வேனில் விழா 2026
- தேவர்பிரான்

- 3 days ago
- 1 min read

ஓலைக்கலைப் பயிற்சி, கோலாட்டம், மரபு விளையாட்டுகள், தேங்காய் சிரட்டை அணிகலன்கள், ஓவியப் பயிற்சி, சூழலியல் கல்வி, ஊர்வன பற்றிய அறிமுகம், குழுவாகக் கதைசொல்லல் ஆகியவற்றுடன் இரு நாட்கள் முழுவதும் திருவிழா போல் களைகட்டியது!
இரவு அனுபவம்
மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வேணு வனத்தை இரவில் மின்மினிப் பூச்சிகளின் ஒளியுடன் சுற்றிப் பார்த்தது குழந்தைகளுக்கு மறக்க முடியாத புதிய அனுபவமாக அமைந்தது.
மலை ஏற்றம்
மறுநாள் காலை குன்னத்தூர் பொற்றையை ஏறினர். ஏறும் வழியில் இடையிடையே இளைப்பாறியபடி மலை உச்சியை அடைந்தனர். அங்கிருந்து கீழே பார்க்கையில் மொத்த ஊரும் அழகிய காட்சியாகத் தெரிந்தது. கோயில், வீடுகள், ஆறு, வேணுவனம் என நெல்லை நகரம் வரை (தோராயமாக 4 கிலோமீட்டர்) பரந்து விரிந்த அழகை குழந்தைகள் பரவசத்துடன் ரசித்தனர். மலை உச்சியிலிருந்து நேராக ஆற்றில் இறங்கிக் குளித்து மகிழ்ந்தனர்.
சிறப்பு அமர்வு
பாம்புகளின் வகைகள், வாழ்விடங்கள், கையாளும் முறை, தற்காப்பு நடவடிக்கைகள் மற்றும் பாம்புக்கடி மருத்துவம் குறித்த பயனுள்ள கலந்துரையாடலை திரு. இரமேஸ்வரன் அவர்கள் சிறப்பாக நிகழ்த்தினார்.
பயிற்சிகள்
- திருமதி. உமா அவர்களின் பனை ஓலைப் பயிற்சி
- திரு. கணேசன் அவர்களின் தேங்காய் சிரட்டையில் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் தயாரிப்பு
- திரு. செந்தமிழன் அவர்களின் மரபு விளையாட்டுகள்
- திருமதி. விஜி அவர்களின் கோலாட்டம்
இந்நிகழ்வால் ஏற்பட்ட முக்கிய நன்மைகள்:
- குழந்தைகளிடம் பாரம்பரிய கலை, கலாச்சாரம் மற்றும் மரபு விளையாட்டுகள் மீதான ஆர்வத்தை அதிகரித்தது.
- சூழலியல் மற்றும் இயற்கை மீதான விழிப்புணர்வை வளர்த்தது.
- பாம்புகள் குறித்த அச்சத்தைப் போக்கி, தற்காப்பு மற்றும் முதலுதவி அறிவை வழங்கியது.
- குழந்தைகளின் படைப்பாற்றல், உடல் நலம், குழு ஒத்துழைப்பு மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்தது.
- பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இணைந்து பங்கேற்றதன் மூலம் குடும்ப மற்றும் சமூகப் பிணைப்பை வலுப்படுத்தியது.
- நவீன வாழ்க்கையில் மறக்கப்படும் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வழியைத் திறந்தது.

ஒருங்கிணைப்பு:
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (திருநெல்வேலி கிளை), கவின் கலைக் கூடம் மற்றும் காஞ்சனை கலைகளின் குடில் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நிகழ்வை வெற்றிகரமாக ஒருங்கிணைத்தன.

2014ஆம் ஆண்டு, உள்ளூர் இயற்கை விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு நேரடி சந்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், மனைவி சத்தியா அவர்களுடன் சேர்ந்து ஒரு தள்ளுவண்டியில் இயற்கை பொருட்கள் விற்பனையைத் தொடங்கியவர். இயற்கை விவசாயிகளை ஆதரிப்பதோடு, மக்களிடையே சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய நெல் வகைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கி வருகிறார்.





Comments