள் மனதில் உள்ள பல்வேறு கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெற்றார்கள்.
காரணம் ஏதும் இல்லாமல், முன்னோர்கள் சொன்னார்கள் அதைப் பின்பற்றுகிறோம் என்ற பொதுப் புத்தியை மாற்ற சிறப்பாக வழி வகுக்கக் கூடிய மிகச் சிறப்பான நாடகம்.

அனைத்து தரப்பினரும் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் கண்டுகளித்த நாடகம்.
நாடகத்தை சிறப்பாக நடித்துக் காட்டி அதன்மூலம் குழந்தைகளிடம் சிறப்பாக உரையாடிய கலைஞர்கள் அனைவருக்கும், நிகழ்வை ஒருங்கிணைத்த தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தூத்துக்குடி கிளை மற்றும் ஆகம் நாடக வெளி சார்பாக புத்தகப் பரிசுகள் வழங்கப்பட்டது.
பார்வையிட வந்த குழந்தைகளுக்கு தேடல் நாடகவெளி கலைஞர்கள் புத்தகப் பரிசு வழங்கியும் மகிழ் வித்தார்கள்.
இதே போன்ற நிகழ்வு பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற வாழ்த்துகளுடன் நிழல்படம் எடுத்து நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.





Comments