அறமதியின் கதை - 3
- சுகன்யா ராமநாதன்

- 4 days ago
- 3 min read
சமத்துவம் – ஒரு தேடல்

அன்பினியின் கைகளைத் தடவிக் கொடுத்தாள் அறமதி. அன்பினியின் கண்ணீரில் அறமதி கண்ட காட்சி... "நீ எதுல சேரப் போற? NCC-யா, NSS-ஆ... இல்ல புதுசா ஆரம்பிச்சிருக்காங்களே SJSF, அதுலையா?" மாலினி ஆர்வமாகக் கேட்டாள்.
"நான் 'சமூக நீதி மாணவர் படை'லதான் (Social Justice Student Force - SJSF) சேரப்போறேன்," அன்பினி உறுதியாகச் சொன்னாள்.
"ஹைஃபை! நானும் அதுலதான் சேரப் போறேன்!!" மாலினி கையை நீட்ட, இருவரும் கைகளைத் தட்டிக்கொண்டனர்.
ஆறாம் வகுப்பில் தொடங்கிய அந்தப் பயணம் அன்பினியின் பார்வையை மாற்றியது. ஒவ்வொரு சனி, ஞாயிறும் ட்ரில், அதைத் தொடர்ந்து ருசியான பொங்கல், சட்னி. ஆனால், எல்லாவற்றையும் விட முக்கியமானது கடைசியில் நடக்கும் அந்த அறநெறி அமர்வு. அங்கு தான் சமூகத்தில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி முதன் முதலில் பேச ஆரம்பித்தார்கள்.
ஒரு நாள் பாலினச் சமத்துவம் பற்றி வகுப்பு நடந்தது. வகுப்பு முடிந்ததும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள் ஒரு முடிவை எடுத்தனர்.
"இனிமே கிளாஸை சுத்தம் செய்யுறதுக்கு ஆம்பளப் பிள்ளை, பொம்பளப் பிள்ளைனு வித்தியாசம் பார்க்க வேணாம். ரோல் நம்பர் வரிசையில எல்லாரும் மாத்தி மாத்தி செய்வோம்"
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ப்ராஜக்ட் விசிட் (Project Visit) நடைபெறும். அவ்வாறான ஒரு பயணத்தில், அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு பழங்குடி கிராமத்தில் ஐந்து நாட்கள் தங்கியிருந்தனர். அந்தக் களப் பயணத்திற்குப் பிறகு, பழங்குடி மாணவர்களும் SJSF மாணவர்களும் இருவர் இருவராக இணைந்து கொண்டனர். அந்த கல்வி ஆண்டு முழுவதும், தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாக அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கல்வி பயின்றார்கள்.
SJSF அனுபவங்கள் ஒவ்வொன்றும் காட்சிகளாக அன்பினியின் மனதில் தோன்றின. அப்போது, அவளால் மறக்கவே முடியாத அந்தச் சந்திப்பு நினைவுக்கு வந்தது.
வழிகாட்டி (Guide) மாணவர்களை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் அழைத்துச் சென்றிருந்தார். எங்கள் வழிகாட்டி, 12-ஆம் வகுப்பு காலாண்டுத் தேர்வு எழுத, சின்னதுரை என்கிற மாணவருக்கு ஸ்கிரைப்-ஆக (Scribe) இருந்தார். தேர்விற்கு முன்பு மாணவர்களைச் சின்னதுரையிடம் பேச வைத்தார்.
சின்னதுரையைப் பார்த்ததும் அன்பினியின் கண்கள் கலங்கின. உடல் முழுக்கத் தழும்புகள். சில காயங்கள் இன்னும் ஆறாமல் பச்சையாக இருந்தன. சம்பவம் நடந்து நான்கு மாதங்கள் ஆகியும் அந்த வடுக்கள் பயமுறுத்தின. கூடப் படித்த மாணவர்களே அவரை அரிவாளால் வெட்டியிருந்தார்கள்.
"அண்ணா... ஏன் இப்படி பண்ணாங்க?" அகமது விம்மி விம்மி கேட்டான்.
"நான் நல்லா படிப்பேன்... ஆனா, என் கூடப் படிச்ச பசங்களுக்கு நான் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவன்ங்கிறது பிடிக்கல.
அவங்க கொடுத்த டார்ச்சர் தாங்காம ஸ்கூலை நிப்பாட்டிடலாம்னு கூட நினைச்சேன். ஆனா.. எங்க டீச்சர்ஸ்தான் விடாம வரச் சொன்னாங்க. அந்தப் பசங்களைக் கண்டிச்சாங்க. அவங்களுக்கு அது இன்னும் கோவத்தை உண்டாக்கிடுச்சு.”
சின்னதுரை நிறுத்தினார். ஒரு சிறு மௌனத்திற்கு பிறகு தொடர்ந்தார்.
“ஒருநாள் ராத்திரி என் கிளாஸ் பசங்களே, என்னையும் என் தங்கச்சியையும் அரிவாளால வெட்டிட்டாங்க..."
"அய்யோ... அரிவாளா!" எல்லோருடைய மனதிலும் ஒரு நடுக்கம் பரவியது.
"பயந்துட்டீங்களா?" வழிகாட்டி கேட்டார்.
"சார்... கேக்கவே பயமா இருக்கு சார்," குமார் சொன்னான்.
"நமக்கு அந்தப் பையனுக்கு நடந்ததைக் காதால கேட்கவும், அவனோட நிலைமையக் கண்ணால பார்க்கவுமே பயமா இருக்குன்னா... இவ்வளோ கொடுமையையும் அனுபவிக்கிற அவனுக்கு அது எப்படி இருக்கும்னு ஒரு நிமிஷம் யோசிச்சுப் பார்க்கணும்..."
"எப்படி கூடப் படிக்கிற பையனையே இப்படி பண்ண மனசு வரும்..." மாலினி கேட்டாள்.
“இது தான் ஜாதி வெறி. இது உங்களை மாதிரி குழந்தைகளையும் விட்டு வைக்கிறது இல்லை.”
அறமதி அன்பினியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள்.
"எல்லா மனிதர்களும் ஒண்ணு தானே... அப்புறம் ஏன் இப்படி நடக்குது..? இந்த மாதிரி இன்னொரு உயிரைத் துன்புறுத்த அவங்களுக்கு யாரு ரைட்ஸ் (Rights) கொடுத்தா..?" என்று கோபமாகக் கேட்டாள் அன்பினி.
"உன்னோட கோவம் நியாயமானது... இதே கோவத்தோட தான் ஒரு குழந்தை தனக்கு நடந்த கொடுமைகளை ஏன்னு கேட்டுச்சு ... 125 வருஷத்துக்கு முன்னாடி..."
அறமதி சொன்னாள்.
"யார் அந்த குழந்தை...?" என்றாள் அன்பினி
"நாள் முழுக்க, தண்ணி கூடக் கிடைக்காம தவிக்க விட்ட இந்தச் சமூகத்தைப் பார்த்து கோபப்பட்டுச்சு அந்த குழந்தை... தண்ணி இல்லாம இல்ல... கண்ணு முன்னாடி இருக்குற தண்ணிப் பானையில இருந்து... குளத்துல இருந்து தண்ணிய குடிக்க விடாம வச்சிருந்தாங்க... அதை எதிர்த்து கேள்வி கேட்டது மட்டும் இல்லாம... வளர்ந்து படிச்சுப் பெரிய ஆளானதும் இங்க எல்லாரும் சமம்... அப்படின்னு சட்டம் கொண்டு வந்தாரு..." என்றாள் அறமதி.
"அம்பேத்கர்! அண்ணல் அம்பேத்கர்!" என்று உற்சாகமான குரலில் சொன்னாள் அன்பினி.
"ஆமா. அவர்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கின வரைவுக் குழுவின் தலைவர். சமத்துவம் – அதாவது பிறப்பின் அடிப்படையில எல்லோரும் சமம், ஜாதி, மதம், பாலினப் பாகுபாடு இருக்கக்கூடாது,
எல்லோருக்கும் பள்ளிக்கு போகவும், வேலை வாங்கவும், அரசியல் அதிகாரம், அதாவது ஒரு MLA ஆகவும், ஏன் பிரதம மந்திரியா ஆகவும் கூட சமமான வாய்ப்பு தருது நம்ம சட்டம்.
முக்கியமா தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தைச் சேர்த்தாரு. சின்னதுரைக்கு நடந்திருக்கிற கொடுமைக்குக் காரணம்... தீண்டாமைங்கிற மனிதாபிமானமே இல்லாத மனநிலையினாலதான்.” என்று விளக்கினாள் அறமதி.
"சட்டம் சொல்லுது எல்லாரும் சமம் அப்படின்னு... ஆனா நிஜத்துல... அப்படி இல்லையே... ஏன்?" அன்பினி கேட்டாள்.
“உன்னோட கவலைதான் அம்பேத்கருக்கும்... நம்ம இந்திய நாடு ஒரு முரண்பாடு நிறைந்த சமத்துவத்தை எட்டி இருக்குன்னு சொன்னாரு... ஒரு பக்கம்... ஒரு மனிதர் ஒரு ஓட்டுங்கிற அரசியல் சமத்துவம் எல்லாருக்கும் கிடைச்சுது... ஆனா... இங்க உண்மையிலேயே ஒவ்வொரு மனிதருக்கு ஒரே மதிப்பு இல்ல.
சமூக நிலைமை, உதாரணத்துக்கு சாதி என்ற ஏணி இருக்குது. அதுல சிலர் மேலேயும், மத்தவங்களப் படிப் படியாக் கீழேயும் வச்சிருக்காங்க.” அறமதி பேசினாள்.
“சின்னதுரை அண்ணா விஷயத்துல சமூகத்துல இருக்குற பாகுபாட்டைப் பார்த்தேன்...” அன்பினி அவள் கவனித்ததை சொன்னாள்.
அறமதி தொடர்ந்தாள், “சரியா புரிஞ்சுகிட்ட.. அதே மாதிரி பொருளாதார நிலைமை எப்படி இருக்குன்னா... ஒரு சிலர்கிட்ட அதிகமான பணமும் சொத்துக்களும் குவிந்து கிடக்குது... இன்னொரு பக்கம்... பெரும்பாலான மக்கள்... பசி பட்டினிலையும், அடிப்படை வசதி கூட இல்லாமையும் தவிக்கிறாங்க..."
"ஆமா... இத தான்... நான் அந்தப் பழங்குடி கிராமத்துல பார்த்தேன்... இதெல்லாம் இப்படியே தான் இருக்குமா?... இத எப்படி மாத்துறது..."
அறமதி தன் கையை அன்பினியை நோக்கி நீட்டினாள். அவளது கையில் இருந்த மூன்று வளையல்கள் கலகலவெனக் குலுங்கின.
"உன்னோட கேள்விக்கான பதில் இந்த மூணு வளையல்கள்ல இருக்கு..."
அறமதி அணிந்திருந்த மூன்று வளையல்களிலிருந்தும் மூன்று வண்ண ஒளிகள் பரவின.
( அறிவோம் தெளிவோம் ) ..

எழுத்தாளர்,
கதைசொல்லி.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.





👌👌👌👌✨