top of page

தியாவின் மாயத் தூரிகை


வெள்ளை நிற காகிதமும் 

வண்ணப் பென்சிலும் எடுத்தாள்! 

உள்ளம் சொன்ன ஓவியத்தை 

உடனே வரையத் துடித்தாள்! 


“புதிய வால் வரைந்து தா” என்று

பூனை ஓடி வந்தது! 

“கழுத்து மணி வரைந்து தா” எனக்

கன்றும் முன்னே வந்தது! 


“சிவப்பு கொண்டை மாற்று” என்று 

சேவல் வந்து கேட்டது! 

“சிறகில் வண்ணம் தீட்டு” எனத் 

தட்டான் பூச்சி கேட்டது! 


மண்ணில் ஊர்ந்த நத்தையோ 

“கம்மல் வேண்டும்” என்றது! 

தியாவிடம் கொலுசு கேட்டு

துள்ளி வந்தது குட்டி நாய்!


அருகில் நின்ற தாத்தாவோ 

ஆசையாக அவளிடம், 

“ஆச்சி காதுக்கு தண்டட்டி,

அழகாய் வரைந்து தா” என்றார்! 


தங்க நிறத்தில் தண்டட்டி 

தியா வரைந்து தந்தாளே! 

அதை எடுத்து தாத்தாவும் 

ஆச்சி காதில் பூட்டினார்! 


ஓவியத்து நகை அங்கே 

உண்மையான மாயம் கண்டு 

திகைத்து நின்ற தியாவுடன் 

தாத்தா சேர்ந்து சிரித்தாரே!



கொ.மா.கோ.இளங்கோ
கொ.மா.கோ.இளங்கோ

எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page